Tuesday, August 23, 2005

அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா

சன் குழுமம் தினகரன் நாளிதழ் வாங்கியது குறித்து காலச்சுவடு ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அது குறித்து சில பதிவுகளும் வந்துள்ளன. அடிப்படையில் ஒரு நியாயமும் அவர்களது வாதத்தில் தெரியவில்லை. அவை என்னுள் எழுப்பிய எண்ணங்களே இந்தப் பதிவு.

ஒரு பெரிய எழுத்தாளர் அல்லது அவரது குடும்பம் ஒரு பத்திரிகை நடத்தலாமா? அவரே பதிப்பகமும் நடத்தலாமா? தமிழ் இலக்கியத்தின் போக்கையே அது தன்னிஷ்டத்திற்கு வளைத்து விடாதா?

ஒரு குழுமம் தனது தொழிலைப் பலமுனைகளில் வளர்த்தெடுப்பது ஏன் பிறர் கண்களை உறுத்துகிறது? பூமாலையில் இருந்து கலாநிதிமாறன் சாட்டிலைட் டிவிக்குப் புதிதாகத் தொழில் மாற்றம் செய்தது அவர் சிறந்த தொழிலதிபர் என்ற திறமையைக் காட்டியது. ஏன் மற்றவர்கள் அந்தத் தொழிலில் முன்னோடியாக முன்வரவில்லை? அந்த ரிஸ்கை எடுக்க முன்வரவில்லை? ரிஸ்க் எடுத்து புதிய சந்தையைக் கண்டுபிடிப்பதும் உருவாக்குவதும் தானே ஒரு தொழிலதிபரின் வேலை?

ஒருவேளை சன் குழுமம் தனது புதிய முயற்சி ஒன்றில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்ன சொல்லப்படும்? அதிகார துஷ்பிரயோகத்திற்குப் பின்னும் சன்னால் வெற்றி பெற முடியவில்லை என்று மகிழ்ச்சியோடு கூத்தாடமாட்டார்களா?

நுனிநாக்கு ஆங்கிலம், தளுக்கு போன்ற வார்த்தைகளைத் தனிமனிதர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் நிலைக்கு காலச்சுவடு போயிருக்க வேண்டாம்.

சன் டி.வி. நடத்துபவர் சூர்யா, தேஜா, கே, ஜெமினி, என்று பல சேனல்கள் தொடங்கக் கூடாது என்று ஏதேனும் தடை இருக்கிறதா? இந்திய சட்டங்கள் அனுமதிக்கும் வட்டத்திற்குள் தானே இந்தத் தொழில் நடைபெறுகிறது? மீடியாவில் முதலீடு செய்வது சட்ட விரோதமா?

திமுகவுக்கு பாதுகாப்பு அரணாக – திரு. மு.கருணாநிதி அவர்களுக்குப் பாதுகாப்பாக – நள்ளிரவு கைதின்போது சன் டி.வி.தான் நின்றது. ஆம்..உண்மைதான்..அது வேறு என்ன செய்ய வேண்டும் என்று கீதா உபதேசம் செய்கிறார் இந்தக் கண்ணன்?

கருணாநிதிக்குப் பிறகு முதல்வர் பதவியோ திமுக தலைவர் பதவியோ ஸ்டாலினுக்குப் போனால் என்ன தயா/கலா நிதிக்குப் போனால் என்ன? கண்ணனுக்கு என்ன அக்கறை அது ஸ்டாலினுக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று? அது அக்கறை அல்ல சிண்டு முடியும் பணி..

"ஊடக சக்தியும் அரசியல் சக்தியும் இணையும்போது ஆபத்து இரட்டிப்பாகிறது. சன் டிவியை மட்டும் பார்ப்பவர்களுக்கு தமிழகத்தில் வைகோ என்ற தலைவர் இருக்கிறார் என்றே தெரியாது" என்கிறார். வைகோ என்ன சொல்கிறார்? அது அந்த ஊடகத்தின் விருப்பம் என்கிறார். நான் அந்த டிவியைப் பார்ப்பதில்லை என்கிறார். காலச்சுவடு மட்டும் படிக்கும் இலக்கியவாதிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் தெரியுமா என்ன?

