நதி போல ஓடிக் கொண்டிரு!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கொடுக்கப்பட்டு வந்த மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றிருந்ததால் அதற்குக் கிடைத்த அங்கீகாரம் ரத்தாகிறது. ஆனால் அடுத்த ஆறு வருடங்களுக்கு அதாவது 2016 ஜூன் 29 வரை தமிழகத்தில் அந்தக் கட்சி பம்பரம் சின்னத்திலேயே போட்டியிடலாம். உடனடியாக சின்னம் மாறாத நிலையில், இந்த அங்கீகாரம் ரத்தாவதால் அந்தக் கட்சிக்கு ஏற்படும் இழப்பு என்ன? அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வானொலி, அரசுத் தொலைக்காட்சி ஆகியவற்றில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு மதிமுகவுக்கு வாய்ப்பு கிடைக்காது!
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சிக்கு மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் எப்படி வழங்கப்படுகிறது? தேர்தல் ஆணையம் அதற்கு இரண்டு நிபந்தனைகளை முன்வைக்கிறது. இரண்டில் ஒன்றை நிறைவேற்றினால் கூட அந்தக் கட்சிக்கு மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைக்கும். முதல் நிபந்தனை ஒரு கட்சி வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பானது. மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொண்டால், ஒரு மாநிலத்தில் இருக்கும் மக்களவைத் தொகுதிகளில் 25க்கு ஒன்று என்ற அளவில் ஒரு கட்சியின் உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும். அதாவது தமிழகத்தில் 39 தொகுதிகள் என்றால், ஒரு கட்சி சார்பாக இரண்டு எம்.பி.க்கள் ஜெயிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டால், மொத்த தொகுதிகளில் 30க்கு ஒரு தொகுதி ஜெயிக்க வேண்டும். தமிழகத்தில் 234 தொகுதிகள் என்றால் 7.8 தொகுதிகள் அதாவது அந்தக் கட்சி எட்டு தொகுதிகளில் வெல்ல வேண்டும். இரண்டாவது நிபந்தனை, ஒரு கட்சி பெறும் மொத்த வாக்குகள் சம்பந்தப்பட்டது. ஒரு தேர்தலில் அந்த மாநிலத்தில் பதிவான மொத்த செல்லத்தக்க வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகளை அந்தக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் சேர்ந்து பெற்றிருக்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை ஒரு கட்சி பெற்றிருந்தால் அது மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறும்.
கடந்த மக்களவைத் தேர்தலிலும் சரி, மாநில சட்டமன்றத் தேர்தலிலும் சரி, இந்த விதிகளில் சொல்லப்பட்ட எண்ணிக்கையை மதிமுக எட்டவில்லை. 2009 மக்களவைத் தேர்தலில் மதிமுக நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் வென்றது. தேர்தல் ஆணையத்தின் விதிப்படி மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் பெற இரண்டு தொகுதிகளையாவது கைப்பற்றி இருக்க வேண்டும். நான்கு தொகுதிகளிலும் சேர்த்து அந்தக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளும் மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறு சதவீதத்தை எட்டவில்லை. 2006 சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக எடுத்துக் கொண்டாலும் 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு இடங்களில் மட்டுமே மதிமுக வென்றது. கட்சிக்குக் கிடைத்த வாக்குகளும் பதிவான மொத்த செல்லத்தக்க வாக்குகளில் 5.98 சதவீதமாகவே இருந்தது. எனவே தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை மதிமுக இழந்திருக்கிறது.
மதிமுகவின் பொதுச் செயலர் வைகோ இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். ” குடியரசுத் தலைவர் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணும் போது, 0.5 அல்லது அரை சதவிகிதத்திற்குமேல் கிடைக்கும் ஓட்டுகளை ஒன்றாக கணக்கிடலாம் என்று இந்திய அரசியல் சட்ட விதி கூறுகிறது. அரசியல் சட்டமே அங்கீகரித்துள்ள விதியின்படி, ம.தி.மு.கழகத்திற்கு .98 சதவிகிதம் ஓட்டுக் கணக்கை 1 என ஏற்றுக்கொள்ள வேண்டும் என நமது கருத்தை முன்வைத்தோம். தேர்தல் ஆணையம் அதனை ஏற்கவில்லை. கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் 52 வாக்குகள் வித்தியாசத்திலும் தொட்டியம் தொகுதியில் 53 வாக்குகள் வித்தியாசத்திலும் துறைமுகம் பகுதியில் 412 வாக்குகள் வித்தியாசத்திலும், சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் சில தொகுதிகளிலும் நாம் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது” என்று அந்த அறிக்கையில் விளக்கம் கொடுத்திருந்தார்.
