Sunday, September 04, 2005

வைகோ விழாவும் வலைப்பதிவாளர் சந்திப்பும்

திரு. வைகோவின் "சிறையில் விரிந்த மடல்கள்" மற்றும் அதன் ஆங்கிலப் பதிப்பான "From the Portals of a Prison" எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி நூல்கள் வெளியிடப்பட்டன. அழைப்பிதழில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் (சுர்ஜித் தவிர) அனைவரும் வந்திருந்தனர். சுர்ஜித் உடல்நலக் குறைவால் வரமுடியாதுஎன்றும் அதற்கு பதிலாக என்.ராம் பெற்றுக் கொள்வார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

திரு. வைகோ மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தார். "எனது வாழ்நாளில் இது மிகவும் முக்கியமான – மகிழ்ச்சியான தருணம்" என்று பேசினார். ஏன் இப்படி மிகைப்படுத்துகிறார் என்று ஒரு கணம் தோன்றியது உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது அது அப்படித்தான் என்பது புரிந்தது..

திரு. வைகோ இன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. மத்தியில் அமைச்சரவையிலும் பங்கேற்கவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இல்லை. வைகோவின் தனிப்பட்ட பண்பும் பழகும்விதமும் டெல்லியில் சம்பாதித்த நட்புமே ஒரு நாட்டின் பிரதமரை ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரவழைத்திருக்கின்றன.

பொடா சட்டத்திற்கு பலியான ஒருவரின் சிறைக் கடிதங்கள் நூலை அரசின் தலைமை அமைச்சர் வெளியிடுவதும் அவரே பொடாவை திரும்பப் பெற்ற அரசின் பிரதமர் என்பதும் எவ்வளவு முக்கியமான நிகழ்வுகள் என்பதை அரசியலைத் தீவிரமாக சுவாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

விழாவிற்கு வந்தவர்கள் பேசியதை செய்திகளில் எல்லோரும் பார்த்திருக்க முடியும். அதனால் சில வம்புகள்:

விழா மேடைக்கு 5.30 மணிக்கு வந்த திமுக தலைவர் திரு.மு.கருணாநிதி மேடையிலேயே அருகில் இருந்த அறையில் பிரதமர் வரும்வரை ஓய்வெடுத்தார். அந்த அறைக்குச் சென்று திரு.ஜி.கே.வாசன், திரு.டி.ராஜா ஆகியோர் திமுக தலைவர் திரு.மு.கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தனர். மேடைக்கு வந்த பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் திரு. ச. ராமதாஸ் அந்த அறைக்குச் செல்லவில்லை. மேடையிலேயே தொழிலதிபர் திரு. எம் ஏ எம் ராமசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார். பிரதமர் வருவதற்கு சிறிது நேரம் முன்னதாக திரு. கருணாநிதி அவரது இருக்கைக்கு வரும்போது டாக்டர் ராமதாசின் இருக்கையைத் தாண்டி வர வேண்டியிருந்தது. அப்போது இருக்கையை விட்டு எழுந்து வணக்கம் சொன்னது தவிர மருத்துவர் ஐயா கலைஞர் அய்யாவிடம் பேசியதாகத் தெரியவில்லை.

செம்மொழி, சேதுத் திட்டம் ஆகியவற்றிற்கு நன்றி சொன்ன மருத்துவர், தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும், நதி நீர் இணைப்புக்கும் மாநில சுயாட்சிக்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பிரதமர் மேடையில் இருக்கும் விழாவை தமிழக மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் விழாவாக மருத்துவர் பயன்படுத்திக் கொண்டார்.

" இது ஒரு புத்தக வெளியீட்டு விழா. புத்தகத்தைப் படிக்காமல் நான் பேசுவதில்லை..புத்தகத்தில் இருப்பதைப் பற்றி மட்டும் பேசுகிறேன். மற்றதைப் பற்றிப் பேசும் அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை" என்று கலைஞர் கருணாநிதி பேசும்போது குறிப்பிட்டார். ஏன், எதற்கு, யாருக்கு இந்த அறிவுறுத்தல் என்பது புரியவில்லை. இதற்கு முந்தைய பிரதமர் விழாவான மதுரை சேது சமுத்திரத் திட்ட விழாவில் சேதுவைத் தாண்டி சென்னையில் வாகன சோதனை மையம் என்ற கோரிக்கையை கலைஞர் முன்வைத்தார் என்பது ஏனோ என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

