Tuesday, November 01, 2005

கதை அல்ல நிஜம்

"ஜெயலலிதா உண்ணாவிரதம் முடிச்சிட்டாங்களா ?"

படுக்கையில் படுத்தவாறு அண்ணன் கேட்டார்.

நெல்லையில் மின் வாரியத்தில் உதவி நிர்வாகப் பொறியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அன்று ஜுலை 21, 1993.

காவிரி நீருக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த நாட்கள் அவை. ஒவ்வொரு நாளும் போகப்போக தமிழகம் எங்கும் அ.இ.அ.திமு.க தொண்டர்கள் படிப்படியாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்ட வடிவங்களைக் கையில் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அண்ணன் அனுமதிக்கப் பட்டிருந்தது சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில் உள்ள பெஸ்ட் மருத்துவமனையில் .

"இன்று முடித்துக்கொள்வார் என்று தெரிகிறது. இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும்" என்று அண்ணனுக்கு அவன் பதில் கூறினான்.

"இன்னிக்கு முடிச்சுட்டாங்கன்னா நல்லது ஒரு வேளை நாம் ஊருக்குப் போக வேண்டியது இருந்தால் வழியில் எல்லாம் கலாட்டா இருக்கக்கூடாதே? அதனால் தான் கேட்டேன் " என்றார் அண்ணன்.

அவனுக்குப் பேச்சே எழவில்லை. தொண்டை அடைத்தது. கண்கள் கலங்குவது தெரிந்து விடக்கூடாது என்று ஐசியு வை விட்டு அவன் வெளியில் சென்றான்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் முரட்டுத் தன்மையுடன் வளர்ந்து கொண்டிருந்த அவனுக்கு நல்ல பண்புகளை கற்றுக் கொடுத்தவர் அண்ணன்.

அவன் அப்போது பத்தாவது வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு எழுதியிருந்தான். ஊருக்கு அருகில் இருந்த காயல்பட்டினத்தில் பூப்பந்தாட்டப் போட்டி. அவனும் 65 வயது பெரியவர் ஒருவரும் ஓரணி. எதிரில் அவனோடு அப்போது சண்டை போட்டிருந்த பல்கலைக்கழக வீரரும் அவரது சகாவாக இன்னொரு கல்லூரி மாணவரும்.

மூன்று ஆட்டங்களில் யார் இரண்டு ஆட்டங்கள் வெற்றி பெறுகிறார்களோ அவரே போட்டியில் வெற்றி. இதை "பெஸ்ட் ஆப் த்ரீ" என்று அழைப்பார்கள். ஆளுக்கு ஒரு ஆட்டம் வெற்றி.. மூன்றாவது ஆட்டம். 29 புள்ளிகள் எடுத்தால் வெற்றி. இரு அணிகளுக்கும் 28 புள்ளிகள். ஒரு புள்ளி எடுப்பவருக்கு வெற்றி.

அவன் அணி தோற்றுப் போனது. அவனால் ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை. யுனிவர்சிட்டி ப்ளேயரை ஜெயித்தேன் என்று ஜம்பம் அடித்த்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே சண்டையிட்டு பேசாமல் இருக்கும் நபரிடம் தோல்வி வேறு. "அவமானம்" அவனைப் பிடுங்கித் தின்றது. மாட்ச் முடிந்ததும் எதிர் அணியினருக்கு கை குலுக்கி வாழ்த்துச் சொல்லாமல் நேராக அழுது கொண்டே சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.

அண்ணனும் அந்த போட்டியைப் பார்க்க வந்திருந்தார். வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் "பிரமாதமான மாட்ச்.. தம்பி ரொம்ப அற்புதமாக விளையாடினான். கடைசிப் பந்தில் கோட்டை விட்டான்" என்று சொன்னார்.

அவனைப் பார்த்ததும் அண்ணனுக்கு கோபம் வந்தது. " விளையாட்டில் வெற்றி தோல்வி முக்கியம் இல்லை. நல்ல பண்புதான் முக்கியம். கார்த்தியும் சத்தியநாதனும் வந்துட்டு இருக்காங்க. அவங்க நம்ம வீட்டைத் தாண்டும்போது நீ அவங்களை நிறுத்தி கை குலுக்காமல் வந்ததுக்கு மன்னிப்பு கேட்கணும்..அங்கேயே கை கொடுத்திருந்தால் சாதாரணமாகப் போயிருக்கும். இப்போ மன்னிப்பும் சேர்த்துக் கேட்க வேண்டியிருக்கு பாரு" என்றார். அதன்படி அவன் செய்தான்.இந்த நிகழ்ச்சி அவனுக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.

