அர்ஜூன் சொல்லும் கீதை
அவர் மௌனம் கலைத்து வாய் திறந்துவிட்டார் என்று ஊடகங்களில் ஒரே பரபரப்பு! ”வாரன் ஆண்டர்சனை விடுதலை செய்யும்படி என்னிடம் பிரதமர் ராஜீவ்காந்தி சொல்லவே இல்லை,” என்று அர்ஜூன்சிங் நாடாளுமன்றத்தில் பேசினார்; வாரன் ஆண்டர்சன் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்; மத்தியப் பிரதேசம் போபாலில் அந்த கம்பெனி நடத்திய உரத் தொழிற்சாலையில் இருந்து 1984 டிசம்பர் 3-தேதி இரவு விஷவாயு வெளியே வந்து காற்றில் கலந்தது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். அந்த நாட்களில் அமெரிக்காவில் இருந்து ஆண்டர்சன் இந்தியா வந்தார். அவரை கைது செய்த மத்தியப் பிரதேச மாநில அரசு, பிறகு விடுதலை செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது. அங்கிருந்து அவர் பத்திரமாக அமெரிக்காவுக்கு போய்ச் சேர்ந்தார். அந்த சமயத்தில் மத்தியப் பிரதேச முதலமைச்சராக இருந்தவர் அர்ஜூன்சிங்!
அப்போது அவர் விடுதலை செய்து அனுப்பி வைத்த ஆண்டர்சனை இப்போது இந்தியாவுக்கு வரவழைக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். பிரதமர் மன்மோகன்சிங் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பேச வேண்டும் என்று அவர் கேட்கிறார். போபால் பேரழிவு வழக்கில் போபால் உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் ஒரு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால் அர்ஜூன்சிங் அப்போது எதுவும் பேசவில்லை; செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை; அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. அவர் முதலமைச்சராக இருந்த போது நடந்த விபத்து என்பதால் ஊடகங்கள் அவருடைய கருத்தைக் கேட்க முயன்றன. ஆனால் அவர் அப்போது பிடியே கொடுக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசும்போதுதான் அவர் கருத்தை எல்லோரும் தெரிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான் அவர் மௌனத்தைக் கலைத்து விட்டார் என்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன!
மற்றபடி அவர் புதிய தகவல்கள் எதையும் சொல்லிவிடவில்லை; இதுவரை வெளிவராத ரகசியங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. வாரன் ஆண்டர்சன் எப்படி கைது செய்யப்பட்டார் என்று அவர் விவரித்தார். அவருடைய பேச்சில் இருந்தே நாம் பழைய நிகழ்ச்சிகளை நினைவுக்குக் கொண்டு வரலாம். விஷவாயு கசிவு மூலம் போபாலில் பேரழிவு நடந்த பிறகு வாரன் ஆண்டர்சன் போபாலுக்கு வந்தார்; இவ்வளவு கோரமான விபத்துக்குப் பிறகும் ஆண்டர்சன்னால் எப்படித் துணிச்சலாக இந்தியாவுக்கு வர முடிகிறது என்று அர்ஜூன்சிங் ஆச்சரியப்பட்டார். நாடு முழுவதும் ஆலைக்கு எதிராக மக்கள் கோபம் கொண்டிருந்தார்கள். அதனால் அரசாங்கம் ஆண்டர்சன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகி இருந்தது. இந்நிலையில் அவரைக் கைது செய்துவிட வேண்டும் என்று அர்ஜூன்சிங் முடிவு செய்தார். ஆனால் அவருடைய முடிவை அவர் யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உத்தரவு பிறப்பித்தார். வாரன் ஆண்டர்சன் கைதுசெய்யப்பட்டதற்கு ‘நானே பொறுப்பு’ என்று அர்ஜூன்சிங் பொறுப்பேற்றுக் கொள்கிறார்!
அந்தக் கைது சம்பவம் எப்படி நடந்ததாம்? போபால் விமான நிலையத்தில் ஆண்டர்சன் விமானத்தில் இருந்து இறங்கினார். உடனே போலீஸ் அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்தார்கள். அவரை ஒரு காருக்குள் உட்கார வைத்தார்கள். ‘நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்’ என்று சொன்னார்கள்; ஆண்டர்சனுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகைக்கு கொண்டு போனார்கள். அங்கு அவர் ‘பாதுகாப்பாக’ வைக்கப்பட்டார். அந்த போலீஸ் அதிகாரியிடம் ’என்னை வரவேற்க உங்கள் முதலமைச்சர் வரவில்லையா’ என்று ஆண்டர்சன் கேட்டாராம். அவருக்குத் தான் கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே வந்திருக்காது; தனக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது என்ற நினைப்பு கூட ஒருவேளை அவருக்கு வந்திருக்கலாம்.
