Monday, August 01, 2005

அணுவின்றி இந்தியா அசையாதா?

இன்று மாலன் தினமணியில் ஒரு பத்தி எழுதியிருந்தார். அணுவின்றி.. என்ற தலைப்பில்.
அவரிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

1974 இல் இந்தியா அணு சோதனை செய்தது. "நாங்கள் ஏழைகளாக இருக்கலாம்; ஆனால் முட்டாள்கள் அல்லஎன்று இந்தியர்கள் உலகுக்கு நிரூபித்தார்கள்" என்று இதில் பெருமிதம் கொள்கிறார்.

அணுசோதனை மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிராகக் கருத்துக்கள் கொண்டவர்களைப் பொதுவாக தேசபக்தி குறைந்தவர்கள் என்று ஊடகங்களில் ஆளுவோர் சித்தரிப்பார்கள். உலகம் முழுவதும் போருக்கு எதிராகவும் அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாகவும் மக்கள் உணர்வு கொண்டு வருகிறார்கள்.
போரையும் ஆக்கிரமிப்பையும் விரும்புகிறவர்கள் இந்த உணர்வு வளராமல் தடுக்கிறார்கள். இந்தியாவையும் போர்களை ஆதரிக்கும் பட்டியலில் இடம்பெறச் செய்த முயற்சிகள் நிறைவேறவில்லை.

இது ஆகஸ்ட் மாதம். ஹிரோஷிமா, நாகசாகி நம் நினைவுக்கு வருகிறது. மாலன் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் அணுசக்தியைத் தான் ஆதர்க்கிறாரே தவிர அணு ஆயுதங்களை அல்ல என்பதைத் தெளிவாக்கியிருக்கிறார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்று வந்தவுடனேயே இந்தப் பிரச்னை குறித்து எழுதலாம் என்றிருந்தேன்.
ஏனோ செயல்படுத்த முடியாமல் போயிற்று. இன்று மாலனின் கட்டுரை படித்தவுடன் எழுந்த உணர்வுகளையும் கேள்விகளையும் மட்டுமே பதிவு செய்கிறேன்.

ஆக்கத்திற்கு அணு தேவை;ஆயுதத்திற்கு அல்ல என்பது அவரது நிலை. ஆக்கப்பணிகளுக்காக என்று சொல்லப்படும் அணு உலைகளில் இருந்துதான் ஆயுதத்திற்குத் தேவையான புளூட்டானியம் எடுக்கப்படுகிறது. இவ்வளவு காலம் ஆக்கப் பணிக்கும் ஆயுதத் தயாரிப்புக்கும் இடையில் இருந்து வந்த தொடர்பு, சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு நடத்த இந்தியா அனுமதித்ததால் அற்றுப் போகிறது. இதைத் தான் பாஜக பரிவாரங்கள் எதிர்க்கின்றன. இது வேறு விஷயம்..

அணு சோதனை அறிவியல் சாதனை, அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படை சிந்தனையிலேயே வேறுபடுவதால் அதன் தொழில்நுட்ப விபரங்களுக்குள் போக நான் விரும்பவில்லை. இந்தியாவில் கடந்த 40 வருடங்களாக எந்த விபத்தும் நேரவில்லை என்பதாலேயே அதன் ஆபத்துக்களை உணரத் தவறிவிடக் கூடாது. விபத்து என்பது எப்போதாவது நிகழ்வதுதான். அன்றாட நிகழ்ச்சியல்ல. ரஷ்யாவில் நடந்த செர்னோபில் அணு விபத்தும் அதன் பாதிப்பும் நமது கண்களைத் திறக்க வேண்டும். தாராப்பூர், டிராம்பே, கல்பாக்கம், கூடன்குளம் இவை எல்லா இடங்களிலும் எந்தவித விபத்தும் நேராது என்ற உத்தரவாதத்தை யாராவது வழங்க முடியுமா?

செர்னோபிலுக்குப் பிறகு பல நாடுகளில் அணு உலைகளுக்கு எதிரான இயக்கம் வலுப்பெற்று வருவதாகத் தெரிகிறது.
ஜெர்மனியும் பிரான்ஸும் புதிய அணு உலைகளை உருவாக்கத் தயங்கின என்று செய்திகளில் அறிய முடிகிறது. பல நாடுகளில் படிப்படியாக அணு உலைகளில் இருந்து விடுபட முயற்சிகள் நடப்பதாகவும் தெரிகிறது.

மேலும் அணுமின்நிலையங்கள், அனல்,புனல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியைவிட மலிவான விலையில் மின்சாரத்தைத் தருகின்றன என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. மாறாக அவை அதிகச் செலவும் சுற்றுச் சூழல் சீர்கேடும் பேரழிவும் ஏற்படுத்த வல்லவை என்பதே எனது புரிதல்.

இந்திய அணு ஆய்வை சர்வதேச நிறுவனம் பார்வையிட அனுமதிப்பது, அணுப்பணிகளை மக்கள் பணி மற்றும் ஆயுதத் தேவை என்று இரண்டாகப் பிரிப்பது, அமெரிக்காவிடம் இருந்தே எரிபொருள் வாங்குவது போன்ற பல விஷயங்கள் இதுவரை இந்தியா சென்ற பாதையில் இருந்து மாறிப் போவதையே காட்டுகிறது. இதை என்னால் மன்மோகன்சிங்கின் பொருளாதாரக் கொள்கையைப் போல் புதிய அணுகுமுறை என்று பார்க்க முடியவில்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை என்று
பாரத்தைக் கடவுள் தலையில் சுமத்தவும் முடியவில்லை. யாரிடம் எந்தவிதமான நம்பிக்கையை வைப்பது என்ற கேள்வி எழுகிறது.அரசியல் ரீதியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.அதற்காக அதன் அத்தனை செயல்பாடுகளையும் ஆதரிக்க முற்படுவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

1 Comments:

At 12:21 PM, Blogger தாணு said...

மற்ற நாடுகளில் தடை செய்யப்படுபவை எளிதாக இந்தியாவில் அமல் படுத்தப்படுவது, மருந்துகளில் ஆரம்பித்து அணுசக்தி வரை தொடரப்படுவது எதனால்? நாம் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதாலாஅல்லது தொலை நோக்கு பார்வை என்பதே நம்மிடம் குறைவு என்பதாலா?``கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என்பது நம் ரத்தத்தில் ஊறிக்கிடக்கிறதோ? ஆனாலும் இன்று பசும்சோலையாக விளங்கும் கூடன்குளம் பாலைவனமாகப் போகும் நாள் வெகு அருகில் வந்துவிட்டது என்பதை நினைக்க உறுத்துகிறது....நம் அளவில் ஏதாவது போராட வழியிருக்கிறதா?

 

Post a Comment

<< Home