Thursday, April 07, 2011

வரலாறு எப்படிப் பதிவு செய்யும்?

சாலையை மறித்து அந்த மேடையைப் போட்டிருந்தார்கள். சென்னை அண்ணாசாலையில் இருந்து எழும்பூர் வழியாக அண்ணாநகருக்கு வந்து கொண்டிருந்தோம். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நின்று அந்த வழியாக வரும் வாகனங்களை மாற்று வழியில் செல்லும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். என்னுடன் வந்த சிறுமி கேட்டாள்.

“எதற்காக இந்த மேடை போட்டிருக்காங்க?”

“ஒரு அரசியல் கட்சி இந்த மேடையைப் போட்டிருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர்கள் வந்து இங்கு கூடியிருக்கற மக்களிடம் அவர்களுடைய கருத்துக்களை சொல்வாங்க” என்று நான் சொன்னேன்.

“அவங்க கட்சிக்காரங்களுக்கு சொல்லணும்னா அதுக்கு மத்த மக்களை ஏன் தொந்தரவு பண்றாங்க?”

அவள் விடவில்லை. அவள் ஒரு மாத விடுமுறையை சென்னையில் கழிப்பதற்காக ஒரு வெளிநாட்டில் இருந்து வந்திருந்தாள். அவளுக்கு இது போன்ற கூட்டங்கள் அறிமுகமாகி இருக்கவில்லை. நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஒலிபெருக்கிகளின் சத்தம் நமக்கு எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால் நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் நமக்கு வந்துவிடும்.

“இதை மக்களுக்குத் தொல்லைன்னோ தொந்தரவுன்னோ எப்படி சொல்ல முடியும்? இந்த மாதிரி கூட்டங்கள் போடாம மக்களுடைய பிரதிநிதிகள் வேற எப்படி மக்களோட பேச முடியும்? தண்ணிக்குள்ள மீன் இருக்கற மாதிரி மக்களுக்கு நடுவிலே தானே அரசியல்வாதி இருக்க முடியும்?”

நான் பதில் கேள்வி கேட்டேன். பத்து வயதுச் சிறுமியின் பார்வையில் இந்த அரசியல் கூட்டங்கள் என்னவிதமான தோற்றத்தைக் கொடுக்கின்றன என்று அறியும் ஆர்வமும் எனக்கு அதிகரித்தது. நான் என்னுடைய பள்ளிப் பருவத்திலும் சரி, கல்லூரி காலங்களிலும் சரி, ஏராளமான கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். மேடையில் ஒரு தலைவர் பேசி விட்டுப் போன பிறகு, அவர் பேசிய விஷயங்களை எல்லாம் திரும்பி வரும்போது விவாதித்துக் கொண்டே வருவோம். முப்பது முதல் முப்பத்தைந்து வருடங்கள் கழித்து அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சிறுமியிடம் பொதுக் கூட்டங்கள் பற்றி பேசிக் கொண்டு வருகிறேன் என்ற சிந்தனை எனக்குள் ஓடியது.

“அறிக்கை கொடுத்தா அடுத்த நாள் பத்திரிகையில் வரப் போகிறது; ஏராளமான டி.வி. இருக்கு.. மக்களுக்கு என்ன சொல்லணுமோ அத டி.வி.ல பேச வேண்டியதுதானே! இது இந்தப் பகுதில வசிக்கற மத்த மக்களுக்கு தொந்தரவு தான். இதை அவங்க எதிர்த்து புகார் செய்ய மாட்டாங்களா?”

இந்தக் கேள்விக்கு பதில் எதுவும் நான் சொல்லவில்லை. இந்த சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நடந்தது. அது தேர்தல் காலமும் அல்ல; அந்த சிறுமியைப் போன்றவர்கள் தேர்தல் காலத்தில் இங்கு இருந்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த மாதிரி இப்போது பிரசாரம் இல்லை. அந்த சிறுமியைப் போல யோசிக்கிறவர்கள் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். “உங்களை கடந்த ஐந்து வருடங்களாகப் பார்த்து வருகிறோம்; ஆட்சிக்கு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை உங்கள் தேர்தல் அறிக்கைகள் மூலமாக நாங்கள் அறிந்தோம்; வாக்குப் பதிவு நாள் அன்று நாங்கள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்போம்; அதுவரை எங்களைத் தொல்லை செய்யாதீர்கள்” என்ற மனநிலை நகர்ப்புறங்களில் அதிகமாகி இருப்பதாகவே தெரிகிறது. அவர்கள் சொல்லும் பலவிதமான தொல்லைகளைத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்திவிட்டது என்றே அவர்கள் கருதுகிறார்கள்.