இந்த கைது சம்பவம் நடந்ததற்குப் பிறகு ஆண்டர்சன்னுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பிரதமர் ராஜிவ் காந்தி முதலமைச்சர் அர்ஜூன்சிங்கிடம் எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை! அதாவது கைது செய் என்றும் ராஜிவ் சொல்லவில்லை; விடுதலை செய்து அவரை அனுப்பி வை என்றும் ராஜிவ் உத்தரவிடவில்லை. ஆண்டர்சன்னைக் கைது செய்யும் முடிவை அர்ஜூன்சிங் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று சொல்வதன் அர்த்தம் இதுதான் என்று புரிகிறதா? உள்துறை அமைச்சகத்தில் இருந்துதான் ஆண்டர்சனை விடுதலை செய்யுங்கள் என்று தொலைபேசியில் சொன்னார்கள்! இதையும் நேரடியாக அர்ஜூன்சிங்கிடம் யாரும் சொல்லவில்லை. மாநில அரசின் தலைமைச் செயலாளரிடம் சொல்லி இருக்கிறார்கள். அவர்தான் அர்ஜூன்சிங்கிடம் அந்தத் தகவலைச் சொன்னார்! அர்ஜூன்சிங்கும் ‘ஏதாவது செய்யுங்கள்’ என்று தலைமைச் செயலாளரிடம் பொறுப்பை விட்டுவிட்டார்; அதன்பிறகு பிணையில் விடுதலைக்கான சடங்குகள் நடந்தன. சிறப்பு விமானத்தில் ஆண்டர்சன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்; அங்கு அவர் ‘யாரையோ’ சந்தித்துப் பேசினார்; அப்படியே அங்கிருந்து அமெரிக்கா போய் விட்டார்.
சாதாரணமான நிலையில் இருக்கும் ஒரு அமெரிக்கருக்கு எந்த நாட்டில் பிரச்னை என்றாலும், அமெரிக்க அரசாங்கம் உடனடியாக செயல்படுவதை பல சமயங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆண்டர்சன் சாதாரணமான மனிதர் அல்ல. அவர் இன்னொரு நாட்டில் கைது செய்யப்பட்டார் என்றால், அவரை விடுவிக்க அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்காது. அப்படி அதற்காக இந்தியாவுடன் அமெரிக்கா பேசியிருந்தால், யார் பேசி இருப்பார்கள்? யாரிடம் பேசி இருப்பார்கள்? அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்திருந்தால், வெளியுறவுத் துறை சம்பந்தப்பட்டிருக்கும். ஆனால் ‘வாரன் ஆண்டர்சன் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு எந்த ஆவணமும் அரசாங்கத்திடம் இல்லை’ என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெளிவாக சொல்லிவிட்டார். அங்கு ‘தடயங்கள்’ எதுவும் அழிக்கப்படவில்லை என்று எடுத்துக் கொண்டால், இன்னும் பெரிய பதவிகளில் இருந்தவர்களுக்கு இடையேதான் பேச்சு வார்த்தை நடந்திருக்கும். வெளியுறவுத் துறைக்கு அடுத்த உயர்ந்த இடம் எது? பிரதமர் அலுவலகம்தானே! இந்த லாஜிக் தான் அப்போது பரவிய வதந்திக்கு வலு சேர்க்கிறது. அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியிடம் பேசினார் என்பதும் அதன் பிறகு ராஜிவ் காந்தி ஆண்டர்சன்னை விடுதலை செய்யச் சொன்னார் என்பதும் அப்போது பரவிய வதந்தி!
இவ்வளவு நாள் மௌனமாக இருந்த அர்ஜூன்சிங் இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன? நாடாளுமன்றத்தில் போபால் விபத்து பற்றி விவாதம் நடக்கிறது; அதில் அர்ஜூன்சிங் கலந்து கொண்டு பேசுவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அந்த விபத்து நடக்கும்போது மத்தியப் பிரதேச முதலமைச்சராக அவர் இருந்திருக்கிறார். ஆனால் அர்ஜூன்சிங் அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதற்கு அந்த தார்மீக உணர்வு மட்டும்தான் காரணமா? ‘அர்ஜூன்சிங் பேச வேண்டும்; அவர் பேசுகின்ற வார்த்தைகள் பல மாங்காய்களை அடித்து வீழ்த்த வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருக்கக் கூடும். அதனால் அவர் பேசிய பேச்சைக் கூட கட்சியே தயாரித்துக் கொடுத்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அப்படி இல்லை என்றாலும் கூட, அர்ஜூன்சிங் பேசிய ஒவ்வொரு சொல்லும் கட்சித் தலைமையால் பார்த்து அங்கீகரிக்கப்பட்டிருக்கக் கூடும்.