அப்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எழுத்தராக/காசாளராக இருந்தான். அந்த வங்கியின் ஊழியர் சங்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தான். 1993 ஜூன் 29, 30 இரு நாட்கள் சென்னை விஜய சேஷ மஹாலில் ஊழியர் சங்க மாநாடு.

அவன் தென்னாற்காடு, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் அடங்கிய பாண்டிச்சேரி மண்டலத்தின் உதவிப் பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்டான். அதற்கான தீவிர பிரச்சாரத்தில் அந்தப் பகுதி கிளைகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று கொண்டிருந்தான்.

"தொழிற்சங்கத்தில் தீவிர ஈடுபாடு உனக்குத் தேவையில்லை. சில வருடங்கள் இதே போல் தீவிரமாக இருந்துவிட்டு பிறகு திரும்பிப் பார்த்தால், பொண்டாட்டி பிள்ளைகளுக்கு எதுவுமே நாம செய்யாதது தெரியவரும்.
இந்த வங்கி ஊழியர்களோட வர்க்கக் குணம் சிறு முதலாளிய குணம் . உன்னைப் பயன்படுத்துவாங்க.. அவங்களுக்குத் தேவையானதை செய்து வாங்கிக்குவாங்க . உனக்கு ஒரு நெருக்கடி என்றால் உதவ யாரும் வர மாட்டாங்க " என்ற ரீதியில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் அண்ணன் அவனிடம் இரண்டு மூன்று முறை பேசியிருந்தார்.

"ஏதோ ஒரு வேகத்துல ஒரு பாதையில் கொஞ்ச தூரம் போனதக்கப்புறம் அதிலேர்ந்து வெளியில் வருவதற்கு மனத்துணிவு வேணும் . பொதுவா பலர் அந்த சோதனைக்கு முயற்சி செய்ய மாட்டாங்க. ஏன்னா அதுக்கு ஒரு தைரியம் வேணும். உன்னால அது முடியும்.அதனால நீ உன் முடிவுகளை மறு பரிசீலனை செய்.உனக்கு அதற்கான மன உறுதி இருக்கு. உன்னோட உழைப்பும் நேரமும் பொருள் இழப்பும் ஒரு சில நல்ல நண்பர்களைப் பெற்றுத் தருமே தவிர சமூகத்தில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாது. அதனால் அடுத்து நடக்கிற பதவி உயர்வுக்கான தேர்வை நீ போய் எழுது. இதுக்கு முன்னாடி எழுதாம விட்ட மாதிரி இனி மேலும் விட்டுவிடாதே.

நம்மை மாதிரி ஆட்களுக்கு நாம பார்க்கற வேலை மூலமா மக்களுக்கு உதவி செய்யத் தான் முடியுமே தவிர அரசியல் ரீதியா சமூகத்துல ஒரு மாற்றம் கொண்டுவர தொடர்ந்து போராட முடியாது. "

அண்ணன் இப்படி எல்லாம் பேசியது அவன் நினைவுக்கு வந்தது.

ஆனால் அவன் அதையெல்லாம் கேட்கவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த சங்கப் பொறுப்பைவிட கூடுதல் பொறுப்பிற்கான தேர்தலில் நின்றான்.

வாக்கு சேகரிக்க ஓர் ஊழியர் வீட்டுக்கு அவன் சென்றான். அங்கு ஆஜானுபாகுவான தோற்றத்தில் காவி உடையில் ஒரு பெரியவர் இருந்தார். நீண்ட தாடி.. பார்த்தால் ஒரு சாமியார் மாதிரி தோற்றம்.

"சாமி! சார் ஒரு தேர்தல்ல நிக்கறாரு.. அவர் அதுல ஜெயிப்பாரா?" நண்பர் கேட்டார்.

அவர் அப்படி சாமியாரிடம் கேட்பார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

சாமியார் அவனை மேலும் கீழும் பார்த்தார். அவனது பெயர், நட்சத்திரம் கேட்டார். அவன் சொன்னான்.

"ஒரு மாசத்துல உனக்கு கொள்ளி போடுவாங்க அல்லது நீ யாருக்காவது கொள்ளி போடுவாய்..இந்த நிலைமையில இருக்கற உனக்கு தேர்தல் ஒரு முக்கிய விஷயமாகவே தெரியாது"

அவனை நேராகப் பார்த்து பெரியவர் சொன்னதும் நண்பரின் வீடே நிசப்தமாகி விட்டது.

