Friday, August 19, 2005

கேழ்வரகில் நெய்

"மன்னிப்பு ... தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை.."
ரமணாவில் விஜயகாந்தின் பஞ்ச் டயலாக்...
மன்னிப்பு மனித குணம்..சின்னச் சின்ன குற்றங்களுக்குக் கூட மரண தண்டனை வழங்குவது பாசிசம்..
நானாவதி கமிஷனுக்குப் பிறகு பிரதமர் மன்மோகன்சிங் 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்காக நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார். "அவமானத்தில் தலை குனிவதாகக்" கூறினார். பிரதமரின் இந்த செய்கையை ஊடகங்கள் பாராட்டுகின்றன. மன்மோகன்சிங்கை மிக மிக நேர்மையானவர் என்று புகழ்ந்து தள்ளுகின்றன. அவர்களது தாக்குதல் இலக்கு சோனியா காந்தி என்பது வேறு விஷயம்.

ஒரு புதிய பிரதமருக்கு சுதந்திரமாகச் செயல்படுவதற்காக கடுமையான விமர்சனங்கள் இன்றி "தேனிலவுக்காலம்" வழங்குவது ஊடகங்களின் மரபு. அது அவசியமா இல்லையா என்பது வேறு விஷயம். அப்படித்தான் சீன இந்தியப் போர் மூளும் வரை ஜவஹர்லால் நேரு இந்தியாவின் நம்பிக்கையாகப் பார்க்கப்பட்டார்.

லால் பகதூர் சாஸ்திரியின் பதவிக்காலமே குறுகியதாக இருந்ததால் அவருக்கு நீண்ட தேனிலவுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இந்திரா பதவி ஏற்ற காலத்தில் பலவிதமான நெருக்கடிகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காங்கிரஸ் கட்சியை அமைப்புரீதியாக அவர் பலவீனப்படுத்தியதையும், அதிகாரத்தை மத்திய தலைமையிடம் குவித்துக் கொண்டதையும், இந்திய அரசியலின் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்ததையும் ஊடகங்கள் பெருமளவில் கண்டு கொள்ளவில்லை. இந்திரா வளையச் சொன்னால் ஊடகங்கள் தவழத் தயாராக இருந்தன.

நெருக்கடிநிலை நீங்கி தேர்தல் வரும்போது ஊடகங்கள் மொரார்ஜியைத் தாங்கி நின்றன.ஆனால் அதுவும் நெடுநாட்கள் நீடிக்கவில்லை. வி.பி.சிங் தலையெடுக்கும்வரை "மிஸ்டர் க்ளீன்" ராஜீவ்காந்தி 21 ஆம் நூற்றாண்டுக்கு நம்மைக் கைகளைப் பற்றி அழைத்துச் செல்பவராகவே வர்ணிக்கப்பட்டார். மண்டல் கமிஷன் வரும்வரை வி.பி.சிங் மீடியாக்களின் ஹீரோ.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடந்தபோது உள்துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ். 1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியப் பிரதமர் நரசிம்மராவ். இருந்தும் ஊடகங்கள் அவரைச் "சிரிக்காத பிரதமர்" என்று கிச்சுக்கிச்சு மூட்டினவே தவிர கடுமையாக விமர்சிக்கவில்லை.

தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் பதவிக் காலம் மிகக் குறுகியது. மீண்டும் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு ஊடகங்கள் அமோக ஆதரவு தந்தன. இப்போது டாக்டர் மன்மோகன்சிங் குறித்துக் கேட்கவே வேண்டாம்.. அவர் ஊடகங்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் புனிதப் பசு!

இந்தப் பீடிகை, பின்னணி எல்லாம் எதற்கு? மன்மோகன்சிங்கின் நேர்மை குறித்த பார்வை காரணமாகவே. அவர் கடந்த காலத்தில் ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்திருக்கலாம். ஆனால் அரசியலில்...?
மன்மோகன்சிங் காங்கிரஸ் கட்சியிலேயே ஆதிகாலம் தொட்டு இருந்திருந்தால் அது வேறு விஷயம். அவர் எப்போது காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார்? 1984 சீக்கியர்களுக்கெதிரான கலவரம் நடந்து முடிந்து அதற்காக காங்கிரஸ் கட்சி வருத்தம் தெரிவிக்காமல் இருக்கும் போது.. 1991 இல் நிதியமைச்சராக... நவம்பர் 1984 கோர நாட்களுக்குப் பிறகு...இவரிடம் போய் ஊடகங்கள் நேர்மையைத் தேடுகின்றன.. 1992 டிசம்பர் 6, மார்ச் 2002 க்குப் பிறகு பாரதிய ஜனதாக் கட்சியில் நம்பிக்கை வைத்து சேர்பவர்களை என்ன பெயர் கொண்டு அழைக்கிறோமோ அதே பெயர் கொண்டுதானே மன்மோகன்சிங்கையும் அழைக்க வேண்டும்?

ஜெகதீஷ் டைட்லர் முக்கிய அமைச்சராக இருந்த அமைச்சரவையில் இவரும் ஒரு அமைச்சர்..

சஜ்ஜன்குமார் உறுப்பினராக இருக்கும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக்கு இவர் தலைவர்..

