Friday, November 04, 2005

சங்க காலம்

இந்தப் பதிவு முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் குறித்தது அல்ல.
அவன் கல்லூரியில் படிக்கும்போது கல்லூரியின் மாணவர் பேரவைச் செயலராக இருந்தான். வங்கியில் வேலைக்குச் சேர்ந்ததும் ஊழியர் சங்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டினான். இதற்கான அடித்தளம் எங்கு எப்படி போடப்பட்டது என்று நினைத்துப் பார்க்கிறான்.

1972-73. அப்போது அவன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டு அதிமுக என்று புதிய கட்சி தொடங்கியிருந்தார்.

தமிழக அரசை எதிர்த்து அவர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். அல்லது / மற்றும் தமிழக அரசை எதிர்த்து நடைபெற்ற பல போராட்டங்களை ஆதரித்துக் கொண்டிருந்தார்.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் போலீஸ் தடியடி, நடத்தியது. கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியது. துப்பாக்கிச் சூடு நடத்தியதா என்று நினைவில்லை. ஆனால் மாணவர் லூர்துநாதன் அதில் இறந்து போனார். தாமிரபரணி /பொருநை ஆற்றுப் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார் என்றும் காவல்துறையின் அடக்குமுறைக்குப் பயந்து அவரே கீழே குதித்து இறந்து போனார் என்றும் இருவிதமான கருத்துக்கள் அப்போது நிலவின.

மாணவர்களுக்கு ஆதரவான அடையாள வேலைநிறுத்தம் அவன் படித்த பள்ளியிலும் நடைபெற்றது. உயர்வகுப்புகளில் படித்த சில மாணவர்களுக்கு போராட்டம் ஒரே நாளில் முடிவடைவதில் விருப்பம் இல்லை. எனவே மாணவர் சங்க தேர்தல் உள்ளிட்ட கோரிக்கைகளைப் பள்ளி கால்பந்து மைதானத்தில் வைத்து திரட்டிக் கொண்டிருந்தனர்.

தற்செயலாக அங்கே போன அவனிடம் ஏதாவது பிரச்னை இருக்காப்பா என்று கேட்டார்கள். அவன் ஆம் என்றான். அவர்கள் வியப்புக்குள்ளானார்கள். ஏனென்றால் அவன் வாத்தியார் பையன். அவன் போராட்ட மாணவர்களுடன் சேர்ந்து காட்சி அளிப்பதே சிக்கல். அவனுக்கு அதெல்லாம் தெரியாது.

பாடத்தில் உள்ள கேள்விகளைப் படித்து ஒப்பித்துவிட்டுத் தான் நண்பகல் சாப்பாட்டுக்குப் போக வேண்டும் என்று வகுப்பு ஆசிரியை ஒரு சட்டம் போட்டிருந்தார். அவனுக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லைதான். வகுப்பு நேரம் முடிவதற்குள்ளேயே அவன் படித்து மனப்பாடம் செய்து யாரிடம் ஒப்பிக்க வேண்டுமோ ஒப்பித்துவிடுவான். இருந்தாலும் சக மாணவர்கள் சாப்பிடப் போக முடியாமல் புத்தகங்களுடன் அல்லாடியது அவனுக்குப் பிடிக்கவில்லை.

எனவே அது போன்று ஆசிரியர்கள் மாணவர்களைச் சித்திரவதை செய்யக் கூடாது என்று அவன் கோரிக்கை எழுப்பினான். அது கோரிக்கைப் பட்டியலில் எழுதப்பட்டது.

அது என்ன ஆனது போராட்டம் என்ன ஆனது என்பது முக்கியமில்லை. ஆனால் அவன்தான் இந்தக் கோரிக்கையை எழுப்பியது என்பது வெளியில் தெரிந்து விட்டது. அன்றிலிருந்து அந்த ஆசிரியை வகுப்புக்கு வந்தால் அவனைத் திட்டி நொறுக்குவார். அவரும் அழுவார். அவனும் அழுவான். அந்த வருடம் முடியும் வரை இது தொடர்ந்தது. “நீ என்னிக்காவது சாப்பிடப் போகாமல் இருந்திருக்கியா? இவ்வளவுக்கும் உங்க அப்பாவும் ஆசிரியர். நீயே கோரிக்கை எழுதிக் கொடுக்கிறாயா? எனக்கு எதிராகக் கோரிக்கை எழுதிய உன் கை அழுகிப் போகும்”

