Monday, April 25, 2011

“நான் ஃபார்ம் ஆயிட்டேன்யா!”

“தேர்தல் முடிந்த பிறகு இங்கே திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்; அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்; தேமுதிக, பாமக, இடதுசாரி எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள்; ஆனால் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர்களாக அவர்கள் ஒரு நாளும் இருக்க மாட்டார்கள்” என்றார் ஒரு நண்பர்.

“எப்படி நீ அப்படி சொல்கிறாய்? அவர்கள் எல்லோருமே தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்கள் தானே?” என்று அப்பாவியாக கேட்டார் இன்னொரு நண்பர்.

“ஆம்! அவர்கள் எல்லோருமே தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் தான். ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காக செயல்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. அவர்களுடைய சுயநலத்துக்காக, அவர்களுடைய குடும்ப நலன்களுக்காக, அவர்களுடைய கட்சி நலனுக்காக செயல்படும் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்” என்று பதில் சொன்னார் முதல் நண்பர். அதற்கு மேல் அந்த உரையாடல் தொடரவில்லை. ஆனால் அங்கு இருந்த எல்லோருடைய மனதிலும் அந்த வார்த்தைகள் சிந்தனையைத் தூண்டியிருக்கும்!

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலைப் பாருங்கள். 2006 தேர்தலில் நிற்கும்போது அவர்களிடம் இருந்ததாக அவர்கள் சொல்லிய சொத்துக்கள், 2011-ல் பல மடங்கு அதிகமாகி இருக்கின்றன. பினாமிகளின் பெயரில் இருப்பவை இந்தப் பட்டியலில் இருக்காது என்பது வேறு விஷயம். இந்த ஐந்து வருடங்களில் அவர்களுடைய சொத்துக்களின் மதிப்பு எப்படி அதிகரிக்கிறது? “குடும்பத்தோடு உழைக்கும் நாங்கள் கையேந்தி நிற்கிறோம்; ஒரு வேலையும் செய்யாத நீ எங்களுக்கு ஓட்டுப் போட பணம் கொடுக்க வருகிறாயே! எங்கிருந்து வந்தது இந்தப் பணம்?” என்று மேடைகள் தோறும் சீமான் முழங்குகிறார். அந்த வித்தை தெரிந்தவர்கள்தான் தேர்தலில் நிற்க முடிகிறது. ஏழைகளிடம் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்குகளை வாங்குகிறார்கள். பணக்காரர்களிடம் இருந்து பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் இருந்து இவர்களையும் இவர்களிடம் இருந்து அவர்களையும் காப்பாற்றுவோம் என்று இரு தரப்புக்கும் வாக்குறுதியை அள்ளி வீசுகிறார்கள். இது ஓர் ஏமாற்று வித்தை!

இப்போது நடக்க இருக்கிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 240 கோடீஸ்வரர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிருகிறார்கள் என்கிறது ஒரு செய்தி. மொத்தம் இருப்பது 234 தொகுதிகள். சராசரியாக ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளராவது கோடீஸ்வரராக இருக்கிறார் என்பதே இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளக் கூடிய தகவல். 1996 தேர்தலுக்குப் பிறகு 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய கட்டுகள் ஆற்றில் தூக்கிப் போடப்பட்டன என்றெல்லாம் செய்திகள் வந்தன. இப்போது அதைப் போலவே எங்கெல்லாமோ இருந்து லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்படுகின்றன. 20 லட்ச ரூபாய் கொண்ட சூட்கேஸை ரோட்டில் வீசி விட்டு இளைஞர்கள் ஓடியதாக ஒரு செய்தி. ஒரு டீக்கடையில் லட்சக்கணக்கான பணம் பிடிபட்டிருக்கிறது. பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கும் அடாவடிகளை தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் கட்டுப்படுத்துகின்றன. உடனே ‘அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை’ தமிழ்நாட்டில் நிலவுவதாக முதலமைச்சர் கருணாநிதியே சொல்கிறார்!