வைகோ என்பதை வைக்கோ(vaikko) என்று மாற்றினால் துன்பம் அகலும், முன்னேற்றம் நிகழும் என்று வைகோவின் நண்பர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதைக் குறிப்பிட்ட கலைஞர்," ஒரு K போதாதா, இன்னொரு K எதற்கு? தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு K போதாதா" என்ற போது அரங்கம் அதிர்ந்தது. எந்தவிதமான நுண் அரசியலும் புரியாத மக்காக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்

தனது தள்ளாத வயதிலும் தளராத சிந்தனையுடன் தடுமாற்றம் இல்லாத பேச்சு கருணாநிதியுடையது.2004 தேர்தலுக்கு முன் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு கலைஞரின் பேச்சை நேரில் இப்போதுதான் கேட்கிறேன். திமுக மாநாடுகளுக்குப் போகவில்லை.

இந்த விழாவிற்கு முன்னதாக தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனைத் திறப்பு விழாவில் பிரதமரும் முதல்வரும் பேசுவதாக இருந்தது. முதல்வர் உடல்நலக் குறைவு காரணமாக அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் ஒரே நாளில் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடனும் திரு. கருணாநிதியுடனும் வேறு வேறு கூட்டங்களில் பேச முடிகிறது என்பதே மிகவும் ஆரோக்கியமாகத் தெரிந்தது. ஆனால் முதல்வருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு இந்த ஆரோக்கிய அரசியலையும் பாதித்து விட்டது.

விழா நடந்த அரங்கம் 2வது தளத்தில் இருந்தது..முதல் தளத்திலும் மூன்றாவது தளத்திலும் மதிமுக தொண்டர்களுக்கு பெரிய திரைகளில் விழா காட்டப்பட்டது. எனவே கூட்டம் அதிகமாக இருந்தது.

சரி..விழாவை விட்டுவிடுவோம்.. வலைப் பதிவுக்கு வருவோம்..விழா முடிந்து ஆயிரக்கணக்கில் மக்கள் அரங்கத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது திடீரென வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது. ஆம்..நண்பர் மாலனை அந்தக் கூட்டத்துக்கு நடுவே சந்தித்தேன். நேருக்கு நேர் அது முதல் சந்திப்பு..அவரது எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். சின்னத் திரையில் பார்த்திருக்கிறேன். மேடைகளில் பேசக் கேட்டிருக்கிறேன். சந்திப்பதும் இறுக்கம் தளரக் கை குலுக்குவதும் இதுவே முதல் முறை. அன்புடன் லிப்ட் கொடுக்க முன்வந்தார். துரதிர்ஷ்ட வசமாக நாங்கள் இருவரும் நகரின் எதிரெதிர் பகுதிகளில் குடியிருக்கிறோம்.(அய்யா, அம்மா! வரிகளுக்கிடையில் வாசிக்காதீர்கள்!). இந்த நிலையைச் சொல்லி பிறகு தொடர்பு கொள்வதாகக் கூறி விடைபெற்றேன். மாலன் உடல் எடையைக் குறைத்து அழகாக மெலிந்து இருக்கிறார், நாமும் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வண்டி நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தேன்.

4 Comments:

At 1:31 PM, Blogger kirukan said...

//வைகோவின் தனிப்பட்ட பண்பும் பழகும்விதமும் டெல்லியில் சம்பாதித்த நட்புமே ஒரு நாட்டின் பிரதமரை ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரவழைத்திருக்கின்றன.//
Unmai Unmai.

 
At 9:28 AM, Blogger Boston Bala said...

திரைக்குப் பின் செய்திகளைக் கொடுத்ததும் சூப்பர். பதிவுக்கு என்னுடைய நன்றி.

 
At 7:50 PM, Blogger வீ. எம் said...

//முன்வைத்தார் என்பது ஏனோ என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது//

அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்ப்பா

//தனது தள்ளாத வயதிலும் தளராத சிந்தனையுடன் தடுமாற்றம் இல்லாத பேச்சு கருணாநிதியுடையது//

பலரும் வியக்கும் அவருக்கே உரிய தனித்தன்மை இது..

ஆனால் முதல்வருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு இந்த ஆரோக்கிய அரசியலையும் பாதித்து விட்டது.

இதுவும் அவருக்கே உள்ள தனித்தன்மை :)

மாலனை சந்தித்தது நல்லதொரு விஷயம்..

அழகாக தொகுத்து வழங்கியிருந்தீர்கள்..வாழ்த்துக்கள்

 
At 8:32 PM, Blogger ஜென்ராம் said...

கிறுக்கன், பாஸ்டன் பாலா, வீ.எம் :
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

 

Post a Comment

<< Home