ஆசிரியர் சாபமாச்சே பலித்து விடுமோ என்று அவனுக்கு பயம். அடிக்கடி வலது கையில் ஏதேனும் புண் வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்வான். அதிகாரத்துக்கு மாற்றான கருத்துக்கு என்ன பின்விளைவு என்பதைப் பின்னாளில் இந்த சம்பவத்தின் பின்னணியில் அவன் நினைத்துப் பார்ப்பதுண்டு. தனது பிரச்னைகளைச் சொல்ல முடியாதவர்களுக்காக குரல் கொடுக்கும் பழக்கம் அன்றுதான் அவனுள் விதையாக விழுந்திருக்கும் போலிருக்கிறது.

1975-76. பதினோராம் வகுப்பு. அன்று வகுப்புத் தேர்வு. அதற்கு முந்தைய நாள் திருக்கார்த்திகை.

மாணவர்கள் டயர் எரிக்கும் திருவிழா. நிறைய பேர் தேர்வுக்குப் படிக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. திடீரென்று பார்த்தால் படித்தவன் படிக்காதவன் அனைவரும் வகுப்பைப் புறக்கணித்து மைதானத்தில் போய் அமர்ந்தனர்.

அவனது அப்பாதான் மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வந்தார். பிரச்னை என்ன என்று அறிந்து கொண்டார். இதெல்லாம் ஒரு காரணமாடா ஸ்டிரைக்குக்கு? வகுப்புக்கு போங்கடா , இன்றைக்கு தேர்வு இருக்காது. நாளைக்காவது படிச்சுட்டு வந்திடுங்க..இது ஒரு ஸ்டிரைக்..இதை ஒடுக்க எமெர்ஜென்சியைப் பயன்படுத்தி போலீஸில் புகாராம்.. ஜெயிலாம். விவரம் தெரியாம பண்ற பசங்களை ஜெயில்ல போடத் துடிக்கற வாத்தியார்கள்..”

அவனது அப்பா வந்து பேசியவுடன் மாணவர்கள் வகுப்புக்குத் திரும்பியது ஆசிரியர்கள் நடுவில் அவருக்கு வேறு பிரச்னைகளைக் கொடுத்தது என்பது வேறு விஷயம்.

ஊரில் இருந்து 11 கி.மீ தூரத்தில் இருந்த கல்லூரிக்கு புகுமுக வகுப்பு சேர்க்கைக்காகப் போயிருந்தான். முதல்வர் அறை. அவர் எதிரில் அவன். மதிப்பெண்கள் 80.5%.. ஒழுக்கச் சான்றிதழில் மிகவும் பிரமாதம் என்று குறிப்பு. விண்ணப்பத்தைப் பார்த்தார். மாணவரின் பெயரைப் பார்த்தார். அவனைப் பார்த்தார்.

அடுத்து தந்தையின் பெயரைப் பார்த்தார். எல்லாவற்றையும் அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். “அப்பாவைப் பார்த்து நான் பேசிய பிறகுதான் உன் அட்மிஷன் பத்தி நான் யோசிக்க முடியும்” என்று அனுப்பி விட்டார். அப்பாவுக்குப் பிடித்த – அவரிடம் படித்த மாணவர்கள் அந்தக் கல்லூரியில் சில போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியிருந்தார்கள்.

எப்படியோ அதே கல்லூரியில் புகுமுக வகுப்புக்கு சேர்ந்து ஒன்றுபட்டிருந்த மதுரை பல்கலைக்கழகத்தின் பூப்பந்து அணியில் தேர்வு செய்யப்பட்டான். 1976-77 காலம் என்பதால் அவசரநிலை காரணமாக எந்தப் போராட்டமும் கல்லூரியில் நடைபெறவில்லை. அவன் பிழைத்தான். கல்லூரி முதல்வருக்கு அவன் மீது நிறைய அன்பு.

பட்டப்படிப்புக்கு வந்து சேருமாறு அழைத்தார். அவன் போகவில்லை. புகுமுக வகுப்பு சேர்க்கையின்போது முதல்வர் நடந்து கொண்டது அவனைப் பாதித்து இருந்தது. நமது நடத்தை மட்டும் அல்ல மற்றவர்களின் பார்வை வேறுபட்டால் கூட முரண்பாடுகள் உருவாகும் என்று புரிந்து கொண்டான்.