திமுக என்ற அரசியல் கட்சியிடம் – அதன் தலைவரிடம் – கொள்கைகளை எதிர்பாருங்கள்.. எந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் கொள்கையைப் பார்த்து அதற்கு தங்கள் காலச்சுவடு பத்திரிகையிலும் இடம் கொடுக்கிறார்கள்? கொள்கை நீக்கம் செய்யப்பட்ட வியாபார உத்திகள் என்று சன் டிவியைப் பார்த்துப் பொறுமுவது ஏன்?

காலச்சுவடில் 'பத்தி' எழுத வாய்ப்புக் கிடைப்பவர்களும் அதற்காக காத்திருப்பவர்களும் காலச்சுவடின் இலக்கிய மேலாதிக்கத்தை விமர்சிக்க மாட்டார்கள் போலிருக்கிறது. அதே தத்துவத்தை சன் டிவிக்கும் பொருத்திப் பார்க்கிறார்.
நான் இதுவரை வணக்கம் தமிழகத்தில் பங்கேற்கவும் இல்லை. அதற்கான சபலமும் எனக்கில்லை. ஒருவேளை ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையிலோ வாலறுந்த நரி கதையிலோ யார் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது..

அரசியல் ரீதியாக திமுகவை அதிமுக எதிர்கொள்வதும், வர்த்தகரீதியாக சன் டி.வி- குங்குமம் – தினகரனை அவற்றின் போட்டியாளர்கள் எதிர்கொள்வதுமே ஜனநாயகரீதியாக சரியானதாக இருக்கும். பல தொழில் நிறுவனங்களுக்கு ஆட்சியின் ஆதரவு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றைய பொருளாதாரச் சூழலில் Level playing field குறித்துப் பேசுவதே பல கால கட்டங்களில் பல ஊடகங்களுக்கு ஆட்சி ஆதரவு இருந்து வந்ததை மறைப்பதாகத் தான் தெரிகிறது.

வெகுஜன ஊடகங்களுக்கு எதிராக பேசி கொண்டே அதன் மினியேச்சராக இருப்பது பலருக்கு இன்று வாடிக்கை. இவர்களில் பலர் வெகுஜன ஊடகங்களின் அங்கீகாரத்திற்காக தவம் கிடக்கிறார்கள். கொள்கைரீதியாக வணிகமயமான ஊடகச் சூழல் குறித்து பேசுபவர்களை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ என்னவோ குறைந்தபட்சம் மதிப்பார்கள். ஆனால் வெகுஜன ஊடகங்களில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டே மாற்று ஊடகம் குறித்து போலியாக வாய்கிழியப் பேசுவோரை யார் மதிப்பார்கள்?

சன் டிவி அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறதா இல்லையா என்பது வேறுவிஷயம். அவரவர்கள் அவரவர் நிலையில் கிடைக்கும் அதிகாரத்தை பயன்படுத்தாமல்தான் இருக்கிறார்களா?

எனது இந்தப் பதிவு சன் டிவிக்கு ஆதரவாக எழுதப்பட்டது என்று நீங்கள் எடுத்துக் கொள்வதைவிட ஒரு சிலரின் காழ்ப்புணர்வுக்கு எதிரான பதிவு என்று பார்ப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

13 Comments:

At 10:46 AM, Blogger Doondu said...

எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. திமுக, சன்டிவி, கலைஞர், ராமதாஸ், திருமாவளவன், கம்யூனிஸ்டுகளைப் பிடிக்காது. காரணம் எல்லாம் கேட்காதீர்கள். நீங்களே புரிந்து கொள்ளுங்கள். காலச்சுவடு கண்ணன் எங்களவா.. அதனால் எங்கள் கருத்தை பிரதிபலிக்கிறார்!

 
At 3:40 PM, Blogger தாணு said...

