சிறையில் விரிந்த மடல்கள் – வைகோ நூல் வெளியீட்டு விழா
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு 500 நாட்களுக்கு மேலாக வேலூர் சிறையில் இருந்தபோது தொண்டர்களுக்கு எழுதிய கடிதங்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வருகிற சனிக்கிழமை செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இதன் ஆங்கில மொழியாக்கத்தை பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் வெளியிட இந்து என்.ராம் பெறுகிறார்.
தமிழ் வடிவத்தை திமுக தலைவர் மு.கருணாநிதி வெளியிட தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.எம்.ராமசாமி பெறுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜி.கே.வாசன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.
இடம்: மேயர் இராமநாதன் சென்டர், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.
தேதி : 03.09.2005 மாலை 6.00 மணி.
இந்தத் தகவலை நேற்று சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ தெரிவித்தார். வந்திருந்த அனைவருக்கும் நேற்று மதிய உணவு அவருடன் தான்.
வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்களுடன் மதிய உணவைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் வைகோவிடம் உண்டு. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனவரி முதல் தேதி காலை அவருக்கு வேலூர் சிறையில் விடிந்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி சந்திப்பு அதற்கு முந்தைய வார சுனாமி காரணமாக ரத்து செய்யப்பட்டது.
வீட்டு முகவரிக்கு விழா அழைப்பிதழ் வந்தது. நேரில் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடையப் போகிறது என்ற உண்மை உறைத்தது..கடந்த 2004 செப்டம்பர் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழையில் சில கிலோமீட்டர் தூரம் அவருடன் பேசிக் கொண்டே நடந்து சென்றேன். அவர் அப்போது மறுமலர்ச்சி நடைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்பின் பல தருணங்களில் தொலைபேசியில் பேசுவதுடன் என் பணி முடிந்து விடும். நேற்று அதனால் நேரில் சென்று பார்த்தேன்.
அதன் பின்விளைவாக இந்தப் பதிவும் போட்டிருக்கிறேன்.
5 Comments:
ராம்கி,
வைகோ- வுடனான உங்கள் அனுபவங்களை ,அவரிடம் நீங்கள் தனிப்பட்ட முறையில் கண்டு கொண்ட அணுகுமுறைகளைப் பற்றியெல்லாம் விரிவாக பதியலாமே?
ராம்கியைக்கூட நடக்கவைத்துவிட்டதற்காக திரு.வை.கோ. வுக்கு ஒரு சால்வை போர்த்தலாம் போல!
ஜோவின் வேண்டுகோள்தான் எனக்கும்
ஜோ, தேன் துளி:
நன்றி..உடனடி சாத்தியம் குறைவு என்றே கருதுகிறேன். தங்கள் கருத்தை மதிக்கிறேன்.
தாணு, நான் பிரிக்கப்படாத மதுரைப் பல்கலைக்கழகத்தை பூப்பந்தாட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறேன் என்பதை மறந்துவிட்டீர்கள் போல் இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் சொல்வது சமீபத்திய வருடங்களுக்குப் பொருந்தும்தான்..கொட்டும் மழையில் நடந்த அனுபவமும் புதிதுதான்.
Post a Comment
<< Home