Thursday, November 03, 2005

ஜுலை மாதம் வந்தால்…

பதவி உயர்வு பெற்று சென்னை வந்த அவன் இப்போது ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிளையில் உதவி மேலாளராகச் சேர்ந்தான். சென்னையில் அவனது ஸ்டேஷன் பெஞ்ச் நண்பர்கள் பலர் இருந்தார்கள்.

மணியன் மறைந்து போன பிறகு தடுமாறிக் கொண்டிருந்த இதயம் பேசுகிறது வார இதழில் இருவர் இருந்தனர். அவனும் மாலை நேரங்களில் கிண்டி சென்று அவர்களுடன் பொழுதைக் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

நண்பர்களின் பணிகளில் உதவி செய்வதன் மூலம் இதழ் வெளியாவதற்கு முன்பே அதன் உள்ளடக்கம் குறித்து அவன் அறிந்து கொள்ள முடிந்தது. இது போன்ற வார இதழ்களில் அவனுக்கு அதுவரை ஈர்ப்பு எதுவும் இருந்ததில்லை.

ஆனால் அவனது நண்பர்கள் அவ்வாறான இதழ்களில்தான் வேலை பார்த்தார்கள். இன்னொரு நண்பர் வேறொரு வார இதழின் ஆசிரியராக இருந்தார். இருந்தும் அவனுக்கு அவற்றில் எழுத வேண்டும் என்று தோன்றியதே இல்லை.

கல்லூரி முடித்து வேலை கிடைக்காத இடைப்பட்ட நாட்களில் ஊரில் "கீதம்" என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினான். "நாங்கள் பாடும் கீதங்கள் ; நாளை உலகின் வேதங்கள்" என்று முழக்கம் வேறு.

இந்தப் பத்திரிகைக்கான வாசகர்கள் யார்? எழுதி யாருக்கு எப்படி படிக்கக் கொடுப்பது?
ஊரில் இருக்கும் பொது நூலகத்தின் நூலகரை அணுகினான்.

"நான் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்துகிறேன். அதை இங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்"

அவனது அப்பா அந்த ஊர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர். ஊரின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர். ஊரின் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றவர். அவருடைய பையன் கேட்கிறான்..அவனையும் ஐந்தாம் வகுப்பு படித்த காலத்தில் இருந்து அவருக்குத் தெரியும்.. அவனுக்கு அப்போதிலிருந்து நூலகம் செல்லும் பழக்கத்தை அப்பாவும் அண்ணனும் ஏற்படுத்தி இருந்தார்கள்.

கேட்கும் நூல்களை இப்போது குழந்தைகளுக்கு சொந்தமாகவே வாங்கிக் கொடுப்பது போல் அப்போது வாங்கிக் கொடுக்கும் வழக்கம் அவன் வீட்டில் இல்லை. அவர்களுக்கு அதற்கான வசதியும் இல்லை என்பது வேறு விஷயம்.

இந்தப் பின்னணி கொண்டவன் கேட்டவுடன் நூலகர் அதற்கு சம்மதித்தார். அதற்கான அதிகாரம் அவருக்கு உண்டா இல்லையா என்பது குறித்து அவனுக்குத் தெரியாது. அதனால் வரப்போகும் பிரச்னையையும் அவனோ அவரோ அறிந்திருக்கவில்லை.

2 இதழ்கள் வந்தன. வாசகர் பக்கங்களில் ஏராளமான எதிர்வினைகள்..அன்று வாசகர் மறுமொழியிட்டவர்களில் ஒருவர் மாதவராஜ். அவர் இப்போது எழுத்தாளர். ஒரு பிரபல எழுத்தாளரின் மருமகன் என்று கேள்வி. வாசகர் பக்கங்களில் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் இருந்தன. எதிர்ப்பவர்கள் நூலகரை அணுகி "ஏன் இதை இங்கு போடறீங்க? யார் நடத்தறது இதை?" என்று கேட்கும்போது "நம்ம சார் பையன் தான்" என்ற பதிலில் எதிர்ப்பாளர்கள் பதில் பேசாமல் திரும்பியிருக்கிறார்கள்.

ஆகா..நமது பத்திரிகை ஊருக்குள் வேலை செய்கிறது என்ற மகிழ்ச்சி அவனுக்கு. ஆனால் அடுத்த இதழில் அது நீடிக்கப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியவில்லை.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எங்கோ பேசியிருந்தார். " தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விச் சேவை குறைந்து வருகிறது" என்பது அந்தப் பேச்சின் கருத்து. அதை அவன் கீதத்தில் எடுத்துப் போட்டிருந்தான். அதுவே பிரச்னை ஆனது.

