Tuesday, November 01, 2005

இந்தத் தீபாவளி அசினுக்கு கொண்டாட்டமா?

"திங்கள் பிறந்தாலும் தீபம் ஒளிர்ந்தாலும் ….."

இன்று இங்கு தீபாவளி.

அதாவது தீபாவளிக்கான அரசு விடுமுறை.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒருவேளை கடந்த சனி அல்லது ஞாயிறு அன்று தீபாவளி கொண்டாடியிருக்கலாம். அல்லது வரும் வார இறுதியில் கொண்டாடலாம். ஏனெனில் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை அவசியம் இல்லையா?

இங்கு சென்னையில் இன்று தீபாவளி கொண்டாடப்படுவதால் இன்று அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி அன்று அவசியம் ஒரு பதிவு போடும் வாய்ப்பு கிட்டியதால், அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்கிறேன். இல்லையென்றால் தனியாக இதற்காக ஒரு பதிவு போட்டிருப்பேனா என்பது சந்தேகமே.

நேற்றே பல பதிவுகள் தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லி வந்திருந்தன. அவற்றில் முகமூடியின் பதிவு அப்படியே பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்றது. இருந்தும் தீபாவளி தொடர்பாக நானும் ஒரு பதிவு போடுகிறேன்.

பெரும்பான்மை மக்கள் நம்பும் சில விஷயங்களில் இருந்து மாறுபடும்போது நிறைய கேள்விகளை எதிர்நோக்க வேண்டியதிருக்கிறது. அதில் ஒன்று விழாக் கொண்டாட்டங்கள்.

விழாக்கள் மூலம் நாம் விழாதிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு எனக்கு கல்லூரிப் பருவத்தில் வந்தது.

தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிய காலம் எல்லாம் பள்ளிப் பருவத்துடன் நிறைவடைந்தது.

அப்பாவின் பட்டாசு பட்ஜெட் 20 ரூபாய்தான். அதற்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று 20 முறை பட்டியல் போடுவதுதான் தீபாவளியின் கொண்டாட்டமே.

அந்த சமயத்தில் அண்ணன் இதில் எல்லாம் ஆர்வம் காட்டாமல் இருந்தது ஏன் என்று எனக்குள் கேள்வி எழுந்ததே இல்லை.

ஆனாலும் மத்தாப்பு வகையறாக்களை காலை விடிவதற்கு முன் போடுமாறும் ஒலி எழுப்பும் வெடிகளை விடிந்த பிறகு வெடித்துக் கொள்ளலாம் என்றும் தம்பி தங்கைகளை அண்ணன் நெறிப்படுத்துவார்.

நாங்கள் குடியிருந்த வரிசையில் நான்கு வீடுகள். அவற்றில் இரண்டு வீடுகளில் பெந்தகோஸ்த் பிரிவு கிறித்தவக் குடும்பங்கள் இருந்தன. அதிகாலையில் அவர்களது தூக்கத்தைக் கலைப்பது முறையல்ல என்பதே அவரது பார்வையாக இருந்திருக்கக் கூடும். அவர்களது பிரார்த்தனை தெருவையே தூங்க விடாது என்பது வேறு செய்தி!

ஒலி மாசு போன்ற சொற்களை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. இந்த நடைமுறை 30 வருடங்கள் கழித்து உச்சநீதிமன்ற உத்தரவாக வந்த பிறகுதான் இங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதற்கும் கூட ராம. கோபாலன்கள் எதிர்ப்பு!

அப்பாவும்கூட பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகவே கொண்டாட்டங்களை அனுமதித்தார் என்பது எனக்குப் புரிய பல வருடங்கள் ஆயின. இருந்தும் தீபாவளி அன்று அதிகாலை எழுவதும் குழந்தைகளைக் குளிக்கச் செய்து புத்தாடை கொடுத்து இனிப்புகளை வழங்கும் பணிகளில் அம்மா சலித்துக் கொண்டதே இல்லை.

