Saturday, August 27, 2005

வருடுகிறாய் என்னை...

அன்பே ஆருயிரே படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து
மதுஸ்ரீ மற்றும் நரேஷ் அய்யர் பாடிய பாடல்.

பாடலில் பழைய சாயல் தெரிகிறதே என்று இசைமேதைகள் யாரும் கத்தி எடுத்து விடாதீர்கள்..
பாடலின் வரிகளைப் போலவே இசையும் மயிலிறகால் வருடிக் கொடுப்பது போல் உணர்ந்தேன்..பாடல் வரிகளைப் பதிகிறேன்..

பாடல் இதோ:

மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல
மழைநிலவே மழைநிலவே விழியில் எ(ல்)லாம் உன் உலா
உயிரைத் தொடர்ந்து வரும் நீ தானே மெய்யெழுத்து
நான் போடும் கையெழுத்து அன்பே!
உலக மொழியில் வரும் எல்லாமே நீர் எழுத்து
காதல்தான் கல்எழுத்து அன்பே (மயிலிறகே)

மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா மெதுவா மெதுவா
இங்கு வைகையில் வைத்திடு கை

பொதிகை மலையைப் பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்

ஓர் இலக்கியம் நம் காதல்
வான் உள்ள வரை வாழும் பாடல்! (மயிலிறகே)

தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இந்த சேவையில் வருதா
அமிழ்தாய் அமிழ்தாய் அமிழ்தாய்
கவி ஆற்றிட நீ வருவாய்

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா

பால் விளக்கங்கள் நீ கூறேன்
ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு..
(மயிலிறகே)

Tuesday, August 23, 2005

அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா

சன் குழுமம் தினகரன் நாளிதழ் வாங்கியது குறித்து காலச்சுவடு ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அது குறித்து சில பதிவுகளும் வந்துள்ளன. அடிப்படையில் ஒரு நியாயமும் அவர்களது வாதத்தில் தெரியவில்லை. அவை என்னுள் எழுப்பிய எண்ணங்களே இந்தப் பதிவு.

ஒரு பெரிய எழுத்தாளர் அல்லது அவரது குடும்பம் ஒரு பத்திரிகை நடத்தலாமா? அவரே பதிப்பகமும் நடத்தலாமா? தமிழ் இலக்கியத்தின் போக்கையே அது தன்னிஷ்டத்திற்கு வளைத்து விடாதா?

ஒரு குழுமம் தனது தொழிலைப் பலமுனைகளில் வளர்த்தெடுப்பது ஏன் பிறர் கண்களை உறுத்துகிறது? பூமாலையில் இருந்து கலாநிதிமாறன் சாட்டிலைட் டிவிக்குப் புதிதாகத் தொழில் மாற்றம் செய்தது அவர் சிறந்த தொழிலதிபர் என்ற திறமையைக் காட்டியது. ஏன் மற்றவர்கள் அந்தத் தொழிலில் முன்னோடியாக முன்வரவில்லை? அந்த ரிஸ்கை எடுக்க முன்வரவில்லை? ரிஸ்க் எடுத்து புதிய சந்தையைக் கண்டுபிடிப்பதும் உருவாக்குவதும் தானே ஒரு தொழிலதிபரின் வேலை?

ஒருவேளை சன் குழுமம் தனது புதிய முயற்சி ஒன்றில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்ன சொல்லப்படும்? அதிகார துஷ்பிரயோகத்திற்குப் பின்னும் சன்னால் வெற்றி பெற முடியவில்லை என்று மகிழ்ச்சியோடு கூத்தாடமாட்டார்களா?

நுனிநாக்கு ஆங்கிலம், தளுக்கு போன்ற வார்த்தைகளைத் தனிமனிதர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் நிலைக்கு காலச்சுவடு போயிருக்க வேண்டாம்.

சன் டி.வி. நடத்துபவர் சூர்யா, தேஜா, கே, ஜெமினி, என்று பல சேனல்கள் தொடங்கக் கூடாது என்று ஏதேனும் தடை இருக்கிறதா? இந்திய சட்டங்கள் அனுமதிக்கும் வட்டத்திற்குள் தானே இந்தத் தொழில் நடைபெறுகிறது? மீடியாவில் முதலீடு செய்வது சட்ட விரோதமா?

திமுகவுக்கு பாதுகாப்பு அரணாக – திரு. மு.கருணாநிதி அவர்களுக்குப் பாதுகாப்பாக – நள்ளிரவு கைதின்போது சன் டி.வி.தான் நின்றது. ஆம்..உண்மைதான்..அது வேறு என்ன செய்ய வேண்டும் என்று கீதா உபதேசம் செய்கிறார் இந்தக் கண்ணன்?

