சோம்நாத் சாட்டர்ஜியால் மார்க்சிஸ்ட் கட்சியில் சலசலப்பு
”வாழ்க்கைக் குறிப்புகளை நான் விரும்புவதில்லை; ஏனென்றால், தம்முடைய வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மறந்தவர்களோ அல்லது தங்களுடைய வாழ்க்கையில் நினைவில் வைத்துக் கொள்ளும்படி எதுவுமே செய்யாதவர்களோதான் அவற்றை எழுதுகிறார்கள்” என்கிறார் ஆஸ்கார் வைல்டு என்னும் எழுத்தாளர். இந்த இரு வகைகளிலும் முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை சேர்க்க முடியாது. ஆனால் அவர் ஒரு சுயசரிதை எழுதி இருக்கிறார்; “நம்பிக்கை காக்கிறேன்: ஒரு நாடாளுமன்றவாதியின் வாழ்க்கைக் குறிப்புகள்” என்பது அந்த புத்தகத்தின் பெயர். அந்த நூலில் அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை அவர் மனம் திறந்து சொல்லி இருப்பார் என்று நம்பலாம். அந்த நூலை வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் வெளியிடுகிறார். புத்தகம் வெளியாவதற்கு முன்னதாகவே, அது மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிடிவாதத்தோடும் மூர்க்கத்தனத்தோடும் பல சர்ச்சைகள் நம்முடைய சமூகத்தில் உருவாக்கப்படுகின்றன. அவற்றில் பல சிக்கல்களை ஆராய்ந்து பார்த்தால், நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் எந்தத் தரப்பிலும் இருப்பதில்லை. பெரும்பாலும் ஒவ்வொரு தரப்பும் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அந்த மோதல்கள் நடக்கின்றன. அதற்காக சர்ச்சைகளில் எந்த நன்மையும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. யார் சொல்வதையாவது எல்லோரும் கேட்டு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டிய அவசியம் இல்லை. முக்கியமான பிரச்னைகள் குறித்து அடிக்கடி ஒரு சமூகத்தில் சர்ச்சைகள் உருவாக வேண்டும். அப்படி சர்ச்சைகள் எழுந்து மக்களுக்கிடையில் விவாதங்கள் நடக்க வேண்டும். அப்படி நிகழவில்லை என்றால் அந்த சமூகம் சர்வாதிகாரத்தை நோக்கிப் போகிறது என்று புரிந்து கொள்ளலாம்!
ஒரு அரசியல் தலைவர் சுயசரிதை எழுதுகிறார்; அந்தப் புத்தகம் வெளியாகப் போகிறது என்றால் என்ன நடக்கும்? அதில் இருந்து சில பகுதிகள் ஊடகங்களில் கசிய விடப்படும். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த சில குறிப்புகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்; அல்லது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பார்கள். அவ்வளவுதான்! ஊடகங்கள் எல்லா தரப்பையும் விடாமல் துரத்தும். அடுத்தடுத்து விரிவான பேட்டிகளும் அலசல்களும் ஊடகங்களில் இடம் பெறும். அதற்குப் பிறகு புத்தக வெளியீட்டு விழா நடக்கும். அந்தப் புத்தகம் வெளியானவுடன் வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு நாம் ஏற்கனவே வந்துவிட்டிருப்போம். இதை நூலுக்கான விளம்பரம் என்றோ விற்பனைத் தந்திரம் என்றோ நாம் எடுத்துக் கொள்கிறோம்!
சோம்நாத் சாட்டர்ஜி எழுதிய புத்தகத்தில் இருந்தும் சில பகுதிகள் செய்தியாக வெளியில் வந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ’அகந்தை’ மிகுந்தவர் என்று சோம்நாத் சாட்டர்ஜி குற்றம் சாட்டியிருப்பதாக அந்த செய்திகளில் இருந்து அறிய முடிகிறது. புத்தகம் வந்தபிறகு படித்துவிட்டு பிறகு அதைப் பற்றி விவாதிக்கலாம் என்று இருந்தவர்களைக் கூட அடுத்தடுத்த நிகழ்வுகள் முன்கூட்டியே பேச வைத்துவிடுகிறது. பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சோம்நாத் அதில் புகழ்ந்திருக்கிறார் என்று ஒரு செய்தி.. கடந்த 2009 ஆகஸ்ட் 3-ம் நாள் மறைந்த மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் சுபாஷ் சக்கரவர்த்தியின் முதலாண்டு நினைவு விழாவுக்கு சோம்நாத் சாட்டர்ஜி அழைக்கப்பட்டிருக்கிறார். சுபாஷ் குறித்த ஆவணப்படத்தை சோம்நாத் வெளியிடப் போகிறார். அதாவது, கட்சியின் மேற்கு வங்க கிளையில் சிலர் நேரடியாக மத்திய தலைமையுடன் மோதுவதற்குத் தயாராகி விட்டார்கள் என்று ஊடகங்களில் செய்தி வருகிறது. சோம்நாத் சாட்டர்ஜியும் ஊடகங்களில் விரிவான பேட்டிகளைக் கொடுக்கிறார்!
