Friday, August 27, 2010

நடக்கும்..ஆனா நடக்காது...

வன்முறையைக் கைவிட்டு அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்” என்று மத்திய அரசு சில காலமாகவே மாவோயிஸ்டுகளைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது. நம்முடைய 64-வது சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். அடுத்த நாள் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன்சிங்கும் மாவோயிஸ்டுகளை பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைத்தார். அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் பேசிய சில முதலமைச்சர்களும் இதே கருத்துக்கு முன்னுரிமை கொடுத்துப் பேசி இருந்தார்கள். இவர்கள் எல்லோருடைய பேச்சுக்களையும் ஊடகங்களில் பார்க்க முடிந்தது என்பது உண்மைதான். ஆனால் அதற்கும் சில நாட்களுக்கு முன்னால் மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி லால்காரில் நடத்திய பேரணியும் அங்கு அவர் விட்ட ’பேச்சுவார்த்தை’ அறைகூவலும் ஊடகங்களில் கூடுதல் பரபரப்புடன் வெளியிடப்பட்டன!

மமதா பானர்ஜியின் கோரிக்கைக்கு மட்டும் அல்ல, குடியரசுத் தலைவரும் பிரதமரும் விடுத்த வேண்டுகோளுக்கும் மாவோயிஸ்டுகள் பதில் சொல்லி இருக்கிறார்கள். அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜி குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு ஒரு ‘டேப்’ அனுப்பி இருந்தார். அதில் மூன்று மாத ‘போர் நிறுத்தம்’, பேச்சு வார்த்தை நடக்கும் போது இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய நபர் பற்றி எல்லாம் அவர் பேசி இருந்தார். மமதா பானர்ஜி அல்லது சுவாமி அக்னிவேஷ் பேச்சுவார்த்தைக்கு நடுவராக இருந்தால் நல்லது என்று அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாக ஊடகங்களில் வந்த செய்திகளில் இருந்து அறிய முடிகிறது. சுவாமி அக்னிவேஷ் பெயரை அவர்கள் முன்மொழிவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே கடந்த மே மாதம் சுவாமி அக்னிவேஷ் மூலம் பேச்சுவார்த்தைக்கான முயற்சி நடந்தது. கடந்த மே முதல் வாரத்தில் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து தந்தேவாதா வரை அவர் அமைதிக்கான ஊர்வலம் நடத்தி இருந்தார். அதை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பாராட்டி கடிதம் எழுதி இருந்தார். ’உங்கள் கருத்துக்களை நான் மதிக்கிறேன்; இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண நீங்கள் உதவ வேண்டும்’ என்றும் அவர் சுவாமி அக்னிவேஷிடம் தெரிவித்து இருந்தார்.

வன்முறையைக் கைவிடுவதாக மாவோயிஸ்டுகள் அறிவிக்க வேண்டும். அதன்பிறகு பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பேசி, மத்திய அரசு மாவோயிஸ்டுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். ஒரு குறிப்பிட்ட நாளில் இருந்து 72 மணிநேர போர்நிறுத்தம் தொடங்கட்டும். மாவோயிஸ்டுகள் அந்த அறிவிப்பில் உறுதியாக இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, ‘வன்முறை இல்லாத’ அந்த மூன்று நாட்களில் எப்போது வேண்டுமானாலும் நாம் பேச்சு வார்த்தையைத் தொடங்கலாம்” என்று அந்தக் கடிதத்தில் சிதம்பரம் சொல்லி இருந்தார். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் ரகசியமாக இருந்தால் நல்லது என்று உள்துறை அமைச்சர் அதில் குறிப்பிட்டிருந்தார். இருந்த போதிலும், அந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியானது!

அந்தக் கடிதத்தை மாவோயிஸ்டுகளிடம் சுவாமி அக்னிவேஷ் காட்டியிருப்பார் என்று தெரிகிறது. இதற்கு பதிலாக ஒரு கடிதத்தை மாவோயிஸ்டுகள் சுவாமி அக்னிவேஷிடம் கொடுத்தார்கள். ”போர்நிறுத்தம் இருதரப்பாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்ற பெயரில் துணைராணுவத்தினர் நாள்தோறும் அப்பாவி மக்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் அரசு போர்நிறுத்தம் பற்றிப் பேசினால் எப்படி நம்ப முடியும்? இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இரண்டு தரப்பும் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று அரசாங்கம் சொல்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? மாவோயிஸ்டுகள் வன்முறையாளர்கள் என்றும் அரசுத் தரப்பு அமைதிக்காக பாடுபடுகிறது என்றும் பொருளாகிறது. ஆனால், உண்மை இதற்கு மாறானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மீதும் அதன் முன்னணி அமைப்புகள் மீதும் விதித்திருக்கும் தடையை விலக்கிக் கொள்ள வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். துணைராணுவப் படையினர் மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் ‘நிபந்தனைகள்’ பட்டியல் நீண்டது.