தேர்தலை வெறும் பரபரப்பு நிகழ்ச்சியாகவோ திருவிழாவாகவோ சிலர் கருதுகிறார்கள்; அவர்கள் தான் ‘தேர்தல் நடக்கற மாதிரி எந்த அறிகுறியும் தெரியலையே’ என்று அங்கலாய்க்கிறார்கள். தேர்தல் ஆணையம் செய்யும் ‘கெடுபிடிகள்’ காரணமாக தேர்தல் களத்தில் சில நடவடிக்கைகளைப் பார்க்க முடியவில்லை. அதைத்தான் ‘தேர்தல் அறிகுறிகளைக் காணோம்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். ஊடகங்களில் மட்டுமே தேர்தல் தொடர்பான பரபரப்பை பார்க்க முடிகிறது. மக்களிடம் வழங்குவதற்காக கொண்டு செல்லப்படும் பணம் கட்டுக்கட்டாக பிடிபட்டது என்ற செய்தி தினமும் வருகிறது. வி.ஐ.பி.க்களுடைய வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் எல்லாம் இந்தப் பண விநியோகத்துக்கு பயன்படுகின்றன என்று வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
தேவையற்ற கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசி இருக்கிறார். எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று ஆளும் கட்சி குறை கூறுகிறது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சொல்லி இருக்கிறார். அவருக்குக் கொடுத்திருந்த பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை அடுத்து அவர் இப்படிப் பேசி இருக்கிறார். இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையமே கதாநாயகனாக இருக்கிறது!

அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரத்தின் தரம் எப்படி இருக்கிறது? ஆளும் கட்சித் தரப்பில், அரசின் சாதனைகள் என்று இலவசத் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் போலவே இப்போது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்கள் விளக்குகிறார்கள். ஜெயலலிதா நம்பிக்கைக்கு உகந்தவர் இல்லை என்றும் அவர் சொல்வதை செய்ய மாட்டார் என்றும் திமுக சொல்லி வருகிறது. பண பலத்தை ஜெயலலிதா பயன்படுத்துகிறார் என்றும் தேர்தல் ஆணையம் சதி செய்கிறது என்றும் திமுக பேசுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை திமுகவின் பலவீனமாகவே மக்கள் பார்க்கிறார்கள். விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் இடையில் இருந்த மனக்கசப்பை தன்னுடைய தேர்தல் ஆதாயத்துக்காக திமுக பயன்படுத்துகிறது.

அதிமுக அணி வெற்றி பெற்றுவிடும் என்ற தோற்றத்தை விஜயகாந்த் அந்த அணியில் சேர்ந்ததன் மூலம் உருவாக்கி இருக்கிறார். தனியாக நின்று தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்காமல் ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் இணைந்து நிற்பது திமுகவுக்கு எரிச்சல் தருகிறது. அதனால் வடிவேலுவைப் பிடித்து விஜயகாந்தை விளாசச் சொல்கிறார்கள். ஒரு கதாநாயகனை ஒரு காமெடி நடிகர் நேருக்கு நேர் எதிர்க்கிறார். விஜயகாந்தை சிறுமைப்படுத்த வேண்டும் என்று வடிவேலு பயன்படுத்தும் மலிவான உத்திகள் அவர் விரும்பும் பலனைத் தருமா என்பது சந்தேகமே!

அதிமுக தரப்பில் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஸ்டார் பிரசாரகர்கள். அரசியலில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம், 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு உள்ளிட்ட லஞ்சம் ஊழல், தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்கள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை பேசுகிறார்கள். அதிக முக்கியத்துவம் குடும்ப ஆதிக்கத்துக்கும் லஞ்சம் ஊழலுக்கும் கொடுக்கப்படுகிறது.

மேடைகளில் வெற்றிடம் ஒன்று தென்படுகிறது. 2ஜி அலைவரிசை பற்றியும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றியும் தொடர்ந்து பேசி வந்த குரல் ஒன்று பேசாமல் ஒதுங்கி நிற்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. சாதாரண நாட்களில் மேடைகளில் முழங்கியவர்கள் இப்போது அதற்கு நீதி கேட்காமல் ஒதுங்கி நிற்கிறார்கள். வரலாறு அவர்களை எப்படிப் பதிவு செய்யும்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

2 Comments:

At 11:23 AM, Blogger பார்த்திபன் (Parthiban) said...

வரலாறு தங்களை எப்படிப் பதிவு செய்யும் என்று அரசியல்வாதிகள் நினைத்தால் அவர்கள் அரசியலே செய்ய முடியாதே.வரலாறை அப்புறம் எப்படி பொறுமையா வளைச்சிகலாம் என்பதையும் அவர்கள் இப்போது அறிந்து வைத்திருப்பதால் அமைதியாக இருக்கிறார்களோ என்னவோ... இந்த அரசியல்வாதிகளோட ரொம்ப குஷ்டமப்பா.. சாரி.. கஷ்டமப்பா...

 
At 11:24 AM, Blogger பார்த்திபன் (Parthiban) said...

வரலாறு தங்களை எப்படிப் பதிவு செய்யும் என்று அரசியல்வாதிகள் நினைத்தால் அவர்கள் அரசியலே செய்ய முடியாதே.வரலாறை அப்புறம் எப்படி பொறுமையா வளைச்சிகலாம் என்பதையும் அவர்கள் இப்போது அறிந்து வைத்திருப்பதால் அமைதியாக இருக்கிறார்களோ என்னவோ... இந்த அரசியல்வாதிகளோட ரொம்ப குஷ்டமப்பா.. சாரி.. கஷ்டமப்பா...

 

Post a Comment

<< Home