Monday, November 07, 2005

வலிமைக்கான பயிற்சி தந்த வலி

தொடங்கினால் முடிய வேண்டுமாம்..பிறப்பென்றால் இறப்பும் இருக்குமாம்..பரந்த உலகின் நியதியே இதுதான் என்றால் நட்சத்திர வாரம் மட்டும் நிரந்தரமாக இருக்குமா என்ன? அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை கூடுதல் கவனம் கிடைத்தது உண்மைதான்.

கடந்த 2005 மே முதல் வலை பதியத் தொடங்கினேன். அதே தமிழ்மணம்..அதே பதிவர்கள்..ஆனால் இந்த ஒரு வாரத்தில் மட்டும் எல்லோருடனும் நெருங்கிய உணர்வு. காரணம் என்ன என்று புரியவில்லை.

இந்த வாரத்தை தீபாவளி ஸ்பெஷல் என்றார் ஒருவர். மழை மற்றும் மின்தடை ஸ்பெஷல் என்றே எனக்குத் தோன்றியது. வழக்கமாக பயன் தரும் மின்சக்தி இந்த வாரம் எரிச்சலூட்டும் விதத்தில் தடையாக இருந்தது. எப்படியோ தினம் ஒரு பதிவு என்பதில் தடை வராமல் சமாளித்துக் கொண்டேன்.

உடல் வலிமைக்காக உடற்பயிற்சிகள் செய்கிறோம். நீண்ட கால இடைவெளி விட்டு பயிற்சி செய்யும்போது அவையே சில சமயம் தாங்கமுடியாத வலியைக் கொடுக்கும். இந்த வாரம் ஓரிரு நாட்கள் அந்த வலியையும் உணர்ந்திருக்கிறேன்.

இந்த 7 நாட்களும் தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இட்டவர்களுக்கும், தனி மடல் இட்டு தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், படிப்பதோடு நிறுத்திக் கொண்டவர்களுக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றி. நட்சத்திர வாய்ப்பளித்த தமிழ்மணம் பொறுப்பாளர்க்கு எனது சிறப்பு நன்றி.

இனி வழக்கமான பதிவுகளில் சந்திப்போம்..

Sunday, November 06, 2005

புத்தகம் மூடிய மயிலிறகு

புத்தகங்கள் படிக்கும் பழக்கமே அவனைப் பண்படுத்தியது என்று சொல்லலாம்.வீட்டில் சாந்தி, சரஸ்வதி, தாமரை போன்ற பத்திரிகைகளின் பழைய இதழ்கள் இருக்கும். தி ஹிந்து, தினமணி இரண்டு நாளிதழ்கள் வாங்குவார்கள். குமுதம், ஆனந்தவிகடன், கல்கி வீட்டிற்குள் வராது.

ஐந்தாவது வகுப்பு படிக்கும்போதே நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் எடுத்து வந்து படிக்கும் பழக்கம் அவனிடம் இருந்தது. ஆரம்ப கட்டத்தில் "தேநீர்க் கோப்பையை உதட்டில் வைத்தார். தேநீரை உறிஞ்சிக் குடித்தார் சங்கர்லால்" மாதிரியான சங்கர்லால் துப்பறியும் நாவல்கள் தான் அவனுக்குப் பிடிக்கும்..கொலை என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதே தமிழ்வாணன் நாவல்களில் இருந்து தான் தெரியும்.

தமிழ்வாணனைத் தொடர்ந்து ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, ர.சு. நல்லபெருமாள் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை எடுத்துப் படித்தான். கூடவே பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் டி.எம்.எஸ் குரலில் "எம்.ஜி.ஆர் பாடல்களாக" அவனை ஈர்த்தன.

'வேப்பமர உச்சியில் நின்னு
பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க

உந்தன் வீரத்தை முளையிலேயே
கிள்ளி வைப்பாங்க..
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே'

இந்த வரிகள் தான் அவனுக்கு உலகைக் காட்டத் தொடங்கிய முதல் வரிகள். அவன் வீட்டின் பின்புறம் ஒரு வேப்பமரம் இருந்தது. கொல்லைப்புறத்தில் கொடியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து வருவதற்கு அவனுக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தது.

"பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்"
என்று பாடல் வரிகளை முணுமுணுத்தபடி பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்பா அவனை அழைத்தார். அப்போது பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

அவன் கையில் ஒரு கவர் கொடுத்தார். அதில் அவனது பெயர் மற்றும் அவனது வகுப்பு,பிரிவு,பள்ளி இருந்தது. பள்ளி முகவரிக்கு அவனுக்கு வந்த கடிதம். பிரித்துப் படித்தான்.

அது அவனை விளித்து எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம். அப்பா சொன்னார்:
" இது இரண்டாவது கடிதம். முதலில் ஒன்று வந்தது. அறியாத பருவத்து செயல் என்று உன்னிடம் சொல்லாமலே நானே கிழித்து விட்டேன். உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உனக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இப்போது உனக்குப் படிக்கத் தந்தேன். இதையும் நீயே கிழித்துப் போட்டுவிடு..இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இந்த உணர்வுக்கான பருவம் இதல்ல.. வகுப்பில் மற்றவர்களிடம் சொல்லாதே. அந்தப் பெண்ணிடமும் எப்போதும் போல் பழகு. நான் யாரிடமும் இது குறித்துப் பேசப் போவதில்லை''

கடிதத்தை உடனே அவன் கிழித்துப் போடவில்லை. இரண்டு நாட்கள் சட்டைப் பையில் வைத்திருந்தான். அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்க இயலாது என்று கிழித்துப் போட்டான். "சட்டைப் பையில் உன் கடிதம் தொட்டுத் தொட்டு உரச என் இதயம் உன்னைச் சுற்றுதே" என்று அப்போது சினிமா பாடல் வரவில்லை.

அப்பாவின் அணுகுமுறை அவனை நெகிழச் செய்தது.ஜெயகாந்தனின் "சமூகம் என்னும் நாலு பேர்" சிறுகதையை அவன் படித்திருந்தான்.

பள்ளியில் சக மாணவிக்கு ஒரு மாணவன் "லவ் லெட்டர்" கொடுப்பான். அவள் வீட்டில் சொல்லி அவர்கள் ஊரைக் கூட்டி கலாட்டா செய்வார்கள். மாணவியே ஒதுக்கி இருக்கலாம் அல்லது அவளது பெற்றோர் பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம் ; மாறாக அவர்கள் செய்த இந்தச் செயல் அந்த மாணவனை அவமானத்தால் கூனிக் குறுகச் செய்யும் செயல் என்று ஆசிரியர் கருத்து வரும்.

ஒரு பிரச்னைக்கு பல கோணங்கள் உண்டு என்று அவனுக்கு அப்பாவுடன் சேர்த்து சிறுகதைகளும் உணர்த்தின.

ஸ்டேஷன் பெஞ்ச்சில் அமர்ந்து நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களைத் தாண்டி ஓரிரு பாலியல் தொழிலாளிகள் போவார்கள்; வருவார்கள்.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் இரவு 7.30 மணிக்கு அந்த ஸ்டேஷனைக் கடந்து சென்றுவிட்டால், பிறகு மறுநாள் காலை தான் ரயில். இரவு நேரம் அங்கு என்னென்னவோ நடக்கும் என்று அறிந்திருக்கிறான்.

எப்போதாவது அவர்களைக் கடந்து போகும் போது "தம்பி, டிரெய்ன் போயிடுச்சா?" என்று பாலியல் தொழிலாளி கேட்பார். அவனுக்கு அருவருப்பாக இருக்கும். அவர்களைப் பார்த்தாலே பிடிக்காது. இதைப் போலவே தான் சிறை சென்று வந்தவர்கள், மது வாசனையுடன் இருப்பவர்கள் யாரையும் அவனுக்குப் பிடிக்காது.

இலக்கணம் மீறிய கவிதை என்ற சிறுகதை பாலியல் தொழிலாளியின் காதல் குறித்தது. அது அவனது பார்வைக்கான சாளரத்தைத் திறந்தது. அரங்கேற்றம், தப்புத்தாளங்கள் போன்ற திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவின.

"சாளரம்" என்றொரு கதை. பக்கத்து வீட்டில் சகோதரனும் சகோதரியும் உறவு கொள்ளும் கதை.. அதிர்ச்சியை அளித்தது. ஆனாலும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இது போன்றும் நடக்கலாம் என்று புரிந்து கொள்ள உதவியது.

"ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" ஹென்றி, "பாரீசுக்குப் போ" சாரங்கன், "ஒரு இலக்கியவாதியின் திரையுலக அனுபவங்கள்" ஜெயகாந்தன் ஆகியோர் மது அருந்துதலை ஒழுக்கக் கேடாகப் பார்ப்பதில் இருந்து மாற்றினர். உடல்நலனுக்குத் தீங்கான ஒரு தனிமனிதப் பழக்கம் என்ற அளவில் அவன் புரிந்து கொண்டான்.

காண்டேகரின் "கிரௌஞ்சவதம்" திலீபன், "வெண்முகில்" நரேந்திரன் போராடும் உணர்வை வளர்த்தார்கள்.

இந்திரா பார்த்தசாரதியின் "தந்திரபூமி" கஸ்தூரி வேறு சில விஷயங்களில் இருந்த கட்டுப்பெட்டித் தனத்தை உடைத்தார். ஆதவன் அவரது சிறுகதைகள் மூலம் தனிமனித மனங்களுக்குள் நிகழும் போராட்டங்களை அறிய உதவினார்.