அந்த நண்பர் மிகவும் நிலை குலைந்து விட்டார்.

அவன் ஒரு நொடி அதிர்ச்சி அடைந்து உடன் சமாளித்துக் கொண்டான்.

"குடும்பத்தில் நான் மூத்த பையன் இல்லை. அதனால் நான் பெற்றோருக்குக் கொள்ளி போட வேண்டியது வராது. எனது மனைவியும் குழந்தையும் நல்லா இருக்காங்க..அதனால நான் கொள்ளி போடற வாய்ப்பு ரொம்பக் குறைவு. நான் தான் நிறைய டிராவல் பண்றேன். விபத்து நடந்து நான் போறதா இருந்தால் அதை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது" என்று அவன் பதிலும் சொன்னான்.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும்போது அண்ணன் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவனுக்குக் கிடைத்தது. பிரச்சாரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு அவனால் உடனடியாக சென்னை திரும்ப முடியாது. அவன் தனிமனிதனாக தேர்தல் களத்தில் நிற்கவில்லை. அவனது தலைமையில் ஓர் அணி போட்டியிடுகிறது. இருந்தும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் சென்னை போக வேண்டும்.

முதல் சுற்றுப் பிரச்சாரத்தை விரைவாக முடித்துக்கொண்டு சென்னை வந்தான். அடுத்த சுற்றுப் பிரச்சாரத்திற்கு அவன் இல்லாமல் மற்ற நண்பர்கள் போய் வந்தனர். உறவினர் வீடு, மருத்துவமனை என்று நாட்கள் நகர்ந்தன. இடையில் சென்னை மாநாட்டுத் தேர்தலில் அவனும் அவனது அணியினரும் தோற்றுப் போனார்கள்.

ஜெயலலிதா தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்ற செய்தி கிடைத்தது. அண்ணனிடம் சென்று செய்தியைப் பகிர்ந்து கொண்டான். அப்பாடா என்று அண்ணன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

மருத்துவமனைக்கு வெளியே குழுமியிருந்த நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் அண்ணனிடம் பேசிவிட்டு வந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தான். ஐசியுவில் இருந்து அழைப்பு வந்தது.

அவன் உள்ளே போகும்போது அண்ணனின் இதயத்தை செயல்படுத்த டாக்டர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். அருகில் அவனது அம்மா.

மருத்துவர்கள் முயற்சியில் தோற்றுப் போனார்கள். இயற்கை வெற்றி அடைந்தது. 39 வயதில் அண்ணனின் இதயம் தனது துடிப்பை முற்றிலுமாக நிறுத்தியது.

அவன் செயலற்று சிலையாக நின்றான். குடும்பக் கவலையின்றி வேறு கவலைகளுடன் சுற்றித் திரிந்தவனுக்கு திடீரென்று என்ன செய்வது என்று புரியவில்லை.

"நீங்களும் தான் எவ்வளவோ முயற்சி செய்தீங்க.. நாங்கதான் கொடுத்து வைக்கவில்லை.." என்று அம்மா டாக்டர்களுக்கு நன்றி சொன்ன வார்த்தைகள் கேட்டு சுயநினைவுக்கு வந்தான். இப்போது உடலை சென்னையில் இருந்து நெல்லை வழியாக சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

மறுநாள் நண்பகல் சொந்த ஊரில் வீட்டின் முன் அண்ணனின் உடலை சுமந்து வந்த ஊர்தியில் இருந்து இறங்கினான். பெருங்கூட்டம்.. மின்வாரிய ஊழியர்களும் அதிகாரிகளும் உறவினர்களும் நண்பர்களும்..

வீட்டிற்குள் செல்லும் முன்னதாக அப்பாவின் நண்பர் அவனை அணைத்துக் கொண்டே தனியாக அழைத்துச் சென்றார்.

"அண்ணனுக்கு இறுதிச் சடங்குகளை சம்பிரதாயங்களின்படி அப்பாதான் செய்யணும். ஆனா இந்த வயசுக்கு மேலே இப்படி ஒரு சோதனை அவருக்கு வேண்டாம்.. நீயே இருந்து அதெல்லாம் பார்த்துக்கறியா?"

சரி என்று தலை அசைத்தான்.

"உனக்குக் கொள்ளி போடுவார்கள் அல்லது நீ யாருக்காவது கொள்ளி போடுவாய்" என்ற அந்த சாமியாரின் வார்த்தைகள் பளீரென்று அவன் நினைவுக்கு வந்தன.