அப்போதெல்லாம் இவர் வெட்கித் தலைகுனியவில்லை. இப்போது மட்டும் அவமானத்தில் தலை குனிகிறாராம்.. ஊடகங்கள் பாராட்டுகின்றன.. கேழ்வரகில் நெய் என்கிறார்கள்.. நம்புவதற்கும் நம்பாமல் இருப்பதற்கும் நமக்கு மதி இல்லையோ?

7 Comments:

At 11:14 AM, Blogger மதியிலி said...

நல்ல பதிவையும் போட்டு, பார்க்கவரவைக்க விஜயகாந்தையும் இழுத்தீர்களா? முதல் வரிகளுக்கு என்ன அர்த்தம்? பதிவின் ஓட்டத்தில் இருந்து விலகியே இருக்கின்றன.

 
At 3:00 PM, Blogger ENNAR said...

திரு. ராமகி
அன்று அவர் பெரிய பொருப்புகளில் இல்லை இன்று அவர் இருப்பது
பெரிய பொருப்புள்ள தலைமை அமைச்சர். மற்ற அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது
இவர் பரவாயில்லையல்லவா?
தாமதமாக வந்தால் என்ன முன்னால்வந்தால் என்ன, அவர் சொன்னது
சரியே. அன்று அவர் ஒரு தலைமையின் கீழ் இருந்தார். இன்று அவர்
தலைவர் போல.


என்னார்

 
At 3:02 PM, Blogger நல்லவன் said...

என்னார் சொன்னதை
நானும் ஆமோதிக்கிறேன்

வளர்ந்தவன்

 
At 7:44 PM, Blogger தாணு said...

கேப்பையில் நெய் ஒழுகுவது தெரிகிறதோ இல்லையோ, சத்தியமாக மன்மோகன்சிங்கின் அரசியல் வேஷம் புரியவில்லை. ராம்கியின் பதிவுகளுக்கு பதிலளிக்கவாவது மேம்போக்கான அரசியலைத் தவிர்த்து களம் இறங்க வேண்டும் போலுள்ளது.
எரிகிற கொள்ளியில் எது நல்லதென்று என் போன்ற சாமான்யர்களுக்கு புரிவதேயில்லை.

 
At 9:53 PM, Blogger ஜென்ராம் said...

மதியிலி: இன்னொரு இலியின் அங்கதத்திற்கு நான் தீவிர வாசகன். அவர் நவராத்திரி சிவாஜியைவிடவும், விஷ்ணுவின் தசாவதாரத்தை விடவும் வேகமாகத் தினம் ஒரு வலைப்பதிவில் தரிசனம் தருகிறார். ஒருவேளை நீங்களும் அவர்தானோ என்று தோன்றியது. பிறகு நடையை வைத்து இது மயிலாடப் பார்த்த வான்கோழி என்று புரிந்தது. சரி.. எங்கே மன்னிப்பு என்ற வார்த்தையை எதிர்கொண்டாலும் ரமணாவின் அந்த வசனம் நினைவுக்கு வருகிறது. அவ்வளவே.

 
At 9:54 PM, Blogger ஜென்ராம் said...

திரு என்னார், வளர்ந்தவன்: இந்தப் பேச்சைப் பேசுவதற்கு முன்னால் நடவடிக்கை அறிக்கையில் எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த அறிக்கை மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே இது காங்கிரசின் இயல்பான வார்த்தைகள் இல்லை. டைட்லரின் ராஜினாமாவும் இந்த மன்னிப்பும் வேறு நிர்ப்பந்தம் காரணமாகவே நடந்திருக்கிறது என்று நாம் யூகிக்கலாம். பல விசாரணைக் கமிஷன்கள்/கமிட்டிகள் பரிந்துரைத்த பின்னும் டைட்லர், சஜ்ஜன் குமார் போன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவே இல்லை. இன்னும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தாமல் இத்துடன் ஊடகங்கள் திருப்தியடையச் சொல்கின்றனவோ என்பதே எனது பதிவின் உள்ளடக்கம்.
இவர் அளவில் கை சுத்தம் என்ற நம்பிக்கையில் மற்றவர்களைவிட இவர் பரவாயில்லை என்று நினைக்கிறீர்கள் என்று கருதுகிறேன். இதிலும் அவர் தலைமை தாங்கும் முழு அமைச்சரவை குறித்து அப்படி ஒரு நம்பிக்கையை நாம் வைக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி..மீண்டும் விசாரணை என்றில்லாமல் குறைந்தபட்சம் வழக்காவது பதிவு செய்யப்படுமா என்று பார்க்கலாம்.

 
At 9:54 PM, Blogger ஜென்ராம் said...

தாணு: அருந்ததிராயின் பேட்டி அவுட்லுக்கில் பார்த்தேன் கோக் அல்லது பெப்சி? புஷ் அல்லது எக்ஸ்? டோனி பிளேர் அல்லது ஒய்? பாஜக அல்லது காங்கிரஸ்? நமது ஜனநாயகம் முறையான தேர்வுரிமையை நமக்கு வழங்கவில்லை என்ற கருத்துப்பட பேசியிருந்தார். அவ்வப்போது யாருக்கு ஓட்டுப் போடுவது அல்லது போடக் கூடாது என்பதை மக்கள் தங்கள் வாழ்க்கையில் இருந்து புரிந்து கொள்வார்கள்.

 

Post a Comment

<< Home