அடிதடி தகராறுகளில், கத்திக் குத்து, அரிவாள் வெட்டு போன்ற வழக்குகளில் சிறை சென்று வந்த ஒருவர், இரவு 9 மணிக்கு மேல் அவனை சாலையில் கண்டால் " காலம் கெட்டுக் கிடக்கு தம்பி.. சீக்கிரம் வீட்டுக்குப் போ" என்பார்.

ஆரம்பத்தில் அவரிடம் பேச பயப்பட்ட அவன் பிறகு அவரை நிறுத்தி நலம் விசாரிக்கும் பழக்கத்தை மேற்கொண்டான்.

அவருடைய கோஷ்டிக்கும் எதிர் கோஷ்டிக்கும் அவனது வீட்டு முன்னால் கடும் மோதல். அவருடைய தம்பி அவன் வீட்டு கதவைத் தட்டி "சார்" என்று அழைத்தான். ஜன்னல் வழியாகப் பார்த்தால் அரிவாள், வேல்கம்பு கையில் கொண்ட மனிதர்கள்..

அப்பா கதவைத் திற என்றார். அவன் தயங்கினான். வாசலில் ரத்தம் சொட்ட ஒருவருடன் அந்தத் தம்பி.. அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்டு அப்பா சொன்னார்." சண்டை போடற பசங்கள்லேயும் பாதிக்கு மேல என்னோட மாணவர்கள் தான்.. இவனுக்கு இடம் கொடுக்கறதுனால யாரும் நம்ம கிட்ட சண்டைக்கு வர மாட்டாங்க.."

அவனது தயக்கத்தைப் போக்கினார். அவன் கதவைத் திறந்தான். சண்டை முடிந்து கும்பல் கலையும் வரை காயப்பட்டவனை அவனது வீட்டில் வைத்திருக்கச் சொல்லிவிட்டு, கும்பல் கலைந்தபிறகு அந்த தம்பி வந்து அழைத்துச் சென்றான். சண்டைகள் போட்டாலும் அவர்களும் நம்மைச் சார்ந்த மனிதர்களே என்று அவன் புரிந்து கொண்டான்.

நேற்று அப்பா ஊரில் இருந்து தொலைபேசியில் பேசினார். 'கோபால் அய்யரின் தமிழ் இலக்கண நூல் அவசியம் நம் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விலை அதிகம் என்று நினைக்க வேண்டாம். உடனடியாக இன்றோ நாளையோ போய் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. ஆனால் வாங்கி வைத்திரு" என்றார்.

அவர் இதுவரை இது வேண்டும் என்று எதுவுமே கேட்டதில்லை. அந்த நூலை வாங்க வேண்டும்.

Saturday, November 05, 2005

பட்டங்களுக்காக அலைபவர்கள்!

சென்னை சாலைகளில் பயணம் செய்கிறபோது பலவிதமான விளம்பர பேனர்களைப் பார்க்க முடிகிறது. இவற்றில் சினிமா விளம்பரங்களில் கதாநாயகர்களுக்கு போடப்பட்டிருக்கும் பட்டங்கள் வியப்பளிக்கின்றன. புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், புரட்சித் தமிழன் சத்யராஜ், புரட்சி நாயகன் முரளி, புரட்சித் திலகம் பாக்யராஜ் .. இப்படி நிறைய புரட்சிக்காரர்கள்..

பிரபு "இளைய திலகம்' என்றால் விஜய் "இளைய தளபதி' ஆகிவிடுகிறார்! ரஜினிகாந்த் "சூப்பர் ஸ்டார்' என்றால் கமல்ஹாசன் "சூப்பர் ஆக்டர்' என்றும் "உலகநாயகன்' என்றும் ஆகிவிடுகிறார். சரத்குமார் "சூப்ரீம் ஸ்டார்' என்றால் அஜித்குமார் "அல்ட்டிமேட் ஸ்டார்' ஆகிவிடுகிறார். ஒரு காலத்தில் கமல்ஹாசனுக்குப் போட்ட காதல் இளவரசன் பட்டத்தை இப்போது பிரசாந்த் தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்கிறார். சிலம்பரசனுக்கு போடப்படும் பட்டம் "லிட்டில் சூப்பர் ஸ்டார்'..

நடிகர் திலகம் சிவாஜி, புரட்சி நடிகர் அல்லது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், நடிகவேள் எம்.ஆர்.ராதா என்று முந்தைய தலைமுறை நடிகர்கள் அழைக்கப்பட்டதால் வந்த வினை..நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்ற பட்டங்களை ஏதேனும் ஒரு பொதுக்கூட்டத்தில் யாராவது ஒரு தலைவர் வழங்கியிருக்கக் கூடும். ஆனால் இன்றைய நடிகர்களில் பலருக்கு அப்படி பட்டங்களை வேறு யாரும் வழங்கியதாகத் தெரியவில்லை. அவர்களே போட்டுக் கொள்கிறார்கள் போலிருக்கிறது..

ஒரு குறிப்பிட்ட காலம் போனபிறகு சொந்தப் பெயரிலும் அழைக்கக் கூடாது.. திரைக்காக வைத்த பெயரிலும் அழைக்கக் கூடாது.. பட்டங்களால் மட்டுமே அழைக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத சட்டங்கள் அமலுக்கு வரும். ஜால்ராக்கள் நடைமுறைப்படுத்துவர்..யாராவது அவர்களை அவர்களது பெயர்களால் விளித்தால் ஓரங்கட்டப்படுவார்கள்.

இந்தப் பண்பாட்டிற்கு என்ன பெயர்? தங்களுடைய பட்டங்களுக்குத் தாம் முற்றிலும் தகுதி உடையவர்கள் தானா என்று ஒரு கணமேனும் இவர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களா?

இப்படிப் பட்டங்களுக்காக அலைபவர்கள் சினிமாக்காரர்கள் மட்டுமல்ல.

Friday, November 04, 2005

சங்க காலம்

இந்தப் பதிவு முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் குறித்தது அல்ல.
அவன் கல்லூரியில் படிக்கும்போது கல்லூரியின் மாணவர் பேரவைச் செயலராக இருந்தான். வங்கியில் வேலைக்குச் சேர்ந்ததும் ஊழியர் சங்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டினான். இதற்கான அடித்தளம் எங்கு எப்படி போடப்பட்டது என்று நினைத்துப் பார்க்கிறான்.

1972-73. அப்போது அவன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டு அதிமுக என்று புதிய கட்சி தொடங்கியிருந்தார்.

தமிழக அரசை எதிர்த்து அவர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். அல்லது / மற்றும் தமிழக அரசை எதிர்த்து நடைபெற்ற பல போராட்டங்களை ஆதரித்துக் கொண்டிருந்தார்.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் போலீஸ் தடியடி, நடத்தியது. கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியது. துப்பாக்கிச் சூடு நடத்தியதா என்று நினைவில்லை. ஆனால் மாணவர் லூர்துநாதன் அதில் இறந்து போனார். தாமிரபரணி /பொருநை ஆற்றுப் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார் என்றும் காவல்துறையின் அடக்குமுறைக்குப் பயந்து அவரே கீழே குதித்து இறந்து போனார் என்றும் இருவிதமான கருத்துக்கள் அப்போது நிலவின.

மாணவர்களுக்கு ஆதரவான அடையாள வேலைநிறுத்தம் அவன் படித்த பள்ளியிலும் நடைபெற்றது. உயர்வகுப்புகளில் படித்த சில மாணவர்களுக்கு போராட்டம் ஒரே நாளில் முடிவடைவதில் விருப்பம் இல்லை. எனவே மாணவர் சங்க தேர்தல் உள்ளிட்ட கோரிக்கைகளைப் பள்ளி கால்பந்து மைதானத்தில் வைத்து திரட்டிக் கொண்டிருந்தனர்.

தற்செயலாக அங்கே போன அவனிடம் ஏதாவது பிரச்னை இருக்காப்பா என்று கேட்டார்கள். அவன் ஆம் என்றான். அவர்கள் வியப்புக்குள்ளானார்கள். ஏனென்றால் அவன் வாத்தியார் பையன். அவன் போராட்ட மாணவர்களுடன் சேர்ந்து காட்சி அளிப்பதே சிக்கல். அவனுக்கு அதெல்லாம் தெரியாது.

பாடத்தில் உள்ள கேள்விகளைப் படித்து ஒப்பித்துவிட்டுத் தான் நண்பகல் சாப்பாட்டுக்குப் போக வேண்டும் என்று வகுப்பு ஆசிரியை ஒரு சட்டம் போட்டிருந்தார். அவனுக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லைதான். வகுப்பு நேரம் முடிவதற்குள்ளேயே அவன் படித்து மனப்பாடம் செய்து யாரிடம் ஒப்பிக்க வேண்டுமோ ஒப்பித்துவிடுவான். இருந்தாலும் சக மாணவர்கள் சாப்பிடப் போக முடியாமல் புத்தகங்களுடன் அல்லாடியது அவனுக்குப் பிடிக்கவில்லை.

எனவே அது போன்று ஆசிரியர்கள் மாணவர்களைச் சித்திரவதை செய்யக் கூடாது என்று அவன் கோரிக்கை எழுப்பினான். அது கோரிக்கைப் பட்டியலில் எழுதப்பட்டது.