கட்சியின் மத்தியக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஆசாத் அந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டிருந்தார். அடுத்த சில நாட்களில் ஆசாத் ‘என்கவுண்டரில்’ கொல்லப்பட்டார். பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளுக்கு அதனால் பெருமளவில் பின்னடைவு ஏற்பட்டதாக பிறகு சுவாமி அக்னிவேஷ் சொன்னார். இது நடந்து முடிந்து இன்னும் இரண்டு மாதங்கள் முடியவில்லை; இந்த இரண்டு மாதங்களில் அரசியல் சூழலில் ஏதேனும் மாற்றம் நடந்திருக்கிறதா? சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தாக்கப்பட்டதும் ஆசாத் ‘கொல்லப்பட்டதும்’ இரு தரப்புக்கும் இரண்டு முக்கியமான சம்பவங்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த சம்பவங்கள் இரண்டு தரப்பிலும் பெரிய மாற்றங்கள் எதையும் ஏற்படுத்திவிடவில்லை!

வன்முறையை மாவோயிஸ்டுகள் கைவிட வேண்டும் என்ற அரசு தரப்பு நிபந்தனையில் மாற்றம் இல்லை. மாவோயிஸ்டுகளுடைய நிபந்தனைகளிலும் மாற்றம் எதுவும் இல்லை. ஆசாத் ‘கொலை’ குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை புதிதாக சேர்ந்திருக்கிறது. நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை என்று இரண்டு தரப்பும் சொல்லிக் கொண்டிருந்தாலும் அது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. அரசுத் தரப்புக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை என்று ஒன்று நடந்தால், அது நிபந்தனைகளுடன் கூடியதாகவே இருக்க முடியும். ஆயுதப் புரட்சியின் மூலம் இந்திய அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்ற கொள்கையை மாவோயிஸ்டுகள் மாற்றிக் கொண்டார்களா? இல்லை; அரசை வன்முறை மூலம் தகர்த்தெறிவதே நோக்கம் என்று பிரகடனப்படுத்தியிருக்கும் மாவோயிஸ்டுகள் மீது இருக்கும் தடையை அரசு விலக்கிக் கொள்ளப் போகிறதா? நிச்சயம் இல்லை; சில மாநிலங்களின் சில மாவட்டங்களில் சட்டத்தின் ஆட்சி நடக்க வழியில்லாமல், மாவோயிஸ்டுகளின் ஆட்சி நடைபெறுவதை இந்திய அரசு பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறதா? எந்த ஒரு அரசும் அப்படிப் பொறுத்துக் கொண்டிருந்ததாக வரலாறு இல்லை.

அப்படி என்றால் இந்தப் பேச்சுவார்த்தை எதற்காக நடத்தப்படுகிறது? அடிப்படையான விஷயங்களில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு தரப்பும் எதைப் பற்றிப் பேசப் போகிறார்கள்? ஒருவேளை நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் இரண்டு தரப்பும் பேசுவதற்காக அமர்ந்தால் என்ன முடிவுகள் எட்டப்படும்? புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாவோயிஸ்டுகளின் ஒத்துழைப்பை அரசு கோரப் போகிறதா? மற்ற அரசியல் கட்சிகள் இந்த மாதிரி நேரங்களில் மக்களிடம் இருந்து விலகி இருப்பது ஏன்? ஆயுதங்களை வைத்திருப்பதாலும் ஆங்காங்கே துணை ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதாலும் மக்கள் பிரதிநிதிகளாக மாவோயிஸ்டுகளை அரசு பார்க்கிறதா? இப்படி ஏராளமான கேள்விகளுக்கு பதில்களைத் தேட வேண்டியிருக்கிறது.