அவனது அப்பா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர். பள்ளி நிர்வாகம் ஒரு காங்கிரஸ் தலைவர் பொறுப்பில். நூலகரும் அந்தத் தலைவருக்கு வேண்டியவர்தான். இந்திரா காந்தியின் பேச்சு என்பது கூட அவர்களுக்கு முக்கியமாகப்படவில்லை. பிரதமர் பொதுவாக டெல்லியில் பேசியதை இந்தக் கிராமத்தில் கையெழுத்துப் பத்திரிகையில் போட வேண்டிய அவசியம் என்ன? இதில் ஏதோ உள்விவகாரம் இருக்கிறது என்று நிலைமை வேறு திசையில் மாறிவிட்டது.

அப்பாவுக்கு பள்ளியில் ஏதோ அதிருப்தி, அதை பையன் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று திரிக்கப்பட்டு விட்டது. நூலகத்தில் இருந்த "கீதம்" தலைவரது வீட்டுக்குப் போய்விட்டது. அப்பா விசாரணைக்காக அழைக்கப்பட்டார். "விசாரணை" முடிந்து வீட்டுக்கு வந்த அப்பா அவனிடம் சொன்னார்.

" இந்த ஊரில் நீ சொல்வது எடுபடாது. இந்த ஊரில் நாம சிறுபான்மையினர். எது நடந்தாலும் நீயும் உன்னோட நண்பர்களும் ஏதோ கலகம் பண்றதாத் தான் நினைப்பாங்க. ஒரு வேலையில் சேர்ந்து அங்கு தொழிற்சங்கத்துல உன்னோட கருத்துக்களை எல்லாம் பேசிக் கொள்.

பள்ளிக் கூடத்துல ஏதாவது ஒரு காரணத்துக்காக என்மேல அதிருப்தியில் இருக்கறவங்க எல்லாரும் நான் சொல்லித்தான் நீ பத்திரிகையில் விஷயங்கள் போடறதா எனக்கு எதிரா கோள் சொல்லியிருக்காங்க.. உங்க பத்திரிகையில் என்ன எழுதியிருக்குன்னு ஒருத்தரும் தெரிஞ்சுக்க மாட்டாங்க. யார் எழுதுறது, ஏன் எழுதறாங்க, இவங்களுக்கு என்ன இதுல அக்கறைன்னு ஏதாவது ஒரு முத்திரை குத்தி வாழ்க்கையைக் கெடுக்கப் பார்ப்பாங்க..

'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'ன்னு நான் பாடம்தான் சொல்லிக் கொடுக்க முடியும். எல்லோரையும் வாழ்க்கையிலயும் கடைப்பிடிக்கறாங்களான்னு பார்த்துத் திருத்த முடியாது..

இதுதான் இங்கே நிலைமை..அதுக்குத் தகுந்த மாதிரி நீ முடிவு எடுத்துக்கோ.. என்னைக் கேட்டா கீதத்தை நீ நிறுத்திடறதுதான் நல்லது. ஏன்னா நீ போய் நூலகர்கிட்ட நான் இங்கே போட்ட பத்திரிகை எங்கேன்னு கூட கேட்க முடியாது."

அவர் எப்போதும் அப்படித்தான் சொல்வார். ஆணையிட்டோ வற்புறுத்தியோ எதுவும் பேசமாட்டார். ஆனால் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை போகிற போக்கில் உணர்த்திவிடுவார்.

இப்படித்தான் ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் போது அவனும் இன்னொரு நண்பனும் "திருட்டு தம்" அடித்தது அந்த நண்பனின் வீட்டுக்கு தெரிந்து விட்டது. அந்த நண்பனை அந்த அப்பா அடி பின்னி எடுத்துவிட்டார். ஆனால் அவன் அப்பாவோ " நீ சிகரெட் பிடிக்கறதா கேள்விப்பட்டேன்.. ரயில் செய்யற வேலை புகை விடறது.. மனுஷனுக்கு எதுக்கு.. நமக்கு அதெல்லாம் வேண்டாம் விட்டுடு" என்று சாதாரணமாகச் சொன்னார். கல்லூரி செல்லும் வரை அவன் புகை பிடிக்கவில்லை.

இனி கையெழுத்துப் பத்திரிகையை நூலகத்தில் போட முடியாது. அப்பாவுக்கும் நெருக்கடி. பையனின் செயல்பாடுகளை அப்பாவுடன் சேர்த்தே பார்க்கும் பழக்கம் சுற்றுவட்டாரத்தில் இருக்கிறது. "வளர்க்கத்" தெரியவில்லை என்று பட்டம் வேறு வழங்குவார்கள். எனவே கீதம் நின்று போனது.
***************************************************************************************************
1982 இறுதியில் மதுரை தல்லாகுளம் தொலைபேசி அலுவலகத்தில் 3 மாதம் தொலைபேசி இயக்குநர் பயிற்சிக்கு சென்றான். அவனுக்கு அருகில் விவேகானந்தன் என்றொருவர் இருந்தார். அவர் அங்கு ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்த வேண்டும் என்றார். அது முழுக்க முழுக்க விவேகானந்தன் முயற்சியில் வந்தது. "ஆயிரம் மலர்களே மலருங்கள்" என்று ஓர் அறிமுகவுரையும் 2 கவிதைகளும் அவன் கொடுத்தான். இதழ் வந்த சில நாட்களில் விவேகானந்தன் அவனிடம் சொன்னார்.
" தலைவா, நீங்க ஏதோ 'நிறம் மாறாத பூக்கள்' படப் பாட்டு வரியைப் போட்டு எழுதறீங்கன்னு நினைச்சேன். அது மாவோ சொன்னதாம்ல.. யூனியன் லீடர்ஸ் எல்லாம் புக்கைப் பார்த்துட்டு இது யார் எழுதுனதுன்னு கேட்டாங்க.."
அவன் மௌனமாக சிரித்துக் கொண்டான்.
*******************************************************
அதன்பிறகு அவன் எழுதியதெல்லாம் வங்கி ஊழியர் சங்க அறிக்கைகள் தான்.