ராம்கி,
மேலோட்டமாகப் பார்க்கும் போது தி.மு.க.வுக்கு வக்காலாத்து வாங்கும் பதிவு போலவே தோன்றினாலும், ராம்கி எந்த அமைப்பிலும் சாராதவர் என்ற உண்மை தெரிந்ததால், உங்கள் நடுநிலையான சாடலுக்கு வாழ்த்துக்கள். அதிகார துஷ்பிரயோகம் எதில்தான் இல்லை.
காலச்சுவடு படிக்கவில்லையாதலால் இந்த பதிவு குறித்து விமர்சிக்க முடியவில்லை.
//தி.மு.க---கம்யுனிஸ்டுகளைப் பிடிக்காது// பிடிக்காதவர்கள் செய்வதெல்லாம் தப்பாகத்தான் இருக்கும் என்ற prejudice உடன் விமர்சிப்பவர்களை விமர்சிக்கமுடியுமா?

 
At 3:43 PM, Blogger சுதர்சன் said...

//ஒரு குழுமம் தனது தொழிலைப் பலமுனைகளில் வளர்த்தெடுப்பது ஏன் பிறர் கண்களை உறுத்துகிறது?//

அதுதான் புரியவில்லை. சன் டி.வி வேகமாக வளர்ந்த காலகட்டம் 1991-96. அப்போது தமிழகத்தில் ஜெவும் மத்தியில் ராவும் அல்லவா ஆட்சியிலிருந்தார்கள்? என்ன லாஜிக்கோ.. இப்போது ஆட்சியிலிருக்கும் ஜெ. தன் டி.வியை முடிந்தால் வளர்க்க வேண்டியதுதானே. ?

 
At 6:23 PM, Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

 
At 6:34 PM, Blogger பத்மா அர்விந்த் said...

காலசுவடு விமரிசனம் இன்னும் படிக்கவில்லை. உங்களின் பதிவு நடுநிலையோடு நன்றாக கோர்வையாக எழுதப்பட்டிருக்கிறது.

 
At 7:00 PM, Blogger பரணீ said...

நல்ல பதிவு.

 
At 7:03 PM, Blogger எம்.கே.குமார் said...

//வர்த்தகரீதியாக சன் டி.வி- குங்குமம் – தினகரனை அவற்றின் போட்டியாளர்கள் எதிர்கொள்வதுமே ஜனநாயகரீதியாக சரியானதாக இருக்கும்.//

பல லட்சங்களை வாரி இறைத்து சன் டிவியில் விளம்பரம் செய்யச்சொல்கிறீர்களா?

////கருணாநிதிக்குப் பிறகு முதல்வர் பதவியோ திமுக தலைவர் பதவியோ ஸ்டாலினுக்குப் போனால் என்ன தயா/கலா நிதிக்குப் போனால் என்ன? கண்ணனுக்கு என்ன அக்கறை அது ஸ்டாலினுக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று?///

நல்ல கேள்விதான்! இதைக் கழக உடன்பிறப்புகள் சரியாக உணர்ந்துகொண்டால் போதும்! இன்னும் பல ஆண்டுகளுக்கு தி.மு.க ஆட்சிக்கு வரமுடியாது.

எப்படிச்சொல்கிறேன் என்றால், முரசொலி மாறன் என்கிற தனிப்பட்ட ஒரு மனிதரின் மந்திரி ஆசையினால் எல்லா ரீதியிலும் எதிரியான பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்து அதன் மூலம் கடந்த ஐந்தாண்டு ஆட்சியை இழந்தது தி.மு.க.! இது தொடர அவர்களே விரும்புவார்களாயின் நாம் சொல்ல என்ன இருக்கிறது?

என்ன இருந்தாலும் கலைஞரையும் மாறனையும் போல சகபரஸ்பர கொ.காரர்களாக ஸ்டாலினும் தயாமாறனும் வருங்காலத்தில் இருப்பார்கள் என்று சொல்லமுடியாது.அந்ததளவுக்கு கொள்கையில் பொறுமையில்லை.

எனவே இன்னும் சில ஆண்டுகளில் தயா கோஷ்டி என்றும் ஸ்டாலின் கோஷ்டி என்றும் பிரிந்து தி.மு.க வலுவிழந்து வை.கோ வரவேண்டுமென்பது கழகக் கண்மணிக்காரர்களின் ஆசையாக இருப்பின் அவர்களது ஆசையில் நாம் ஏன் மண் அள்ளிப்போடவேண்டும்?

