Friday, August 27, 2010

தொலைதூரத்தில் வெளிச்சம்

ஒளிமயமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது; நம்முடைய கனவுகள் நனவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை” என்று யாராவது உங்களிடம் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நம் எல்லோருக்குமே அந்த வார்த்தைகள் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், எல்லோருக்கும் அவரவர் எதிர்காலம் பற்றிய சிந்தனை மனதின் ஒரு மூலையில் ஓடிக் கொண்டிருக்கும். போட்டிகள் நிறைந்த உலகத்தில் நம்முடைய இலக்குகளை எப்படி அடைவது என்ற கவலை அவ்வப்போது கவலை எட்டிப் பார்க்கும். இந்த மாதிரியான நிலையில் நாம் இருக்கும்போது நமக்கு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை யாராவது சொன்னால், இனம்புரியாத சந்தோஷம் நமக்குள் பரவும்.

யாராவது சொன்னாலே நமக்கு நம்பிக்கை வருகிறது. நாட்டின் பிரதமரே அப்படி ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைக்கும்படி பேசினால், நம்முடைய மகிழ்ச்சி இன்னும் பல மடங்கு அதிகமாகிறது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லியில் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அந்த பேச்சின் கடைசியில்தான் முதலில் சொல்லப்பட்ட நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை அவர் சொன்னார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம்முடைய அரசாங்கத்தின் அடுத்தடுத்த திட்டங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. சுதந்திர தினத்தின் போது மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றிப் பேசுவதை மாநிலத்தில் இருக்கும் மக்கள் ஆர்வத்துடன் கேட்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் முதல் சட்டமன்றத் தொடரின் முதல் நாள் சட்டமன்றத்தில் ஆளுநர் பேசும் பேச்சும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையும் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது; மாநிலத்தின் நிதியமைச்சர் சட்டமன்றத்திலும் மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கும் நிதிநிலை அறிக்கையும் அதேபோல் அனைவரையும் கவனிக்கச் செய்கிறது.

இந்த முக்கியமான நிகழ்வுகளில் பேசக் கூடியவர்கள் பிரமாதமான பேச்சாளர்களாக இருக்க வேண்டியதில்லை; அவர்களுடைய பேச்சு அல்லது உரை நம்மை வசீகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால், அந்த பேச்சில் அல்லது உரையில் சொல்லப்படும் விஷயங்களே நமக்கு முக்கியமாக இருக்கின்றன. அப்படித்தான் 63வது ஆண்டு நிறைவடைந்த 64 -வது சுதந்திரதினத்தில் நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் பேசிய பேச்சையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங் உணர்ச்சிகரமாக உரையாற்றக் கூடியவர் இல்லை; செங்கோட்டைக்கு நேரில் வந்த மக்களையும் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களையும் அவருடைய பேச்சு அசையவிடாமல் கட்டிப் போடுவதில்லை. அவருடைய கொள்கைகள் பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு நன்மை செய்யாது என்ற நம்புவோர் கூட, அவர் அடிப்படையில் நேர்மையானவர் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியதாகிறது.

