Wednesday, September 21, 2005

20 ஆண்டுகளாக மறுக்கப்படுகிற நீதி!

அந்த இரவு அவர்களுக்கு விடியாத இரவாக இருக்கும் என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தொழில் நகரமான போபாலில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அது அப்படித்தான் விடிந்தது.

அந்த நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை. 1984ஆம் வருடம் டிசம்பர் 3ஆம் தேதி. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலர் கடுமையான இருமலுடனும் மூச்சுத் திணறலுடனும் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். பலர் வழியிலேயே சுருண்டு விழுந்தனர். அவர்களது நுரையீரல் தீப்பற்றி எரிவது போல எரிந்தது. அந்த நெடியும் அந்த எரிச்சலும் அவர்களுக்கு ஒன்றும் புதிதும் அல்ல. ஆனால் அன்று எல்லாமே அளவுக்கு அதிகமாக இருந்தது.

வீதியெங்கும் மக்கள் வெள்ளம்.. அந்த நெடியின் பிடியில் இருந்து விடுபட அவர்கள் ஓடத் தொடங்கினார்கள். நகரமெங்கும் மரண ஓலம். கண்ணெதிரே குடும்பத்தினரும் பழகியவர்களும் உள்ளூர்வாசிகளும் மடிந்து விழுவதைப் பார்த்து நின்று உதவ நேரம் இல்லை.

"உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா? முடிந்தவரை உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடு'' என்பது அந்த இரவு அவர்களுக்கு இட்ட கட்டளை. தாய்மார்கள் தங்கள் குழந்தையைப் போட்டுவிட்டு ஓடும் அவலம் கூட நடந்திருக்கிறது. விபரம் தெரிந்தவர்கள் நிலைமையை உணர்ந்தனர். நகரத்தில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து அவ்வப்போது திறந்துவிடப்படும் வாயுவால்தான் இந்த நிலைமை என்று.

ஆனால் அன்று அதிகமான அளவிலும் அதிகநேரமும் அது காற்றில் கலந்து இருந்தது.

காரணம் அன்று வாயு திறந்து விடப்படவில்லை. ஒரு வெடியோசையுடன் கசிந்து கலந்திருக்கிறது.

அரை மணிநேரம் ஓடிய பிறகு நின்று பார்த்தால் ஓடி வந்தவர்களில் பலர் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களை அறியாமலேயே சிறுநீரும் மலமும் பிரிந்திருக்கின்றன. அன்றைய இரவு மட்டும் எத்தனை ஆயிரம் பேர் இறந்திருப்பார்களோ தெரியாது. தெருவெங்கும் பிணங்கள். பிணங்களுக்கு நடுவில் தங்கள் உறவினர்களின் அடையாளங்களைத் தேடும் உயிருள்ள உடல்கள். அவசர அவசரமாக பல நூறு உடல்கள் அடையாளம் காணப்படாமலேயே புதைக்கப்பட்டன. அல்லது எரிக்கப்பட்டன. உயிரோடு இருந்தவர்கள் உடலில் எண்ணற்ற மாறுதல்கள். அடுத்த தலைமுறை வரை அந்த நகர மக்கள் மலட்டுத்தன்மை, பிறவிக் குறைபாடுகள், தோள்களில் விரல்கள் முளைத்தல், நிலத்தடி நீரில் விஷம் பரவி இருத்தல் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர்.

இந்த அளவு மோசமான சம்பவம் நடந்த பிறகுதான் தெரிகிறது, வாயுக் கசிவு போன்ற அவசர நிலை குறித்து அறிவித்து மக்களை எச்சரிக்க ஒரு ஏற்பாடும் ஆலையில் இல்லை என்பதே. அதைவிட இந்த விஷவாயு சம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் ஆகியும் இதில் குற்றம்சாட்டப்பட்டவர் இன்னும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது இன்னும் மோசமான விஷயம்.