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக பெரிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசுகள் போட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை செயல்படுத்த வரும்போது அந்தப் பகுதி மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது. மக்களிடம் இருந்து எழும் இந்த எதிர்ப்பை அடிப்படையாக வைத்து மாவோயிஸ்டுகள் உள்ளே வருகிறார்கள். அந்தப் பகுதிக்கான திட்டங்களை வகுக்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் அந்தப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்கிறார்கள்; அல்லது வழிகாட்டுகிறார்கள்; அல்லது போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார்கள். அந்தப் போராட்டத்தை அரசு ஒடுக்கும்போது பாதிக்கப்படும் மக்களோடு உடன் நிற்கிறார்கள். இதனால் ஒரு பிரிவு மக்களுடைய பார்வையில், மாவோயிஸ்டுகள் ‘ஆபத்பாந்தவனாக’ தெரிகிறார்கள்!

இந்த நிலை நீடிக்க வேண்டும் என்று எந்த அரசும் விரும்பாது. சட்டவிரோதமான செயல்களைத் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்காது. வன்செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்கும். அதேசமயம் பேச்சுவார்த்தைக்கான கதவுகளையும் அரசு திறக்கும். அல்லது பேச்சுவார்த்தை என்று பேசிக் கொண்டே மிகத் தீவிரமான நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகும். அதைப் போலவே தான் எதிர்தரப்பிலும் செயல்பாடு இருக்கும். ‘அரசின் ஒடுக்குமுறையால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் என்ற முறையில் அமைதியை நாங்கள் விரும்புகிறோம். பேச்சுவார்த்தைக்கு தயாராகிறோம்’ என்று சொல்வார்கள். அதேசமயம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது என்று அறிவிக்கும்போது, பலத்த தாக்குதல் நடத்துவதற்கான தயாரிப்பு வேலைகளிலும் இறங்கிக் கொண்டிருப்பார்கள். உலக அளவில் எல்லா இடங்களிலும் இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் நிலங்களைக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. கனிமச் சுரங்கமோ தொழிற்சாலையோ கட்டப்பட்டு தொழில் தொடங்க வேண்டியிருக்கிறது. அந்த முயற்சிகளுக்கு, எதிர்ப்புகள் வந்தால், அந்த எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டியிருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை, சட்டத்தை மீறுபவர்களைத் தேடும் அதிரடி தேடுதல் வேட்டை, உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்படும் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று பல பெயர்களில் அரசு நடவடிக்கைகளில் இறங்குகிறது. இதையெல்லாம் ‘அடக்குமுறை’ என்று உலகம் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக பேச்சுவார்த்தைக்கான கதவையும் திறந்து வைக்கிறது.

அதாவது, இரண்டு தரப்புமே ஆயுதங்களை விட பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மக்களை நம்பவைக்க முயல்கின்றன. பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி அடைந்ததற்கு எதிர்தரப்பே காரணம் என்று மக்களிடம் பிரசாரம் செய்யும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. “மாவோயிஸ்டுகள் நிபந்தனைகளை விதிக்கிறார்கள்; நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தை என்ற அவர்களுடைய பதிலை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று மத்திய அரசு ஏற்கனவே சொல்லிவிட்டது. உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை இதைத் தெளிவாக விளக்கிவிட்டார். இருந்தாலும் அரசியல் மட்டத்தில் இன்னும் சில மாதங்களுக்கு இந்த பேச்சு ஓடிக் கொண்டிருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்த விஷயத்தை மமதா பானர்ஜி உயிர்ப்புடன் வைத்திருப்பார். பேச்சுவார்த்தை என்ற வகையில் ஏதாவது ஒன்றைத் தொடங்கி விடுவதன் மூலம் மாவோயிஸ்டுகளுக்கு ஒரு சட்ட அங்கீகாரம் கிடைக்கிறது. அதற்குப் பிறகு ”உள்நாட்டு அச்சுறுத்தல் என்று நீங்கள் சொல்லும் மாவோயிஸ்டுகளுடன் உங்கள் அமைச்சர் கூட்டு வைத்திருக்கிறாரே” என்று மார்க்சிஸ்டு கட்சி பிரதமரைக் கேட்க முடியாது. பலன் எதுவும் விளையப் போவதில்லை என்று நன்றாகத் தெரிந்தாலும், பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை அரங்கேற்ற மத்திய அரசு, மாவோயிஸ்டுகள், மமதா பானர்ஜி ஆகிய மூன்று தரப்பும் தயாராகின்றன. அதற்கான நிர்ப்பந்தம் தனித்தனியாக இருந்தாலும், மூன்று தரப்பும் ஒரு பொதுப் புள்ளியில் இணைகின்றன. அது என்ன? விரைவில் வர இருக்கும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட வேண்டும் என்பதே அது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 29.08.10

0 Comments:

Post a Comment

<< Home