"தாக்குண்டால் புழு கூடத் தரைவிட்டுத் துள்ளும்
கழுகு தூக்கிடும் குஞ்சு காணத் துடித்திடும் கோழி
சிங்கம் சினந்து தாக்கினால் சிறுமுயல் கூட எதிர்த்து நிற்கும்
சாக்கடைக் கொசுக்களா நாம் சரித்திரச் சக்கரங்கள்"

''விதவிதமாய் மீசை வைத்தோம்
வீரத்தைத் தொலைத்து விட்டோம்"

"மண்ணில் வேரோடி மாநிலத்தில் கால் பதித்து
வீசும் புயற்காற்றை வீழும்வரை நின்றெதிர்ப்போம்"

போன்ற செவ்விலக்கியக் கவிஞர்களின் கவிதை வரிகளுடன் அறிக்கைகள் அரசியல் கட்சி சார்பற்ற வங்கி ஊழியர் சங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

அவனது தங்கையின் கணவர் அடிக்கடி சொல்லுவார். அவர் அவன் மனைவியின் தம்பியும் கூட.

" நீ பத்திரிகையில் எல்லாம் எழுதலாம். உன் நண்பர்களோ பத்திரிகையில் இருக்காங்க.. ஏன் எழுத மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறே?"

இப்படியே பார்க்கும்போதெல்லாம் பேசுவார். வங்கி அதிகாரியின் பணி விதிகள் அதற்கு தடையாக இருக்கின்றன என்று அவன் கூறுவான். ஆனால் அவரோ விடாமல் அவனது ஊடக நண்பர்களிடமும் அவனை எழுதச் சொல்லுங்கள் என்று வற்புறுத்துவார். ஆனால் அவன் எங்கும் எழுதவில்லை.




அன்று ஜூலை 1, 1997.

காலையில் எழுந்ததுமே அவனுக்கு ஏனோ அண்ணனின் நினைவு வந்தது. அண்ணன் மறைந்து நான்கு வருடங்கள் முடியப் போகிறது. இறுதிக் காலத்தில் அண்ணன் மீண்டும் மீண்டும் கேட்ட பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. அந்த வரிகளை இன்று கேட்டாலும் அவனது கண்களில் ஈரம் துளிர்க்கும்.

''கொடியின் பூக்கள் எல்லாம்
காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம்
உறவு வாழும் வரை
காதல் நினைவொன்று தானே
காற்று வீசும் வரை

மழையின் பயணம் எல்லாம்
மண்ணைத் தீண்டும் வரை
படகின் பயணம் எல்லாம்
நதியைத் தாண்டும் வரை
மனித பயணங்கள் எல்லாம்
வாழ்க்கை தீரும் வரை"

என்னவோ 'டல்' ஆக இருந்தது. இருந்தும் வங்கிக்குப் புறப்பட்டுச் சென்றான்.
வங்கியில் எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியவில்லை. அவன் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு துறைகளுக்கு பொறுப்பு அதிகாரி.

அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. உடலில் எந்தக் கோளாறும் இருப்பதாகத் தெரியவில்லை. மனதிலும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனாலும் ஒரு வெறுமை..

மேலாளரிடம் சென்றான். லீவு வேணும் என்றான். அவன் நிலையைச் சொல்லி செயல்பட இயலவில்லை என்றான். அவர் "இதுக்கு எதுக்கு லீவை வேஸ்ட் பண்றீங்க..வாடிக்கையாளர் சேவைக்கு நான் வேற ஆபீசரைப் போட்டுக்கறேன். நீங்க உள் அலுவலகப் பணிகளைப் பாருங்க" என்றார்.

அங்கும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. 18 வருட வங்கி அனுபவத்தில் அன்றைய நாள் மட்டும்தான் அவன் ஒரு துரும்பைக் கூட வங்கிக்காக கிள்ளிப் போடவில்லை. கிரேசி மோகன் நாடகக் குழுவைச் சேர்ந்த சீனுமோகன் அந்தக் கிளையில் தான் பணியில் இருந்தார். அவர் வந்து அவனை காபி சாப்பிட அழைத்துக் கொண்டு வெளியில் சென்று கலகலப்பாக்க முயன்றார். ஆனாலும் அவன் இயல்பாகவில்லை.