தீபாவளியன்று சிறுவர்கள் மத்தியில் ஒரு போட்டி இருக்கும். ஒவ்வொருவர் வீட்டு முன்புறத்திலும் பட்டாசு வெடித்துச் சிதறிய காகிதக் குப்பை எவ்வளவு இருக்கிறதென்று கண்களால் ஒரு ஆய்வு நடக்கும். மற்ற பையன்கள் நகர் உலா வருமுன் பக்கத்து வீட்டு குப்பைகளையும் சேகரித்து வீட்டு முன் சிலர் குவிப்பதுண்டு. ஒரு வீட்டின் முன் குவிந்து கிடக்கும் காகிதக் குப்பைகள் அந்த வீட்டின் பொருளாதார நிலையை படம் பிடித்துக் காட்டும்.

எங்கள் ஊரில் "தாரங்கதாரா கெமிக்கல் வொர்க்ஸ்" என்ற பெயரில் ஒரு ரசாயனத் தொழிற்சாலை இருந்தது. அங்கு போனஸும் பட்டாசு பார்சலும் தொழிலாளர்களுக்குக் கொடுப்பார்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகளே எனக்கு தீபாவளியன்று பணக்காரர்களாகத் தோன்றும்.

புகுமுக வகுப்புக்குப் போகும்போதே நரகாசுரன் வதைக் கதையில் பிடிப்பு இல்லாமல் போனது. "திங்கள் பிறந்தாலும் தீபம் ஒளிர்ந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே" என்ற சினிமாப் பாடல் வரிகள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

தீபாவளி படையெடுத்து வந்தோரின் பண்டிகை என்றும் அறுவடைத் திருநாளே நமது பண்டிகை என்றும் சிலர் வாதிடுவார்கள். ஆனால் அதுவும் கூட நிலவுடைமையாளர்களுடைய திருநாளே, மக்கள் விழா அல்ல என்ற கருத்து அந்த சினிமா பாடல்களின் வரிகளில் புரிந்தது.

இந்தத் திருநாட்களின் பின்னணி வரலாறு எதுவாக இருப்பினும் அதற்காக கடன் வாங்கியோ அல்லது இருக்கும் சேமிப்பைக் கரைத்தோ கொண்டாட்டங்கள் தேவையா என்ற கேள்வியே மனதில் எஞ்சி நிற்கத் தொடங்கியது.

திருவிழாக் கொண்டாட்டங்களில் மக்கள் சேமிப்பு கரைகிறது. அல்லது கடன் அதிகரிக்கிறது. கொண்டாட்டங்களுக்கு அவசியம் என்று உணரப்படும் பொருட்களை விற்பவர்களிடமும் அவற்றைத் தயாரிப்பவர்களிடமும் லாபம் என்ற பெயரில் பணம் குவிகிறது.

உழைக்கும் மக்களுக்கு போனஸ் ஏன் தீபாவளி நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்ற கேள்வி மனதைக் கவர்ந்தது. தீபாவளிக்கு முன்னதாக போனஸ் கொடுத்து, அந்தப் பணம் முழுவதும் இந்தக் கொண்டாட்டங்களிலேயே செலவழிக்கப் படுவதும் 'ஒரு விஷ வட்டம்' தானோ என்று கேள்வி எழும். இருப்பவர்களிடமே பணம் மீண்டும் சென்று சேர்வதற்கான ஏற்பாடோ என்றெல்லாம் நண்பர்களுக்கு இடையில் விவாதிப்பதுண்டு.

தீபாவளி கொண்டாடும் மக்களில் சிறுபான்மையினரே அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டப்பட்டு சட்டபூர்வமாக போனஸ் பெறுபவர்கள். மற்றவர்களில் ஓரளவு வசதி உடையவர்கள் தவிர பிறர் தீபாவளிக்கு முந்தைய நாளில் பணம் புரட்டி புத்தாடை , பட்டாசு வாங்க அன்றிரவு பரபரப்பாக அலைபவர்களே. தீபாவளிக்கு முந்தைய இரவு இவர்களைக் கடைத்தெருவில் பார்க்கும்போது யாரோ அவர்களை வழிப்பறி செய்வது போலவும் அதை மீதி எல்லோரும் வேடிக்கை பார்ப்பது போலவும் தோன்றும்.