போபால் விஷவாயு சம்பவத்திற்கு நியாயம் வழங்க இந்திய நீதிமன்றங்கள் எவ்வளவோ முனைந்தன. ஆனால் அவ்வளவு முயற்சிகளும் தவிடு பொடியாயின. இந்த சம்பவம் நடந்தபோது யூனியன் கார்பைடு ஆலையின் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருந்த வாரன் ஆன்டர்சன் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டது. இந்திய நீதிமன்றத்தின் பார்வையில் அவரும் அவருடன் இணைந்தவர்களும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களை நமது நாட்டுக்குத் திரும்பிப் பெற அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பல வருடங்களாக அந்த கோரிக்கையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்ட அமெரிக்க அரசு இந்த செப்டம்பர் 2004ல் எந்தவித விளக்கமும் சொல்லாமல் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

ஆனால் போபாலில் உயிர் பிழைத்தவர்கள் மற்ற மனிதர்களுடன் சேர்ந்து கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். முறையான வழக்கு விசாரணை, நியாயமான இழப்பீடு, விபத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு தேவையான மருத்துவ, பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் மறுவாழ்வு அளித்தல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இடைவிடாமல் இயக்கம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு இந்த வருடம்தான் புதிய தெம்பு கிடைத்திருக்கிறது. முதன்முதலில் ஆம்னெஸ்டி இன்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு போபால் மக்களின் கோரிக்கைகளை ஆதரித்து யூனியன் கார்பைடுக்கு எதிராக ஆரோக்கியமான சூழலில் வாழ்வதற்கான மனித உரிமை மீது இந்த ஆலை தாக்குதல் தொடுத்துள்ளது என்று அறிக்கை அளித்துள்ளது.

நவீன நாகரிக வரலாற்றில் 22 ஆயிரம் பேரைப் பலி கொண்டும் இருபது வருடங்கள் கழித்தும் இன்று வரை லட்சக்கணக்கான நபர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியும் இந்த விபத்து இடம் பிடித்துள்ளது. ரஷ்யாவில் நடந்த செர்னோபில் விபத்தில் ஏற்பட்ட சேதத்தைவிட இங்கு சேதம் அதிகம் என்று கூறுவோரும் உண்டு.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3ஆம் தேதி போபாலில் கண்டன ஊர்வலம் அல்லது ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் ஆன்டர்சனின் உருவ பொம்மை எரிக்கப்படும். போபால் மக்கள் முழுக்க முழுக்க இந்த சம்பவத்திற்கு ஆன்டர்சனின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று கருதுகிறார்கள். இதை ஒரு விபத்து என்று ஏற்க மறுக்கிறார்கள். இதை ஒரு படுகொலை என்றே வர்ணிக்கிறார்கள்.

1973ல் ஆன்டர்சன் அளித்த அறிக்கையிலேயே இங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பாதுகாப்பானதுதானா என்று பரிசோதித்து அறியப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 1982ல் கம்பெனி நடத்திய ஆய்வில் இங்கு ஏற்படும் விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்படுவதற்கான அபாயம் உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் யாரும் இதில் அக்கறை காட்டவில்லை. எனவே இதற்கு அன்றைய தலைவரான ஆன்டர்சன்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது போபால் மக்கள் வாதம்.

இன்று ஆன்டர்சன் 80 வயதைக் கடந்துவிட்டார். யூனியன் கார்பைடில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இன்னும் சிக்கலாக டோவ் கெமிக்கல்ஸ் என்ற கம்பெனி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிவிட்டது. கம்பெனியின் சொத்துக்களைத் தான் நாங்கள் வாங்கியிருக்கிறோமே தவிர கடன்களையும் பொறுப்புகளையும் அல்ல என்று ஆவணங்களின் உதவியுடன் பேசுகிறது டோவ் கெமிக்கல்ஸ். ஆனால் போபால் மக்கள் டோவ் கெமிக்கல்ஸ் கம்பெனியை வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் சேர்க்கக் கோருகிறார்கள்.