கடந்த 2008-ம் வருடம், சோம்நாத் சாட்டர்ஜிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட மோதலும் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கும். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மோதலில், ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை மார்க்சிஸ்டுகள் விலக்கிக் கொண்டார்கள். மன்மோகன்சிங் ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்தபோது உருவான ‘டீல்’ காரணமாக அந்தக் கட்சியின் எம்.பி.யான சோம்நாத் சாட்டர்ஜி மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இப்போது ஆதரவை விலக்கிக் கொள்வதால், சோம்நாத் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி முடிவு செய்தது. ஆனால் அவர் சபாநாயகர் பதவியில் இருந்து விலகவில்லை. எனவே கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
’ஜோதிபாசுவிடம் ஆலோசனை கேட்ட பிறகே சபாநாயகர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்தேன்’ என்று அவருடைய புத்தகத்தில் அவர் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. அப்படி அவர் சொல்லி இருந்தால், அதற்கு என்ன அர்த்தம்? கட்சியின் முடிவுக்கு எதிரான கருத்தை ஜோதிபாசுவும் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுமாறு சோம்நாத் சாட்டர்ஜிக்கு ஆலோசனையும் சொன்னார் என்று பொருளாகிறது. அதனால் ‘இறந்த தலைவரை சர்ச்சைக்குள்ளாக்காதீர்கள்’ என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் சொல்கிறார்கள். அதற்கு ’என்னுடைய ஒரே தலைவர் ஜோதிபாசு தான் ; அவர் சொல்லாத எதையாவது சொல்லியதாக புத்தகத்தில் எழுதும் அளவு நான் என்ன மோசமானவனா?’ என்று சோம்நாத் சாட்டர்ஜி கண்கலங்குகிறார்.
ஒரு விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எப்படி முடிவெடுக்கும் என்று சோம்நாத் சாட்டர்ஜிக்கு நன்றாக தெரிந்திருக்கும். அப்படி இருக்கும்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர்தான், கட்சியில் இருந்து தன்னை வெளியேற்றினார்கள் என்று அவர் எப்படி எழுதினார்? அந்தக் கட்சி அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. ‘நான் அங்கு நேரில் இல்லை. பொலிட்பீரோ உறுப்பினர்கள் ஐந்து பேர்தான் என்னை வெளியேற்றினார்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது’ என்று சாட்டர்ஜி இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். சோம்நாத் யாரைத் தலைவர் என்று சொல்கிறாரோ, அந்தத் தலைவர் ஜோதிபாசு தொடர்பான ஒரு பிரச்னையில் கட்சி என்ன முடிவெடுத்தது என்பதை சோம்நாத் சாட்டர்ஜி மறந்திருக்கமாட்டார்.
1996 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ’தொங்கு மக்களவை’ அமைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. பிரதமராக ஜோதிபாசுவின் பெயரை ஏகமனதாக பலர் முன்மொழிந்தார்கள். ‘இடதுசாரிகளுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சியில் பங்கேற்பதில்லை’ என்று கட்சியின் முடிவு ஏற்கனவே அமலில் இருந்தது. அதனால் கட்சியிடம் கேட்டுச் சொல்கிறோம் என்று மற்ற கட்சித் தலைவர்களிடம் அப்போது பொதுச் செயலாளராக இருந்த ஹர்கிஷன்சிங் சுர்ஜித் சொன்னார். ”ஐக்கிய முன்னணி ஜோதிபாசுவை பிரதமராக்க விரும்புகிறது; இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று மார்க்சிஸ்ட் கட்சியில் விவாதம் நடந்தது. அந்தக் கட்சியின் முடிவு என்ன தெரியுமா? ‘ஆட்சியில் பங்கேற்பதில்லை; வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம்’ என்பதே!