"காற்று வழி போவதை
நாற்று சொல்கின்றது
நேற்று மழை பெய்ததை
ஈரம் சொல்கின்றது
கண்ணில் வழிகின்ற கண்ணீர்
காதல் சொல்கின்றது

இலைகள் வீழ்ந்தாலுமே
கிளையில் துளிர் உள்ளது
இரவு தீர்ந்தாலுமே
இன்னும் நிலவுள்ளது
பாதி உயிர் போன போதும்
மீதி வாழ்வுள்ளது"
என்ற வரிகளை மட்டும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.

மாலையில் நண்பர்கள் யாருடனாவது "ரிலாக்ஸ்" பண்ணலாம் என்று நண்பர்களைத் தொடர்பு கொண்டான். ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் அன்று பிசி. யாரும் ரிலாக்ஸ் பண்ணத் தயாரில்லை. தனியாக "ரிலாக்ஸ்" பண்ணுவதில் அவனுக்கு ஈடுபாடு இல்லை. சீக்கிரம் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு படுக்கலாம் என்று வீடு திரும்பினான்.

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைது அல்லது ஏதோ ஒரு போராட்டம்.. தென்மாவட்டங்களில் பதற்றம் என்று செய்திகள். இன்று நெல்லைக்கு செல்பவர்கள் பாடு திண்டாட்டம்தான் என்று அவன் மனைவியிடம் கருத்து சொன்னான். மனச் சோர்வு காரணமாக சீக்கிரமே உறங்கச் சென்றான். ஆனால் தூக்கம் பிடிக்கவில்லை.

இரவு 10.30 மணி இருக்கும். வீட்டின் அழைப்பு மணி அடித்தது. உறவினர்கள் இருவர். அவர்களது கார் வாசலில் நின்றது. "கொஞ்ச நேரம் வெளியில் வாயேன்" என்றனர். என்ன விஷயம் என்ற அவனது கேள்விக்கு அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை.

அதற்குள் அவனது மனைவி, மணமாகாத கடைசித் தங்கை வாசலுக்கு வந்து விட்டனர். வாசலில் ஓர் அசாதாரண சூழ்நிலை என்று நினைத்து அவர்கள் முகத்தில் ஒரு பதற்றம்.

அவன் காரில் ஏறினான். பக்கத்து சாலை வரை கார் சென்று நின்றது. மரியாதைக்குரிய பெரியவர் சொன்னார்:

" உனக்கு ஒரு மோசமான செய்தி கொண்டு வந்திருக்கேன்பா. இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்ததுக்கே நான் ரொம்ப வருத்தப்படறேன்"

ஓரளவு ஊகித்ததுதான் என்றாலும் அவன் உடல் நடுங்கியது.

"யார் , அத்தையா?" அவன் கேட்டான்.

அத்தை, அப்பா, அம்மா சொந்த ஊரில் இருந்தனர். அப்பாவின் சிறு வயதில் தாத்தா இறந்து போனதால் அப்பாவின் வளர்ச்சிக்கு அத்தையே காரணம். அதாவது இன்று அவனது குடும்ப வளர்ச்சிக்கும் அவரே அடிப்படை. அதனால் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அத்தை மனம் நோக யாரும் நடப்பதில்லை. அத்தை வயது 80. அவராக இருந்தால் இவ்வளவு பீடிகை இருக்காது என்பதும் அவன் மனதில் ஓடியது.

"இல்லை."

அவன் சட் என்று அவரை ஏறெடுத்துப் பார்த்தான். மேற்கொண்டு ஊகங்களுக்கு இடம் கொடுக்காமல் அவர் சொன்னார்.

"ராமச்சந்திரன்.. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு அவன் போன பஸ் ஒரு லாரியோட மோதி விபத்து.. காலையில் 9 மணி அளவுல விபத்து நடந்திருக்கு.. உடலை அடையாளம் காண இரவு ஆகியிருக்கு.."

ராமச்சந்திரன் அவனது தங்கையின் கணவர். அவனது மனைவியின் தம்பி.

"இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்க்கை என்பதா
சொல் மனமே…"
வாய் முணுமுணுக்கவில்லை.

பின்குறிப்பு 1: டிசம்பர் 1997 முதல் தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் அவன் பகிரங்கக் கடிதம் என்ற வடிவில் பத்தி எழுதத் தொடங்கினான். அந்த வார இதழின் ஆசிரியராக இருந்த சுதாங்கன் அவனுக்குச் சூட்டிய புனைபெயர்தான் தெருத்தொண்டன்.