அடுத்து பட்டப்படிப்புக்காக சேர்ந்த கல்லூரியில் அவன் மாணவர் பேரவைச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 1977 ஏப்ரல் முதல் இந்திரா காந்தியின் அவசரநிலைக்குப் பிறகு வந்த ஜனதா அரசாங்க காலத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் எழுச்சி இருந்தது. ஜனநாயகத்தின் மீது மிகுந்த ஈர்ப்பு வந்தது.

படிப்பில் குறைந்தது 75% மதிப்பெண்கள். விளையாட்டில் பல்கலைக்கழக பூப்பந்து அணியில் பிரதிநிதித்துவம். மாணவர் பேரவைச் செயலராக போராட்டங்கள். நன்றாகப் படிப்பவர்களும் விளையாட்டு வீரர்களும் யூனியன் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்றும் மாணவர் யூனியன் தலைவர்கள் ரவுடித்தனம் கொண்ட மாணவர்கள் என்றும் இருந்த பரவலான நம்பிக்கையில் அவன் கீறலை உருவாக்கினான்.

மதுரைப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டம் நடத்தி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது பல்கலைக்கழகத் தேர்வுகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினான். பல்கலைக் கழகத் தேர்வு எழுதாமல் வந்ததற்காக முதன்முறையாக அப்பா அவனைக் கடிந்து கொண்டார். பல்கலைக்கழகம் மறுதேர்வு நடத்தாவிட்டால் அவனுக்கு “அரியர்ஸ்” என்று வரலாறு குறித்துக் கொள்ளும் என்று அவர் வருத்தப்பட்டார்.

ஆனால் தங்களுக்காகப் போராடிய மாணவர்களை மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கைவிடவில்லை. மறு தேர்வு கோரிக்கையை எழுப்பி வென்றது. பல்வேறு போராட்டங்களுடன் “அரியர்ஸ்” இல்லாமல் பட்டப்படிப்பு முடிவடைந்தது.

அதே கல்லூரியில் அவனுக்கு பட்ட மேற்படிப்புக்கு பல்கலைக்கழகம் இடம் ஒதுக்கியும் கல்லூரி நிர்வாகம் இடம் கொடுக்க மறுத்தது. “எங்கள் கல்லூரியில் தான் படிப்பேன் என்று வலியுறுத்தாதீர்கள். நாங்களே உங்கள் பையனுக்கு வேறு நல்ல கல்லூரியில் இடம் பெற்றுத் தருகிறோம்” என்று அப்பாவிடம் சமாதானம் பேச வந்தார்கள். அப்பா மறுத்துவிட்டார்.

“அவன் மோசமான பையன் என்று நீங்கள் இடம் கொடுக்க மறுக்கிறீர்கள். நான் ஓர் ஆசிரியன். நீங்கள் இடம் மறுப்பதால் அவன் எந்தக் கல்வி நிறுவனத்திலும் படிப்பதற்கு தகுதி இல்லாதவன் என்று நான் புரிந்து கொள்கிறேன். இனி அவனை நான் எந்தக் கல்லூரியிலும் படிக்க வைப்பதாகவும் இல்லை. உங்கள் கல்லூரியில்தான் இடம் வேண்டும் என்று பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து வலியுறுத்தவும் போவதில்லை. அவன் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறி அனுப்பி விட்டார்.

அப்பா மதுரையில் ஓர் ஆடிட்டரிடம் சி.ஏ. படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அவன் அதற்குள் கிடைத்த டெலிபோன் ஆபரேட்டர் வேலைக்குச் செல்வதாக முடிவெடுத்தான்.

பிறகு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வேலைக்கான உத்தரவு வந்தது. அந்தக் கிளையில் போய்ச் சேர்ந்த முதல் நாளே ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கு விண்ணப்பம் கொடுங்கள் என்று கேட்டான். அங்கிருந்த அனைவரும் அவனை ஒருமாதிரியாகப் பார்த்தனர். அன்று தொடங்கி 13 வருடங்கள் ஊழியர் சங்கத்தில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தான்.

அதன் பின் பதவி உயர்வு பெற்று உதவி மேலாளர் ஆனபிறகு சங்க ஈடுபாடு குறைந்தது. விட்டகுறை தொட்ட குறையாகவே சங்கத் தொடர்பு இருந்தது. அதிகாரியான ஐந்து வருடங்களில் விருப்ப ஓய்வு பெற்று ஊடகங்களில் பணிபுரிந்து வருகிறான்.