போபால் மக்கள் இன்று வரை கருச்சிதைவு, கான்சர், மாதவிடாய்க் கோளாறுகள் போன்ற பல நோய்களுக்கு ஆட்படுகின்றனர். மிகப் பெரிய விஷவாயுக் கசிவு சம்பவத்தின்போது பாதுகாப்பு இல்லாமல் நிராயுதபாணியாக நின்றிருக்கிறார்கள். ஏராளமான இழப்புகளுக்கு பிறகும் இருபது வருடங்களாக நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இருபது வருடங்களுக்குப் பிறகும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அறிவிக்கப்பட்ட குற்றவாளியைக் கைது செய்து இந்தியாவிற்குள் கொண்டு வர முடியவில்லை.

இந்நிலையில் வழக்கம்போல் இந்த வருடம் டிசம்பர் 3 ஆம் தேதியும் போபால் நகரத்தில் ஆர்ப்பாட்டம் அல்லது ஊர்வலத்துடன் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதை வெறும் வருடாந்திர சடங்காக அரசு கருதுகிறது போலும்!

(2004 டிசம்பர் முதல் தேதி எழுதப்பட்டது)

Sunday, September 04, 2005

வைகோ விழாவும் வலைப்பதிவாளர் சந்திப்பும்

திரு. வைகோவின் "சிறையில் விரிந்த மடல்கள்" மற்றும் அதன் ஆங்கிலப் பதிப்பான "From the Portals of a Prison" எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி நூல்கள் வெளியிடப்பட்டன. அழைப்பிதழில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் (சுர்ஜித் தவிர) அனைவரும் வந்திருந்தனர். சுர்ஜித் உடல்நலக் குறைவால் வரமுடியாதுஎன்றும் அதற்கு பதிலாக என்.ராம் பெற்றுக் கொள்வார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

திரு. வைகோ மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தார். "எனது வாழ்நாளில் இது மிகவும் முக்கியமான – மகிழ்ச்சியான தருணம்" என்று பேசினார். ஏன் இப்படி மிகைப்படுத்துகிறார் என்று ஒரு கணம் தோன்றியது உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது அது அப்படித்தான் என்பது புரிந்தது..

திரு. வைகோ இன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. மத்தியில் அமைச்சரவையிலும் பங்கேற்கவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இல்லை. வைகோவின் தனிப்பட்ட பண்பும் பழகும்விதமும் டெல்லியில் சம்பாதித்த நட்புமே ஒரு நாட்டின் பிரதமரை ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரவழைத்திருக்கின்றன.

பொடா சட்டத்திற்கு பலியான ஒருவரின் சிறைக் கடிதங்கள் நூலை அரசின் தலைமை அமைச்சர் வெளியிடுவதும் அவரே பொடாவை திரும்பப் பெற்ற அரசின் பிரதமர் என்பதும் எவ்வளவு முக்கியமான நிகழ்வுகள் என்பதை அரசியலைத் தீவிரமாக சுவாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

விழாவிற்கு வந்தவர்கள் பேசியதை செய்திகளில் எல்லோரும் பார்த்திருக்க முடியும். அதனால் சில வம்புகள்:

விழா மேடைக்கு 5.30 மணிக்கு வந்த திமுக தலைவர் திரு.மு.கருணாநிதி மேடையிலேயே அருகில் இருந்த அறையில் பிரதமர் வரும்வரை ஓய்வெடுத்தார். அந்த அறைக்குச் சென்று திரு.ஜி.கே.வாசன், திரு.டி.ராஜா ஆகியோர் திமுக தலைவர் திரு.மு.கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தனர். மேடைக்கு வந்த பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் திரு. ச. ராமதாஸ் அந்த அறைக்குச் செல்லவில்லை. மேடையிலேயே தொழிலதிபர் திரு. எம் ஏ எம் ராமசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார். பிரதமர் வருவதற்கு சிறிது நேரம் முன்னதாக திரு. கருணாநிதி அவரது இருக்கைக்கு வரும்போது டாக்டர் ராமதாசின் இருக்கையைத் தாண்டி வர வேண்டியிருந்தது. அப்போது இருக்கையை விட்டு எழுந்து வணக்கம் சொன்னது தவிர மருத்துவர் ஐயா கலைஞர் அய்யாவிடம் பேசியதாகத் தெரியவில்லை.

