Friday, July 22, 2005

பெற்றோருடன் வந்தால்தான் திருமணம் பதிவு

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போவோமா இல்லை ஓடிப்போய்க் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று குஜராத்தில் உள்ள காதலர்கள் பாட முடியாது போலும்!

அப்பா அம்மா சம்மதத்தை எழுத்துப்பூர்வமாக வாங்கி வந்தால் மட்டுமே குஜராத் மாநிலத்தில் இனி நீதிமன்றங்கள் திருமணங்களைப் பதிவு செய்யுமாம்..நரேந்திர மோடி அரசு இப்படி பதிவாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம்.

இது சட்டப்படி செல்லுமா என்பது வேறு விஷயம்.காதல் திருமணங்களையும் கலப்பு மணங்களையும் தடுப்பதற்கான முயற்சியாகவே தெரிகிறது.

ஒரு வேளை இனி புரோகிதர் இல்லாமல் செய்யப்படும் திருமணங்களையும் பதிவு செய்யாதீர்கள் என்று சொன்னாலும் சொல்வார்கள்.சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்டரீதியிலான பாதுகாப்பு கொடுங்கள் என்று மத்திய அரசைத் தமிழகத்திலிருந்து வலியுறுத்தி வரும் காலகட்டத்தில் இது ஒரு பின்னடைவே..

பெற்றோரைப் புறக்கணிப்பதுதான் முன்னேற்றமா என்று யாரும் சீறிப் பாய்ந்து விடாதீர்கள்.
இந்திய சட்டங்களின்படி 21 வயது நிறைவடைந்த ஆணும் 18 வயது நிறைவடைந்த பெண்ணும் அவர்களது விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது குஜராத்துக்குப் பொருந்தாதா என்பதே எனது கேள்வி.

இன்னும் முழுவதுமாக செய்தி பார்க்கவில்லை. கேள்விப்பட்டவுடன் போட்ட பதிவு.

திருத்தங்களுக்குத்தான் பின்னூட்டம் இருக்கிறதே..

Thursday, July 14, 2005

எல்லோரும் நல்லவரே

அரசியல் போரடிக்கிறது..பிரச்னை பேசினால் விவகாரமான பின்னூட்டம் வருகிறது..
சில காலமாக தமிழ்மணம் டல்லடிக்கிறது..(அப்படியானால் விவகாரமான பின்னூட்ட காலம் தான் பரபரப்பான காலமா என்ற கேள்வி எழுகிறது). இப்படியெல்லாம் சில பதிவுகளிலும் சில பின்னூட்டங்களிலும் கருத்துக்கள் தெறிப்பதைப் பார்த்து நானும் என் பங்குக்கு சினிமாவில் குதிக்கிறேன்.

தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாத இரு கூறுகள்.. அறம், பொருள், இன்பம்.. நம் வாழ்வில் பிரிக்க முடியாதது..

அறம் காக்க நாம் மடங்களையும் சாமியார்களையும் பின்பற்றி ஓடுவோம் ..மதச் சண்டைகள் போடுவோம்..
பொருள் சேர்க்க அரசியலை வளர்ப்போம்.. லஞ்சம்,ஊழல்,குடும்ப அரசியலைப் போற்றுவோம்..
இன்பம் துய்க்க சினிமாவை ஆதரிப்போம்..

(சினிமா பாட்டுப் பதிவு போடறதுக்கு எதுக்கு இவ்வளவு லெக்சர்! தள்ளிப் போ, நாங்க பாட்டைப் பார்க்கட்டும்..கேட்கிறது..)

நினைவில் இருந்து பதிவு செய்கிறேன். பிழை(கள்) இருக்கலாம்..திருத்தும் உள்ளங்களுக்கு எனது நன்றிகள்!