அது என்ன ஆனது போராட்டம் என்ன ஆனது என்பது முக்கியமில்லை. ஆனால் அவன்தான் இந்தக் கோரிக்கையை எழுப்பியது என்பது வெளியில் தெரிந்து விட்டது. அன்றிலிருந்து அந்த ஆசிரியை வகுப்புக்கு வந்தால் அவனைத் திட்டி நொறுக்குவார். அவரும் அழுவார். அவனும் அழுவான். அந்த வருடம் முடியும் வரை இது தொடர்ந்தது. “நீ என்னிக்காவது சாப்பிடப் போகாமல் இருந்திருக்கியா? இவ்வளவுக்கும் உங்க அப்பாவும் ஆசிரியர். நீயே கோரிக்கை எழுதிக் கொடுக்கிறாயா? எனக்கு எதிராகக் கோரிக்கை எழுதிய உன் கை அழுகிப் போகும்”

ஆசிரியர் சாபமாச்சே பலித்து விடுமோ என்று அவனுக்கு பயம். அடிக்கடி வலது கையில் ஏதேனும் புண் வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்வான். அதிகாரத்துக்கு மாற்றான கருத்துக்கு என்ன பின்விளைவு என்பதைப் பின்னாளில் இந்த சம்பவத்தின் பின்னணியில் அவன் நினைத்துப் பார்ப்பதுண்டு. தனது பிரச்னைகளைச் சொல்ல முடியாதவர்களுக்காக குரல் கொடுக்கும் பழக்கம் அன்றுதான் அவனுள் விதையாக விழுந்திருக்கும் போலிருக்கிறது.

1975-76. பதினோராம் வகுப்பு. அன்று வகுப்புத் தேர்வு. அதற்கு முந்தைய நாள் திருக்கார்த்திகை.

மாணவர்கள் டயர் எரிக்கும் திருவிழா. நிறைய பேர் தேர்வுக்குப் படிக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. திடீரென்று பார்த்தால் படித்தவன் படிக்காதவன் அனைவரும் வகுப்பைப் புறக்கணித்து மைதானத்தில் போய் அமர்ந்தனர்.

அவனது அப்பாதான் மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வந்தார். பிரச்னை என்ன என்று அறிந்து கொண்டார். இதெல்லாம் ஒரு காரணமாடா ஸ்டிரைக்குக்கு? வகுப்புக்கு போங்கடா , இன்றைக்கு தேர்வு இருக்காது. நாளைக்காவது படிச்சுட்டு வந்திடுங்க..இது ஒரு ஸ்டிரைக்..இதை ஒடுக்க எமெர்ஜென்சியைப் பயன்படுத்தி போலீஸில் புகாராம்.. ஜெயிலாம். விவரம் தெரியாம பண்ற பசங்களை ஜெயில்ல போடத் துடிக்கற வாத்தியார்கள்..”

அவனது அப்பா வந்து பேசியவுடன் மாணவர்கள் வகுப்புக்குத் திரும்பியது ஆசிரியர்கள் நடுவில் அவருக்கு வேறு பிரச்னைகளைக் கொடுத்தது என்பது வேறு விஷயம்.

ஊரில் இருந்து 11 கி.மீ தூரத்தில் இருந்த கல்லூரிக்கு புகுமுக வகுப்பு சேர்க்கைக்காகப் போயிருந்தான். முதல்வர் அறை. அவர் எதிரில் அவன். மதிப்பெண்கள் 80.5%.. ஒழுக்கச் சான்றிதழில் மிகவும் பிரமாதம் என்று குறிப்பு. விண்ணப்பத்தைப் பார்த்தார். மாணவரின் பெயரைப் பார்த்தார். அவனைப் பார்த்தார்.

அடுத்து தந்தையின் பெயரைப் பார்த்தார். எல்லாவற்றையும் அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். “அப்பாவைப் பார்த்து நான் பேசிய பிறகுதான் உன் அட்மிஷன் பத்தி நான் யோசிக்க முடியும்” என்று அனுப்பி விட்டார். அப்பாவுக்குப் பிடித்த – அவரிடம் படித்த மாணவர்கள் அந்தக் கல்லூரியில் சில போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியிருந்தார்கள்.

எப்படியோ அதே கல்லூரியில் புகுமுக வகுப்புக்கு சேர்ந்து ஒன்றுபட்டிருந்த மதுரை பல்கலைக்கழகத்தின் பூப்பந்து அணியில் தேர்வு செய்யப்பட்டான். 1976-77 காலம் என்பதால் அவசரநிலை காரணமாக எந்தப் போராட்டமும் கல்லூரியில் நடைபெறவில்லை. அவன் பிழைத்தான். கல்லூரி முதல்வருக்கு அவன் மீது நிறைய அன்பு.

பட்டப்படிப்புக்கு வந்து சேருமாறு அழைத்தார். அவன் போகவில்லை. புகுமுக வகுப்பு சேர்க்கையின்போது முதல்வர் நடந்து கொண்டது அவனைப் பாதித்து இருந்தது. நமது நடத்தை மட்டும் அல்ல மற்றவர்களின் பார்வை வேறுபட்டால் கூட முரண்பாடுகள் உருவாகும் என்று புரிந்து கொண்டான்.

அடுத்து பட்டப்படிப்புக்காக சேர்ந்த கல்லூரியில் அவன் மாணவர் பேரவைச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 1977 ஏப்ரல் முதல் இந்திரா காந்தியின் அவசரநிலைக்குப் பிறகு வந்த ஜனதா அரசாங்க காலத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் எழுச்சி இருந்தது. ஜனநாயகத்தின் மீது மிகுந்த ஈர்ப்பு வந்தது.

படிப்பில் குறைந்தது 75% மதிப்பெண்கள். விளையாட்டில் பல்கலைக்கழக பூப்பந்து அணியில் பிரதிநிதித்துவம். மாணவர் பேரவைச் செயலராக போராட்டங்கள். நன்றாகப் படிப்பவர்களும் விளையாட்டு வீரர்களும் யூனியன் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்றும் மாணவர் யூனியன் தலைவர்கள் ரவுடித்தனம் கொண்ட மாணவர்கள் என்றும் இருந்த பரவலான நம்பிக்கையில் அவன் கீறலை உருவாக்கினான்.

மதுரைப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டம் நடத்தி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது பல்கலைக்கழகத் தேர்வுகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினான். பல்கலைக் கழகத் தேர்வு எழுதாமல் வந்ததற்காக முதன்முறையாக அப்பா அவனைக் கடிந்து கொண்டார். பல்கலைக்கழகம் மறுதேர்வு நடத்தாவிட்டால் அவனுக்கு “அரியர்ஸ்” என்று வரலாறு குறித்துக் கொள்ளும் என்று அவர் வருத்தப்பட்டார்.

ஆனால் தங்களுக்காகப் போராடிய மாணவர்களை மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கைவிடவில்லை. மறு தேர்வு கோரிக்கையை எழுப்பி வென்றது. பல்வேறு போராட்டங்களுடன் “அரியர்ஸ்” இல்லாமல் பட்டப்படிப்பு முடிவடைந்தது.

அதே கல்லூரியில் அவனுக்கு பட்ட மேற்படிப்புக்கு பல்கலைக்கழகம் இடம் ஒதுக்கியும் கல்லூரி நிர்வாகம் இடம் கொடுக்க மறுத்தது. “எங்கள் கல்லூரியில் தான் படிப்பேன் என்று வலியுறுத்தாதீர்கள். நாங்களே உங்கள் பையனுக்கு வேறு நல்ல கல்லூரியில் இடம் பெற்றுத் தருகிறோம்” என்று அப்பாவிடம் சமாதானம் பேச வந்தார்கள். அப்பா மறுத்துவிட்டார்.

“அவன் மோசமான பையன் என்று நீங்கள் இடம் கொடுக்க மறுக்கிறீர்கள். நான் ஓர் ஆசிரியன். நீங்கள் இடம் மறுப்பதால் அவன் எந்தக் கல்வி நிறுவனத்திலும் படிப்பதற்கு தகுதி இல்லாதவன் என்று நான் புரிந்து கொள்கிறேன். இனி அவனை நான் எந்தக் கல்லூரியிலும் படிக்க வைப்பதாகவும் இல்லை. உங்கள் கல்லூரியில்தான் இடம் வேண்டும் என்று பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து வலியுறுத்தவும் போவதில்லை. அவன் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறி அனுப்பி விட்டார்.

அப்பா மதுரையில் ஓர் ஆடிட்டரிடம் சி.ஏ. படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அவன் அதற்குள் கிடைத்த டெலிபோன் ஆபரேட்டர் வேலைக்குச் செல்வதாக முடிவெடுத்தான்.

பிறகு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வேலைக்கான உத்தரவு வந்தது. அந்தக் கிளையில் போய்ச் சேர்ந்த முதல் நாளே ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கு விண்ணப்பம் கொடுங்கள் என்று கேட்டான். அங்கிருந்த அனைவரும் அவனை ஒருமாதிரியாகப் பார்த்தனர். அன்று தொடங்கி 13 வருடங்கள் ஊழியர் சங்கத்தில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தான்.

அதன் பின் பதவி உயர்வு பெற்று உதவி மேலாளர் ஆனபிறகு சங்க ஈடுபாடு குறைந்தது. விட்டகுறை தொட்ட குறையாகவே சங்கத் தொடர்பு இருந்தது. அதிகாரியான ஐந்து வருடங்களில் விருப்ப ஓய்வு பெற்று ஊடகங்களில் பணிபுரிந்து வருகிறான்.