வைகோ முன்வைக்கும் இரண்டு சமாதானங்களும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படாததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. “பதிவான மொத்த செல்லத்தக்க வாக்குகளில் ஆறு சதவீதத்துக்குக் குறையாமல் ஒரு கட்சி வாக்குகளைப் பெற வேண்டும்’ என்று விதி தெளிவாக சொல்கிறது. அப்படி இருக்கும்போது .02 சதவீதம் தானே குறைகிறது என்று கேட்பதில் அர்த்தம் இல்லை. அதைப் போலவே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சில தொகுதிகளை இழந்தோம் என்ற வாதமும் நிராகரிக்கப்பட்டதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ‘வெற்றிக் கோட்டை முதலில் யார் தொடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்’ என்ற அடிப்படையில் நம்முடைய தேர்தல் நடக்கிறது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோல்வி தோல்விதான் என்று சொல்லும் ஒரு தேர்தல் முறையில் இந்த சமாதானங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படாது! சென்ற தேர்தலை விட இந்தத் தேர்தலில் கட்சிக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் அதிகமாகி இருக்கிறது என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரை விட மீதி வேட்பாளர்கள் அனைவரும் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என்னும்போது அந்தத் தொகுதி மக்கள் அவரை நிராகரித்திருக்கிறார்கள் என்று தான் அர்த்தம் என்று சொல்லிக் கொள்ளலாம். இதனால் எல்லாம் ஒருவருடைய மனம் அமைதியடையலாம் என்பதைத் தவிர வேறு பலன் ஒன்றும் இல்லை!
மதிமுக 1994-ம் வருடம் உருவானது; 1996-ல் முதன்முதலில் தேர்தலை சந்தித்தது. மார்க்சிஸ்ட் கட்சியுடனும் ஜனதா தளத்துடனும் சேர்ந்து போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மதிமுக தோற்றது. விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலும் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்ட வைகோ இரண்டிலுமே தோற்றுப் போனார். திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி கிளப்பிய சூறாவளியில் வைகோவின் கையில் இருந்த ’குடை’ பறந்து போனது. 1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து நின்ற போது சிவகாசி, பழனி, திண்டிவனம் ஆகிய மூன்று தொகுகளில் மதிமுக வெற்றி பெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையம் மதிமுகவை மாநிலக் கட்சியாக அங்கீகரித்தது. அதன்பின் 2001 சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடைக்கவில்லை என்றாலும், 1999, 2004 மக்களவைத் தேர்தல்களில் நான்கு உறுப்பினர்களை அந்தக் கட்சி மக்களவைக்கு அனுப்பி வைத்தது. அதற்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் அந்தக் கட்சிக்குக் கிடைத்த முடிவுகளால் இப்போது அந்தக் கட்சி மாநிலக்கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து நிற்கிறது.
அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை மீண்டும் பெறுவோம் என்று வைகோ அவருடைய கட்சித் தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். கூட்டணியின் உதவியுடன் அடுத்த 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் எட்டு தொகுதிகளில் மதிமுக ஜெயிக்கலாம்; அல்லது 2014 மக்களவைத் தேர்தலில் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் அல்லது அதற்கும் மேலான தொகுதிகளில் மதிமுக வெல்லக் கூடும். அப்படி ஜெயிக்கும் நிலையில், அந்தக் கட்சியை மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையம் மறுபடியும் அங்கீகரிக்கும். 2016-க்குள் மறுபடியும் தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைத்தால், கட்சிக்கு கிடைத்த சின்னம் மாறாது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், பம்பரம் சின்னத்தைக் காப்பாற்றித் தக்கவைத்துக் கொள்வதற்கு அந்தக் கட்சிக்கு இன்னும் மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என்பது தேர்தல் நடைமுறை தொடர்பானது. அதை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், கட்சியில் வைகோவின் தலைமையை தொண்டர்கள் அங்கீகரிக்கிறார்களா என்பதும் அந்தக் கட்சியை பொதுமக்கள் அங்கீகரிக்கிறார்களா என்பதும் முக்கியமாகிறது. இப்போது கட்சியில் இருக்கும் தொண்டர்கள் வைகோவின் தலைமையை ஏற்றவர்களாகவே இருக்கிறார்கள். வைகோவின் தலைமையை ஏற்க இயலாதவர்கள் கட்சியை விட்டு போய்விடுகிறார்கள். எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் போன்ற ஊடக தொடர்பு கொண்டவர்கள் சிலரும் கட்சியை விட்டு போயிருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேசமயம் புதிய இளைஞர்களை அந்தக் கட்சிக் கூட்டங்களில் பார்க்க முடிகிறது என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை!