கருணாநிதிக்குப் பிறகு முதல்வர் பதவியோ திமுக தலைவர் பதவியோ ஸ்டாலினுக்குப் போனால் என்ன தயா/கலா நிதிக்குப் போனால் என்ன? கண்ணனுக்கு என்ன அக்கறை அது ஸ்டாலினுக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று? அது அக்கறை அல்ல சிண்டு முடியும் பணி..

"ஊடக சக்தியும் அரசியல் சக்தியும் இணையும்போது ஆபத்து இரட்டிப்பாகிறது. சன் டிவியை மட்டும் பார்ப்பவர்களுக்கு தமிழகத்தில் வைகோ என்ற தலைவர் இருக்கிறார் என்றே தெரியாது" என்கிறார். வைகோ என்ன சொல்கிறார்? அது அந்த ஊடகத்தின் விருப்பம் என்கிறார். நான் அந்த டிவியைப் பார்ப்பதில்லை என்கிறார். காலச்சுவடு மட்டும் படிக்கும் இலக்கியவாதிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் தெரியுமா என்ன?

திமுக என்ற அரசியல் கட்சியிடம் – அதன் தலைவரிடம் – கொள்கைகளை எதிர்பாருங்கள்.. எந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் கொள்கையைப் பார்த்து அதற்கு தங்கள் காலச்சுவடு பத்திரிகையிலும் இடம் கொடுக்கிறார்கள்? கொள்கை நீக்கம் செய்யப்பட்ட வியாபார உத்திகள் என்று சன் டிவியைப் பார்த்துப் பொறுமுவது ஏன்?

காலச்சுவடில் 'பத்தி' எழுத வாய்ப்புக் கிடைப்பவர்களும் அதற்காக காத்திருப்பவர்களும் காலச்சுவடின் இலக்கிய மேலாதிக்கத்தை விமர்சிக்க மாட்டார்கள் போலிருக்கிறது. அதே தத்துவத்தை சன் டிவிக்கும் பொருத்திப் பார்க்கிறார்.
நான் இதுவரை வணக்கம் தமிழகத்தில் பங்கேற்கவும் இல்லை. அதற்கான சபலமும் எனக்கில்லை. ஒருவேளை ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையிலோ வாலறுந்த நரி கதையிலோ யார் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது..

அரசியல் ரீதியாக திமுகவை அதிமுக எதிர்கொள்வதும், வர்த்தகரீதியாக சன் டி.வி- குங்குமம் – தினகரனை அவற்றின் போட்டியாளர்கள் எதிர்கொள்வதுமே ஜனநாயகரீதியாக சரியானதாக இருக்கும். பல தொழில் நிறுவனங்களுக்கு ஆட்சியின் ஆதரவு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றைய பொருளாதாரச் சூழலில் Level playing field குறித்துப் பேசுவதே பல கால கட்டங்களில் பல ஊடகங்களுக்கு ஆட்சி ஆதரவு இருந்து வந்ததை மறைப்பதாகத் தான் தெரிகிறது.

வெகுஜன ஊடகங்களுக்கு எதிராக பேசி கொண்டே அதன் மினியேச்சராக இருப்பது பலருக்கு இன்று வாடிக்கை. இவர்களில் பலர் வெகுஜன ஊடகங்களின் அங்கீகாரத்திற்காக தவம் கிடக்கிறார்கள். கொள்கைரீதியாக வணிகமயமான ஊடகச் சூழல் குறித்து பேசுபவர்களை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ என்னவோ குறைந்தபட்சம் மதிப்பார்கள். ஆனால் வெகுஜன ஊடகங்களில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டே மாற்று ஊடகம் குறித்து போலியாக வாய்கிழியப் பேசுவோரை யார் மதிப்பார்கள்?

சன் டிவி அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறதா இல்லையா என்பது வேறுவிஷயம். அவரவர்கள் அவரவர் நிலையில் கிடைக்கும் அதிகாரத்தை பயன்படுத்தாமல்தான் இருக்கிறார்களா?