அவர் சொல்வதைப் போல பெரும்பான்மையான இந்தியர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அவரால் உறுதிசெய்ய உதவுமா? அதற்கு அவருடைய தனிமனித நேர்மை மட்டுமே போதுமானதாக இருக்க முடியுமா? இது தொடர்பாக அவர் என்ன சொல்கிறார் பாருங்கள். “தொடர்ச்சியான வறுமையிலும் பசியிலும் நோயிலும் பெரும்பான்மையான மக்கள் இருந்து வருகிறார்கள். 2004-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, முற்போக்கான சமூகத் திட்டங்கள் மூலம் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். வளர்ச்சியின் பலன்கள் சாதாரண மனிதனையும் போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக பல திட்டங்களைக் கொண்டு வந்தோம்,” என்று பேசுகிறார். இந்த இடத்தில் அவரோடு வேறுபடுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் ஏழை மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அந்தத் திட்டங்கள் மட்டுமே போதும் என்ற முடிவில் அவர் இருப்பதாகத் தெரிகிறது. “இப்போது நம்முடைய இலக்குகளை அடைவதற்காக புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே கொண்டு வந்த திட்டங்களை ஊழல் இல்லாமலும் மக்களுடைய பணத்தில் முறைகேடுகள் செய்யாமலும் நிறைவேற்றினால் போதுமானது” என்பதே அவருடைய இன்றைய முடிவு. அதாவது அடுத்த மூன்றரை வருடங்களில் சாதாரண மக்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தெரியும்படி குறிப்பிடத்தக்க புதிய திட்டங்கள் எதையும் அரசு கொண்டு வராது என்று பிரதமர் அறிவித்து இருக்கிறார். மற்ற தலைவர்களைப் போல போலி நாடகங்களைப் போடாமல், அவர் ’பளிச்’ என்று உண்மையைச் சொல்லி விட்டார்!

வறுமை ஒழிப்புக்கு மன்மோகன்சிங் அரசாங்கம் ஏற்கனவே கொண்டு வந்த திட்டங்கள் மட்டும் போதுமானவையா? அந்தத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன? குடும்பத்தில் ஒருவருக்கு வருடத்துக்கு நூறு நாள் வேலையை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் பல மாநிலங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக அரசாங்கத்திடம் இருந்து இத்திட்டம் தொடர்பாக பெறப்படும் தகவல்கள் மகிழ்ச்சி தருவதாக இல்லை. நாட்டின் பல பகுதிகளிலும் இந்தத் திட்டம் தொடர்பாக தகவல் கேட்பவர்கள் காண்டிராக்டர்களிடம் ‘படும் பாட்டைப்’ பார்க்கும்போது அந்த முடிவுக்கே வர நேர்கிறது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம், உணவுப் பொருட்களின் பற்றாக்குறை எல்லாம் எளிய மக்களைப் பெரிய அளவில் பாதிக்கிறது என்பதைப் பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் இந்திய உணவுக் கழகத்தின் பல்வேறு கிடங்குகளில் ஆறு கோடியே இருபது லட்சம் டன் உணவு தானியங்கள் அழுகிப் போனதாக ஊடகங்களில் செய்தி வருகிறது. ‘பட்டினியால் மக்கள் வாடும் ஒரு நாட்டில் – நாட்டின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை இருக்கிறது என்று அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கையே குறிப்பிடுகின்ற ஒரு நாட்டில் – இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் உணவு தானியங்கள் அழுகிப் போவதை எப்படி அனுமதிக்க முடியும்?’ என்று உச்சநீதிமன்றம் கேட்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் என்று அரசாங்கம் பேசிக் கொண்டிருக்கும்போது உணவுப் பொருட்களின் நிலை இப்படி இருக்கிறது!

வளர்ச்சிக்கு முக்கியமான கல்வித் துறையில் என்ன நடக்கிறது? கல்வி உரிமைச் சட்டம் பல நல்ல நோக்கங்களுடன் கொண்டு வரப்பட்டது. ஆரம்பக் கல்வியை கட்டாயமாகவும் இலவசமாகவும் கொடுப்பதன் மூலம் கல்வி வெளிச்சத்தை இதுவரை பார்க்க முடியாமல் இருந்த மக்கள் பலன் பெறுவார்கள். ஆரம்பக் கல்வியை பரவலாக கொடுப்பதற்கு முயற்சி எடுக்கும் அரசு, உயர் கல்வியைப் பொறுத்தவரை செய்வது என்ன? நடுத்தரக் குடும்பங்களுக்குக் கூட உயர்கல்வி எட்டாத உயரத்தில் இருக்கிறது. கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கும் மாணவர்களில் பதினைந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களே கல்லூரிகளில் சேர்கிறார்கள் என்ற தகவல் இதைத்தான் காட்டுகிறது. கல்லூரிகளில் இவ்வளவு குறைவான விழுக்காடு மாணவர்கள் படிக்கும் நிலையிலேயே, உலக அளவில் எங்கு பார்த்தாலும் இந்திய இளைஞர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். எளியவர்களுக்கும் எட்டும் தூரத்தில் உயர்கல்வி இருந்தால், இன்னும் எவ்வளவு இலக்குகளை நம்மால் எட்ட முடியும் என்று நினைத்துப் பாருங்கள்.