//நள்ளிரவு கைதின்போது சன் டி.வி.தான் நின்றது. ஆம்..உண்மைதான்..அது வேறு என்ன செய்ய வேண்டும் என்று கீதா உபதேசம் செய்கிறார் இந்தக் கண்ணன்?//

கீதா உபசாரம் பண்ணினாலாவது பரவாயில்லையே, (கீதையைப்படிப்பவர்கள் திருடர்கள் என்று சொல்லுவது வேறு இருக்கட்டும்) டப்பிங் குரல்லல்லவா கொடுத்துவிடுகிறார்கள்!

///சன் டி.வி. நடத்துபவர் சூர்யா, தேஜா, கே, ஜெமினி, என்று பல சேனல்கள் தொடங்கக் கூடாது என்று ஏதேனும் தடை இருக்கிறதா? இந்திய சட்டங்கள் அனுமதிக்கும் வட்டத்திற்குள் தானே இந்தத் தொழில் நடைபெறுகிறது?///

ம்ம் எத்தனை காலம் தான் ஒரே மொழி மக்களை முட்டாளாக்கி பணம் தேற்றுவது? எப்போது 'கன்னட தெலுங்கு கேரள குங்கும'ங்களையும் வாங்கி கொள்ளையடிக்கப்போகிறீர்கள்?

//ஊடக சக்தியும் அரசியல் சக்தியும் இணையும்போது ஆபத்து இரட்டிப்பாகிறது.//

இது..இது..இது எல்லா விதத்திலும் உண்மை. இதை மட்டும் எல்லோரும் புரிந்துகொண்டால் போதும்.

என்னைப்பொறுத்தவரை தயாநிதி மாறன் அரசியலுக்கு வராமல் அமெரிக்கவில் பிஸினஸ் செய்து கொண்டிருந்தால் எனது பதிவையே எழுதியிருக்கமாட்டேன்.
www.yemkaykumar.blogspot.com

அன்புடன்
எம்.கே.

 
At 7:44 PM, Blogger Boston Bala said...

நான் சொல்ல நினைத்ததை விட விரிவாக எழுதியதற்கு நன்றி.

எம்கே பதிவு: ஜனநாயகமும் 'சன் டிவி' குழுமமும்!

காலச்சுவடு : தலையங்கம்

 
At 9:38 AM, Blogger ராம்கி said...

டோண்டு இல்லை இது..போலி டோண்டு என்று எலிக்குட்டியைப் பெயரில் வைத்துப் பார்த்தால் தெரிகிறது. இருந்தும் பதிவைப்பார்த்துப் பின்னூட்டம் இட்ட போலி டோண்டுவுக்கு நன்றி.. கூடவே பிறர் பெயரில் பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள்..

தாணு,
உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் என்னைத் தெரியும் என்பதால் நான் கட்சி சார்பில்லாதவன் என்று சொல்லிவிட்டீர்கள். பதிவில் அப்படி ஒரு தொனி இல்லையென்றால் நான் இன்னும் எழுதப் பழக வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

 
At 9:38 AM, Blogger ராம்கி said...

சுதர்சன்,
நன்றி. கலாநிதி மாறன் மற்றும் அவரது அடுத்த நிலை நிர்வாகிகளின் திறமையும் உழைப்பும் தான் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கருதுகிறேன். அரசியல் பின்னணி இல்லாமல் இருந்திருந்தால் கூட கலாநிதி மாறன் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவே திகழ்ந்திருப்பார்.
இதில் அரசியலின் பங்கு இருக்கும். ஆனால் அது மட்டுமே காரணம் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

செல்வராஜ், தேன் துளி, பரணீ,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கு லிங்க் கொடுக்கும் தொழில் நுட்பம் தெரியவில்லை. அதனால்தான் என்னால் எம்கே மற்றும் காலச்சுவடின் பத்திகளை இந்தப் பதிவில் வழங்க இயலவில்லை, தேன் துளி!

 
At 9:39 AM, Blogger ராம்கி said...

எம்.கே.குமார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பற்பல.
//பல லட்சங்களை வாரி இறைத்து சன் டிவியில் விளம்பரம் செய்யச்சொல்கிறீர்களா?//
விளம்பரத்தை நம்பாமல் உள்ளடக்கத்தை நம்பலாம் தானே?