நம்மைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு நடுவில் ஒருவர் கொண்டாடாமல் இருப்பது சிறிது கடினம்தான்.

அன்பின் வெளிப்பாடாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் செய்த பலகாரத்தைக் கொண்டு வந்து தருவதுண்டு. அதை முற்றிலுமாக மறுப்பது மிகவும் கடினம்.

நானும் எனது மனைவியும் மட்டும் தனியாக இருந்த ஆரம்ப கட்டங்களில் "நாங்கள் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை" என்று சொல்லி அவர்கள் கொடுக்கும் இனிப்புகளில் ஒன்றை மரியாதைக்காக எடுத்துக் கொண்டு மனம் புண்படாதபடி அவர்கள் தரும் இனிப்புப் பாத்திரத்தை மறுக்க முயல்வதுண்டு.

ஆனால் அதில் அவர்கள் மனம் வருந்துவதை அறிந்து பிறகு அப்படிச் செய்வதில்லை. ஓரிரு வருடங்கள் அவர்கள் தருவதை மட்டும் வாங்கிக் கொண்டு திருப்பி ஏதும் அவர்களுக்குத் தருவதில்லை என்றிருந்தோம்.

பிறகு காலியான பாத்திரங்களைத் திருப்பித் தருவது மரியாதை இல்லை என்ற எண்ணம் வந்தது. நாமாக யார் வீடுகளுக்கும் சென்று கொடுப்பதில்லை, நம் வீட்டிற்கு வந்து தருபவர்களுக்கு மட்டும் பதில் மரியாதை செய்யும் விதத்தில் அவர்கள் தரும் பாத்திரத்திலேயே நாமும் இனிப்புகளைப் போட்டுக் கொடுப்பது என்ற முடிவு எடுக்கப் பட்டது. இனிப்புகள் வீட்டில் தயாரிக்கப்பட்டன. சில வருடங்கள் கடையில் வாங்கப்பட்டன.

இதற்கு இந்த மனமாற்றம் காரணமா அல்லது இனிப்பு சாப்பிடும் அளவு குழந்தை வளர்ந்தது காரணமா என்பது விவாதத்திற்குரியது தான்.

பதில் மரியாதை என்பதை இப்போதெல்லாம் சின்னக் குழந்தைகள்கூட எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. சின்னக் குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். குழந்தையுடன் படிக்கும் / பழகும் பிற குழந்தைகள் கையில் பரிசுப் பொருட்களுடன் வந்து வாழ்த்துகின்றன. அப்படி வரும் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடும் குழந்தை "பதில் பரிசு" (Return Gift) கொடுக்க வேண்டுமாம். அப்படி கொடுக்கவில்லை என்றால் அந்தக் குழந்தைக்கு நாகரிக நற்பண்புகள் இல்லை என்று பிற குழந்தைகள் கருதுமாம்.

சமீபகாலங்களில் திருமண வீடுகளில் இந்த பதில் பரிசு வழங்குதல் ஒரு மரபாகிக் கொண்டு வருகிறது. தாம்பூலப் பைகளில் அல்லது பைகளுடன் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் !

வீட்டின் அருகில் இருக்கும் உடைகளைத் தேய்த்துத் தருபவர், நமது அன்றாடப் பணிகளில் உதவி செய்யும் சில உதிரித் தொழிலாளர்கள் என்று பலர் "தீபாவளிக் காசு" கேட்க வருவார்கள்.

அவர்களிடம் நான் நரகாசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க முடிவதில்லை. இன்னும் இங்கு கொல்லப்படாத பல நரகாசுரன்கள் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருப்பதில்லை.