வேறு என்னென்ன கனவுகளை விரைவில் நமக்கு நனவாக்கித் தருவதாக மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார்? பகையை நீக்கி பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்த வேண்டும். தினந்தோறும் ராணுவத்துக்கும் இளைஞர்களுக்கும் காஷ்மீரில் நடக்கும் மோதலுக்கு முற்றுப் புள்ளி வைத்து அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும். நாட்டின் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் மாவோயிஸ்டுகளின் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எல்லோருடைய ஒத்துழைப்போடும் காமன்வெல்த் போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இப்படி அவருடைய கனவுகள் நீள்கின்றன.

இந்த எல்லா பிரச்னைகளிலும் அவரைப் போலவெ அவருடைய அமைச்சரவை சகாக்களும், கட்சித் தளபதிகளும் ஒரே பார்வையில் இருக்கிறார்களா? காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையில் ஒருமித்த கருத்து நிலவுகிறதா? அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு வலியுறுத்தியபோது சசிதரூர், எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற அமைச்சர்கள் அரசாங்கத்துடன் முரண்பட்டார்கள். பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடந்தபோது உள்துறை அமைச்சகத்துக்கும் வெளியுறவுத் துறைக்கும் இடையில் இருந்த இடைவெளி எல்லோருக்கும் தெரிந்துபோனது. உள்கட்டமைப்பு வேலைகளில் பிரதமரின் நம்பிக்கையைப் பெற்ற திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவுக்கும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத்துக்கும் இடையில் பகிரங்கமாக கருத்து மோதல் வந்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக மணிசங்கர் அய்யரும் சுரேஷ் கல்மாதியும் மோதிக் கொண்டார்கள். மாவோயிஸ்டுகளை அரசு எப்படிக் கையாள்கிறது என்ற விஷயத்தில் உள்துறை அமைச்சரின் அணுகுமுறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் செயலர் திக்விஜய்சிங் கட்டுரை எழுதினார்; பேட்டி கொடுத்தார்.

இவையெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் வேறுபாடுகள்; இவை தவிர, கூட்டணிக் கட்சிகள் எழுப்பும் சிக்கல்கள் தனியாக இருக்கின்றன. எப்படியாவது இடது முன்னணி அரசாங்கத்தை வீழ்த்திவிட்டு மேற்குவங்க முதலமைச்சராகிவிட வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி நினைக்கிறார். அதற்காக அவர் மாவோயிஸ்டுகளின் ஆதரவைப் பெறுவதற்கும் தயங்கவில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாவோயிஸ்டுகள் இருப்பதாக பிரதமர் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அவருடைய அமைச்சர் ஒருவர் மாவோயிஸ்டுகளின் உதவியை நாடுகிறார்! தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரிந்துவிடும்!

இவைதவிர, அரசாங்கத்தின் வேறு பல நடவடிக்கைகளும் சாமான்ய மக்களுக்கு ஆதரவாக இல்லை. பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசு விலக்கிக் கொண்டது. இதனால் சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் லாபம் குவியும். உணவுப் பொருட்கள் வர்த்தகத்தில் ஊக வணிகத்தை உணவு ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை அனுமதிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, பரந்து வாழும் மக்களை விட ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெரு நிறுவனங்களுக்கும் மன்மோகன்சிங் அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கிறதோ என்ற எண்ணம் வலுவடைகிறது. அதுதான் உண்மை என்றால், பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் விரைவில் வசப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சொல்லும் வார்த்தைகள் செயல் வடிவம் பெறாத வெற்று முழக்கமாகவே இருக்கும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 26.08.10

0 Comments:

Post a Comment

<< Home