Wednesday, September 21, 2005

20 ஆண்டுகளாக மறுக்கப்படுகிற நீதி!

அந்த இரவு அவர்களுக்கு விடியாத இரவாக இருக்கும் என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தொழில் நகரமான போபாலில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அது அப்படித்தான் விடிந்தது.

அந்த நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை. 1984ஆம் வருடம் டிசம்பர் 3ஆம் தேதி. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலர் கடுமையான இருமலுடனும் மூச்சுத் திணறலுடனும் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். பலர் வழியிலேயே சுருண்டு விழுந்தனர். அவர்களது நுரையீரல் தீப்பற்றி எரிவது போல எரிந்தது. அந்த நெடியும் அந்த எரிச்சலும் அவர்களுக்கு ஒன்றும் புதிதும் அல்ல. ஆனால் அன்று எல்லாமே அளவுக்கு அதிகமாக இருந்தது.

வீதியெங்கும் மக்கள் வெள்ளம்.. அந்த நெடியின் பிடியில் இருந்து விடுபட அவர்கள் ஓடத் தொடங்கினார்கள். நகரமெங்கும் மரண ஓலம். கண்ணெதிரே குடும்பத்தினரும் பழகியவர்களும் உள்ளூர்வாசிகளும் மடிந்து விழுவதைப் பார்த்து நின்று உதவ நேரம் இல்லை.

"உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா? முடிந்தவரை உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடு'' என்பது அந்த இரவு அவர்களுக்கு இட்ட கட்டளை. தாய்மார்கள் தங்கள் குழந்தையைப் போட்டுவிட்டு ஓடும் அவலம் கூட நடந்திருக்கிறது. விபரம் தெரிந்தவர்கள் நிலைமையை உணர்ந்தனர். நகரத்தில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து அவ்வப்போது திறந்துவிடப்படும் வாயுவால்தான் இந்த நிலைமை என்று.

ஆனால் அன்று அதிகமான அளவிலும் அதிகநேரமும் அது காற்றில் கலந்து இருந்தது.

காரணம் அன்று வாயு திறந்து விடப்படவில்லை. ஒரு வெடியோசையுடன் கசிந்து கலந்திருக்கிறது.

அரை மணிநேரம் ஓடிய பிறகு நின்று பார்த்தால் ஓடி வந்தவர்களில் பலர் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களை அறியாமலேயே சிறுநீரும் மலமும் பிரிந்திருக்கின்றன. அன்றைய இரவு மட்டும் எத்தனை ஆயிரம் பேர் இறந்திருப்பார்களோ தெரியாது. தெருவெங்கும் பிணங்கள். பிணங்களுக்கு நடுவில் தங்கள் உறவினர்களின் அடையாளங்களைத் தேடும் உயிருள்ள உடல்கள். அவசர அவசரமாக பல நூறு உடல்கள் அடையாளம் காணப்படாமலேயே புதைக்கப்பட்டன. அல்லது எரிக்கப்பட்டன. உயிரோடு இருந்தவர்கள் உடலில் எண்ணற்ற மாறுதல்கள். அடுத்த தலைமுறை வரை அந்த நகர மக்கள் மலட்டுத்தன்மை, பிறவிக் குறைபாடுகள், தோள்களில் விரல்கள் முளைத்தல், நிலத்தடி நீரில் விஷம் பரவி இருத்தல் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர்.

இந்த அளவு மோசமான சம்பவம் நடந்த பிறகுதான் தெரிகிறது, வாயுக் கசிவு போன்ற அவசர நிலை குறித்து அறிவித்து மக்களை எச்சரிக்க ஒரு ஏற்பாடும் ஆலையில் இல்லை என்பதே. அதைவிட இந்த விஷவாயு சம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் ஆகியும் இதில் குற்றம்சாட்டப்பட்டவர் இன்னும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது இன்னும் மோசமான விஷயம்.

போபால் விஷவாயு சம்பவத்திற்கு நியாயம் வழங்க இந்திய நீதிமன்றங்கள் எவ்வளவோ முனைந்தன. ஆனால் அவ்வளவு முயற்சிகளும் தவிடு பொடியாயின. இந்த சம்பவம் நடந்தபோது யூனியன் கார்பைடு ஆலையின் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருந்த வாரன் ஆன்டர்சன் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டது. இந்திய நீதிமன்றத்தின் பார்வையில் அவரும் அவருடன் இணைந்தவர்களும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களை நமது நாட்டுக்குத் திரும்பிப் பெற அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பல வருடங்களாக அந்த கோரிக்கையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்ட அமெரிக்க அரசு இந்த செப்டம்பர் 2004ல் எந்தவித விளக்கமும் சொல்லாமல் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

ஆனால் போபாலில் உயிர் பிழைத்தவர்கள் மற்ற மனிதர்களுடன் சேர்ந்து கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். முறையான வழக்கு விசாரணை, நியாயமான இழப்பீடு, விபத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு தேவையான மருத்துவ, பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் மறுவாழ்வு அளித்தல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இடைவிடாமல் இயக்கம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு இந்த வருடம்தான் புதிய தெம்பு கிடைத்திருக்கிறது. முதன்முதலில் ஆம்னெஸ்டி இன்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு போபால் மக்களின் கோரிக்கைகளை ஆதரித்து யூனியன் கார்பைடுக்கு எதிராக ஆரோக்கியமான சூழலில் வாழ்வதற்கான மனித உரிமை மீது இந்த ஆலை தாக்குதல் தொடுத்துள்ளது என்று அறிக்கை அளித்துள்ளது.