அதாவது கட்சியில் செல்வாக்கு மிகுந்த முதலமைச்சர் ஜோதிபாசுவும், கட்சியின் சர்வ அதிகாரம் மிகுந்த பதவியாக இப்போது சொல்கிறார்களே, அந்தப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும் ஆதரித்த ஒரு கோரிக்கையை அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும் மத்திய குழுவும் நிராகரித்தது. சோனியா காந்தி கொண்டு வரும் தீர்மானம் காங்கிரஸில் தோற்குமா? ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்ற தீர்மானத்தை அதிமுக செயற்குழு தோற்கடிக்குமா? ஆட்சியில் பங்கேற்பதில்லை என்று அன்றைக்கு மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த முடிவு சரியா தவறா என்பதில் உங்களுக்கு வேறு கருத்து இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு ஜனநாயகத்தை தேர்தலில் போட்டியிடும் வேறு எந்தக் கட்சியிலாவது பார்க்க முடியுமா? அந்த முடிவை பிற்காலத்தில் ஜோதிபாசு ‘வரலாற்றுப் பிழை’ என்று விமர்சனம் செய்ததும் அதற்காக அவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் கட்சி ‘பெருந்தன்மையுடன்’ நடந்து கொண்டதும் வேறு கதை!
’ஜோதிபாசு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். சோம்நாத் சாட்டர்ஜியும் தேர்தலில் நின்று வென்றவர். மக்கள் அவர்களைத் தங்களுடைய பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் தேர்தலில் ஒரு தடவை கூட நின்று ஜெயிக்காதவர்கள் கட்சியில் அதிகாரத்துடன் இருக்கிறார்கள். மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறார்கள்’ என்று சிலர் பேசுகிறார்கள். ஆங்கில நாளிதழ்களில் தலையங்கம் எழுதுகிறவர்களும் ஆங்கில தொலைக்காட்சிகளில் பேசுகிறவர்களும் கிண்டலாக இதைக் குறிப்பிடுகிறார்கள். இவர்களில் பலருடைய இலக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத். சிலருடைய குறி பாரதிய ஜனதாவின் தலைவர் நிதின் கத்காரி. இந்த நிபுணர்கள் இந்திய ஜனநாயகத்தை தனிமனிதர்கள் வழியாகப் பார்க்கிறார்கள். கட்சிகளை விலக்கி விட்டு நாடாளுமன்ற ஜனநாயகம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே இருக்கிறார்கள் என்பதையும் நம்முடைய ஜனநாயகம் அரசியல் கட்சிகளின் அடிப்படையில் தான் செயல்படுகிறது என்பதையும் இவர்கள் பார்க்கத் தவறுகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. அதுதான் முக்கியம். பிரகாஷ் காரத் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை. பாரதிய ஜனதாவுக்கு எம்.பி.க்கள் இருந்தால் போதும். நிதின் கத்காரி எம்.பி. ஆக வேண்டியதில்லை. 1991முதல் 1996 வரை முதலமைச்சர் கருணாநிதி சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லை. அந்த ஐந்து வருடமும் எம்.எல்.ஏ.வாக இருந்த பரிதி இளம்வழுதியின் வழிகாட்டுதலில் திமுக செயல்பட வேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள் போலிருக்கிறது. 1996 தேர்தலில் ஜெயலலிதா தோற்றுப் போனார்; அப்போது நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களிடம் அதிமுகவின் அதிகாரத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்கிறார்களா இவர்கள்? டாக்டர் ராமதாஸ் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவே இல்லை; பாமகவின் சட்டமன்ற உறுப்பினர்களை அவர் வழிநடத்தக் கூடாதா? 2004 தேர்தலில் வைகோ போட்டியிடாத போது, சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் பேச்சைக் கேட்டா மதிமுக தொண்டர்கள் செயல்பட்டார்கள்?
ஒரு கட்சியில் விவசாயிகள் அணி, இளைஞர் அணி என்று பல அணிகள் இருப்பதைப் போல, நாடாளுமன்ற அணியும் கட்சியின் ஒரு பிரிவு. அவ்வளவுதான்! நாடாளுமன்ற கட்சியை அந்தக் கட்சியை விட மேலானதாகவோ, அல்லது அதையே கட்சியாகவோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை!
0 Comments:
Post a Comment
<< Home