ஆனால் இன்று அவன் எந்தப் பத்திரிகையாளர் சங்கத்திலும் உறுப்பினர் கூட இல்லை.

Thursday, November 03, 2005

ஜுலை மாதம் வந்தால்…

பதவி உயர்வு பெற்று சென்னை வந்த அவன் இப்போது ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிளையில் உதவி மேலாளராகச் சேர்ந்தான். சென்னையில் அவனது ஸ்டேஷன் பெஞ்ச் நண்பர்கள் பலர் இருந்தார்கள்.

மணியன் மறைந்து போன பிறகு தடுமாறிக் கொண்டிருந்த இதயம் பேசுகிறது வார இதழில் இருவர் இருந்தனர். அவனும் மாலை நேரங்களில் கிண்டி சென்று அவர்களுடன் பொழுதைக் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

நண்பர்களின் பணிகளில் உதவி செய்வதன் மூலம் இதழ் வெளியாவதற்கு முன்பே அதன் உள்ளடக்கம் குறித்து அவன் அறிந்து கொள்ள முடிந்தது. இது போன்ற வார இதழ்களில் அவனுக்கு அதுவரை ஈர்ப்பு எதுவும் இருந்ததில்லை.

ஆனால் அவனது நண்பர்கள் அவ்வாறான இதழ்களில்தான் வேலை பார்த்தார்கள். இன்னொரு நண்பர் வேறொரு வார இதழின் ஆசிரியராக இருந்தார். இருந்தும் அவனுக்கு அவற்றில் எழுத வேண்டும் என்று தோன்றியதே இல்லை.

கல்லூரி முடித்து வேலை கிடைக்காத இடைப்பட்ட நாட்களில் ஊரில் "கீதம்" என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினான். "நாங்கள் பாடும் கீதங்கள் ; நாளை உலகின் வேதங்கள்" என்று முழக்கம் வேறு.

இந்தப் பத்திரிகைக்கான வாசகர்கள் யார்? எழுதி யாருக்கு எப்படி படிக்கக் கொடுப்பது?
ஊரில் இருக்கும் பொது நூலகத்தின் நூலகரை அணுகினான்.

"நான் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்துகிறேன். அதை இங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்"

அவனது அப்பா அந்த ஊர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர். ஊரின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர். ஊரின் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றவர். அவருடைய பையன் கேட்கிறான்..அவனையும் ஐந்தாம் வகுப்பு படித்த காலத்தில் இருந்து அவருக்குத் தெரியும்.. அவனுக்கு அப்போதிலிருந்து நூலகம் செல்லும் பழக்கத்தை அப்பாவும் அண்ணனும் ஏற்படுத்தி இருந்தார்கள்.

கேட்கும் நூல்களை இப்போது குழந்தைகளுக்கு சொந்தமாகவே வாங்கிக் கொடுப்பது போல் அப்போது வாங்கிக் கொடுக்கும் வழக்கம் அவன் வீட்டில் இல்லை. அவர்களுக்கு அதற்கான வசதியும் இல்லை என்பது வேறு விஷயம்.

இந்தப் பின்னணி கொண்டவன் கேட்டவுடன் நூலகர் அதற்கு சம்மதித்தார். அதற்கான அதிகாரம் அவருக்கு உண்டா இல்லையா என்பது குறித்து அவனுக்குத் தெரியாது. அதனால் வரப்போகும் பிரச்னையையும் அவனோ அவரோ அறிந்திருக்கவில்லை.

2 இதழ்கள் வந்தன. வாசகர் பக்கங்களில் ஏராளமான எதிர்வினைகள்..அன்று வாசகர் மறுமொழியிட்டவர்களில் ஒருவர் மாதவராஜ். அவர் இப்போது எழுத்தாளர். ஒரு பிரபல எழுத்தாளரின் மருமகன் என்று கேள்வி. வாசகர் பக்கங்களில் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் இருந்தன. எதிர்ப்பவர்கள் நூலகரை அணுகி "ஏன் இதை இங்கு போடறீங்க? யார் நடத்தறது இதை?" என்று கேட்கும்போது "நம்ம சார் பையன் தான்" என்ற பதிலில் எதிர்ப்பாளர்கள் பதில் பேசாமல் திரும்பியிருக்கிறார்கள்.

ஆகா..நமது பத்திரிகை ஊருக்குள் வேலை செய்கிறது என்ற மகிழ்ச்சி அவனுக்கு. ஆனால் அடுத்த இதழில் அது நீடிக்கப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியவில்லை.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எங்கோ பேசியிருந்தார். " தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விச் சேவை குறைந்து வருகிறது" என்பது அந்தப் பேச்சின் கருத்து. அதை அவன் கீதத்தில் எடுத்துப் போட்டிருந்தான். அதுவே பிரச்னை ஆனது.

அவனது அப்பா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர். பள்ளி நிர்வாகம் ஒரு காங்கிரஸ் தலைவர் பொறுப்பில். நூலகரும் அந்தத் தலைவருக்கு வேண்டியவர்தான். இந்திரா காந்தியின் பேச்சு என்பது கூட அவர்களுக்கு முக்கியமாகப்படவில்லை. பிரதமர் பொதுவாக டெல்லியில் பேசியதை இந்தக் கிராமத்தில் கையெழுத்துப் பத்திரிகையில் போட வேண்டிய அவசியம் என்ன? இதில் ஏதோ உள்விவகாரம் இருக்கிறது என்று நிலைமை வேறு திசையில் மாறிவிட்டது.

அப்பாவுக்கு பள்ளியில் ஏதோ அதிருப்தி, அதை பையன் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று திரிக்கப்பட்டு விட்டது. நூலகத்தில் இருந்த "கீதம்" தலைவரது வீட்டுக்குப் போய்விட்டது. அப்பா விசாரணைக்காக அழைக்கப்பட்டார். "விசாரணை" முடிந்து வீட்டுக்கு வந்த அப்பா அவனிடம் சொன்னார்.

" இந்த ஊரில் நீ சொல்வது எடுபடாது. இந்த ஊரில் நாம சிறுபான்மையினர். எது நடந்தாலும் நீயும் உன்னோட நண்பர்களும் ஏதோ கலகம் பண்றதாத் தான் நினைப்பாங்க. ஒரு வேலையில் சேர்ந்து அங்கு தொழிற்சங்கத்துல உன்னோட கருத்துக்களை எல்லாம் பேசிக் கொள்.

பள்ளிக் கூடத்துல ஏதாவது ஒரு காரணத்துக்காக என்மேல அதிருப்தியில் இருக்கறவங்க எல்லாரும் நான் சொல்லித்தான் நீ பத்திரிகையில் விஷயங்கள் போடறதா எனக்கு எதிரா கோள் சொல்லியிருக்காங்க.. உங்க பத்திரிகையில் என்ன எழுதியிருக்குன்னு ஒருத்தரும் தெரிஞ்சுக்க மாட்டாங்க. யார் எழுதுறது, ஏன் எழுதறாங்க, இவங்களுக்கு என்ன இதுல அக்கறைன்னு ஏதாவது ஒரு முத்திரை குத்தி வாழ்க்கையைக் கெடுக்கப் பார்ப்பாங்க..

'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'ன்னு நான் பாடம்தான் சொல்லிக் கொடுக்க முடியும். எல்லோரையும் வாழ்க்கையிலயும் கடைப்பிடிக்கறாங்களான்னு பார்த்துத் திருத்த முடியாது..

இதுதான் இங்கே நிலைமை..அதுக்குத் தகுந்த மாதிரி நீ முடிவு எடுத்துக்கோ.. என்னைக் கேட்டா கீதத்தை நீ நிறுத்திடறதுதான் நல்லது. ஏன்னா நீ போய் நூலகர்கிட்ட நான் இங்கே போட்ட பத்திரிகை எங்கேன்னு கூட கேட்க முடியாது."

அவர் எப்போதும் அப்படித்தான் சொல்வார். ஆணையிட்டோ வற்புறுத்தியோ எதுவும் பேசமாட்டார். ஆனால் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை போகிற போக்கில் உணர்த்திவிடுவார்.

இப்படித்தான் ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் போது அவனும் இன்னொரு நண்பனும் "திருட்டு தம்" அடித்தது அந்த நண்பனின் வீட்டுக்கு தெரிந்து விட்டது. அந்த நண்பனை அந்த அப்பா அடி பின்னி எடுத்துவிட்டார். ஆனால் அவன் அப்பாவோ " நீ சிகரெட் பிடிக்கறதா கேள்விப்பட்டேன்.. ரயில் செய்யற வேலை புகை விடறது.. மனுஷனுக்கு எதுக்கு.. நமக்கு அதெல்லாம் வேண்டாம் விட்டுடு" என்று சாதாரணமாகச் சொன்னார். கல்லூரி செல்லும் வரை அவன் புகை பிடிக்கவில்லை.