பின்குறிப்பு 1: காதலைப் போலவே துக்கமும் ஒரு மனிதனின் அந்தரங்கமான விஷயம் என்று அவன் நினைத்திருந்தான். அதைத் தளர்த்தி இன்று மனம் திறந்தான்.

பின்குறிப்பு 2 : வங்கி அதன்பின் நடத்திய அதிகாரிகளுக்கான பதவி உயர்வுத் தேர்வை அவன் எழுதினான். பதவி உயர்வு கிடைத்து உதவி மேலாளராக சென்னை வந்தான்.

25 Comments:

At 10:40 AM, Blogger ஜென்ராம் said...

வந்துட்டாங்கையா வந்துட்டாங்கையா முதல் ஆளா வந்துட்டாங்கையா..

 
At 11:31 AM, Blogger Thangamani said...

துக்கத்துக்கான சூழலையே பகிர்ந்துகொள்ள முடிகிறது ராம்கி. துக்கம் நீங்கள் சொன்னமாதிரி அந்தரங்கமானதுதான்.

 
At 11:43 AM, Blogger ramachandranusha(உஷா) said...

சில துக்கங்கள் பொறுக்கு தட்டிய காயங்களாய் மனதில் பதுங்கியிருக்கும். சீழும், ரணமும் சாகும்வரை அப்படியே இருக்கும்.
ஏன் என்று கேள்விக்கு பதில் என்றுமே கிடைக்காது. துக்கங்களை மனம் விட்டு சொல்லவும் சில சமயம் முடியும்.

 
At 11:56 AM, Blogger ஜென்ராம் said...

தங்கமணி:

சரிப்படுத்தியமைக்கு நன்றி. சூழலையே பகிர்ந்து கொள்ள முடிகிறது. மீண்டும் நினைக்கும்போது வலிக்கவே செய்கிறது. என்ன 93 இல் இருந்த அதே அளவில் வலி 2005 இல் இருக்காதாக இருக்கலாம்.

 
At 11:57 AM, Blogger ஜென்ராம் said...

உஷா:
//சில துக்கங்கள் பொறுக்கு தட்டிய காயங்களாய் மனதில் பதுங்கியிருக்கும். சீழும், ரணமும் சாகும்வரை அப்படியே இருக்கும்.// இருக்கிறது.

 
At 12:04 PM, Blogger துளசி கோபால் said...

எல்லா துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளமுடியாது ராம்கி. சிலது மனசுக்குள்ளெ அடியிலே போய் உக்காந்துக்குது.

ஒரு மனுஷன்/மனுஷியின் முகத்தைப் பார்த்து அவுங்களுக்குள்ளெ இருக்கற 'சோகத்தை' கண்டுபிடிக்க முடியுமா?

 
At 12:29 PM, Blogger Desikan said...

ராம்கி,
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். தீபாவளி பதிவு நன்றாக இருந்தது. மேலும் உங்கள் பத்திரிக்கை அனுபவத்தை படிக்க ஆவலாக உள்ளேன்.
அன்புடன்,
தேசிகன்
http://www.desikan.com/blogcms/

 
At 1:47 PM, Blogger Ramya Nageswaran said...

அண்ணன் என்பது ஒரு அற்புதமான உறவு. அப்பாவைப் போல பாசமும் ஆனால் வயது வித்தியாசம் கம்மி என்பதால் புரிதலும் இருக்கும். கொஞ்ச காலமாவது அந்த நல்ல உறவின் பரிவையும், பாசத்தையும் அனுபவித்தீர்களே...அதுவரை சந்தோஷம்.

 
At 2:52 PM, Blogger தாணு said...

பூஷ்ணம் அண்ணனின் நினைவுகள் ரொம்ப நாள் கழித்து மறுபடியும் ஒரு சோகத்தைத் தந்துவிட்டது. சாரோட கம்பீரம் அதன் பிறகு பழைய நிலைக்கு செல்லவில்லை என்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

நிறைய அறிவுரைகள் அண்ணன்களின் மூலம் வரும்போது, சமகாலத்தியவர்கள்(contemporaries)என்பதால் நிறைய விஷயங்களை நாம் காது கொடுத்துக் கேட்பதில்லை.

 
At 3:14 PM, Blogger erode soms said...

சோகம் பகிரப்படுகையில் மனம் கொஞ்சம் லேசாவது நல்லவிதமான உண்மை.

 
At 4:16 PM, Blogger டிபிஆர்.ஜோசப் said...