பின்குறிப்பு 2: அவன் வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று இப்போது ஊடகங்களில் ஆலோசகராக இருக்கிறான்.

பின்குறிப்பு 3: அவனோடு மதுரையில் கையெழுத்துப் பத்திரிகை நடத்திய விவேகானந்தன் வேறு யாருமல்ல, அவர் நடிகர் விவேக்.

31 Comments:

At 11:10 AM, Blogger கரிகாலன் said...

இன்று இரவு கனத்த மனதுடன் படுக்கைக்கு போகிறேன்.

 
At 12:32 PM, Blogger ஜென்ராம் said...

கரிகாலன்:
விடிந்தவுடன் நாட்காட்டியில் ஒரு தாள் கிழிக்கப்படும்.நீங்கள் காலை புத்துணர்ச்சியுடனும் புதுத் தெம்புடனும் எழுந்திருந்து தொடர்ந்து கடமை ஆற்ற வாழ்த்துக்கள்.

 
At 12:44 PM, Blogger Badri Seshadri said...

சொந்தக் கதையை படர்க்கையில் எழுதுவது வித்தியாசமாகத்தான் உள்ளது.

தொடருங்கள்.

 
At 12:53 PM, Blogger ஜென்ராம் said...

பத்ரி:
கண்ணதாசனின் வனவாசம் ஏற்படுத்திய பாதிப்பு.
நன்றி

 
At 4:02 PM, Blogger ஜெ. ராம்கி said...

Surprising News!

I also one of the regular reader of "Pagiranga Kaditham". No one could forget the first letter :-).

Infact, whenever i got chance to meet Mr. Sudhangan, we used to discuss about this 'Pagiranga Kaditham" only. Nice to know abut u sir.

 
At 4:37 PM, Blogger Ramya Nageswaran said...

யார் விபத்திற்குள்ளானார்கள் என்று படிக்கும் பொழுது டக் கென்று கண்ணீர் துளிர்த்து விட்டது. உங்க வாழ்க்கையிலே நடந்த சில சோகமான விஷயங்களை எங்களோடு பகிர்ந்துகிறீங்க. உங்க சோகங்கள் குறைந்து அமைதி பிறக்க இது வழிவகுக்க வேண்டும்.

**********************
பொதுவாக முகமூடிக அணிந்து எழுதும் எழுத்தாளர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட தயங்குவேன். நீங்க தான் தெருத்தொண்டன் என்று தெரிந்தது குறித்து மகிழ்ச்சி.

 
At 5:15 PM, Blogger பத்மா அர்விந்த் said...

ராம்கி
சில நேரங்களில் மனம் சோர்வடைந்து நிகழப்போவதை காட்டி கொடுப்பது தற்செயல் என்று நினைப்பதுண்டு.
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது எங்கள் மேல் நீங்கள் கொண்ட அன்பை காட்டுகிறது. நன்றி

 
At 6:44 PM, Blogger நக்கீரன் said...

//அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.
உடலில் எந்தக் கோளாறும் இருப்பதாகத் தெரியவில்லை.
மனதிலும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனாலும் ஒரு வெறுமை//

//காற்று வழி போவதை
நாற்று சொல்கின்றது
நேற்று மழை பெய்ததை
ஈரம் சொல்கின்றது
கண்ணில் வழிகின்ற கண்ணீர்
காதல் சொல்கின்றது

இலைகள் வீழ்ந்தாலுமே
கிளையில் துளிர் உள்ளது
இரவு தீர்ந்தாலுமே
இன்னும் நிலவுள்ளது
பாதி உயிர் போன போதும்
மீதி வாழ்வுள்ளது"
என்ற வரிகளை மட்டும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.//

நம் நேசத்திற்குரியவர்களுக்கு
ஏதாவது அசம்பாவிதம்
நடந்து விடும்போது அதை
நம் உள்ளுணர்வு
உணர்த்திவிடுகிறதோ?.

 
At 8:51 PM, Blogger ஜென்ராம் said...

ஜெ.ரஜினி ராம்கி:
அப்போது உங்களுக்கு தெருத்தொண்டன் கடிதங்கள் பிடித்திருந்தன என்பது அறிந்து மகிழ்ச்சி ராம்கி.
வங்கியில் பணியில் இருந்ததால் எழுதியவர் யாரென்று அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்.

அதன் தொடர்ச்சியாகத்தான் மின்பிம்பங்களின் "தமிழா தமிழா" என்ற சுதாங்கனின் நிகழ்ச்சிக்கும் நையாண்டி தர்பார் நிகழ்ச்சிக்கும் சுதாங்கன் அறிமுகத்தால் வாய்ப்பு கிட்டியது.

 
At 8:55 PM, Blogger ஜென்ராம் said...

ரம்யா:
எனக்கு மிகப்பெரிய மாறுதலை சுதாங்கனும் தமிழன் எக்ஸ்பிரசும் கொடுத்ததை நன்றியுடன் நினைவு கூர வேண்டும் என்று நினைத்ததால், தெருத்தொண்டன் குறித்த உண்மையை சொல்லிவிட்டேன். இனி அந்தப் பதிவில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும்.