இனி கையெழுத்துப் பத்திரிகையை நூலகத்தில் போட முடியாது. அப்பாவுக்கும் நெருக்கடி. பையனின் செயல்பாடுகளை அப்பாவுடன் சேர்த்தே பார்க்கும் பழக்கம் சுற்றுவட்டாரத்தில் இருக்கிறது. "வளர்க்கத்" தெரியவில்லை என்று பட்டம் வேறு வழங்குவார்கள். எனவே கீதம் நின்று போனது.
***************************************************************************************************
1982 இறுதியில் மதுரை தல்லாகுளம் தொலைபேசி அலுவலகத்தில் 3 மாதம் தொலைபேசி இயக்குநர் பயிற்சிக்கு சென்றான். அவனுக்கு அருகில் விவேகானந்தன் என்றொருவர் இருந்தார். அவர் அங்கு ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்த வேண்டும் என்றார். அது முழுக்க முழுக்க விவேகானந்தன் முயற்சியில் வந்தது. "ஆயிரம் மலர்களே மலருங்கள்" என்று ஓர் அறிமுகவுரையும் 2 கவிதைகளும் அவன் கொடுத்தான். இதழ் வந்த சில நாட்களில் விவேகானந்தன் அவனிடம் சொன்னார்.
" தலைவா, நீங்க ஏதோ 'நிறம் மாறாத பூக்கள்' படப் பாட்டு வரியைப் போட்டு எழுதறீங்கன்னு நினைச்சேன். அது மாவோ சொன்னதாம்ல.. யூனியன் லீடர்ஸ் எல்லாம் புக்கைப் பார்த்துட்டு இது யார் எழுதுனதுன்னு கேட்டாங்க.."
அவன் மௌனமாக சிரித்துக் கொண்டான்.
*******************************************************
அதன்பிறகு அவன் எழுதியதெல்லாம் வங்கி ஊழியர் சங்க அறிக்கைகள் தான்.

"தாக்குண்டால் புழு கூடத் தரைவிட்டுத் துள்ளும்
கழுகு தூக்கிடும் குஞ்சு காணத் துடித்திடும் கோழி
சிங்கம் சினந்து தாக்கினால் சிறுமுயல் கூட எதிர்த்து நிற்கும்
சாக்கடைக் கொசுக்களா நாம் சரித்திரச் சக்கரங்கள்"

''விதவிதமாய் மீசை வைத்தோம்
வீரத்தைத் தொலைத்து விட்டோம்"

"மண்ணில் வேரோடி மாநிலத்தில் கால் பதித்து
வீசும் புயற்காற்றை வீழும்வரை நின்றெதிர்ப்போம்"

போன்ற செவ்விலக்கியக் கவிஞர்களின் கவிதை வரிகளுடன் அறிக்கைகள் அரசியல் கட்சி சார்பற்ற வங்கி ஊழியர் சங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

அவனது தங்கையின் கணவர் அடிக்கடி சொல்லுவார். அவர் அவன் மனைவியின் தம்பியும் கூட.

" நீ பத்திரிகையில் எல்லாம் எழுதலாம். உன் நண்பர்களோ பத்திரிகையில் இருக்காங்க.. ஏன் எழுத மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறே?"

இப்படியே பார்க்கும்போதெல்லாம் பேசுவார். வங்கி அதிகாரியின் பணி விதிகள் அதற்கு தடையாக இருக்கின்றன என்று அவன் கூறுவான். ஆனால் அவரோ விடாமல் அவனது ஊடக நண்பர்களிடமும் அவனை எழுதச் சொல்லுங்கள் என்று வற்புறுத்துவார். ஆனால் அவன் எங்கும் எழுதவில்லை.
அன்று ஜூலை 1, 1997.

காலையில் எழுந்ததுமே அவனுக்கு ஏனோ அண்ணனின் நினைவு வந்தது. அண்ணன் மறைந்து நான்கு வருடங்கள் முடியப் போகிறது. இறுதிக் காலத்தில் அண்ணன் மீண்டும் மீண்டும் கேட்ட பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. அந்த வரிகளை இன்று கேட்டாலும் அவனது கண்களில் ஈரம் துளிர்க்கும்.

''கொடியின் பூக்கள் எல்லாம்
காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம்
உறவு வாழும் வரை
காதல் நினைவொன்று தானே
காற்று வீசும் வரை

மழையின் பயணம் எல்லாம்
மண்ணைத் தீண்டும் வரை
படகின் பயணம் எல்லாம்
நதியைத் தாண்டும் வரை
மனித பயணங்கள் எல்லாம்
வாழ்க்கை தீரும் வரை"

என்னவோ 'டல்' ஆக இருந்தது. இருந்தும் வங்கிக்குப் புறப்பட்டுச் சென்றான்.
வங்கியில் எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியவில்லை. அவன் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு துறைகளுக்கு பொறுப்பு அதிகாரி.

அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. உடலில் எந்தக் கோளாறும் இருப்பதாகத் தெரியவில்லை. மனதிலும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனாலும் ஒரு வெறுமை..

மேலாளரிடம் சென்றான். லீவு வேணும் என்றான். அவன் நிலையைச் சொல்லி செயல்பட இயலவில்லை என்றான். அவர் "இதுக்கு எதுக்கு லீவை வேஸ்ட் பண்றீங்க..வாடிக்கையாளர் சேவைக்கு நான் வேற ஆபீசரைப் போட்டுக்கறேன். நீங்க உள் அலுவலகப் பணிகளைப் பாருங்க" என்றார்.

அங்கும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. 18 வருட வங்கி அனுபவத்தில் அன்றைய நாள் மட்டும்தான் அவன் ஒரு துரும்பைக் கூட வங்கிக்காக கிள்ளிப் போடவில்லை. கிரேசி மோகன் நாடகக் குழுவைச் சேர்ந்த சீனுமோகன் அந்தக் கிளையில் தான் பணியில் இருந்தார். அவர் வந்து அவனை காபி சாப்பிட அழைத்துக் கொண்டு வெளியில் சென்று கலகலப்பாக்க முயன்றார். ஆனாலும் அவன் இயல்பாகவில்லை.

"காற்று வழி போவதை
நாற்று சொல்கின்றது
நேற்று மழை பெய்ததை
ஈரம் சொல்கின்றது
கண்ணில் வழிகின்ற கண்ணீர்
காதல் சொல்கின்றது

இலைகள் வீழ்ந்தாலுமே
கிளையில் துளிர் உள்ளது
இரவு தீர்ந்தாலுமே
இன்னும் நிலவுள்ளது
பாதி உயிர் போன போதும்
மீதி வாழ்வுள்ளது"
என்ற வரிகளை மட்டும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.

மாலையில் நண்பர்கள் யாருடனாவது "ரிலாக்ஸ்" பண்ணலாம் என்று நண்பர்களைத் தொடர்பு கொண்டான். ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் அன்று பிசி. யாரும் ரிலாக்ஸ் பண்ணத் தயாரில்லை. தனியாக "ரிலாக்ஸ்" பண்ணுவதில் அவனுக்கு ஈடுபாடு இல்லை. சீக்கிரம் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு படுக்கலாம் என்று வீடு திரும்பினான்.

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைது அல்லது ஏதோ ஒரு போராட்டம்.. தென்மாவட்டங்களில் பதற்றம் என்று செய்திகள். இன்று நெல்லைக்கு செல்பவர்கள் பாடு திண்டாட்டம்தான் என்று அவன் மனைவியிடம் கருத்து சொன்னான். மனச் சோர்வு காரணமாக சீக்கிரமே உறங்கச் சென்றான். ஆனால் தூக்கம் பிடிக்கவில்லை.

இரவு 10.30 மணி இருக்கும். வீட்டின் அழைப்பு மணி அடித்தது. உறவினர்கள் இருவர். அவர்களது கார் வாசலில் நின்றது. "கொஞ்ச நேரம் வெளியில் வாயேன்" என்றனர். என்ன விஷயம் என்ற அவனது கேள்விக்கு அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை.

அதற்குள் அவனது மனைவி, மணமாகாத கடைசித் தங்கை வாசலுக்கு வந்து விட்டனர். வாசலில் ஓர் அசாதாரண சூழ்நிலை என்று நினைத்து அவர்கள் முகத்தில் ஒரு பதற்றம்.

அவன் காரில் ஏறினான். பக்கத்து சாலை வரை கார் சென்று நின்றது. மரியாதைக்குரிய பெரியவர் சொன்னார்:

" உனக்கு ஒரு மோசமான செய்தி கொண்டு வந்திருக்கேன்பா. இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்ததுக்கே நான் ரொம்ப வருத்தப்படறேன்"

ஓரளவு ஊகித்ததுதான் என்றாலும் அவன் உடல் நடுங்கியது.

"யார் , அத்தையா?" அவன் கேட்டான்.

அத்தை, அப்பா, அம்மா சொந்த ஊரில் இருந்தனர். அப்பாவின் சிறு வயதில் தாத்தா இறந்து போனதால் அப்பாவின் வளர்ச்சிக்கு அத்தையே காரணம். அதாவது இன்று அவனது குடும்ப வளர்ச்சிக்கும் அவரே அடிப்படை. அதனால் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அத்தை மனம் நோக யாரும் நடப்பதில்லை. அத்தை வயது 80. அவராக இருந்தால் இவ்வளவு பீடிகை இருக்காது என்பதும் அவன் மனதில் ஓடியது.

"இல்லை."

அவன் சட் என்று அவரை ஏறெடுத்துப் பார்த்தான். மேற்கொண்டு ஊகங்களுக்கு இடம் கொடுக்காமல் அவர் சொன்னார்.

"ராமச்சந்திரன்.. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு அவன் போன பஸ் ஒரு லாரியோட மோதி விபத்து.. காலையில் 9 மணி அளவுல விபத்து நடந்திருக்கு.. உடலை அடையாளம் காண இரவு ஆகியிருக்கு.."

