Saturday, November 05, 2005

பட்டங்களுக்காக அலைபவர்கள்!

சென்னை சாலைகளில் பயணம் செய்கிறபோது பலவிதமான விளம்பர பேனர்களைப் பார்க்க முடிகிறது. இவற்றில் சினிமா விளம்பரங்களில் கதாநாயகர்களுக்கு போடப்பட்டிருக்கும் பட்டங்கள் வியப்பளிக்கின்றன. புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், புரட்சித் தமிழன் சத்யராஜ், புரட்சி நாயகன் முரளி, புரட்சித் திலகம் பாக்யராஜ் .. இப்படி நிறைய புரட்சிக்காரர்கள்..

பிரபு "இளைய திலகம்' என்றால் விஜய் "இளைய தளபதி' ஆகிவிடுகிறார்! ரஜினிகாந்த் "சூப்பர் ஸ்டார்' என்றால் கமல்ஹாசன் "சூப்பர் ஆக்டர்' என்றும் "உலகநாயகன்' என்றும் ஆகிவிடுகிறார். சரத்குமார் "சூப்ரீம் ஸ்டார்' என்றால் அஜித்குமார் "அல்ட்டிமேட் ஸ்டார்' ஆகிவிடுகிறார். ஒரு காலத்தில் கமல்ஹாசனுக்குப் போட்ட காதல் இளவரசன் பட்டத்தை இப்போது பிரசாந்த் தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்கிறார். சிலம்பரசனுக்கு போடப்படும் பட்டம் "லிட்டில் சூப்பர் ஸ்டார்'..

நடிகர் திலகம் சிவாஜி, புரட்சி நடிகர் அல்லது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், நடிகவேள் எம்.ஆர்.ராதா என்று முந்தைய தலைமுறை நடிகர்கள் அழைக்கப்பட்டதால் வந்த வினை..நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்ற பட்டங்களை ஏதேனும் ஒரு பொதுக்கூட்டத்தில் யாராவது ஒரு தலைவர் வழங்கியிருக்கக் கூடும். ஆனால் இன்றைய நடிகர்களில் பலருக்கு அப்படி பட்டங்களை வேறு யாரும் வழங்கியதாகத் தெரியவில்லை. அவர்களே போட்டுக் கொள்கிறார்கள் போலிருக்கிறது..

ஒரு குறிப்பிட்ட காலம் போனபிறகு சொந்தப் பெயரிலும் அழைக்கக் கூடாது.. திரைக்காக வைத்த பெயரிலும் அழைக்கக் கூடாது.. பட்டங்களால் மட்டுமே அழைக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத சட்டங்கள் அமலுக்கு வரும். ஜால்ராக்கள் நடைமுறைப்படுத்துவர்..யாராவது அவர்களை அவர்களது பெயர்களால் விளித்தால் ஓரங்கட்டப்படுவார்கள்.

இந்தப் பண்பாட்டிற்கு என்ன பெயர்? தங்களுடைய பட்டங்களுக்குத் தாம் முற்றிலும் தகுதி உடையவர்கள் தானா என்று ஒரு கணமேனும் இவர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களா?

இப்படிப் பட்டங்களுக்காக அலைபவர்கள் சினிமாக்காரர்கள் மட்டுமல்ல.

29 Comments:

At 10:25 AM, Blogger ராம்கி said...

நேரமின்மை காரணமாக நட்சத்திர வாரத்தில் சிறிய பதிவு போட்டதற்கு மன்னியுங்கள்..
நாளை வழக்கம் போல் புதிய பதிவுடன் சந்திக்கலாம்.

 
At 11:20 AM, Blogger தாணு said...

என்ன சொதப்பலான பதிவுன்னு எழுத வந்தேன். அதற்குள் தன்னிலை விளக்கம் தந்ததால் மன்னிக்கப்பட்டீர்

 
At 11:23 AM, Blogger தாணு said...

நாயகர்கள் பட்டங்களுக்கு அலைவதுபோல் நாயகிகள் அலைந்தால்??!! யார் யாருக்கு என்ன பட்டம் பொருத்தம்னு காமெடியா ஒரு பதிவு போட்டிருக்கலாம். ராம்கிக்கு காமெடி வருமா?