செம்மொழி, சேதுத் திட்டம் ஆகியவற்றிற்கு நன்றி சொன்ன மருத்துவர், தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும், நதி நீர் இணைப்புக்கும் மாநில சுயாட்சிக்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பிரதமர் மேடையில் இருக்கும் விழாவை தமிழக மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் விழாவாக மருத்துவர் பயன்படுத்திக் கொண்டார்.

" இது ஒரு புத்தக வெளியீட்டு விழா. புத்தகத்தைப் படிக்காமல் நான் பேசுவதில்லை..புத்தகத்தில் இருப்பதைப் பற்றி மட்டும் பேசுகிறேன். மற்றதைப் பற்றிப் பேசும் அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை" என்று கலைஞர் கருணாநிதி பேசும்போது குறிப்பிட்டார். ஏன், எதற்கு, யாருக்கு இந்த அறிவுறுத்தல் என்பது புரியவில்லை. இதற்கு முந்தைய பிரதமர் விழாவான மதுரை சேது சமுத்திரத் திட்ட விழாவில் சேதுவைத் தாண்டி சென்னையில் வாகன சோதனை மையம் என்ற கோரிக்கையை கலைஞர் முன்வைத்தார் என்பது ஏனோ என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

வைகோ என்பதை வைக்கோ(vaikko) என்று மாற்றினால் துன்பம் அகலும், முன்னேற்றம் நிகழும் என்று வைகோவின் நண்பர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதைக் குறிப்பிட்ட கலைஞர்," ஒரு K போதாதா, இன்னொரு K எதற்கு? தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு K போதாதா" என்ற போது அரங்கம் அதிர்ந்தது. எந்தவிதமான நுண் அரசியலும் புரியாத மக்காக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்

தனது தள்ளாத வயதிலும் தளராத சிந்தனையுடன் தடுமாற்றம் இல்லாத பேச்சு கருணாநிதியுடையது.2004 தேர்தலுக்கு முன் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு கலைஞரின் பேச்சை நேரில் இப்போதுதான் கேட்கிறேன். திமுக மாநாடுகளுக்குப் போகவில்லை.

இந்த விழாவிற்கு முன்னதாக தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனைத் திறப்பு விழாவில் பிரதமரும் முதல்வரும் பேசுவதாக இருந்தது. முதல்வர் உடல்நலக் குறைவு காரணமாக அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் ஒரே நாளில் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடனும் திரு. கருணாநிதியுடனும் வேறு வேறு கூட்டங்களில் பேச முடிகிறது என்பதே மிகவும் ஆரோக்கியமாகத் தெரிந்தது. ஆனால் முதல்வருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு இந்த ஆரோக்கிய அரசியலையும் பாதித்து விட்டது.

விழா நடந்த அரங்கம் 2வது தளத்தில் இருந்தது..முதல் தளத்திலும் மூன்றாவது தளத்திலும் மதிமுக தொண்டர்களுக்கு பெரிய திரைகளில் விழா காட்டப்பட்டது. எனவே கூட்டம் அதிகமாக இருந்தது.

சரி..விழாவை விட்டுவிடுவோம்.. வலைப் பதிவுக்கு வருவோம்..விழா முடிந்து ஆயிரக்கணக்கில் மக்கள் அரங்கத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது திடீரென வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது. ஆம்..நண்பர் மாலனை அந்தக் கூட்டத்துக்கு நடுவே சந்தித்தேன். நேருக்கு நேர் அது முதல் சந்திப்பு..அவரது எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். சின்னத் திரையில் பார்த்திருக்கிறேன். மேடைகளில் பேசக் கேட்டிருக்கிறேன். சந்திப்பதும் இறுக்கம் தளரக் கை குலுக்குவதும் இதுவே முதல் முறை. அன்புடன் லிப்ட் கொடுக்க முன்வந்தார். துரதிர்ஷ்ட வசமாக நாங்கள் இருவரும் நகரின் எதிரெதிர் பகுதிகளில் குடியிருக்கிறோம்.(அய்யா, அம்மா! வரிகளுக்கிடையில் வாசிக்காதீர்கள்!). இந்த நிலையைச் சொல்லி பிறகு தொடர்பு கொள்வதாகக் கூறி விடைபெற்றேன். மாலன் உடல் எடையைக் குறைத்து அழகாக மெலிந்து இருக்கிறார், நாமும் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வண்டி நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தேன்.