ராமச்சந்திரன் அவனது தங்கையின் கணவர். அவனது மனைவியின் தம்பி.

"இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்க்கை என்பதா
சொல் மனமே…"
வாய் முணுமுணுக்கவில்லை.

பின்குறிப்பு 1: டிசம்பர் 1997 முதல் தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் அவன் பகிரங்கக் கடிதம் என்ற வடிவில் பத்தி எழுதத் தொடங்கினான். அந்த வார இதழின் ஆசிரியராக இருந்த சுதாங்கன் அவனுக்குச் சூட்டிய புனைபெயர்தான் தெருத்தொண்டன்.

பின்குறிப்பு 2: அவன் வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று இப்போது ஊடகங்களில் ஆலோசகராக இருக்கிறான்.

பின்குறிப்பு 3: அவனோடு மதுரையில் கையெழுத்துப் பத்திரிகை நடத்திய விவேகானந்தன் வேறு யாருமல்ல, அவர் நடிகர் விவேக்.

Tuesday, November 01, 2005

கதை அல்ல நிஜம்

"ஜெயலலிதா உண்ணாவிரதம் முடிச்சிட்டாங்களா ?"

படுக்கையில் படுத்தவாறு அண்ணன் கேட்டார்.

நெல்லையில் மின் வாரியத்தில் உதவி நிர்வாகப் பொறியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அன்று ஜுலை 21, 1993.

காவிரி நீருக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த நாட்கள் அவை. ஒவ்வொரு நாளும் போகப்போக தமிழகம் எங்கும் அ.இ.அ.திமு.க தொண்டர்கள் படிப்படியாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்ட வடிவங்களைக் கையில் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அண்ணன் அனுமதிக்கப் பட்டிருந்தது சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில் உள்ள பெஸ்ட் மருத்துவமனையில் .

"இன்று முடித்துக்கொள்வார் என்று தெரிகிறது. இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும்" என்று அண்ணனுக்கு அவன் பதில் கூறினான்.

"இன்னிக்கு முடிச்சுட்டாங்கன்னா நல்லது ஒரு வேளை நாம் ஊருக்குப் போக வேண்டியது இருந்தால் வழியில் எல்லாம் கலாட்டா இருக்கக்கூடாதே? அதனால் தான் கேட்டேன் " என்றார் அண்ணன்.

அவனுக்குப் பேச்சே எழவில்லை. தொண்டை அடைத்தது. கண்கள் கலங்குவது தெரிந்து விடக்கூடாது என்று ஐசியு வை விட்டு அவன் வெளியில் சென்றான்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் முரட்டுத் தன்மையுடன் வளர்ந்து கொண்டிருந்த அவனுக்கு நல்ல பண்புகளை கற்றுக் கொடுத்தவர் அண்ணன்.

அவன் அப்போது பத்தாவது வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு எழுதியிருந்தான். ஊருக்கு அருகில் இருந்த காயல்பட்டினத்தில் பூப்பந்தாட்டப் போட்டி. அவனும் 65 வயது பெரியவர் ஒருவரும் ஓரணி. எதிரில் அவனோடு அப்போது சண்டை போட்டிருந்த பல்கலைக்கழக வீரரும் அவரது சகாவாக இன்னொரு கல்லூரி மாணவரும்.

மூன்று ஆட்டங்களில் யார் இரண்டு ஆட்டங்கள் வெற்றி பெறுகிறார்களோ அவரே போட்டியில் வெற்றி. இதை "பெஸ்ட் ஆப் த்ரீ" என்று அழைப்பார்கள். ஆளுக்கு ஒரு ஆட்டம் வெற்றி.. மூன்றாவது ஆட்டம். 29 புள்ளிகள் எடுத்தால் வெற்றி. இரு அணிகளுக்கும் 28 புள்ளிகள். ஒரு புள்ளி எடுப்பவருக்கு வெற்றி.

அவன் அணி தோற்றுப் போனது. அவனால் ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை. யுனிவர்சிட்டி ப்ளேயரை ஜெயித்தேன் என்று ஜம்பம் அடித்த்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே சண்டையிட்டு பேசாமல் இருக்கும் நபரிடம் தோல்வி வேறு. "அவமானம்" அவனைப் பிடுங்கித் தின்றது. மாட்ச் முடிந்ததும் எதிர் அணியினருக்கு கை குலுக்கி வாழ்த்துச் சொல்லாமல் நேராக அழுது கொண்டே சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.

அண்ணனும் அந்த போட்டியைப் பார்க்க வந்திருந்தார். வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் "பிரமாதமான மாட்ச்.. தம்பி ரொம்ப அற்புதமாக விளையாடினான். கடைசிப் பந்தில் கோட்டை விட்டான்" என்று சொன்னார்.

அவனைப் பார்த்ததும் அண்ணனுக்கு கோபம் வந்தது. " விளையாட்டில் வெற்றி தோல்வி முக்கியம் இல்லை. நல்ல பண்புதான் முக்கியம். கார்த்தியும் சத்தியநாதனும் வந்துட்டு இருக்காங்க. அவங்க நம்ம வீட்டைத் தாண்டும்போது நீ அவங்களை நிறுத்தி கை குலுக்காமல் வந்ததுக்கு மன்னிப்பு கேட்கணும்..அங்கேயே கை கொடுத்திருந்தால் சாதாரணமாகப் போயிருக்கும். இப்போ மன்னிப்பும் சேர்த்துக் கேட்க வேண்டியிருக்கு பாரு" என்றார். அதன்படி அவன் செய்தான்.இந்த நிகழ்ச்சி அவனுக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.

அப்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எழுத்தராக/காசாளராக இருந்தான். அந்த வங்கியின் ஊழியர் சங்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தான். 1993 ஜூன் 29, 30 இரு நாட்கள் சென்னை விஜய சேஷ மஹாலில் ஊழியர் சங்க மாநாடு.

அவன் தென்னாற்காடு, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் அடங்கிய பாண்டிச்சேரி மண்டலத்தின் உதவிப் பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்டான். அதற்கான தீவிர பிரச்சாரத்தில் அந்தப் பகுதி கிளைகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று கொண்டிருந்தான்.

"தொழிற்சங்கத்தில் தீவிர ஈடுபாடு உனக்குத் தேவையில்லை. சில வருடங்கள் இதே போல் தீவிரமாக இருந்துவிட்டு பிறகு திரும்பிப் பார்த்தால், பொண்டாட்டி பிள்ளைகளுக்கு எதுவுமே நாம செய்யாதது தெரியவரும்.
இந்த வங்கி ஊழியர்களோட வர்க்கக் குணம் சிறு முதலாளிய குணம் . உன்னைப் பயன்படுத்துவாங்க.. அவங்களுக்குத் தேவையானதை செய்து வாங்கிக்குவாங்க . உனக்கு ஒரு நெருக்கடி என்றால் உதவ யாரும் வர மாட்டாங்க " என்ற ரீதியில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் அண்ணன் அவனிடம் இரண்டு மூன்று முறை பேசியிருந்தார்.

"ஏதோ ஒரு வேகத்துல ஒரு பாதையில் கொஞ்ச தூரம் போனதக்கப்புறம் அதிலேர்ந்து வெளியில் வருவதற்கு மனத்துணிவு வேணும் . பொதுவா பலர் அந்த சோதனைக்கு முயற்சி செய்ய மாட்டாங்க. ஏன்னா அதுக்கு ஒரு தைரியம் வேணும். உன்னால அது முடியும்.அதனால நீ உன் முடிவுகளை மறு பரிசீலனை செய்.உனக்கு அதற்கான மன உறுதி இருக்கு. உன்னோட உழைப்பும் நேரமும் பொருள் இழப்பும் ஒரு சில நல்ல நண்பர்களைப் பெற்றுத் தருமே தவிர சமூகத்தில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாது. அதனால் அடுத்து நடக்கிற பதவி உயர்வுக்கான தேர்வை நீ போய் எழுது. இதுக்கு முன்னாடி எழுதாம விட்ட மாதிரி இனி மேலும் விட்டுவிடாதே.

நம்மை மாதிரி ஆட்களுக்கு நாம பார்க்கற வேலை மூலமா மக்களுக்கு உதவி செய்யத் தான் முடியுமே தவிர அரசியல் ரீதியா சமூகத்துல ஒரு மாற்றம் கொண்டுவர தொடர்ந்து போராட முடியாது. "

அண்ணன் இப்படி எல்லாம் பேசியது அவன் நினைவுக்கு வந்தது.

ஆனால் அவன் அதையெல்லாம் கேட்கவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த சங்கப் பொறுப்பைவிட கூடுதல் பொறுப்பிற்கான தேர்தலில் நின்றான்.

வாக்கு சேகரிக்க ஓர் ஊழியர் வீட்டுக்கு அவன் சென்றான். அங்கு ஆஜானுபாகுவான தோற்றத்தில் காவி உடையில் ஒரு பெரியவர் இருந்தார். நீண்ட தாடி.. பார்த்தால் ஒரு சாமியார் மாதிரி தோற்றம்.

"சாமி! சார் ஒரு தேர்தல்ல நிக்கறாரு.. அவர் அதுல ஜெயிப்பாரா?" நண்பர் கேட்டார்.