நவீன நாகரிக வரலாற்றில் 22 ஆயிரம் பேரைப் பலி கொண்டும் இருபது வருடங்கள் கழித்தும் இன்று வரை லட்சக்கணக்கான நபர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியும் இந்த விபத்து இடம் பிடித்துள்ளது. ரஷ்யாவில் நடந்த செர்னோபில் விபத்தில் ஏற்பட்ட சேதத்தைவிட இங்கு சேதம் அதிகம் என்று கூறுவோரும் உண்டு.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3ஆம் தேதி போபாலில் கண்டன ஊர்வலம் அல்லது ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் ஆன்டர்சனின் உருவ பொம்மை எரிக்கப்படும். போபால் மக்கள் முழுக்க முழுக்க இந்த சம்பவத்திற்கு ஆன்டர்சனின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று கருதுகிறார்கள். இதை ஒரு விபத்து என்று ஏற்க மறுக்கிறார்கள். இதை ஒரு படுகொலை என்றே வர்ணிக்கிறார்கள்.

1973ல் ஆன்டர்சன் அளித்த அறிக்கையிலேயே இங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பாதுகாப்பானதுதானா என்று பரிசோதித்து அறியப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 1982ல் கம்பெனி நடத்திய ஆய்வில் இங்கு ஏற்படும் விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்படுவதற்கான அபாயம் உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் யாரும் இதில் அக்கறை காட்டவில்லை. எனவே இதற்கு அன்றைய தலைவரான ஆன்டர்சன்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது போபால் மக்கள் வாதம்.

இன்று ஆன்டர்சன் 80 வயதைக் கடந்துவிட்டார். யூனியன் கார்பைடில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இன்னும் சிக்கலாக டோவ் கெமிக்கல்ஸ் என்ற கம்பெனி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிவிட்டது. கம்பெனியின் சொத்துக்களைத் தான் நாங்கள் வாங்கியிருக்கிறோமே தவிர கடன்களையும் பொறுப்புகளையும் அல்ல என்று ஆவணங்களின் உதவியுடன் பேசுகிறது டோவ் கெமிக்கல்ஸ். ஆனால் போபால் மக்கள் டோவ் கெமிக்கல்ஸ் கம்பெனியை வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் சேர்க்கக் கோருகிறார்கள்.

போபால் மக்கள் இன்று வரை கருச்சிதைவு, கான்சர், மாதவிடாய்க் கோளாறுகள் போன்ற பல நோய்களுக்கு ஆட்படுகின்றனர். மிகப் பெரிய விஷவாயுக் கசிவு சம்பவத்தின்போது பாதுகாப்பு இல்லாமல் நிராயுதபாணியாக நின்றிருக்கிறார்கள். ஏராளமான இழப்புகளுக்கு பிறகும் இருபது வருடங்களாக நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இருபது வருடங்களுக்குப் பிறகும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அறிவிக்கப்பட்ட குற்றவாளியைக் கைது செய்து இந்தியாவிற்குள் கொண்டு வர முடியவில்லை.

இந்நிலையில் வழக்கம்போல் இந்த வருடம் டிசம்பர் 3 ஆம் தேதியும் போபால் நகரத்தில் ஆர்ப்பாட்டம் அல்லது ஊர்வலத்துடன் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதை வெறும் வருடாந்திர சடங்காக அரசு கருதுகிறது போலும்!

(2004 டிசம்பர் முதல் தேதி எழுதப்பட்டது)

4 Comments:

At 7:43 PM, Blogger தாணு said...

20 ஆண்டுகள் கழிந்துவிட்டாலும், மறுபடியும் அதன் அழிவுகளைப் பற்றி யோசிக்கும்போது மனதைப் பிசைகிறது. அதே உணர்வு மனிதன் என்ற முறையில்கூடவா ஆண்டர்சன் போன்றவர்களுக்கு இல்லை.டோவ் கெமிக்கல் தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது ரொம்பக் கேவலமாக இருக்கிறது. மறுமணம் முடித்துவிட்டு, முதல் திருமணத்தில் பிறந்த குழந்தையை அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு வா என்று சொல்வதுபோல் உள்ளது அவர்கள் கூற்று.

 
At 9:09 PM, Blogger பத்மா அர்விந்த் said...

போனவருடம் இதை பற்றி ஒரு விவாதம் நடந்தது. ஈடாக கொடுத்ததாக சொல்ல படும் பொருளும் காணாமல் போன இடம் தெரியவில்லை. கொடுமையான நிகழ்வு.

 
At 9:49 PM, Blogger ஜென்ராம் said...

நன்றி தாணு.

தேன்துளி: வலைப்பதிவுகளிலா விவாதம் நடந்தது? அப்போது நான் வலைப்பதிவுக்கு அறிமுகமாயிருக்கவில்லை. உங்கள் நினைவில் இருந்து சில பதிவுகளைச் சொல்ல முடிந்தால், பார்த்து அறிந்து கொள்வேன். நன்றி

 
At 11:34 PM, Blogger erode soms said...

இதுபோன்றதொரு நிகழ்வு அமெரிக்காவில் நிகழ்ந்திப்பின்
என்ன நடந்திருக்கும்!
இந்தியர்கள் பாவப்பட்டவர்கள்.

 

Post a Comment

<< Home