நீங்களாவது அண்ணன் மரிக்கும்போது கூட இருந்த வாய்ப்பாவது கிடைத்தது.

நிரந்தரம் என்பதில்லாமல் ஊர் ஊராக மாற்றம் செய்யப்படும் நம்மைப் போன்ற வங்கி அதிகாரிகளின் வாழ்க்கையில் நெருங்கிய உறவினர்கள் மரிக்கும்போதுகூட உடனிருக்க முடிவதில்லை.

என் தந்தையும்,என் கடைசி தம்பியும் மரிக்கும் போது கூட இருக்க முடியாமற் போனதுமட்டுமல்ல அடக்கத்திற்கும் கடைசி நேரத்தில்தான் ஊருக்கு வந்து சேர முடிந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வேதனை.

சித்தன் கூறியிருப்பதுபோல அத்தகைய சோகங்களை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும்போதுதான் வேதனை குறைகிறது

 
At 6:07 PM, Blogger பத்மா அர்விந்த் said...

நல்ல வழிகாட்டி கிடைப்பது ஒரு அதிர்ஷ்டம் ராம்கி. அந்தவகையில் நானும் அதிர்ஷ்டக்காரி உங்களைப்போலவே.

 
At 7:57 PM, Blogger Sundar Padmanaban said...

கண்ணில் நீர்த்திரையுடன் இப்பதிவைப் படித்தேன்.

துக்கம் நிரந்தரம். மனதின் அடியில் கசடு போல படிந்து தங்கியிருக்கும். நினைவுகளைக் கிளறும் தருணங்களிலெல்லாம் கசடு கலங்கி மேலே வரும். ஆசுவாசப் படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி. இது ரணமல்ல காலவோட்டத்தில் ஆறிப்போவதற்கு.

எனக்கும் துக்கம் இருக்கிறது. மனதின் ஆழத்தில் கசடாக.

 
At 10:42 PM, Blogger தருமி said...

யார் தோளில்தான் சிலுவைகள் இல்லை;
யாருடைய மனத்தடியில்தான் சோகங்கள் இல்லை;
யாருடைய கண்களில்தான் நீரில்லை.

சிலருக்குத்தான் அதை அடுத்தவரையும் பாதிக்கும் வண்ணம் சொல்லத்தெரிகிறது.

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

 
At 10:42 PM, Blogger தருமி said...

யார் தோளில்தான் சிலுவைகள் இல்லை;
யாருடைய மனத்தடியில்தான் சோகங்கள் இல்லை;
யாருடைய கண்களில்தான் நீரில்லை.

சிலருக்குத்தான் அதை அடுத்தவரையும் பாதிக்கும் வண்ணம் சொல்லத்தெரிகிறது.

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

 
At 11:01 PM, Blogger Unknown said...

மனம் கனத்து விட்டது. காயங்களைக் காலம் ஆற்றும்... திரும்பிப் பார்க்கும் போது வடுக்கலும் வலிதரும். ஆனால் வடுக்கள் இல்லாத முதுகுகள் இல்லையே?

 
At 11:14 PM, Blogger ஜென்ராம் said...

துளசி கோபால் :
எவ்வளவு சோகம்தான் ஆழத்தில் தங்கும்? எங்காவது எப்போதாவது வெளியில் வராதா?
ரம்யா:
நான் உலகை அண்ணனின் கண்கள் வழியாகத்தான் பார்க்கத் தொடங்கினேன்.

 
At 11:15 PM, Blogger ஜென்ராம் said...

சித்தன்: கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. உங்களுக்குச் சொல்ல எனக்கு வேறு சொற்கள் கிடைக்கவில்லை.இழப்பின் வலி குறித்து நான் ..உங்களுக்கு..?
தேசிகன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முயல்கிறேன்.
தேன்துளி: நண்பனாய்..நல்லாசிரியனாய்..வழிகாட்டியாய்..அண்ணனாய்.. நேற்றும் இன்றும் மீண்டும் அந்த நாட்களின் நினைவுகள்.. நன்றி.

 
At 11:15 PM, Blogger ஜென்ராம் said...