அதற்காக அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்ற கதையைக் கேட்காமல் மறுக்கவும் முடியவில்லை.

அதேசமயம் மத்திய மாநில அரசின் சேவைத்துறையின் ஊழியர்கள் சிலரும் கையில் ஒரு நோட்டைத் தூக்கிக் கொண்டு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

இப்போதெல்லாம் தீபாவளிக் கொண்டாட்டம் என்பது என்ன? டி.வி.நிகழ்ச்சிகள் தான். காலையில் இருந்து நள்ளிரவு வரை ஜோதிகா, அசின், சிநேகா, விஜய், விக்ரம்,சூர்யா போன்றவர்கள் தரும் பொழுதுபோக்குதான்.

இனிப்புகள் திகட்டலாம்; பட்டாசுப் புகை மூச்சு முட்டலாம்; ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நமது வீட்டில் யாராவது ஒருவரைச் சுண்டியிழுத்து ஒரு பக்கம் ஓடிக் கொண்டே இருக்கும்.

அதன்படி இன்று அசின் தீபாவளி. "சிவகாசி" விஜய்யுடன். "மஜா" விக்ரமுடன்.

இந்தத் தீபாவளி அசினுக்குத் தான் கொண்டாட்டம்!

வருமானவரித்துறை ரெய்டில் என்னென்ன அசின் பறிகொடுத்தாரோ தெரியவில்லை. ஒருவேளை அதிகம் இழந்திருந்தால் இந்த தீபாவளி அவருக்கும் கூட கொண்டாட்டமில்லைதான்.

பின் யாருக்குத் தான் கொண்டாட்டம்?

பின்குறிப்பு:
இந்தப் பதிவின் தலைப்புக்கு என்னை மன்னிக்கவும்!

11 Comments:

At 10:31 AM, Blogger துளசி கோபால் said...

நல்ல அலசல் ராம்கி.

எங்கும் எதிலும் எப்பவும் சினிமான்னு ஆனப்பிறகு 'தலைப்பு'க்காக கோச்சுக்க முடியுமா?:-)))

 
At 10:38 AM, Blogger ராம்கி said...

நன்றி துளசி கோபால்.

 
At 10:51 AM, Blogger Shawn T Lippert said...

Thank you for the informative blog
Here Is some additional Cell phone Screensaver resources for most Cell Phones
Free Cell Phone ScreenSavers

 
At 5:47 PM, Blogger Ramya Nageswaran said...

ம்...வெளிநாட்டுலே வாழற இந்தியர்களுக்கு பண்டிகைகள் வேறு அர்த்தம் தருகின்றன. Zurichக்கில் இருந்த ஐந்து வருடங்களில் 'இப்படி எங்கேயோ குளிரிலே உட்கார்ந்துண்டிருக்கோமே? இப்ப வெடி வெடிச்சிருப்பாங்க..அம்மா இந்த பலகாரம் பண்ணியிருப்பாங்க' போன்ற நினைவுகள் தான் மிச்சம். நாம் எதற்காக நம்மோட வேர்களை விட்டுட்டு இப்படி வாழறோம்ங்கிற சுய பரிசோதனைகள் செய்ய பண்டிகைகள் உதவின. ஒரு intense lonelinessஐ அப்பொழுது உணர்ந்திருக்கிறேன்.

 
At 5:59 PM, Blogger ராம்கி said...

ரம்யா:
//ஒரு intense lonelinessஐ அப்பொழுது உணர்ந்திருக்கிறேன்.//
இப்போது சிங்கப்பூரில் அந்த உணர்வு இல்லைதானே? காரணம் என்ன?

 
At 6:43 PM, Blogger Ramya Nageswaran said...