அப்படி ஒரு பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ராஜிவ் காந்தி ஆணையிட்டதால்தான், அர்ஜூன்சிங் ஆண்டர்சன்னை விடுதலை செய்தார் என்று எதிர்க்கட்சிகள் செய்யும் பிரசாரம் முறியடிக்கப்பட வேண்டும்; அதுவும் அர்ஜூன்சிங் வாயாலேயே அந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான இந்தியர்களுடைய உயிரைப் பறித்த ஒரு கம்பெனியின் தலைவர் நம்முடைய நாட்டின் விசாரணை வளையத்தில் இருந்து தப்பித்துப் போக ராஜிவ் காந்தி விடுவாரா? ஒருநாளும் அப்படி நடக்க விட்டிருக்கமாட்டார் என்று மக்கள் நம்ப வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அப்படி என்றால் அந்தப் பழியை யார் மேலே போடுவது? இருக்கவே இருக்கிறார் நரசிம்மராவ்! ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் அப்போது உள்துறை அமைச்சராக நரசிம்மராவ் இருந்தார். அவர் இப்போது உயிருடன் இல்லை; அர்ஜூன்சிங் பேச்சை மறுத்து அவர் அறிக்கை வெளியிட வாய்ப்பு இல்லை! அர்ஜூன்சிங்குக்கும் நரசிம்மராவுக்கும் இருந்த மோதல் உலகம் அறிந்த ரகசியம். சோனியா காந்தியுடனும் நரசிம்மராவுக்கு இணக்கமான உறவு இருந்ததாக தெரியவில்லை. இன்றைய பிரதமர் மன்மோகன்சிங் மட்டும்தான் ஒருவேளை வருத்தப்படலாம். ஏனென்றால், அவரை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வந்து நிதியமைச்சராக்கியது நரசிம்மராவ்! இன்று அவர் பிரதமராக இருப்பது ராஜிவ் குடும்பத்தால்தானே, பிறகு ஏன் அவர் வருத்தப்படப் போகிறார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது!
நாடாளுமன்றத்தில் அர்ஜூன்சிங் பேசிய பேச்சு நமக்கு சில விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. முதலாவது, இந்தியாவில் தொழில் நடத்த வருபவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது. ஆயிரக்கணக்கான மக்கள் பலியான போபால் நகரத்தில் கூட ஆண்டர்சன்னுக்கு எதுவும் நடந்துவிடவில்லை. மக்களுடைய கோபம் அவர் மேல் திரும்பி அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே அர்ஜூன்சிங் அவர் மீது வழக்கு போட்டார்; கைது செய்தார்; பத்திரமாக அமெரிக்காவுக்கும் அனுப்பி வைத்தார்; பொருளாதார சீர்திருத்தத்தின் தொடக்க நாட்களிலேயே இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டவர்க்கு நாங்கள் இவ்வளவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம்; இப்போது எவ்வளவு பாதுகாப்பு கொடுப்போம் என்று புரிந்து கொள்ளுங்கள்.
இரண்டாவதாக அவருடைய பேச்சில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி மிகவும் முக்கியமானது. இதை எழுதும்போது, மாதவனும் வடிவேலுவும் நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சி என் நினைவுக்கு வருகிறது. வடிவேலு ஒரு கவுன்சிலர்; அவரைப் பார்க்க மக்கள் காத்திருப்பார்கள். வடிவேலுவுக்கு எதிராக மக்களைத் திருப்ப வேண்டும். அதற்காக மக்களுக்கு நன்றாக கேட்கும்படி சில செய்திகளை யாரிடமோ பேசுவது போல் மாதவன் சொல்லுவார். மக்கள் அதை நம்பி வடிவேலுவுக்கு எதிராக திரும்புவார்கள். ‘அவன் சொன்னதை நம்பியா என்னை எதிர்க்கறீங்க’ என்று கும்பலைப் பார்த்து வடிவேலு கேட்பார். அப்போது கூட்டத்தில் ஒருவர், ‘சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்று சொல்வார்.
அதைப் போல அர்ஜூன்சிங் நமக்கு ஒரு தகவல் சொல்கிறார். அது என்ன? நேரு குடும்பத்து வாரிசுகள் தப்பு செய்ய மாட்டார்கள்!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 22.08.10
0 Comments:
Post a Comment
<< Home