எனது இந்தப் பதிவு சன் டிவிக்கு ஆதரவாக எழுதப்பட்டது என்று நீங்கள் எடுத்துக் கொள்வதைவிட ஒரு சிலரின் காழ்ப்புணர்வுக்கு எதிரான பதிவு என்று பார்ப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

Friday, August 19, 2005

கேழ்வரகில் நெய்

"மன்னிப்பு ... தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை.."
ரமணாவில் விஜயகாந்தின் பஞ்ச் டயலாக்...
மன்னிப்பு மனித குணம்..சின்னச் சின்ன குற்றங்களுக்குக் கூட மரண தண்டனை வழங்குவது பாசிசம்..
நானாவதி கமிஷனுக்குப் பிறகு பிரதமர் மன்மோகன்சிங் 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்காக நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார். "அவமானத்தில் தலை குனிவதாகக்" கூறினார். பிரதமரின் இந்த செய்கையை ஊடகங்கள் பாராட்டுகின்றன. மன்மோகன்சிங்கை மிக மிக நேர்மையானவர் என்று புகழ்ந்து தள்ளுகின்றன. அவர்களது தாக்குதல் இலக்கு சோனியா காந்தி என்பது வேறு விஷயம்.

ஒரு புதிய பிரதமருக்கு சுதந்திரமாகச் செயல்படுவதற்காக கடுமையான விமர்சனங்கள் இன்றி "தேனிலவுக்காலம்" வழங்குவது ஊடகங்களின் மரபு. அது அவசியமா இல்லையா என்பது வேறு விஷயம். அப்படித்தான் சீன இந்தியப் போர் மூளும் வரை ஜவஹர்லால் நேரு இந்தியாவின் நம்பிக்கையாகப் பார்க்கப்பட்டார்.

லால் பகதூர் சாஸ்திரியின் பதவிக்காலமே குறுகியதாக இருந்ததால் அவருக்கு நீண்ட தேனிலவுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இந்திரா பதவி ஏற்ற காலத்தில் பலவிதமான நெருக்கடிகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காங்கிரஸ் கட்சியை அமைப்புரீதியாக அவர் பலவீனப்படுத்தியதையும், அதிகாரத்தை மத்திய தலைமையிடம் குவித்துக் கொண்டதையும், இந்திய அரசியலின் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்ததையும் ஊடகங்கள் பெருமளவில் கண்டு கொள்ளவில்லை. இந்திரா வளையச் சொன்னால் ஊடகங்கள் தவழத் தயாராக இருந்தன.

நெருக்கடிநிலை நீங்கி தேர்தல் வரும்போது ஊடகங்கள் மொரார்ஜியைத் தாங்கி நின்றன.ஆனால் அதுவும் நெடுநாட்கள் நீடிக்கவில்லை. வி.பி.சிங் தலையெடுக்கும்வரை "மிஸ்டர் க்ளீன்" ராஜீவ்காந்தி 21 ஆம் நூற்றாண்டுக்கு நம்மைக் கைகளைப் பற்றி அழைத்துச் செல்பவராகவே வர்ணிக்கப்பட்டார். மண்டல் கமிஷன் வரும்வரை வி.பி.சிங் மீடியாக்களின் ஹீரோ.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடந்தபோது உள்துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ். 1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியப் பிரதமர் நரசிம்மராவ். இருந்தும் ஊடகங்கள் அவரைச் "சிரிக்காத பிரதமர்" என்று கிச்சுக்கிச்சு மூட்டினவே தவிர கடுமையாக விமர்சிக்கவில்லை.

தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் பதவிக் காலம் மிகக் குறுகியது. மீண்டும் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு ஊடகங்கள் அமோக ஆதரவு தந்தன. இப்போது டாக்டர் மன்மோகன்சிங் குறித்துக் கேட்கவே வேண்டாம்.. அவர் ஊடகங்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் புனிதப் பசு!

இந்தப் பீடிகை, பின்னணி எல்லாம் எதற்கு? மன்மோகன்சிங்கின் நேர்மை குறித்த பார்வை காரணமாகவே. அவர் கடந்த காலத்தில் ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்திருக்கலாம். ஆனால் அரசியலில்...?
மன்மோகன்சிங் காங்கிரஸ் கட்சியிலேயே ஆதிகாலம் தொட்டு இருந்திருந்தால் அது வேறு விஷயம். அவர் எப்போது காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார்? 1984 சீக்கியர்களுக்கெதிரான கலவரம் நடந்து முடிந்து அதற்காக காங்கிரஸ் கட்சி வருத்தம் தெரிவிக்காமல் இருக்கும் போது.. 1991 இல் நிதியமைச்சராக... நவம்பர் 1984 கோர நாட்களுக்குப் பிறகு...இவரிடம் போய் ஊடகங்கள் நேர்மையைத் தேடுகின்றன.. 1992 டிசம்பர் 6, மார்ச் 2002 க்குப் பிறகு பாரதிய ஜனதாக் கட்சியில் நம்பிக்கை வைத்து சேர்பவர்களை என்ன பெயர் கொண்டு அழைக்கிறோமோ அதே பெயர் கொண்டுதானே மன்மோகன்சிங்கையும் அழைக்க வேண்டும்?