எல்லோரும் நல்லவரே
படைத்தானே பிரம்ம தேவன்
பதினாறு வயதுக் கோலம்
இது யார் மீது பழி வாங்கும் சோதனை
உனைக் காண்போர்க்கு சுகமான வேதனை (படைத்தானே)

இந்தக் கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா
இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா
நீ இல்லாத வானத்தில் நிலவேதடி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி
ஒரு வரம் வேண்டி நான் கேட்பேன் தேவனை
இனி தினந்தோறும் வரவேண்டும் சுக வேதனை (படைத்தானே)

உனை ரவிவர்மன் காணாமல் போனானடி
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலந்தானடி
இது கோடியில் ஒருத்தர்க்கு வாய்க்கின்றது
அது கோடானுகோடியை ஏய்க்கின்றது
ஒரு வரம் வேண்டி நான் கேட்பேன் தேவனை
இனி தினந்தோறும் வரவேண்டும் சுக வேதனை (படைத்தானே)

Wednesday, July 13, 2005

அந்நியன் அத்வானி

அந்நியன் அத்வானி

ரத யாத்திரை அம்பி

துணைப்பிரதமராக அமெரிக்கா சென்றுவந்த ரெமோ

ஜின்னா செக்யூலர் என்று பாகிஸ்தானில் சொன்ன அந்நியன்..

பிற ஆளுமையோ ஒரே ஆளுமையின் பல தோற்றங்களோ

இன்று எல்லா செய்தித் தாள்களிலும் அத்வானி .. அத்வானி.. அத்வானி தான்.

Friday, July 01, 2005

குற்றம் என்ன செய்தாய் பெண்ணே?

சமீபத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடந்த இரு நிகழ்ச்சிகள் நாம் நாகரிக உலகில்தான் வாழ்கிறோமா என்று எண்ண வைத்தது. (ஒவ்வொரு சம்பவம் நடக்கும் போதும் இப்படி எழுதுவது சம்பிரதாயம்?)

பாகிஸ்தானில் ஒரு சகோதரன் செய்த குற்றத்திற்காக அவனது சகோதரியை மூன்றுபேர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துமாறு ஊர்ப் பஞ்சாயத்து உத்தரவிடுகிறது.
இந்தியாவில் மாமனாரால் வன்புணர்தலுக்குள்ளான இம்ரானா என்ற பெண்ணைக் கணவனுடன் சேர்ந்து வாழக் கூடாது என்று உத்தரவு.. ஏற்கனவே கொடுமைக்கு உள்ளானவருக்கே மேலும் அநீதி இழைக்கப்படுகிறது.

மிகச்சுலபமாக சிலர் இந்த நிகழ்ச்சிகளை மதத்துடன் இணைத்துப் பார்த்து அரசியல் செய்யத் தொடங்கிவிட்டனர். இதை மனித உரிமைக்கு எதிரான செயலாக்ப் பார்க்கத் தவறுகிறார்கள். ஆனால் பெண்களுக்கு எதிராக இது போன்ற அநீதிகள் இழைக்கப்படுவதற்கான வேர்களை வேறு கதைகளில் காண முடிகிறது. இந்திரனின் மாறுவேட ஏமாற்று மோசடியில் ஏமாந்த அகலிகை கல்லாகப் போகுமாறு சாபம் பெற்றாள்.ரேணுகாவை அவளது புதல்வன் பரசுராமனே தலையைக் கொய்தான். சிறுவயதுத் திருமணங்களுக்கு எதிராகப் போராடிய பன்வாரி என்ற பெண்மணி வட இந்தியாவில் ஒரு கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளானாள் என்று படித்த நினைவு..

அகலிகை, ரேணுகா, இம்ரானா போன்றவர்கள் செய்த குற்றம் என்ன?

பிறர் தம்மீது ஆசை கொள்ளாதவாறு பெண் நடந்து கொள்ள வேண்டுமாம்!
பெண்களது ஆடைகள் பாலியல் வன்முறைக்கு ஆண்களைத் தூண்டுகிறதாம்!!
(இப்போதுகூட பால்தாக்கரே இப்படித்தான் கூறுகிறார்) ஐயோ, சமீபத்திய மும்பை போலீஸ்காரர் நடத்திய பாலியல் வன்முறைக்குப் பின் தாக்கரே தனது சாம்னா நாளிதழில் இப்படி சொல்லியிருந்தார் என்று செய்தி படித்தேன்.

பாலியல் குற்றங்களில் நீதிமன்றங்களும் சரியான தண்டனைகளை வழங்கியதாகத் தெரியவில்லை. சட்டங்களும் ஆண்களின் பார்வையிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது கூட காரணமாக இருக்கலாம்.
அகலிகை, ரேணுகா, இம்ரானா போன்றவர்கள் செய்த குற்றம் என்ன?
வலைப்பதிவு நடுவர்கள்தான் தங்கள் பின்னூட்டங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும்.