Saturday, August 21, 2010

தப்பு நடந்தால் விசில் அடியுங்கள்

எதிரிகள் அவரை போட்டுத் தள்ளிய பிறகு அவர்களை எதிர்த்து சண்டை போடுவதைவிட, இப்போதே அவருடைய போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்” என்று அந்தப் பெண்மணி முடிவு செய்தார். அவர் பெயர் ஜெயஸ்ரீ. அவருடைய கணவர் எம்.என்.விஜயகுமார் கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேலைபார்க்கிறார். நிர்வாகத்தில் சில சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்த ஊழல்களை உயரதிகாரிகளிடம் அவர் புகார்களாக கொடுத்தார். என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதுதான் அங்கும் நடந்தது. விஜயகுமார் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் அதிகாரத்தை அதிகமாக வைத்திருப்பவர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டப்பட்டார்!

ஒருநாள் நள்ளிரவில் அவருடைய வீட்டின் அழைப்பு மணி அடித்தது. அவர் கதவைத் திறந்து பார்த்தபோது சிலர் அங்கு நின்றுகொண்டு இருந்தார்கள். ‘உங்களுடைய மகன் விபத்தில் அடிபட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறான். உடனே வாருங்கள்’ என்று சொன்னார்கள். அவருடைய மகன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறான்; இது விஜயகுமாருக்கு நன்றாகத் தெரியும். அது ஒருவேளை வந்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். எதிரிகள் நம்மை அச்சுறுத்துகிறார்கள் என்றும் உளவியல்ரீதியான தொல்லைகளைக் கொடுக்கிறார்கள் என்றும் அவர் புரிந்து கொண்டார். இது போல் நாற்பது முறை பலவகைகளில் மிரட்டப்பட்டிருக்கிறார். மூன்று முறை அவரைக் கொல்ல முயற்சி நடந்திருக்கிறது. இந்த நிலையில் தான் கணவருடைய உயிரை எதிரிகள் பறிப்பதற்கு முன்னால், அவர் எதிர்த்து வரும் ஊழல்களை பொதுமக்களிடம் அம்பலப்படுத்தி விட வேண்டும் என்று அவருடைய மனைவி ஜெயஸ்ரீ களத்தில் குதித்தார். ஊழலை எதிர்த்துப் போராட வாருங்கள் என்ற அறைகூவலுடன் ஒரு வலைத்தளத்தைத் தொடங்கினார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பல தகவல்களைத் திரட்டி உடனுக்குடன் வெளியிடுகிறார். இந்த வகையில் அவருடைய போராட்டம் தொடர்கிறது.

விஜயகுமார் கொடுத்து வைத்தவர்; அவருடைய போராட்டத்தை அவருடைய குடும்பத்தில் இருப்பவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; அலுவலகத்தில் அவர் எடுக்கும் நிலையால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அவருடைய மனைவியும் இரண்டு மகன்களும் தயாராக இருக்கிறார்கள். பெரும்பாலான குடும்பங்களில் அப்பா யாரை எதிர்த்து எதற்காக போராடுகிறார் என்பது குழந்தைகளுக்குத் தெரிவதில்லை; யாரால் கணவருடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை மனைவி அறிந்திருப்பதில்லை. இவையெல்லாம் தெரிந்தால் மனைவியோ குழந்தைகளோ பயப்படுவார்கள்; ’நமக்கு ஏன் வம்பு’ என்று பிரச்னையில் இருந்து ஒதுங்கி விடும்படி கணவனை நெருக்குவார்கள்; அவர்களுடைய அன்புக்கும் கண்ணீருக்கும் முன்னால் கணவன் கரைந்து விடக் கூடும். இதனால் பல குடும்பங்களில் மனைவியிடம் கணவன் எல்லா விபரங்களையும் சொல்வதில்லை. இதுதவிர இன்னொரு கோணத்திலும் விஜயகுமார் ‘அதிர்ஷ்டசாலி’; இன்னும் அவர் உயிரோடு இருக்கிறார்; எதிரிகளால் அவர் கொலை செய்யப்படவில்லை.