 
At 11:39 AM, Blogger Ramya Nageswaran said...

எதுவுமே அபூர்வமாக இருந்தால் தான் மதிப்பு..extra நடிகர்கள் முதல் அனைவரும் ஒரு பட்டப் பெயர் வைத்துக் கொண்டால் அது வெறும் அடையாளப்படுத்த வேண்டுமானால் உபயோகப்படுமே தவிர பட்டப்பெயரின் உண்மையான அர்த்தம் பலருக்கு நினைவில் கூட வருவதில்லை என்று நினைக்கிறேன்.

அட எப்படியோ ஒரு பெரிய sentenceலெ கொஞ்சம் ஸீரியஸ் பின்னூட்டமிட்டுவிட்டேன்!! :-)

 
At 12:34 PM, Blogger ராம்கி said...

ரம்யா:
//அட எப்படியோ ஒரு பெரிய sentenceலெ கொஞ்சம் ஸீரியஸ் பின்னூட்டமிட்டுவிட்டேன்!! :-)//

நல்ல முன்னேற்றம்? :-)

தாணு:
யாராவது முயன்று பார்க்கலாம்.

 
At 12:47 PM, Blogger ஜோ / Joe said...

பேசும்படம் என்ற சினிமாப் பத்திரிகைடின் கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகர் "சிவாஜியை 'நடிகர் திலகம்' என்று சொன்னால் பொருத்தமாக இருக்குமா?' என்ற கேள்வியை கேட்க ,பதில் சொன்னவரும் அதை ஆமோதிக்க ,தொடர்ந்து அந்த பத்திரிகை சிவாஜியை 'நடிகர் திலகம்' என்று குறிப்பிட அந்த பட்டம் நிலைத்து விட்டது.

எம்.ஜி.ஆருக்கு 'புரட்சி நடிகர்' என்ற பட்டம் கொடுத்தது சாட்சாத் கலைஞர் தான் .எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அது 'புரட்சித் தலைவர்' ஆனது.

 
At 12:52 PM, Blogger ஜோ / Joe said...

நிறைய பேருக்கு பட்டங்களை அள்ளி வழங்கியது கலைஞர் தான் .இளையராஜாவுக்கு 'இசைஞானி' என்றும் ,கமலுக்கு 'கலைஞானி' என்றும் பட்டம் கொடுத்தது அவர் தான் .அவருக்கு 'கலைஞர்' பட்டம் கொடுத்தது எம்.ஆர்.ராதா.பெரியார் ஒருவருக்கு பட்டம் கொடுத்தது கணேசனுக்கு மட்டும் தான் என நினைக்கிறேன் .கணேசனை 'சிவாஜி' ஆக்கியது அவர் தானே?

 
At 1:00 PM, Blogger ராம்கி said...

ஜோ:
விரல்நுனியில் தகவல்களைக் கொட்டுகிறீர்கள். ஆம்.. பெரியார் தான் வி.சி.கணேசனை சிவாஜி கணேசன் ஆக்கியது.

 
At 2:07 PM, Blogger Nanjundorkkiniyan said...

வைரமுத்து 'கவியரசு' ஆனது எப்படி தெரியுமா? 'நமக்கு நாமே' திட்டத்தில்தான்!

 
At 2:11 PM, Blogger பெத்த ராயுடு said...

வைரமுத்து 'கவிப்பேரரசு' ஆச்சே?

 
At 2:29 PM, Blogger Maravandu - Ganesh said...

//வைரமுத்து 'கவியரசு' ஆனது எப்படி தெரியுமா? 'நமக்கு நாமே' திட்டத்தில்தான்//

nanju :-)))))

 
At 2:36 PM, Blogger Ramya Nageswaran said...

ராம்கி, தாணு உங்க கல்லூரி தோழியா? நாளைக்கு எழுத டாபிக் கிடைக்கலைன்னா இதோ ஒரு suggestion: தாணு என்ற தோழி சகபதிவராக இருப்பது வலியா, வலிமையா? :-)

தாணு, என்ன சொல்றீங்க?? :-)

 
At 3:17 PM, Blogger தாணு said...