அவர் அப்படி சாமியாரிடம் கேட்பார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

சாமியார் அவனை மேலும் கீழும் பார்த்தார். அவனது பெயர், நட்சத்திரம் கேட்டார். அவன் சொன்னான்.

"ஒரு மாசத்துல உனக்கு கொள்ளி போடுவாங்க அல்லது நீ யாருக்காவது கொள்ளி போடுவாய்..இந்த நிலைமையில இருக்கற உனக்கு தேர்தல் ஒரு முக்கிய விஷயமாகவே தெரியாது"

அவனை நேராகப் பார்த்து பெரியவர் சொன்னதும் நண்பரின் வீடே நிசப்தமாகி விட்டது.

அந்த நண்பர் மிகவும் நிலை குலைந்து விட்டார்.

அவன் ஒரு நொடி அதிர்ச்சி அடைந்து உடன் சமாளித்துக் கொண்டான்.

"குடும்பத்தில் நான் மூத்த பையன் இல்லை. அதனால் நான் பெற்றோருக்குக் கொள்ளி போட வேண்டியது வராது. எனது மனைவியும் குழந்தையும் நல்லா இருக்காங்க..அதனால நான் கொள்ளி போடற வாய்ப்பு ரொம்பக் குறைவு. நான் தான் நிறைய டிராவல் பண்றேன். விபத்து நடந்து நான் போறதா இருந்தால் அதை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது" என்று அவன் பதிலும் சொன்னான்.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும்போது அண்ணன் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவனுக்குக் கிடைத்தது. பிரச்சாரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு அவனால் உடனடியாக சென்னை திரும்ப முடியாது. அவன் தனிமனிதனாக தேர்தல் களத்தில் நிற்கவில்லை. அவனது தலைமையில் ஓர் அணி போட்டியிடுகிறது. இருந்தும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் சென்னை போக வேண்டும்.

முதல் சுற்றுப் பிரச்சாரத்தை விரைவாக முடித்துக்கொண்டு சென்னை வந்தான். அடுத்த சுற்றுப் பிரச்சாரத்திற்கு அவன் இல்லாமல் மற்ற நண்பர்கள் போய் வந்தனர். உறவினர் வீடு, மருத்துவமனை என்று நாட்கள் நகர்ந்தன. இடையில் சென்னை மாநாட்டுத் தேர்தலில் அவனும் அவனது அணியினரும் தோற்றுப் போனார்கள்.

ஜெயலலிதா தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்ற செய்தி கிடைத்தது. அண்ணனிடம் சென்று செய்தியைப் பகிர்ந்து கொண்டான். அப்பாடா என்று அண்ணன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

மருத்துவமனைக்கு வெளியே குழுமியிருந்த நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் அண்ணனிடம் பேசிவிட்டு வந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தான். ஐசியுவில் இருந்து அழைப்பு வந்தது.

அவன் உள்ளே போகும்போது அண்ணனின் இதயத்தை செயல்படுத்த டாக்டர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். அருகில் அவனது அம்மா.

மருத்துவர்கள் முயற்சியில் தோற்றுப் போனார்கள். இயற்கை வெற்றி அடைந்தது. 39 வயதில் அண்ணனின் இதயம் தனது துடிப்பை முற்றிலுமாக நிறுத்தியது.

அவன் செயலற்று சிலையாக நின்றான். குடும்பக் கவலையின்றி வேறு கவலைகளுடன் சுற்றித் திரிந்தவனுக்கு திடீரென்று என்ன செய்வது என்று புரியவில்லை.

"நீங்களும் தான் எவ்வளவோ முயற்சி செய்தீங்க.. நாங்கதான் கொடுத்து வைக்கவில்லை.." என்று அம்மா டாக்டர்களுக்கு நன்றி சொன்ன வார்த்தைகள் கேட்டு சுயநினைவுக்கு வந்தான். இப்போது உடலை சென்னையில் இருந்து நெல்லை வழியாக சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

மறுநாள் நண்பகல் சொந்த ஊரில் வீட்டின் முன் அண்ணனின் உடலை சுமந்து வந்த ஊர்தியில் இருந்து இறங்கினான். பெருங்கூட்டம்.. மின்வாரிய ஊழியர்களும் அதிகாரிகளும் உறவினர்களும் நண்பர்களும்..

வீட்டிற்குள் செல்லும் முன்னதாக அப்பாவின் நண்பர் அவனை அணைத்துக் கொண்டே தனியாக அழைத்துச் சென்றார்.

"அண்ணனுக்கு இறுதிச் சடங்குகளை சம்பிரதாயங்களின்படி அப்பாதான் செய்யணும். ஆனா இந்த வயசுக்கு மேலே இப்படி ஒரு சோதனை அவருக்கு வேண்டாம்.. நீயே இருந்து அதெல்லாம் பார்த்துக்கறியா?"

சரி என்று தலை அசைத்தான்.

"உனக்குக் கொள்ளி போடுவார்கள் அல்லது நீ யாருக்காவது கொள்ளி போடுவாய்" என்ற அந்த சாமியாரின் வார்த்தைகள் பளீரென்று அவன் நினைவுக்கு வந்தன.

பின்குறிப்பு 1: காதலைப் போலவே துக்கமும் ஒரு மனிதனின் அந்தரங்கமான விஷயம் என்று அவன் நினைத்திருந்தான். அதைத் தளர்த்தி இன்று மனம் திறந்தான்.

பின்குறிப்பு 2 : வங்கி அதன்பின் நடத்திய அதிகாரிகளுக்கான பதவி உயர்வுத் தேர்வை அவன் எழுதினான். பதவி உயர்வு கிடைத்து உதவி மேலாளராக சென்னை வந்தான்.

இந்தத் தீபாவளி அசினுக்கு கொண்டாட்டமா?

"திங்கள் பிறந்தாலும் தீபம் ஒளிர்ந்தாலும் ….."

இன்று இங்கு தீபாவளி.

அதாவது தீபாவளிக்கான அரசு விடுமுறை.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒருவேளை கடந்த சனி அல்லது ஞாயிறு அன்று தீபாவளி கொண்டாடியிருக்கலாம். அல்லது வரும் வார இறுதியில் கொண்டாடலாம். ஏனெனில் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை அவசியம் இல்லையா?

இங்கு சென்னையில் இன்று தீபாவளி கொண்டாடப்படுவதால் இன்று அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி அன்று அவசியம் ஒரு பதிவு போடும் வாய்ப்பு கிட்டியதால், அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்கிறேன். இல்லையென்றால் தனியாக இதற்காக ஒரு பதிவு போட்டிருப்பேனா என்பது சந்தேகமே.

நேற்றே பல பதிவுகள் தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லி வந்திருந்தன. அவற்றில் முகமூடியின் பதிவு அப்படியே பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்றது. இருந்தும் தீபாவளி தொடர்பாக நானும் ஒரு பதிவு போடுகிறேன்.

பெரும்பான்மை மக்கள் நம்பும் சில விஷயங்களில் இருந்து மாறுபடும்போது நிறைய கேள்விகளை எதிர்நோக்க வேண்டியதிருக்கிறது. அதில் ஒன்று விழாக் கொண்டாட்டங்கள்.

விழாக்கள் மூலம் நாம் விழாதிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு எனக்கு கல்லூரிப் பருவத்தில் வந்தது.

தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிய காலம் எல்லாம் பள்ளிப் பருவத்துடன் நிறைவடைந்தது.

அப்பாவின் பட்டாசு பட்ஜெட் 20 ரூபாய்தான். அதற்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று 20 முறை பட்டியல் போடுவதுதான் தீபாவளியின் கொண்டாட்டமே.

அந்த சமயத்தில் அண்ணன் இதில் எல்லாம் ஆர்வம் காட்டாமல் இருந்தது ஏன் என்று எனக்குள் கேள்வி எழுந்ததே இல்லை.

ஆனாலும் மத்தாப்பு வகையறாக்களை காலை விடிவதற்கு முன் போடுமாறும் ஒலி எழுப்பும் வெடிகளை விடிந்த பிறகு வெடித்துக் கொள்ளலாம் என்றும் தம்பி தங்கைகளை அண்ணன் நெறிப்படுத்துவார்.

நாங்கள் குடியிருந்த வரிசையில் நான்கு வீடுகள். அவற்றில் இரண்டு வீடுகளில் பெந்தகோஸ்த் பிரிவு கிறித்தவக் குடும்பங்கள் இருந்தன. அதிகாலையில் அவர்களது தூக்கத்தைக் கலைப்பது முறையல்ல என்பதே அவரது பார்வையாக இருந்திருக்கக் கூடும். அவர்களது பிரார்த்தனை தெருவையே தூங்க விடாது என்பது வேறு செய்தி!

ஒலி மாசு போன்ற சொற்களை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. இந்த நடைமுறை 30 வருடங்கள் கழித்து உச்சநீதிமன்ற உத்தரவாக வந்த பிறகுதான் இங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதற்கும் கூட ராம. கோபாலன்கள் எதிர்ப்பு!

அப்பாவும்கூட பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகவே கொண்டாட்டங்களை அனுமதித்தார் என்பது எனக்குப் புரிய பல வருடங்கள் ஆயின. இருந்தும் தீபாவளி அன்று அதிகாலை எழுவதும் குழந்தைகளைக் குளிக்கச் செய்து புத்தாடை கொடுத்து இனிப்புகளை வழங்கும் பணிகளில் அம்மா சலித்துக் கொண்டதே இல்லை.