 
At 9:01 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தமிழன் எக்ஸ்பிரஸ் 'பகிரங்கக் கடிதம்' தெருத்தொண்டன் நீங்கள்தானா? உங்களின் பகுதியை விரும்பிப் படித்து வந்திருக்கிறேன்.

எல்லாவற்றையும் எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி ராம்கி!

-மதி

 
At 9:09 PM, Blogger ஜென்ராம் said...

ஜோக்கர்:
//நம் நேசத்திற்குரியவர்களுக்கு
ஏதாவது அசம்பாவிதம்
நடந்து விடும்போது அதை
நம் உள்ளுணர்வு
உணர்த்திவிடுகிறதோ?//

தெரியவில்லை. ஆனால் எனக்கு அன்று ஒரு நிலைகொள்ளாத தவிப்பு இருந்தது உண்மை. இது அறிவியல் விதிகளின் பாற்பட்டதா என்று தெரியவில்லை. வேறுவிதமான காரணங்களை இன்னும் நான் ஏற்க விரும்பவில்லை.

இலைகள் வீழ்ந்தாலுமே
கிளையில் துளிர் உள்ளது
இரவு தீர்ந்தாலுமே
இன்னும் நிலவுள்ளது
பாதி உயிர் போன போதும்
மீதி வாழ்வுள்ளது"

இந்த வரிகள் என்னை ரொம்ப தொந்தரவு செய்தன.

 
At 9:16 PM, Blogger ஜென்ராம் said...

தேன்துளி: அன்புக்கு நன்றி. பொதுவாக நான் பகிர்ந்து கொள்கிறவன் இல்லைதான். எழுத்து அனுபவங்கள் என்று சில நண்பர்கள் எழுதச் சொல்கிறபோது விபத்து காரணமாக எழுத வந்தவன் என்று சொல்லி விடலாம் என்று நினைத்தேன்.

 
At 9:19 PM, Blogger ஜென்ராம் said...

மதி கந்தசாமி:
//உங்களின் பகுதியை விரும்பிப் படித்து வந்திருக்கிறேன்//
அன்பும் மகிழ்ச்சியும் நன்றியும்..நிறைய பேரை தெருத்தொண்டன் சென்றடைந்திருக்கிறான் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

 
At 9:35 PM, Blogger Aruna Srinivasan said...

உங்கள் பதிவுகளில் இருக்கும் எளிமையையும், வெளிப்படையையும் ரசிக்கிறேன். உங்கள் "பெயரில் தெரியும் அடையாளங்களில்" பளிச்சென்று யதார்த்தம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

 
At 9:47 PM, Blogger ஜென்ராம் said...

அருணா:
பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.

 
At 10:39 PM, Blogger ramachandranusha(உஷா) said...

நீங்களா தெரு தொண்டன்? இன்ப அதிர்ச்சியை தந்து விட்டீர்கள். நட்சத்திர பதிவுகளைப் படிக்கும் பொழுது, உங்கள் எழுத்தில் கத்துக்குட்டியில்லை என்று தெரிந்தது. உங்களைப் பற்றி சொன்னதற்கு மிக்க சந்தோஷம்.
ஒரு சிறிய விளக்கம் தேவை. சில சோகங்களை பகிர்ந்துக் கொண்டால், பாரம் அதிகம் தானே ஆகிறது. சோகம் என்றால் மாமியார், கணவர் அல்லது பிள்ளைகுட்டிகள் என்று பிரச்சனைகளை பகிர்ந்துக் கொண்டால், தீர்வோ அல்லது மன பாரமோ குறையலாம். ஆனால் சில துக்களை என்னால் வெளியே சொல்ல முடிவதில்லை. உங்களுடையதைப் படிக்கும்பொழுது, துக்கமும், சில பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தவும் செய்தது. நீங்கள் எழுதியதில் குற்றம் கண்டுப்பிடிப்பதாக, இந்த விளக்கத்தை தவறாக நினைக்க வேண்டாம். அப்படி தோன்றினால் மன்னிக்கவும்

 
At 12:41 AM, Blogger தருமி said...

என் 'வீட்டுக்கு' வந்த தெருத்தொண்டன் யாரென்று அறிந்ததில் மிக்க சந்தோஷம். இந்த சந்தோஷம் எனக்கு அடிக்கடி கிடைக்கணும்...!

 
At 1:40 AM, Blogger Mookku Sundar said...

இந்த வார நட்சத்திர பதிவு மிக நன்றாக போய்க் கொண்டு இருக்கிறது.

வாழ்த்துகள்/ நன்றிகள் ராம்கி

 
At 4:02 AM, Blogger Thangamani said...

தெருத்தொண்டன் நீங்கள் என்பதை அறிவதில் மகிழ்சி.