ஆனால் இன்று அவன் எந்தப் பத்திரிகையாளர் சங்கத்திலும் உறுப்பினர் கூட இல்லை.

11 Comments:

At 12:26 PM, Blogger சித்தன் said...

"சங்க"கால சேதிசொல்ல அதிக ஞாபகசக்தி வேண்டும் அதிலும் ஈடுபாட்டுடன் சொல்ல தனித்திறன் வேண்டும்! இருப்பினும் இரத்தத்தில் ஊறிய சங்க மின்றி எப்படி உங்களால்
தூங்கமுடிகிறது?

 
At 1:18 PM, Blogger சுதர்சன் said...

//ஆனால் இன்று அவன் எந்தப் பத்திரிகையாளர் சங்கத்திலும் உறுப்பினர் கூட இல்லை.//

??

 
At 1:30 PM, Blogger ராம்கி said...

சித்தன், சுதர்சன்:
ஆர்வம் அதிகம் இல்லை. இதற்கு மேல் விரிவான விளக்கம் தருவது இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறேன்.

 
At 7:51 PM, Blogger Dharumi said...

கேட்க நினைத்ததை மற்றவர்கள் கேட்க நீங்களும் பதில் சொல்லி விட்டீர்கள்.

 
At 9:29 PM, Blogger தாணு said...

நயினார்-கணபதி போன்றோர்களால் ராம்கி முதற்கொண்டு அனைத்து ஆறுமுகநேரி பசங்களுக்கும் திருச்செந்தூர் கல்லூரி `தடா' போட்டடு. சக்கரம் சுழல்கிறது. ராம்கி போன்றோர்களின் உபயத்தால் தூத்துக்குடி கல்லூரியில் ஆறுமுகநேரி பசங்களுக்கு அனுமதி கட்டுப்படுத்டப்பட்டது.முன் ஏர் போன வழியில் தானே பின் ஏர் போகும். ஆனாலும் நம்மூர் பசங்களுக்கு திமிர் கொஞ்சம் ஜாஸ்திதான். பஸ்ஸையே கடத்துறது, புகைவண்டியை ரிவர்ஸ் எடுக்க வைக்கிறது- இன்னும் திரை மறைவில் எத்தனையோ?
டேனியல் பியானோ பரீட்சைக்காக ரெண்டு நாள் ஏற்காடு போயிட்டோம். அதான்,முந்தைய பதிவுக்கு பின்னூட்டமிட முடியலை.

அப்போ திருநெல்வேலியில் `துள்ளித் திரிந்த காலம்' எந்த சங்க காலத்தைச் சேர்ந்தது?-இடைச் சங்கமா?

 
At 10:29 AM, Blogger ராம்கி said...

தருமி:
உங்கள் MUTA 1977-78 போராட்டத்துக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் நினைவிருக்கிறதா?

 
At 10:34 AM, Blogger ராம்கி said...

தாணு:
விட்டால் எனது பதிவை நீங்களே எழுதிவிடுவீர்கள் போலிருக்கிறது:-)

 
At 11:26 AM, Blogger தாணு said...

அதனால்தான் அடுத்த பதிவு அரைவேக்காட்டுத்தனமாக ஆகிவிட்டதா?

 
At 7:04 PM, Blogger ENNAR said...

அப்பொழுது தானே திருச்சி கிளைவ் விடுதியில் காவல்துறையினர் நுளைந்து தடியடி நடத்தினர், சிதம்பரத்தில் மாணவனை (உதயகுமார் என நினைக்கிறேன்)அடித்து தண்ணீரில் தூக்கிப் போட்டிருந்தனர்.

 
At 7:45 PM, Blogger ராம்கி said...

என்னார்:
கிளைவ் விடுதி சம்பவம் சரி..உதயகுமார் இன்னும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் என்று நினைக்கிறேன்.

 
At 7:34 AM, Blogger ENNAR said...

கருணாநிதி டாக்டர் பட்டம் பெற அண்ணமலை பல்கலைகழகத்திற்கு வரும்போது எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தில். கொல்லப்பட்டார். அம்மாண வனின் தந்தையே இது தனது மகன் இல்லை யென சொல்லவும் வைத்தனர் அன்றை ஆட்சியாளர்கள்.

 

Post a Comment

<< Home