டிபிஆர் ஜோசப்: நீங்கள் அதிகாரியாக இருந்ததால் தந்தை, தம்பி மரணத்தில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறீர்கள். நான் அப்போது எழுத்தராக இருந்ததால் வங்கியைப் பற்றிக் கவலைப்படாமல் மருத்துவமனையிலேயே இருக்க முடிந்தது.
சுந்தர்:
//எனக்கும் துக்கம் இருக்கிறது. மனதின் ஆழத்தில் கசடாக.// நீங்கள், ஜோசப் உள்ளிட்ட இன்னும் ஓரிருவர் இதே போன்ற துக்கம் கொண்டவர்கள் என்பதை அறிய முடிகிறது. எனது இந்தப் பதிவு ஏதேனும் ஒரு விதத்தில் உங்களைத் துன்பப்படுத்தியிருந்தால் – பொருக்கைப் பிய்த்து ரணத்தை ஊதிப் பார்க்க வைத்திருந்தால் - வருந்துகிறேன்.
என் வாழ்க்கையில் ஒரு திருப்பத்திற்கு அந்த மரணம் காரணமாக இருந்தது என்பதும் அறிவியலுக்கு அப்பாலோ அல்லது தற்செயலாகவோ சாமியார் வரிகள் இருந்தன என்பதும் தான் பதிவில் நான் சொல்ல வந்தது.

 
At 11:18 PM, Blogger ஜென்ராம் said...

தாணு:
//சாரோட கம்பீரம் அதன் பிறகு பழைய நிலைக்கு செல்லவில்லை என்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.// பதில் சொல்ல முடியவில்லை. முதலில் இதற்கு பதில் சொல்லாமல் விடலாம் என்று நினைத்தேன். அக்31,நவம்பர்1 இரு பதிவுகளை அம்மாவிடம் காட்டினேன். இதை இன்னும் காட்டவில்லை.

 
At 11:25 PM, Blogger ஜென்ராம் said...

தருமி, அப்டிப்போடு:

//யார் தோளில்தான் சிலுவைகள் இல்லை;
யாருடைய மனத்தடியில்தான் சோகங்கள் இல்லை;
யாருடைய கண்களில்தான் நீரில்லை.//

//வடுக்கள் இல்லாத முதுகுகள் இல்லையே? //


மிகவும் சரி..யாரிடம் தான் சோகம் இல்லை? மரணத்தைப் பார்க்காத வீட்டில் இருந்து அரிசி வாங்கி வா என்று புத்தர் உயிரிழப்பு குறித்து செயலற்றிருந்த ஒருவரிடம் கூறியதாக ஒரு கதை உண்டு.

 
At 3:31 AM, Blogger Sundar Padmanaban said...

//எனது இந்தப் பதிவு ஏதேனும் ஒரு விதத்தில் உங்களைத் துன்பப்படுத்தியிருந்தால் – பொருக்கைப் பிய்த்து ரணத்தை ஊதிப் பார்க்க வைத்திருந்தால் - வருந்துகிறேன்.
//

அட. விடுங்க ஸார். இதுக்குப் போய் வருத்தம் தெரிவிச்சிக்கிட்டு.

ம்ம்.. சோகங்களைப் பகிர்ந்து கொள்வதால் அழுத்தம் ஓரளவு குறைகிறது. உங்கள் பதிவைப் படித்த போதும் அதற்குப் பின்னூட்டம் எழுதும் போதும் அழுத்தம் குறைந்தது என்பதே உண்மை. சமீபத்தில் 32 வயதில் அகாலமாக அன்புத் தம்பி மரித்துப் போனதை நான் நம்ப மறுத்துவிட்டேன். எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவன் என்னுள் வாழ்கிறான். என் நினைவுகளில், கனவுகளில், சிந்தனைகளில், செய்லகளில், பார்க்கும் காட்சிகளில் - உள்ளும் புறமும்.

சிலவற்றை மறந்தால் தானே நினைத்துப் பார்ப்பதற்கு?

 
At 6:19 AM, Blogger ஜென்ராம் said...

சுந்தர்:

//32 வயதில்// இன்னும் கஷ்டமாக இருக்கிறது.

 
At 9:00 AM, Blogger Unknown said...

நிகழ்வும் அதைச் சொல்லும் இயல்பான போக்கும் உள்ளத்தைப் பிசைகின்றன. இந்த வலியை உணர்த்தான் முடியும். மனிதம் உள்ளில் இருக்கும் போது மட்டுமே இப்படி உணர்வுகள் வெளிப்படும்.

 
At 9:00 AM, Blogger Unknown said...

நிகழ்வும் அதைச் சொல்லும் இயல்பான போக்கும் உள்ளத்தைப் பிசைகின்றன. இந்த வலியை உணர்த்தான் முடியும். மனிதம் உள்ளில் இருக்கும் போது மட்டுமே இப்படி உணர்வுகள் வெளிப்படும்.

 

Post a Comment

<< Home