தீபாவளியன்று சிறுவர்கள் மத்தியில் ஒரு போட்டி இருக்கும். ஒவ்வொருவர் வீட்டு முன்புறத்திலும் பட்டாசு வெடித்துச் சிதறிய காகிதக் குப்பை எவ்வளவு இருக்கிறதென்று கண்களால் ஒரு ஆய்வு நடக்கும். மற்ற பையன்கள் நகர் உலா வருமுன் பக்கத்து வீட்டு குப்பைகளையும் சேகரித்து வீட்டு முன் சிலர் குவிப்பதுண்டு. ஒரு வீட்டின் முன் குவிந்து கிடக்கும் காகிதக் குப்பைகள் அந்த வீட்டின் பொருளாதார நிலையை படம் பிடித்துக் காட்டும்.

எங்கள் ஊரில் "தாரங்கதாரா கெமிக்கல் வொர்க்ஸ்" என்ற பெயரில் ஒரு ரசாயனத் தொழிற்சாலை இருந்தது. அங்கு போனஸும் பட்டாசு பார்சலும் தொழிலாளர்களுக்குக் கொடுப்பார்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகளே எனக்கு தீபாவளியன்று பணக்காரர்களாகத் தோன்றும்.

புகுமுக வகுப்புக்குப் போகும்போதே நரகாசுரன் வதைக் கதையில் பிடிப்பு இல்லாமல் போனது. "திங்கள் பிறந்தாலும் தீபம் ஒளிர்ந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே" என்ற சினிமாப் பாடல் வரிகள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

தீபாவளி படையெடுத்து வந்தோரின் பண்டிகை என்றும் அறுவடைத் திருநாளே நமது பண்டிகை என்றும் சிலர் வாதிடுவார்கள். ஆனால் அதுவும் கூட நிலவுடைமையாளர்களுடைய திருநாளே, மக்கள் விழா அல்ல என்ற கருத்து அந்த சினிமா பாடல்களின் வரிகளில் புரிந்தது.

இந்தத் திருநாட்களின் பின்னணி வரலாறு எதுவாக இருப்பினும் அதற்காக கடன் வாங்கியோ அல்லது இருக்கும் சேமிப்பைக் கரைத்தோ கொண்டாட்டங்கள் தேவையா என்ற கேள்வியே மனதில் எஞ்சி நிற்கத் தொடங்கியது.

திருவிழாக் கொண்டாட்டங்களில் மக்கள் சேமிப்பு கரைகிறது. அல்லது கடன் அதிகரிக்கிறது. கொண்டாட்டங்களுக்கு அவசியம் என்று உணரப்படும் பொருட்களை விற்பவர்களிடமும் அவற்றைத் தயாரிப்பவர்களிடமும் லாபம் என்ற பெயரில் பணம் குவிகிறது.

உழைக்கும் மக்களுக்கு போனஸ் ஏன் தீபாவளி நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்ற கேள்வி மனதைக் கவர்ந்தது. தீபாவளிக்கு முன்னதாக போனஸ் கொடுத்து, அந்தப் பணம் முழுவதும் இந்தக் கொண்டாட்டங்களிலேயே செலவழிக்கப் படுவதும் 'ஒரு விஷ வட்டம்' தானோ என்று கேள்வி எழும். இருப்பவர்களிடமே பணம் மீண்டும் சென்று சேர்வதற்கான ஏற்பாடோ என்றெல்லாம் நண்பர்களுக்கு இடையில் விவாதிப்பதுண்டு.

தீபாவளி கொண்டாடும் மக்களில் சிறுபான்மையினரே அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டப்பட்டு சட்டபூர்வமாக போனஸ் பெறுபவர்கள். மற்றவர்களில் ஓரளவு வசதி உடையவர்கள் தவிர பிறர் தீபாவளிக்கு முந்தைய நாளில் பணம் புரட்டி புத்தாடை , பட்டாசு வாங்க அன்றிரவு பரபரப்பாக அலைபவர்களே. தீபாவளிக்கு முந்தைய இரவு இவர்களைக் கடைத்தெருவில் பார்க்கும்போது யாரோ அவர்களை வழிப்பறி செய்வது போலவும் அதை மீதி எல்லோரும் வேடிக்கை பார்ப்பது போலவும் தோன்றும்.

நம்மைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு நடுவில் ஒருவர் கொண்டாடாமல் இருப்பது சிறிது கடினம்தான்.

அன்பின் வெளிப்பாடாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் செய்த பலகாரத்தைக் கொண்டு வந்து தருவதுண்டு. அதை முற்றிலுமாக மறுப்பது மிகவும் கடினம்.

நானும் எனது மனைவியும் மட்டும் தனியாக இருந்த ஆரம்ப கட்டங்களில் "நாங்கள் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை" என்று சொல்லி அவர்கள் கொடுக்கும் இனிப்புகளில் ஒன்றை மரியாதைக்காக எடுத்துக் கொண்டு மனம் புண்படாதபடி அவர்கள் தரும் இனிப்புப் பாத்திரத்தை மறுக்க முயல்வதுண்டு.

ஆனால் அதில் அவர்கள் மனம் வருந்துவதை அறிந்து பிறகு அப்படிச் செய்வதில்லை. ஓரிரு வருடங்கள் அவர்கள் தருவதை மட்டும் வாங்கிக் கொண்டு திருப்பி ஏதும் அவர்களுக்குத் தருவதில்லை என்றிருந்தோம்.

பிறகு காலியான பாத்திரங்களைத் திருப்பித் தருவது மரியாதை இல்லை என்ற எண்ணம் வந்தது. நாமாக யார் வீடுகளுக்கும் சென்று கொடுப்பதில்லை, நம் வீட்டிற்கு வந்து தருபவர்களுக்கு மட்டும் பதில் மரியாதை செய்யும் விதத்தில் அவர்கள் தரும் பாத்திரத்திலேயே நாமும் இனிப்புகளைப் போட்டுக் கொடுப்பது என்ற முடிவு எடுக்கப் பட்டது. இனிப்புகள் வீட்டில் தயாரிக்கப்பட்டன. சில வருடங்கள் கடையில் வாங்கப்பட்டன.

இதற்கு இந்த மனமாற்றம் காரணமா அல்லது இனிப்பு சாப்பிடும் அளவு குழந்தை வளர்ந்தது காரணமா என்பது விவாதத்திற்குரியது தான்.

பதில் மரியாதை என்பதை இப்போதெல்லாம் சின்னக் குழந்தைகள்கூட எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. சின்னக் குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். குழந்தையுடன் படிக்கும் / பழகும் பிற குழந்தைகள் கையில் பரிசுப் பொருட்களுடன் வந்து வாழ்த்துகின்றன. அப்படி வரும் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடும் குழந்தை "பதில் பரிசு" (Return Gift) கொடுக்க வேண்டுமாம். அப்படி கொடுக்கவில்லை என்றால் அந்தக் குழந்தைக்கு நாகரிக நற்பண்புகள் இல்லை என்று பிற குழந்தைகள் கருதுமாம்.

சமீபகாலங்களில் திருமண வீடுகளில் இந்த பதில் பரிசு வழங்குதல் ஒரு மரபாகிக் கொண்டு வருகிறது. தாம்பூலப் பைகளில் அல்லது பைகளுடன் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் !

வீட்டின் அருகில் இருக்கும் உடைகளைத் தேய்த்துத் தருபவர், நமது அன்றாடப் பணிகளில் உதவி செய்யும் சில உதிரித் தொழிலாளர்கள் என்று பலர் "தீபாவளிக் காசு" கேட்க வருவார்கள்.

அவர்களிடம் நான் நரகாசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க முடிவதில்லை. இன்னும் இங்கு கொல்லப்படாத பல நரகாசுரன்கள் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருப்பதில்லை.

அதற்காக அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்ற கதையைக் கேட்காமல் மறுக்கவும் முடியவில்லை.

அதேசமயம் மத்திய மாநில அரசின் சேவைத்துறையின் ஊழியர்கள் சிலரும் கையில் ஒரு நோட்டைத் தூக்கிக் கொண்டு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

இப்போதெல்லாம் தீபாவளிக் கொண்டாட்டம் என்பது என்ன? டி.வி.நிகழ்ச்சிகள் தான். காலையில் இருந்து நள்ளிரவு வரை ஜோதிகா, அசின், சிநேகா, விஜய், விக்ரம்,சூர்யா போன்றவர்கள் தரும் பொழுதுபோக்குதான்.

இனிப்புகள் திகட்டலாம்; பட்டாசுப் புகை மூச்சு முட்டலாம்; ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நமது வீட்டில் யாராவது ஒருவரைச் சுண்டியிழுத்து ஒரு பக்கம் ஓடிக் கொண்டே இருக்கும்.

அதன்படி இன்று அசின் தீபாவளி. "சிவகாசி" விஜய்யுடன். "மஜா" விக்ரமுடன்.

இந்தத் தீபாவளி அசினுக்குத் தான் கொண்டாட்டம்!

வருமானவரித்துறை ரெய்டில் என்னென்ன அசின் பறிகொடுத்தாரோ தெரியவில்லை. ஒருவேளை அதிகம் இழந்திருந்தால் இந்த தீபாவளி அவருக்கும் கூட கொண்டாட்டமில்லைதான்.

பின் யாருக்குத் தான் கொண்டாட்டம்?

பின்குறிப்பு:
இந்தப் பதிவின் தலைப்புக்கு என்னை மன்னிக்கவும்!