ஜெகதீஷ் டைட்லர் முக்கிய அமைச்சராக இருந்த அமைச்சரவையில் இவரும் ஒரு அமைச்சர்..

சஜ்ஜன்குமார் உறுப்பினராக இருக்கும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக்கு இவர் தலைவர்..

அப்போதெல்லாம் இவர் வெட்கித் தலைகுனியவில்லை. இப்போது மட்டும் அவமானத்தில் தலை குனிகிறாராம்.. ஊடகங்கள் பாராட்டுகின்றன.. கேழ்வரகில் நெய் என்கிறார்கள்.. நம்புவதற்கும் நம்பாமல் இருப்பதற்கும் நமக்கு மதி இல்லையோ?

Monday, August 15, 2005

சுதந்திர தினம்

இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் கொடியேற்ற இந்தியாவின் 58 ஆவது சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.(தமிழகத்தில் இன்று 59 வது சுதந்திர தின விழா!) இந்தியா இப்போது செல்லும் ஏழு சதவீத பொருளாதார வளர்ச்சியில் இன்னும் சில ஆண்டுகள் சென்றால் இந்தியாவில் வறுமை ஒழிந்துவிடும் என்று பிரதமர் கூறினார். யாரோ இந்திரா காந்திக்கு 71 தேர்தலுக்கு முன்னர் எழுதிக் கொடுத்த வாசகங்களை இப்போது சேர்த்துவிட்டர்களோ என்று நாட்டு மக்கள் சந்தேகப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அல்லது விவேக் நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சி போல் டீக்கடை வாசலில் இந்திரா பிரதமராக இருந்த போதுள்ள ஒரு நாளிதழை டீ குடிக்க வந்தவர்கள் படித்துக் கொண்டிருப்பதுபோல் பழக்க தோஷத்தில்..............?

வறுமை ஒழிய வேண்டியதுதானே? முதல் கட்டமாக ஐ.எம்.எப்., உலக வங்கி தொடர்பானவர்களது வறுமை ஒழியட்டும்..பிறகு பார்க்கலாம் மற்றவர்களை..

சுதந்திரதினத்தில் பிரதமர் உரை குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் குறித்து பாகிஸ்தானை இன்னும் உறுதியாக எச்சரிக்க வேண்டுமாம்.. (பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பறிக்காவிடில் அணு ஆயுதங்களைப் பிரயோகிப்போம் என்று டேய் வந்து பாருடா ஸ்டைலில் பேச வேண்டும் போலிருக்கிறது!)
காஷ்மீரில் முதல்வர் முப்தி முகமது செய்யது பேசிய கூட்டத்தில் குண்டு வெடிப்பு, ஆந்திராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஒன்பது பேர் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பலி, இரண்டு சம்பவங்கள் தவிர சுதந்திரதினக் கொண்டாட்டம் இனிதே நிறைவடைந்தது.

Monday, August 01, 2005

அணுவின்றி இந்தியா அசையாதா?

இன்று மாலன் தினமணியில் ஒரு பத்தி எழுதியிருந்தார். அணுவின்றி.. என்ற தலைப்பில்.
அவரிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

1974 இல் இந்தியா அணு சோதனை செய்தது. "நாங்கள் ஏழைகளாக இருக்கலாம்; ஆனால் முட்டாள்கள் அல்லஎன்று இந்தியர்கள் உலகுக்கு நிரூபித்தார்கள்" என்று இதில் பெருமிதம் கொள்கிறார்.

அணுசோதனை மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிராகக் கருத்துக்கள் கொண்டவர்களைப் பொதுவாக தேசபக்தி குறைந்தவர்கள் என்று ஊடகங்களில் ஆளுவோர் சித்தரிப்பார்கள். உலகம் முழுவதும் போருக்கு எதிராகவும் அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாகவும் மக்கள் உணர்வு கொண்டு வருகிறார்கள்.
போரையும் ஆக்கிரமிப்பையும் விரும்புகிறவர்கள் இந்த உணர்வு வளராமல் தடுக்கிறார்கள். இந்தியாவையும் போர்களை ஆதரிக்கும் பட்டியலில் இடம்பெறச் செய்த முயற்சிகள் நிறைவேறவில்லை.