சொல், கண்ணீர், ரத்தம்

ரம்யாவின் நிஜ பூதங்கள் படித்தேன். அதன் பின்னூட்டமாக நான் எழுதியதன் பதிவு:

//'கடவுளே.. அவள் வாழ்வில் நிஜ பூதங்கள் வராமல் இருக்கட்டும்' என்று வேண்டிக் கொண்டபடி நான் தூங்குவதற்குத் தான் கொஞ்சம் நேரமானது.// - இது ரம்யாவின் பதிவில் இருக்கும் வரிகள்..

//I am of the belief that one day in the future they will be completely extinguished. This is what I tell my son, and also tell him that he will get the courage to be part of the force that destroy them.// - இது தேன் துளியின் மறுமொழியில் இருக்கும் வரிகள்..

இரு வேறு சிந்தனைகள்..

காண்டேகரின் கிரௌஞ்சவதம் படித்திருக்கிறீர்களா?
சமூகத்தில் ஒரு தவறு..இதை 3 விதமாக மக்கள் எதிர்கொள்கிறார்கள்.

சொல் - கண்ணீர் - ரத்தம் !

வெறும் கண்டனப் பேச்சுக்கள் நமது வலைப் பதிவுகளைப் போல்..

தவறுகளைக் களைய கருத்துரீதியாக முடிவு, ஆனால் செயல்பாடின்றி போராடுபவர்கள் மீது அனுதாபம் மட்டும் கொண்டு கண்ணீர் விடுதல்..

செய் அல்லது செத்து மடி என்று களத்தில் நிற்கும் போராளிகள்..

ஒரு பேராசிரியர், சுலோ என்ற அவரது மகள், திலீபன் என்ற அவரது மாணவன்..மூன்று கதாபாத்திரங்கள் மூலம் இந்த "சொல், கண்ணீர், ரத்தம்" தத்துவத்தை நாவல் முழுக்க பிரமாதமாக விளக்கியிருப்பார்..

Thursday, September 01, 2005

சிறையில் விரிந்த மடல்கள் – வைகோ நூல் வெளியீட்டு விழா
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு 500 நாட்களுக்கு மேலாக வேலூர் சிறையில் இருந்தபோது தொண்டர்களுக்கு எழுதிய கடிதங்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வருகிற சனிக்கிழமை செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இதன் ஆங்கில மொழியாக்கத்தை பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் வெளியிட இந்து என்.ராம் பெறுகிறார்.
தமிழ் வடிவத்தை திமுக தலைவர் மு.கருணாநிதி வெளியிட தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.எம்.ராமசாமி பெறுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜி.கே.வாசன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.

இடம்: மேயர் இராமநாதன் சென்டர், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.
தேதி : 03.09.2005 மாலை 6.00 மணி.

இந்தத் தகவலை நேற்று சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ தெரிவித்தார். வந்திருந்த அனைவருக்கும் நேற்று மதிய உணவு அவருடன் தான்.

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்களுடன் மதிய உணவைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் வைகோவிடம் உண்டு. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனவரி முதல் தேதி காலை அவருக்கு வேலூர் சிறையில் விடிந்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி சந்திப்பு அதற்கு முந்தைய வார சுனாமி காரணமாக ரத்து செய்யப்பட்டது.

வீட்டு முகவரிக்கு விழா அழைப்பிதழ் வந்தது. நேரில் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடையப் போகிறது என்ற உண்மை உறைத்தது..கடந்த 2004 செப்டம்பர் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழையில் சில கிலோமீட்டர் தூரம் அவருடன் பேசிக் கொண்டே நடந்து சென்றேன். அவர் அப்போது மறுமலர்ச்சி நடைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்பின் பல தருணங்களில் தொலைபேசியில் பேசுவதுடன் என் பணி முடிந்து விடும். நேற்று அதனால் நேரில் சென்று பார்த்தேன்.


அதன் பின்விளைவாக இந்தப் பதிவும் போட்டிருக்கிறேன்.