ஆனால் முறைகேடுகளைத் தட்டிக் கேட்கப் போனவர்கள் எல்லோருக்கும் இந்த நல்வாய்ப்பு கிடைப்பதில்லை. சத்தியேந்திர துபே என்ற இளைஞர் ஐ.ஐ.டி.யில் படித்த ஒரு ‘இன்ஜினியர்’; தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலைபார்த்து வந்தார். சாலைப் பணிகளுக்காக ஒப்பந்தம் போட்டிருந்த பெரிய நிறுவனம் ஒன்று உள்ளூர் தாதாக்களிடம் ‘சப்-காண்ட்ராக்ட்டில்’ வேலைகளைக் கொடுத்திருப்பதாக அவர் மேலதிகாரியிடம் புகார் தெரிவித்தார். எந்தவிதமான பலனும் இல்லை; அதற்காக அவர் அப்படியே இருந்துவிடவில்லை. ‘நான் யார் என்பதை வெளியில் சொல்லி விடாதீர்கள்’ என்ற வேண்டுகோளுடன், இந்த முறைகேடுகள் பற்றி அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார். பிரதமர் அலுவலகத்தில் இருந்தவர்களில் ஒரு ‘நேர்மையான’ அதிகாரி, நெடுஞ்சாலைத் துறைக்கு அந்தப் புகாரை அனுப்பி விசாரிக்கச் சொன்னார். இது சரியான நடவடிக்கைதான். என்ன கோளாறு என்றால், அவர் புகார் கொடுத்தவர் பற்றிய விபரங்களுடன் அந்த புகாரை அனுப்பி விட்டார். அடுத்த சில வாரங்களில் சத்தியேந்திர துபேயின் உயிரற்ற உடல் சாலையில் கிடந்தது. ஏதோ வழிப்பறி தகராறில் அவர் கொல்லப்பட்டாராம்!

மஞ்சுநாத் சண்முகம் என்பவர் லக்னோவில் இருக்கும் ஐ.ஐ.எம்.கல்லூரியில் எம்.பி.ஏ. படித்தவர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மார்க்கெட்டிங் மானேஜராக வேலைபார்த்தார். அப்போது அவர் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல் விற்பனை செய்வதைக் கண்டுபிடித்தார். இதற்காக அந்த பெட்ரோல் நிலையத்தை இழுத்து மூடினார். யாரை, எங்கே, எப்படி கவனிக்க வேண்டுமோ அப்படி கவனித்துவிட்ட அந்த நிலையம் மீண்டும் பெட்ரோல் விற்பனையைத் தொடர்ந்தது. மஞ்சுநாத் மீண்டும் அங்கு சோதனை நடத்தினார். அதற்குப் பின், ஆறு குண்டுகள் துளைத்திருந்த நிலையில் அவருடைய உடல் அவருடைய காரில் கிடந்தது.

லலித் மேத்தா என்பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளிலும் உணவுரிமைச் சட்டத்துக்காகவும் மக்களிடம் வேலை செய்து வந்தார். அவரை கடந்த 2008 மே மாதம் 14-ம் தேதி காணவில்லை. மிருகங்களால் கடித்துக் குதறப்பட்டு அழுகிய நிலையில் மே 16-ம் தேதி காட்டில் இருந்து அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரும் வழிப்பறிக் கொள்ளையரால் கொல்லப்பட்டாராம்! அரசுத் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நபர்களாகப் பார்த்து இந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் ஏன் கொலை செய்கிறார்கள் என்ற ரகசியம் நமக்கு புரியாத புதிராகத் தான் இருக்கிறது!

புகார் தெரிவிப்பவர்களின் பெயர்களை வெளியில் சொல்லக் கூடாது என்பதன் அவசியத்தை நாம் அமெரிக்காவில் நடந்த இரு சம்பவங்களை ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம். ஒன்று அமெரிக்க அமைச்சர் நடந்து கொண்ட முறையால் ஏற்பட்ட பாதிப்பு. துபே விஷயத்தில் நம்முடைய பிரதமர் அலுவலக அதிகாரி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதைப் போலவே, அமெரிக்காவிலும் அமைச்சர் ஒருவர் நடந்து கொண்டார். ஜோசப் டார்பி என்பவர் அமெரிக்க ராணுவத்தில் வேலைபார்த்தார். 2004-ம் வருடம் ஜனவரி மாதம் அவர் புகைப்படங்கள் அடங்கிய ஒரு சி.டி.யை ராணுவ மேலதிகாரியிடம் கொடுத்தார். அபுகிரைப் சிறையில் அமெரிக்க ராணுவத்தினர் இராக் கைதிகளுக்கு செய்த கொடுமைகள் எல்லாம் புகைப்படங்களாக அதில் இருந்தன. இதைக் கொடுத்தது நான்தான் என்ற செய்தி வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். ஆனால், செனட் விசாரணையின் போது அப்போதைய அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃப்ல்டு புகார் கொடுத்தவருடைய விபரங்களை சொல்லிவிட்டார். இது தெரிந்தவுடன், ஒரு கும்பல் ஜோசப் டார்பியை தேசவிரோதி என்று வசைபாடி அவருடைய வீட்டைத் தாக்கி நாசமாக்கியது. அதன் பிறகு எங்கோ ஓர் இடத்தில் ராணுவ பாதுகாப்புடன் அவர் வாழ நேர்ந்தது!