உள்ளுணர்வுகளின் சில வெளிப்பாடுகள் அதிசயத்தக்கவையே! படர்க்கையில் ஒரு மெல்லிய காற்றென செல்லுகிறது பதிவு. சில விசயங்களைப்பற்றி பொதுவாக எப்படி பதிலளிப்பது என்று என்னால் இன்னும் சொல்லமுடியவில்லை. அந்தவகையில் உங்களின் துயரமான அனுபங்கள் கொண்ட பதிவுகளும் அடங்கும். நன்றி!

 
At 5:53 AM, Blogger துளசி கோபால் said...

என்ன தெருத்தொண்டன், நீங்களா?

வலைஞர்கள் எல்லாம் அதிர்ச்சி தரணுமுன்னு ( இன்ப அதிர்ச்சிதான்!) வேண்டுதலா?:-)))

 
At 7:10 AM, Blogger வெளிகண்ட நாதர் said...

உங்கள் பதிவுகளை படித்து அதிகம் பரிச்சயம் இல்லை எனக்கு. இருந்தும் இந்த பதிவை படித்ததும் மனசு கனமானதென்னமோ உண்மை. புனைப்பெயர் யாருடயதென்று அறியாதோற்கு, இனிய அதிர்ச்சி கொடுத்து அதற்கான பின்னோட்டங்களில் தெரியும் பலரின் அன்பு என்னை நெகிழவக்கிறது.

 
At 8:16 AM, Blogger ஜென்ராம் said...

உஷா:
//நீங்கள் எழுதியதில் குற்றம் கண்டுப்பிடிப்பதாக, இந்த விளக்கத்தை தவறாக நினைக்க வேண்டாம். அப்படி தோன்றினால் மன்னிக்கவும்//
இல்லை உஷா..இதில் எந்தக் குற்றமும் இல்லை. இந்தப் பதிவுக்கு முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். “காதலைப் போலவே துக்கமும் ஒரு மனிதனின் அந்தரங்கமான விஷயம் என்று நினைத்திருந்தான். இன்று அதைத் தளர்த்தி மனம் திறந்தான்” என்று..அதற்கு தங்கமணி நன்றாக விளக்கம் கொடுத்திருந்தார். துக்கத்துக்கான சூழலைத்தான் பகிர்ந்து கொள்ள முடியும், துக்கம் அந்தரங்கமானதுதான் என்று.

இந்த இரு பதிவுகளிலும் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் என் வாழ்வில் இரு திருப்பங்களை ஏற்படுத்தியவை. இந்துமதி வார்த்தைகளில் “தரையில் இறங்கும் விமானங்கள்” போல வேறெங்கோ இருந்த என்னை குடும்பத்திற்குள் இழுத்து வந்தவை.பதவி உயர்வுக்காகவும் பிரபல ஊடகங்களில் வாய்ப்புக்காகவும் பலர் தவமிருக்கையில் நான் இரண்டில் இருந்தும் விலகி இருந்தேன். இந்த நிகழ்வுக்குப் பின் என்னை மாற்றிக் கொள்ள நேர்ந்தது. அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் நடந்த சம்பவங்கள், அவை ஏற்படுத்திய வெற்றிடம் இதெல்லாம் தனிப்பட்ட சோகம்.. அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் கோணத்தில் இருந்து நான் இதை அணுகவில்லை.

மேலும் இரு சம்பவங்களிலும் பொதுவாக ஒன்று என்னை கருத்துத் தளத்தில் தாக்கியது. அதுவும் இந்தப் பகிர்தலுக்கு முக்கிய காரணம். முதல் பதிவில் சாமியார் வார்த்தைகள். இரண்டாவதில் அந்த நாள்முழுவதும் எனக்குள் இருந்த வெறுமை. தற்செயல் என்று சமாதானமாகிவிடலாம்தான். இருந்தும் அடிமனதில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அல்லது அறிவியல் ஆய்வுக்கு உட்படாத விஷயங்களா இவை என்ற கேள்வி எழுந்ததே இந்தப் பதிவுகளுக்கு முக்கிய காரணம். இதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பகுத்தறிவு பிம்பம் தகர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை.மாறாக அந்தப் பார்வையில் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள முடியும் என்றே முயல்கிறேன்.

படைப்பு பேசவேண்டும்..படைப்பாளி பேசக்கூடாது..என்று சொல்வீர்கள். இங்கு அதிகம் பேசி விட்டேன். இதற்கான அவசியம் மூலம் பதிவை நான் ஒழுங்காக எழுதவில்லை என்று புரிந்து கொள்கிறேன்.

//நீங்களா தெரு தொண்டன்? இன்ப அதிர்ச்சியை தந்து விட்டீர்கள். நட்சத்திர பதிவுகளைப் படிக்கும் பொழுது, உங்கள் எழுத்தில் கத்துக்குட்டியில்லை என்று தெரிந்தது// பாராட்டுகளுக்கு நன்றி.. ஆனால் கத்துக்குட்டி என்று யாரேனும் இருக்கிறார்களா என்ன?