நெருக்கடி நிலையில் நடந்தது என்ன? எதிர்க்கட்சிகள் மற்றும் சாதாரண மக்கள் அனைவருடைய ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டன. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் தடை செய்யப்பட்டன. செய்திகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டன. திமுகவில் யாரெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்ற தகவலை நேரடியாக முரசொலியால் வெளியிட முடியாது. “அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வராதவர்கள்” என்று ஒரு பட்டியலை அந்தக் கட்சி வெளியிடும். அதில் இருந்து தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தின் ஆட்சி ஒரு கும்பலால் முழுவதுமாக அவர்களுக்கு சாதகமாக வளைக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை சர்வாதிகார நாடாக மாற்றி அமைத்தார்கள். இவ்வளவையும் செய்தது யார்? இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் அவர்களைச் சுற்றி இருந்த கும்பல்! தமிழ்நாட்டில் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? தி.மு.க, இடதுசாரிகள், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள்! இப்போது ஏன் கருணாநிதி அதை எல்லாம் மக்களுக்கு நினைவூட்டுகிறார்? அவருடன் தானே காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவான சுதந்திரமான அமைப்பு தேர்தல் ஆணையம். அது என்ன செய்கிறது? ‘எமர்ஜென்சி’யில் நடந்ததைப் போல சட்டத்தை தங்கள் இஷ்டப்படி வளைக்கிறதா? மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை அமல்படுத்துகிறது. இதை எப்படி நெருக்கடி நிலையுடன் ஒப்பிட முடியும்? ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி கருணாநிதிக்கு இருக்கலாம்; அதையே அவர் நெருக்கடி நிலை என்று சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!
தேர்தல் களத்திலே மக்களுடைய நெருக்கடிகளையும் பிரச்னைகளையும் யாராவது பேசுகிறார்களா என்று தேடித் தான் பார்க்க வேண்டியிருக்கிறது. ராஜாஜி, காமராஜ், அண்ணா, காயிதே மில்லத், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ஈ.வி.கே.சம்பத், கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் பிரசாரம் செய்த சட்டமன்றத் தேர்தல்களைப் பார்த்தவர்கள் இன்னும் எல்லா குடும்பங்களிலும் இருப்பார்கள். அவர்களிடம் அந்த அனுபவத்தை இன்றைய இளைஞர்கள் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இப்போதைய அரசியலில் நட்சத்திர பிரசாரகர்களாக இருக்கும் குஷ்பூ, வடிவேலு, சிங்கமுத்து போன்றவர்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

சூப்பர் மேன் வடிவேலு இந்தத் தேர்தலில் மக்கள் முன் வைக்கும் தலையாய பிரச்னை என்ன? முள்ளி வாய்க்கால் படுகொலைகளா? விலைவாசி உயர்வா? 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளா? பல்வேறு அதிகார மையங்களாக உருவெடுத்திருக்கும் குடும்ப அரசியலா? கடந்த ஆட்சிகளின்போது ஜெயலலிதா மேற்கொண்ட மக்கள் விரோத நடவடிக்கைகளா? இவை எதுவுமே இல்லை. அவருக்கு எதுதான் முக்கிய பிரச்னை? விஜயகாந்த் என்ன குடித்தார்? எவ்வளவு குடித்தார்? ஒரு அரசியல் கட்சியின் தலைவருடைய தனிப்பட்ட பழக்கம் எப்படி தேர்தல் பிரச்னை ஆகிறது? தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருக்கிறதா? விஜயகாந்த் குடிக்கிறார் என்றால் அது சட்டவிரோதமான செயலா? சட்ட விரோதமான செயல் அல்ல; ஆனால் ஒழுக்கக் கேடான செயல் என்று சிலர் பதில் சொல்லக் கூடும். அப்படியானால் மக்கள் அனைவரையும் குடிக்கத் தூண்டி ஒழுக்கம் இல்லாதவர்களாக வைத்திருப்பது அரசாங்கம் தான்! தமிழகத்தில் யார் மது விற்பனை செய்கிறார்கள்? மது விற்பனையின் ஏகபோக முதலாளி தமிழக அரசுதான்!

ஆனால் இவை குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் வடிவேலு பேசிக் கொண்டிருக்கிறார். “நான் இந்த ஏரியாவுல ரவுடியா ஃபார்ம் ஆயிட்டேன்யா; என்னையும் அரெஸ்ட் பண்ணுங்க” என்று அவர் ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார். அதைப் போலவே இப்போது அவர் ஒரு அரசியல்வாதியாகவும் ‘ஃபார்ம்’ ஆகி விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home