எழுபதுகளின் தொடக்கத்தில் அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழல் மிகவும் பரபரப்பாக இருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் நிக்சன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று செயல்பட்ட ஒரு குழு செய்த முறைகேடுகளும் அவர்கள் பிடிபட்டபோது அந்த விசாரணையை முடக்க அதிபர் எடுத்த முயற்சிகளும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அம்பலமாக்கப்பட்டன. அந்தப் பத்திரிகை நிருபர்களுக்கு அந்த விபரங்களை கொடுக்கும் ‘சோர்ஸ்’ எது என்ற கேள்வி எழுந்தது. ’டீப் த்ரோட்’ என்ற புனைபெயரில் ஒருவர் கொடுக்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் அவர் யார் என்பதை அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த வாட்டர்கேட் விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன் பதவி விலகினார். இவையெல்லாம் நடந்து முடிந்து ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பிறகு 2005-ல் அந்த ‘டீப் த்ரோட்’ தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவருடைய பெயர் வில்லியம் மார்க் ஃபெல்ட். அந்த ரகசியத்தை அவர் பகிர்ந்து கொண்டபோது அவருக்கு வயது 91! அவர் யாரென்று அந்த பத்திரிகை அப்போதே காட்டிக் கொடுத்திருந்தால், அவர் இவ்வளவு நாட்கள் உயிரோடு இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.

புகார் கொடுப்பவர்களைப் பாதுகாப்பது தொடர்பான நல்ல செய்தி ஒன்று வந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுநல வெளியீடு மற்றும் புகார் அளிப்பவர் பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, புகார் அளிப்பவர்களின் பெயர்களை வெளியில் சொல்லும் அதிகாரிகளுக்கு மூன்று வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் அபராதம் கட்ட நேரிடும். அதேசமயம் நேர்மையான அதிகாரிகள் மீது பொய்யான புகார்களை முன்வைக்கும் நபர்களும் தண்டிக்கப்படுவார்கள். மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு சிவில் கோர்ட் போன்ற அதிகாரத்தை இந்த சட்ட மசோதா கொடுக்கிறது. இதன் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

இதுபோன்ற ஒரு சட்டம் தேவை என்று நீண்ட நாட்களாகவே சமூக ஆர்வலர்கள் கோரிவந்தார்கள். சத்தியேந்திர துபே படுகொலை அவர்களுடைய கோரிக்கைக்கு ஒரு வேகத்தை கொடுத்தது. சத்தியேந்திர துபேக்கு முன்னதாகவும் ‘உண்மை விளம்பிகள்’ சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகுதான் புகார்களை தெரிவிக்கும் நபர்களைப் பாதுகாப்பதற்காக அரசுத் தரப்பில் இருந்து ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவானது. பொதுநல வெளியீடு மற்றும் புகார் அளிப்பவர்கள் பாதுகாப்பு மசோதாவை அரசு பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்னது. இது 2004-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் நடந்தது. இப்போது ஆறு வருடங்கள் கழிந்த நிலையில், இதுபோன்ற ஒரு சட்ட முன்வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. இந்த ஆறு வருடங்களில் சதீஷ் ஷெட்டி உட்பட இன்னும் சில உயிர்கள் பலியாகி இருக்கின்றன என்பது கவலை அளிக்கும் வேறு செய்தி!

மத்திய அரசு இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதுடன் நின்றுவிடக் கூடாது. ஊழல் புகார்களைத் தெரிவிப்பவர்களுடைய பெயர்களும் அடையாளங்களும் பாதுகாக்கப்படும் என்று மக்களிடம் விளம்பரங்கள் மூலம் உறுதி அளிக்க வேண்டும். இந்த உறுதியால் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கி புகார்கள் கொடுப்பது ஊக்குவிக்கப்படவேண்டும். தனிப்பட்ட முறையில் பணத்தாசை இல்லாமல் எளிய மனிதனாக இருக்கும் டாக்டர் மன்மோகன்சிங் இதையெல்லாம் செய்யவில்லை என்றால் வேறு யார்தான் செய்வார்கள்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 19.08.2010

0 Comments:

Post a Comment

<< Home