 
At 8:16 AM, Blogger ஜென்ராம் said...

தருமி:

“என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி அடி வாங்க வைக்கறய்ங்களே”ன்னு வடிவேலு சொல்ற மாதிரி ஒரு நகைச்சுவைக் காட்சி உண்டு..அது மாதிரி முகமூடியைக் கலைங்க, களைங்கன்னு உசுப்பேத்துனது நீங்கதான் தருமி..

மூக்கு சுந்தர்:
நன்றி..

துளசி கோபால்:
ஆச்சர்யம் இருக்கலாம். அதிர்ச்சி இருக்கலாமுங்களா?

 
At 8:17 AM, Blogger ஜென்ராம் said...

தங்கமணி:
//படர்க்கையில் ஒரு மெல்லிய காற்றென செல்லுகிறது பதிவு.// மெய்யாலுமா? ஊக்கத்துக்கு நன்றி.

வெளிகண்டநாதர்:
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சக மனிதர்கள் பகிர்ந்து கொள்ளும் இத்தகைய அன்புதான் நம்மை ஊக்கப்படுத்துகிறது. நெகிழச் செய்கிறது. இவர்களது கருத்துக்கள் நம்முடையதுடன் முரண்படும்போதும் அவர்களை மதிக்கச் செய்கிறது. அன்பே மனிதசக்தி !இல்லீங்களா?

 
At 12:57 PM, Blogger erode soms said...

இயற்கையான ப்திவு.விவேகானந்தரும் நம் வலைக்கூட்டத்தில் உள்ளாரா!
நன்பரே!

 
At 3:39 PM, Blogger அன்பு said...

உங்கள் பதிவுகளை மிக நேசிக்கிறேன்... நன்றி.

 
At 5:04 PM, Blogger ஜென்ராம் said...

அன்பு: அன்புக்கு நன்றி.

 
At 5:13 PM, Blogger ஜென்ராம் said...

சித்தன்:
விவேக் வலைப்பதிவில் இல்லை என்று தான் நினைக்கிறேன்.

 
At 9:56 PM, Blogger தாணு said...

புது ராம்கியைப் பார்க்கிறேன். பிரளயமே வந்தாலும் மனதிலிருப்பதை எள்ளளவும் வெளிக்காட்டாத அமுக்கரையானாச்சே, இப்போ எப்படி இவ்வளவு வெளிப்பாடு? தெருத்டொண்டன் யார்ன்னு சொல்லக்கூடாதுன்னு எனக்கு கோடி காட்டிட்டு நீயே சொன்னால் எப்படி?
பள்ளிக்கூட நினைவுகள் இவ்வளவு தெளிவாக எப்பிடி நினைவிருக்குது? எனக்கு, ரொம்ப சொற்பமான நினைவுகளே மிச்சம். எல்லா மாணவர்களும் வெவ்வேறு விதமான துணிகளில் வெள்ளைச் சட்டை போட்டிருக்கும்போடு கதர்ச் சட்டை அணிந்த ராம்கி; அந்த வயசிலேயே ஜெயகாந்தனை விரும்பிப் படிப்பதில், என் போலவே ஈடுபாடுள்ள ராம்கி; மனதுக்குப் பிடித்த தமிழ் சாரின் பையன்; அறிவாளியாக இருந்தபோதும் வகுப்பில் முதல் மார்க் எடுக்க போட்டிக்கு வராத ஜெண்டில் பாய்; மங்கையின் அண்ணன் என சில பல பிடித்த விஷயங்கள் என்று ஓரளவே புரியப்பட்ட ராம்கி. நிறைய புரிந்துகொண்டது அதன் பிறகு வந்த கல்லூரி நாட்களில்தான். ஆனால் அப்போ இருந்த மூர்க்கமும், கருத்துப் பிடிவாதமும் , இரண்டு இழப்புகளுக்குப் பிறகு ரொம்பவே வீரியமிழந்துவிட்டது.
`பொருநை’ மூலம் தங்கைகளுக்கு துணையாக வந்த பிறகு, இன்னுமே ரொம்ப மெச்சூரிட்டி. ராமச்சந்திரனை சீதாவின் தம்பியாக அறிந்த அளவு மங்கையின் கணவனாக ஒருநாள்கூட சந்திக்காமல் போய்விட்டது மனதுக்குக் கஷ்டமாக இருந்ததுண்டு.

பகுத்தறிவுவாதமும் உரசிப்பார்க்கப்படும் நிகழ்வுகள் எல்லோர் வாழ்க்கையிலும் நடந்துகொண்டேதான் இருக்கும்.

 
At 10:38 AM, Blogger ஜென்ராம் said...

தாணு:
கனிவான வார்த்தைகளுக்கு நன்றி..

 

Post a Comment

<< Home