அன்பு எம்கே, நான் எந்த அரசியல் கட்சியின் அனுதாபியும் கிடையாது. அதனால் உங்கள் திமுக உட்கட்சி அரசியல் குறித்து நான் பதிலளிக்க விரும்பவில்லை. மேலும் நீங்கள் பார்ப்பதுபோல் நான் கலாநிதிமாறனை திமுகவுடன் இணைத்தே பார்க்கவில்லை. அடிப்படையில் அவர் ஒரு தொழிலதிபர். தொழில் வளர்ச்சிக்கு அவசியமான அனைத்தையும் அவர் பயன்படுத்திக் கொள்வார்தான். மேலும் தினகரனை வாங்கியது குறித்து மட்டுமே நான் பேசுகிறேன். வேறு விஷயங்கள் குறித்து நாம் இங்கு விவாதிப்பது முறையல்ல.

 
At 9:40 AM, Blogger ராம்கி said...

பாஸ்டன்பாலா,
லிங்க் கொடுத்ததற்கு நன்றி பாலா! இந்தப் பதிவே உங்கள் பதிவைப் பார்த்ததால் வந்ததுதான்.
raamkiku அட் ஜிமெய்ல் டாட் காம் என்ற முகவரிக்கு நேரம் கிடைக்கும் போது இணைப்பு கொடுப்பது குறித்துக் கற்றுக் கொடுத்தால் எனது பதிவுகளை என்னால் இன்னும் செழுமைப்படுத்த முடியும் என்று கருதுகிறேன்.

 
At 2:59 PM, Blogger தாணு said...

உன்மையாகவே தினகரனை சன் குழு வாங்கியதால் விளைந்துள்ள விமர்சனங்கள் ஆரோக்கியமானதாகவே இருக்கிறது. மாய்ந்து மாய்ந்து விமர்சித்து, கவலைப் பட்டு, சண்டையிட்டு வலையங்களில் intellectual வேள்வி நடத்தினாலும் ஆட்சியைத் தீர்மானிப்பது என்னவோ கணிணியைக்
கையாலும் தொட்டறியாத ஒரு கூட்டம்தான். அவர்களிடையே ஒளி ஊடகங்களின் தாக்கம் அதிக பாதிப்புகளை உண்டக்குமே தவிர, அச்சு ஊடகங்கள் ஹிமாலய மாற்றங்கலை உண்டாக்குமா என்பது சந்தேகமே. திரு. கண்ணன் அவர்கள் சொல்ல வந்த கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுதான், ஆனால் இடையிடையே திமுக குடும்ப exploitation களுக்குக்
கூடுதல் face-lift கொடுத்ததால் , சொல்ல வந்த கருத்து திசை மாறிப் போகிறது.
செய்திகளை தங்களுக்கு ஏற்றவிதமாக திரிப்பது, பலம் பொருந்திய ஊடகங்களினால் சாத்தியமாகும்போது,ஆதிக்கத்தில் இருப்பவர்கள் கைகட்டி வாளாயிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதே தவறு. அத்தகைய அரசியல் நாகரீகம் நம் நாட்டில் இருக்கிறதா? சினிமாவுக்கு சென்சார் போடுவது போல் பத்திரிக்கைகளுக்கும், சேனல்களுக்கும் வரையறைகளை புகுத்தமுடியுமா? பத்திரிக்கை சுதந்திரமே நசுக்கப்பட்டுவிட்டது என்று கூக்குரலிட்டு தடுத்து விடமாட்டீர்களா?
நீங்கள்(பத்திரிக்கையாளர்கள்) ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும்போதுதான்
வெகுஜனத்துக்கு ஒரு நிகழ்வில் பொதிந்துள்ள அர்த்தமும் அனர்த்தமும் கொஞ்சமாவது புரிகிறது. உ-ம்: தினகரன் வாங்கப் படுவதை ஒரு தொழில் சார்ந்த நிகழ்ச்சியாகப் பார்த்துவிட்டு மறந்து போய்விடும் பொதுஜனம்!!!
`காலச்சுவடு” படிக்க வாய்ப்பளித்த திரு. பாலாவுக்கு நன்றி.

 

Post a Comment

<< Home