சிங்கப்பூரில் இது ஒரு பெரிய பண்டிகை. அரசு விடுமுறை. சென்னைக்கு அருகே இருப்பதால் நண்பர்கள், உறவினர்கள் அடிக்கடி வருவார்கள் (இப்பொழுது கூட என் பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள்). நாங்கள் இருக்கும் குடியிருப்பில் 25 இந்தியக் குடும்பங்கள். இப்பொழுது தான் அனைவருடன் சேர்ந்து மத்தாப்புகள் (அதற்கு மட்டும் தான் அனுமதி!)ஏற்றி விட்டு வீட்டிற்குள் நுழைகிறோம்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியர்களையும், அவர்களின் கலாசாரத்தையும் officialஆக அங்கீகரிக்கும் நாடு. தட்பவெப்ப நிலையும், இந்தியாவின் அருகாமையும் மேலும் வலு சேர்க்கின்றன. அதனால் தான் தனிமையான உணர்வு இல்லை.

 
At 9:46 PM, Blogger தாணு said...

ராம்கியின் அலசலைவிட முகமூடியின் சுட்டி ரொம்ப எதார்த்தமாக இருந்தது. சந்தைக்கடை வீட்டின் பிரதிபலிப்பு அதில் அதிகம். பொருளாதார, சமுதாய அலசல்களை சில விஷயங்களுடன் குழப்பிப் பார்க்க மனசு விரும்புவதில்லை. அதில் ஆறுமுகநேரி தீபாவளியும், பொங்கலும் அடக்கம். இப்போ போனால்கூட பட்டசு பங்கு போட்டுத் தரும் அண்ணன், கம்யூனிசம் பேசினாலும் கருத்துடன் புதுத் துணிகளுக்கு மஞ்சள் தடவும் அப்பா, பல்விளக்காமல் பலகாரத்தைத் தொடக்கூடாதென்று திட்டும் அம்மா, கோஷ்டியாக ஒவ்வொரு நண்பர் வீடாக விஜயம் செய்யும் உங்கள் நண்பர் கூட்டம்- இதிலெல்லாமே ஒரு சுகம், தோழமை, அன்பு உண்டு. அந்த இன்பம் என் பிள்ளைகளுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் இடைச்செருகலாக எப்போதும் உண்டு. அருகிலிருந்தாலும்கூட, ரம்யா சொன்ன intense lonliness குழந்தைப்பருவ நினைவுகளைத் தொலைக்க முடியாத பலருக்கு எப்போதும் உண்டு.
தீபாவளிக்கு வாழ்த்துவது மட்டும்தான் கொஞ்சம் குறைந்திருக்கிறது

 
At 10:10 PM, Blogger ராம்கி said...

ரம்யா:
இந்த பதிலை எதிர்பார்த்துத் தான் கேட்டேன். நன்றி

 
At 10:12 PM, Blogger ராம்கி said...

தாணு:
வருகைக்கும் மனம் திறந்து கருத்து கூறியதற்கும் நன்றி

 
At 10:26 PM, Blogger தாணு said...

போன பதிவளவு இந்த பதிவில் தெளிவில்லை. வடக்காலேயும் தெக்காலேயும் ஏக சுற்றல். சுருங்கச் சொல்லி நிறைய புரியவைத்தால்தான் ராம்கியின் தனித்துவம் சிறப்பாக இருக்கும்.
இந்த வார நட்சத்திரமாமே? இப்போதான் முந்தைய பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.

 
At 8:20 AM, Blogger ராம்கி said...

முற்றிலும் வீட்டில் பண்டிகையின் அடையாளங்கள் தெரியாமல் போகும் வரை வீட்டிற்குள் இருப்பவருக்குள் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். சக மனிதர்களின் மனம் புண்படக் கூடாது என்று படிப்படியாக நாம் செய்யும் சமரசங்கள் குறித்து பேசும்போது "செய் அல்லது செத்து மடி" "இது அல்லது அது"என்ற தெளிவு இருக்காது. மனித வாழ்க்கை இரு துருவங்களில் மடும் இல்லை. நடுவிலும் இருக்கிறது. அது சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.

 

Post a Comment

<< Home