ரம்யா,
ராம்கிகிட்டே கேட்டால் சரியான பதில் வராது. என்னை எழுத வைத்ததே ராம்கிதான். `வலி'ன்னு சொன்னால் டோஸ் கிடைக்கும், வலிமைன்னு சொல்ல சுயமரியாதை இடம் தராது.

நாங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். கல்லூரியில் வெவ்வேறு திக்கு என்றாலும், வாழ்க்கையில் ரொம்ப நெருங்கிய நட்பு.

வேணுமின்னா `உடனிருந்து கொல்லும் நோய்'ன்னு சொல்ல வாய்ப்பிருக்குது!(wait for Ramki's criticism)

 
At 3:19 PM, Blogger joker said...

தாணு,
//நாயகர்கள் பட்டங்களுக்கு அலைவதுபோல் நாயகிகள் அலைந்தால்??!! யார் யாருக்கு என்ன பட்டம் பொருத்தம்னு காமெடியா ஒரு பதிவு போட்டிருக்கலாம். ராம்கிக்கு காமெடி வருமா?//
பாவம் ராம்கிக்கு நேரம் இருக்குதோ இல்லையோ அதான் உங்க ஆசை நிராசையாக வேண்டாமேனு நானே ஒரு பதிவுபோட்டுட்டேன்.

 
At 3:42 PM, Blogger ராம்கி said...

பை...பை சொல்கிற நேரத்தில் இந்தவார நட்சத்திரம் சொதப்பிட்டு போறாரே!

 
At 5:36 PM, Blogger பத்மா அர்விந்த் said...

ராம்கி
முகங்களை அடையாளத்தை தன்னை தொலைப்பது நடிகர்கள் மட்டும் இல்லை. அது மிக பெரிய வலி, அதை கூட உணராமல் சிரிக்க வேண்டிய கட்டாயம் பலருக்கு இருக்கிறது. தாணு: நடிகையர் திலகம், நாட்டிய பேரொளி, புன்னகை அரசி, புன்னகை இளவரசி...கேள்விப்பட்டதில்லையா?

 
At 7:53 PM, Blogger ராம்கி said...

நஞ்சுண்டோர்க்கினியன், பெத்தராயுடு, மரவண்டு கணேஷ்: வருகைக்கு நன்றி..நமக்கு நாமே:-))

தேன் துளி: நன்றி..

 
At 7:56 PM, Blogger ராம்கி said...

ஜெ.ரஜினிராம்கி:

இன்று பதிவே போடாமல் போவதற்கு ஏதாவது போட்டுவிடுவோம் என்ற நிலையில் இருந்தேன். சொதப்பல் என்று கருத்து வரும் என்று எதிர்பார்த்தே முதல் பின்னூட்டமாக மன்னிப்புக் கோரினேன்.

 
At 8:00 PM, Blogger ராம்கி said...

ரம்யா:
தாணு என்னுடன் முதல் வகுப்பில் இருந்து பள்ளி இறுதி வகுப்பு(11 வது வகுப்பு) வரை படித்தவர்.

மறுமொழிகளைப் பார்த்துவிட்டு அற்புதமான பதிவுப் பொருளை முன்மொழிந்திருக்கிறீர்கள். வாய்விட்டு சிரித்தேன்..

 
At 8:03 PM, Blogger ராம்கி said...

தாணு:

//`வலி'ன்னு சொன்னால் டோஸ் கிடைக்கும்// உண்மை.

//வலிமைன்னு சொல்ல சுயமரியாதை இடம் தராது// ஹஹ்ஹா...

//வேணுமின்னா `உடனிருந்து கொல்லும் நோய்'ன்னு சொல்ல வாய்ப்பிருக்குது!// :-)

 
At 12:57 AM, Blogger முகமூடி said...

நமக்கு நாமே திட்டத்தில் ஆறுதல் அடைபவர்களை "பட்டங்களுக்காக அலைபவர்கள்!" என்று கூறும் ராம்கியை பொதுமக்களின் வற்புறுத்தலில் பேரில் பட்டங்களை (முள்கிரீடம் போல) சுமந்திருக்கும் முகமூடி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இவண்,
பமக நிறுவனத்தலைவர், புரட்சி எழுத்தாளர், ஒரு கவிதைதான் எழுதியிருக்கும் கவிச்சிற்றரசு, இனிமேல்தான் டாக்டர் பட்டம் "வாங்க"ப்போகும் கலைஞர், முகமூடி முரட்டு பக்தர் குழு ("ழு"ன்னு ஒழுங்கா படிங்க..)