அடுத்ததாக, கட்சியை பொதுமக்கள் அங்கீகரிக்கிறார்களா என்ற கேள்வி வருகிறது. தேர்தல் முடிவுகளையே மக்கள் அங்கீகாரமாக இன்றைய சூழலில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் மக்கள் அங்கீகாரமும் ஏறத்தாழ ஒன்றாகிறது. இந்நிலையில் கட்சியின் ஆதரவுத் தளம் என்ன என்று பார்ப்பது அவசியமாகிறது. வேறு சில கட்சிகளைப் போல, மதிமுகவுக்கு பலமான சாதிய பின்னணி இல்லை. கொள்கை அடிப்படையிலேயே அந்தக் கட்சியின் ஆதரவுத் தளம் இருக்கிறது. தமிழீழ ஆதரவாளர்களில் ஒரு பிரிவினரே மதிமுகவின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அந்த ஆதரவை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அடுத்தடுத்த தளங்களில் மக்களுடைய ஆதரவை விரிவுபடுத்தினால் மட்டுமே அந்தக் கட்சியால் தேர்தல் வெற்றிகளைப் பெற முடியும். அரசியல் உணர்வை மக்களிடம் அரசியல் கட்சிகள் வளர்க்காத நிலையில், கொள்கை சார்ந்த அரசியல் கட்சிகள் ஒரு தேக்க நிலையை அடையக் கூடும். ’எதிரி விரும்புவதை செய்யாதிரு’ என்ற முழக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்தான். ஆனால் அந்த ஒரே நிலைப்பாடு மட்டுமே மக்களிடம் கட்சியை வளர்ப்பதற்கு உதவி செய்யுமா என்பதையும் மதிமுக சிந்திக்க வேண்டும்.
அந்த வகுப்பில் இருந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பற்றி அந்த ஆசிரியர் வகுப்பு எடுத்துக் கோண்டிருந்தார். அவர் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து மாணவர்களிடம் காட்டினார். ’இந்தப் பணம் உங்களுக்குக் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்வீர்களா?’ என்று கேட்டார். எல்லா மாணவர்களும் ஒரே குரலில் மாட்டோம் என்றார்கள். அவருடைய கை விரல்கள் அந்த நோட்டை கசக்கின. கசங்கிய ஆயிரம் ரூபாய் தாளை மீண்டும் அவர்களிடம் காட்டி,”உங்களுக்கு இந்த நோட்டு வேணுமா?” என்று கேட்டார். எல்லோரும் ”ஆமாம்; எங்களுக்கு கொடுங்கள் என்றார்கள். புத்தம் புதுசா இருந்த ரூபாய் நோட்டு கசங்கி இருக்கிறதே, அதுவா உங்களுக்கு வேண்டும் என்று கேட்டார். “ரூபாய் நோட்டு கசங்கி இருப்பதாலோ அழுக்காய் இருப்பதாலோ அதன் மதிப்பு மாறிவிடுவதில்லை” என்று மாணவர்கள் பதில் சொன்னார்கள். அதன் பின் ஆசிரியர் சொன்னார்,” நீங்களும் அந்த ரூபாய் நோட்டைப் போன்றவர்களே. உங்களுக்கு என்று தனி மதிப்பு இருக்கிறது. உங்களை யாரும் அங்கீகரிக்கவில்லை என்றாலோ, மரியாதை கொடுக்கவில்லை என்றாலோ உங்கள் மதிப்பு குறைந்துவிடுவதில்லை. தன்னம்பிக்கையோடு நீங்க செயல்படறவரைக்கும் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது” என்று சொன்னார்.
அங்கீகாரங்களைப் பற்றி கவலைப்படாமல், கொள்கையில் ஒரு கட்சி கொண்டிருக்கும் உறுதியே அதன் மதிப்பைக் குறையாமல் பாதுகாக்கும்!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home