Monday, April 25, 2011

“நோய்கள்” தொலையட்டும்!

“உச்சநீதிமன்றத்தில் டாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் சொல்லி இருக்கிறார். அவர் யாராக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? பினாயக் சென்னின் மனைவி இலினா சென்? அவருடைய மகள்? அவருடைய விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவர்? அவர்கள் எல்லோருக்கும் பினாயக் சென்னின் விடுதலை மகிழ்ச்சி அளித்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் இப்படி சொன்னது வேறு யாரும் அல்ல. நம்முடைய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான்!

மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்பவர் என்று சத்தீஸ்கர் மாநில அரசு குற்றம் சாட்டியிருக்கும் ஒருவரை உச்சநீதி மன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. அந்த மாவோயிஸ்டுகளை பிரதமர் மன்மோகன்சிங் எப்படி அழைக்கிறார்? ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’ என்றே அவர் அவர்களைக் குறிப்பிடுகிறார். அவருடைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் பினாயக் சென்னின் விடுதலைக்காக ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? ஏனென்றால், அவருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. விசாரணை நீதிமன்றங்களிலும் உயர்நீதி மன்றங்களிலும் கொடுக்கப்பட்ட தீர்ப்புகள் ஒருவருக்கு அதிருப்தி அளிக்கிறது என்றால் அவர் மேல்முறையீடு செய்யலாம்; அந்த மேல்முறையீட்டில் அவருக்கு நியாயம் கிடைக்கலாம்; அதுவே அவருடைய நம்பிக்கை. பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சத்தீஸ்கர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலருக்கு அதிருப்தியைக் கொடுத்தது. அவருடைய ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

மேல்முறையீட்டில் அவருக்கு இப்போது ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் அவருடைய நம்பிக்கைக்கு வலு சேர்ந்திருக்கிறது. அதனால் அவருக்கு மகிழ்ச்சி வருகிறது!
ஆனால், மேல்முறையீட்டில் நியாயம் கிடைக்கும் வரை கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் ஒருவர் அடையும் பாதிப்புகளுக்கு என்ன பரிகாரம் கிடைக்கிறது? டாக்டர் பினாயக் சென்னையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரை கடந்த 2007-ம் வருடம் மே மாதம் சத்தீஸ்கர் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. விசாரணை நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் இருக்கும் பல அறிஞர்கள் அவருடைய விடுதலைக்காக குரல் கொடுத்தார்கள். இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு 2009-ம் வருடம் மே மாதத்தில் உச்சநீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.
ஆனால் அவர் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கூட சுதந்திரமாக மக்களோடு இருக்க முடியவில்லை. கடந்த 2010 டிசம்பர் 24-ம் தேதி ரெய்ப்பூர் அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பு அளித்தது. மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு இப்போது ஏப்ரல் 15-ம் தேதிதான் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை கொடுத்திருக்கிறது. நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வரும்போது அவர் இரு விரல் காட்டி ‘வெற்றி’ என்று சொல்லி மகிழலாம். ஆனால் அவர் பெயரைச் சொன்னவுடன் நமக்கு என்ன பிம்பம் நினைவுக்கு வருகிறது? பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் பிம்பமாக நம் கண்முன் வரவில்லை. மாறாக ஒரு காவல்துறை வாகனத்தில் கம்பிகளுக்குப் பின்னால் மன உறுதியுடனும் தீர்க்கமான கண்களுடனும் இருக்கும் பினாயக் சென்னின் முகமே நம் மனதில் நிற்கிறது. இது நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை!

பினாயக் சென்னின் குடும்பத்தின் உணர்வுகள் எப்படி இருக்கும்? அம்மா அனுசுயா சென்னுக்கு வயது 84. அவர், “இந்திய நீதிமன்றங்களின் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரிக்கிறது” என்றும் “வாய்மையே வெல்லும்” என்றும் நெகிழ்ச்சியோடு சொல்லி இருக்கிறார். மனைவி இலினா சென்னின் உணர்வுகளை யாராலும் விவரிக்கவே முடியாது. இந்த விடுதலைக்கான கடுமையான போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் அவரே! பினாயக்கின் மகள் அபராஜிதா, “ அப்பா சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து எங்கள் குடும்பம் நிலைகுலைந்து போய் இருந்தது. இப்போது நான் அப்பாவை சந்திப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்” என்று பாசத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மா, மனைவி, மகள் எல்லோரையும் பரிதவிக்கச் செய்யும் விதத்தில் அந்த மருத்துவரை சத்தீஸ்கர் அரசு ஏன் குறி வைத்து அடிக்கிறது?

உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்யும்போது என்ன சொல்லி இருக்கிறது? “நம்முடைய நாடு ஒரு ஜனநாயக நாடு; பினாயக் சென் நக்சலைட்டுகளின் ஆதரவாளராக இருக்கலாம்; ஆனால் அதுவே ராஜ துரோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் அளிக்காது” என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. “நக்சலைட்டுகளின் பிரசுரங்களையும் இலக்கியங்களையும் அவர் வைத்திருந்தார் என்பதால் அவர் நக்சலைட் ஆகிவிடுவதில்லை; காந்திய இலக்கியங்களை ஒருவர் வைத்திருந்தால் அவரை காந்தியவாதி என்று சொல்லி விட முடியுமா?” என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டிருக்கிறார். பினாயக் சென்னை பிணையில் விடுவிப்பதற்கு எந்தக் காரணத்தையும் உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. பிணை நிபந்தனைகளையும் அது முன்வைக்கவில்லை. அவற்றை எல்லாம் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றமே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டது!

சர்வதேச சமூகத்துக்குத் தெரிந்த முகமாக பினாயக் சென் இருக்கிறார். அவரை சத்தீஸ்கர் மாநில அரசு கைது செய்து சிறையில் அடைத்த போது உலகம் எங்கும் இருந்து அவருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. வெளி உலகத்துக்குத் தெரிய வராத எத்தனைபேர் இவரைப் போல இன்னும் நம்முடைய சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்களோ என்ற எண்ணம் ஒரு மனிதனுக்குள் இயல்பாக எழுவதை யாராவது தடுக்க முடியுமா? கொலை, கொள்ளை, வல்லுறவு வழக்குகளில் எல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் ஜாமீன் கிடைக்கிறது. ஆனால் பினாயக் சென் மாதிரியான மக்கள் சேவகருக்கு இவ்வளவு நீண்ட நீதிமன்றப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இந்த உண்மை நமக்கு கவலை அளிக்கிறது. ஆனால் ஒரு விஷயத்துக்காக நாம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சத்தீஸ்கர் சிறையில் கைதிகளுக்குள் நடந்த மோதலில் பினாயக் சென் தாக்கப்பட்டார் போன்ற செய்தி எதுவும் இதுவரை வரவில்லை. அதற்காக முதலமைச்சர் ராமன்சிங்குக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்!

பினாயக் சென் போன்ற மனிதர்களை ஓர் அரசு அலைக்கழிப்பதைப் பார்த்தால் நாம் எப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இங்கே சிறையில் இருக்க வேண்டியவர்கள் வெளியில் பெரிய மனிதர்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்; வெளியில் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சிலர், சிறைகளில் ‘வெளிச்சம்’ இல்லாமல் இருக்கிறார்கள்; ஆட்சியில் இருக்க வேண்டியவர்கள் முகவரியில்லாமல் சமூகத்தில் அங்கும் இங்குமாகத் திரிகிறார்கள்; ஒரு சமூகத்தில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். நாம் என்ன செய்கிறோம்? விரலில் மை தடவிக் கொண்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home