 
At 7:18 AM, Blogger ராம்கி said...

மகிழ்ச்சி முகமூடி..முரட்டு பக்தர்கள் வந்துட்டாலே அடுத்து என்னென்ன நடக்கும்ங்கறதை சொல்லிட்டீங்க.. முள்கிரீடம் சூப்பர்..நான் கொடுத்த பட்டத்தை பயன்படுத்த உங்களுக்கு விருப்பம் இல்லை போல இருக்கு..பரவாயில்லை, நான் காத்திருந்து வேற யாருக்காவது கொடுத்திடறேன்.யாரும் கிடைக்கவில்லை என்றால், எனக்கு நானே ........ வேற வழி?

 
At 7:24 AM, Blogger நிலாச்சோறு said...

புதியவர்கள் மக்களின் கவனத்தைப் பெற ஒரு வழி 'பட்டம்' .

தமிழ்மணத்திலேயே 'இந்த வார நட்சத்திரம் 'என்றால் ஒரு சிறப்புக் கவனம் பெறுவது இயல்புதானே..!?

 
At 9:11 AM, Blogger ராம்கி said...

நிலாச்சோறு:
//தமிழ்மணத்திலேயே 'இந்த வார நட்சத்திரம் 'என்றால் ஒரு சிறப்புக் கவனம் பெறுவது இயல்புதானே..!? //
இது ஒரு வாரத்துடன் முடிந்து போகிறதே..

//புதியவர்கள் மக்களின் கவனத்தைப் பெற ஒரு வழி 'பட்டம்' .// உண்மைதான். கவனம் நீடித்து நிலக்க என்ன செய்வது?

 
At 9:42 AM, Blogger துளசி கோபால் said...

ஏங்க இப்படி பட்டமே கூடாதுன்னா எனக்குக் கிடைச்சிருக்கற பட்டத்தை,
அதான் 'கடவுள் வந்த கலையரசி'யை
என்ன செய்யறதாம்?

இது தன்கை அல்ல. பிறர்கை:-)))

இருந்திருந்து (கிடைச்ச)பட்டத்தைத் துறக்கணுமா? ஐய்யகோ......

 
At 10:24 AM, Blogger மதுமிதா said...

ரொம்ப சரி ராம்கி
ஆனால் பட்டத்துக்கு அலையாதவர்களுக்கு,
தானே கிடைக்கும் பட்டத்தை என்ன சொல்வது.
உங்கள் புண்ணியம் பட்டமளிக்கும் பாக்கியம் எனக்கு இப்போ.
பெருந்தன்மையா கொடுத்திட்டேன் பாருங்க.

 
At 8:32 PM, Blogger தாணு said...

ஒரு உருப்படாத பதிவுக்கு எத்தனை பின்னூட்டம், என்னையும் சேர்த்துதான்?

எனக்கு நம்மூர் சந்தைக்கடையில் பறக்கவிடுற பட்டம்தான் பிடிச்சிருக்கு!

ராம்கிக்கு நான் கொடுத்திருக்க பட்டத்தையெல்லாம் கேட்டா எல்லோரும் ஓடிப் போயிடுவீங்க!!

 
At 8:41 PM, Blogger Ramya Nageswaran said...

தாணு, இப்பத்தான் அவர் நான் கேட்ட கேள்விக்கு 'வாய்விட்டு சிரித்தேன்' அப்படிங்கிறதோட நிறுத்திகிட்டிருக்காரு..'வலியே' என்ற கட்சியிலே பேச வைச்சுடாதீங்க!! :-) அப்புறம் நானும் சாலமன் பாப்பையா மாதிரி அவருக்கு சாதகமா தீர்ப்பு சொல்ல வேண்டியிருக்கும்!! :-)

 
At 9:04 PM, Blogger ராம்கி said...

ரம்யா:

நன்றி..நன்றி..நன்றி..உங்கள் சேவை மகத்தானது..

 

Post a Comment

<< Home