இது ஆகஸ்ட் மாதம். ஹிரோஷிமா, நாகசாகி நம் நினைவுக்கு வருகிறது. மாலன் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் அணுசக்தியைத் தான் ஆதர்க்கிறாரே தவிர அணு ஆயுதங்களை அல்ல என்பதைத் தெளிவாக்கியிருக்கிறார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்று வந்தவுடனேயே இந்தப் பிரச்னை குறித்து எழுதலாம் என்றிருந்தேன்.
ஏனோ செயல்படுத்த முடியாமல் போயிற்று. இன்று மாலனின் கட்டுரை படித்தவுடன் எழுந்த உணர்வுகளையும் கேள்விகளையும் மட்டுமே பதிவு செய்கிறேன்.

ஆக்கத்திற்கு அணு தேவை;ஆயுதத்திற்கு அல்ல என்பது அவரது நிலை. ஆக்கப்பணிகளுக்காக என்று சொல்லப்படும் அணு உலைகளில் இருந்துதான் ஆயுதத்திற்குத் தேவையான புளூட்டானியம் எடுக்கப்படுகிறது. இவ்வளவு காலம் ஆக்கப் பணிக்கும் ஆயுதத் தயாரிப்புக்கும் இடையில் இருந்து வந்த தொடர்பு, சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு நடத்த இந்தியா அனுமதித்ததால் அற்றுப் போகிறது. இதைத் தான் பாஜக பரிவாரங்கள் எதிர்க்கின்றன. இது வேறு விஷயம்..

அணு சோதனை அறிவியல் சாதனை, அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படை சிந்தனையிலேயே வேறுபடுவதால் அதன் தொழில்நுட்ப விபரங்களுக்குள் போக நான் விரும்பவில்லை. இந்தியாவில் கடந்த 40 வருடங்களாக எந்த விபத்தும் நேரவில்லை என்பதாலேயே அதன் ஆபத்துக்களை உணரத் தவறிவிடக் கூடாது. விபத்து என்பது எப்போதாவது நிகழ்வதுதான். அன்றாட நிகழ்ச்சியல்ல. ரஷ்யாவில் நடந்த செர்னோபில் அணு விபத்தும் அதன் பாதிப்பும் நமது கண்களைத் திறக்க வேண்டும். தாராப்பூர், டிராம்பே, கல்பாக்கம், கூடன்குளம் இவை எல்லா இடங்களிலும் எந்தவித விபத்தும் நேராது என்ற உத்தரவாதத்தை யாராவது வழங்க முடியுமா?

செர்னோபிலுக்குப் பிறகு பல நாடுகளில் அணு உலைகளுக்கு எதிரான இயக்கம் வலுப்பெற்று வருவதாகத் தெரிகிறது.
ஜெர்மனியும் பிரான்ஸும் புதிய அணு உலைகளை உருவாக்கத் தயங்கின என்று செய்திகளில் அறிய முடிகிறது. பல நாடுகளில் படிப்படியாக அணு உலைகளில் இருந்து விடுபட முயற்சிகள் நடப்பதாகவும் தெரிகிறது.

மேலும் அணுமின்நிலையங்கள், அனல்,புனல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியைவிட மலிவான விலையில் மின்சாரத்தைத் தருகின்றன என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. மாறாக அவை அதிகச் செலவும் சுற்றுச் சூழல் சீர்கேடும் பேரழிவும் ஏற்படுத்த வல்லவை என்பதே எனது புரிதல்.

இந்திய அணு ஆய்வை சர்வதேச நிறுவனம் பார்வையிட அனுமதிப்பது, அணுப்பணிகளை மக்கள் பணி மற்றும் ஆயுதத் தேவை என்று இரண்டாகப் பிரிப்பது, அமெரிக்காவிடம் இருந்தே எரிபொருள் வாங்குவது போன்ற பல விஷயங்கள் இதுவரை இந்தியா சென்ற பாதையில் இருந்து மாறிப் போவதையே காட்டுகிறது. இதை என்னால் மன்மோகன்சிங்கின் பொருளாதாரக் கொள்கையைப் போல் புதிய அணுகுமுறை என்று பார்க்க முடியவில்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை என்று
பாரத்தைக் கடவுள் தலையில் சுமத்தவும் முடியவில்லை. யாரிடம் எந்தவிதமான நம்பிக்கையை வைப்பது என்ற கேள்வி எழுகிறது.அரசியல் ரீதியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.அதற்காக அதன் அத்தனை செயல்பாடுகளையும் ஆதரிக்க முற்படுவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.