Friday, July 01, 2005

குற்றம் என்ன செய்தாய் பெண்ணே?

சமீபத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடந்த இரு நிகழ்ச்சிகள் நாம் நாகரிக உலகில்தான் வாழ்கிறோமா என்று எண்ண வைத்தது. (ஒவ்வொரு சம்பவம் நடக்கும் போதும் இப்படி எழுதுவது சம்பிரதாயம்?)

பாகிஸ்தானில் ஒரு சகோதரன் செய்த குற்றத்திற்காக அவனது சகோதரியை மூன்றுபேர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துமாறு ஊர்ப் பஞ்சாயத்து உத்தரவிடுகிறது.
இந்தியாவில் மாமனாரால் வன்புணர்தலுக்குள்ளான இம்ரானா என்ற பெண்ணைக் கணவனுடன் சேர்ந்து வாழக் கூடாது என்று உத்தரவு.. ஏற்கனவே கொடுமைக்கு உள்ளானவருக்கே மேலும் அநீதி இழைக்கப்படுகிறது.

மிகச்சுலபமாக சிலர் இந்த நிகழ்ச்சிகளை மதத்துடன் இணைத்துப் பார்த்து அரசியல் செய்யத் தொடங்கிவிட்டனர். இதை மனித உரிமைக்கு எதிரான செயலாக்ப் பார்க்கத் தவறுகிறார்கள். ஆனால் பெண்களுக்கு எதிராக இது போன்ற அநீதிகள் இழைக்கப்படுவதற்கான வேர்களை வேறு கதைகளில் காண முடிகிறது. இந்திரனின் மாறுவேட ஏமாற்று மோசடியில் ஏமாந்த அகலிகை கல்லாகப் போகுமாறு சாபம் பெற்றாள்.ரேணுகாவை அவளது புதல்வன் பரசுராமனே தலையைக் கொய்தான். சிறுவயதுத் திருமணங்களுக்கு எதிராகப் போராடிய பன்வாரி என்ற பெண்மணி வட இந்தியாவில் ஒரு கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளானாள் என்று படித்த நினைவு..

அகலிகை, ரேணுகா, இம்ரானா போன்றவர்கள் செய்த குற்றம் என்ன?

பிறர் தம்மீது ஆசை கொள்ளாதவாறு பெண் நடந்து கொள்ள வேண்டுமாம்!
பெண்களது ஆடைகள் பாலியல் வன்முறைக்கு ஆண்களைத் தூண்டுகிறதாம்!!
(இப்போதுகூட பால்தாக்கரே இப்படித்தான் கூறுகிறார்) ஐயோ, சமீபத்திய மும்பை போலீஸ்காரர் நடத்திய பாலியல் வன்முறைக்குப் பின் தாக்கரே தனது சாம்னா நாளிதழில் இப்படி சொல்லியிருந்தார் என்று செய்தி படித்தேன்.

பாலியல் குற்றங்களில் நீதிமன்றங்களும் சரியான தண்டனைகளை வழங்கியதாகத் தெரியவில்லை. சட்டங்களும் ஆண்களின் பார்வையிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது கூட காரணமாக இருக்கலாம்.
அகலிகை, ரேணுகா, இம்ரானா போன்றவர்கள் செய்த குற்றம் என்ன?
வலைப்பதிவு நடுவர்கள்தான் தங்கள் பின்னூட்டங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும்.

13 Comments:

At 10:51 PM, Blogger நல்லடியார் said...

//பாலியல் குற்றங்களில் நீதி மன்றங்களும் சரியான தண்டனைகளை வழங்கியதாகத் தெரியவில்லை. //

No Comments...

 
At 11:10 PM, Blogger குழலி / Kuzhali said...

//பிறர் தம்மீது ஆசை கொள்ளாதவாறு பெண் நடந்து கொள்ள வேண்டுமாம்!
பெண்களது ஆடைகள் பாலியல் வன்முறைக்கு ஆண்களைத் தூண்டுகிறதாம்!!
//
இது ஒரு கேவலமான ஆணாதிக்க நோயுற்ற சிந்தனையின் வெளிப்பாடு, இது மாதிரி எண்ணும் ஆண்களின் மனநிலையை கண்டிப்பதை விட்டுவிட்டு பெண்களை மூடிக்கொண்டு வரச்சொல்வது பெண்களுக்கு செய்யப்படும் பெரிய அவமானம்.

அறுக்க வேண்டியதை அறுத்தால் எல்லாம் சரியாகிவிடும்

 
At 11:12 PM, Blogger குழலி / Kuzhali said...

//பாலியல் குற்றங்களில் நீதி மன்றங்களும் சரியான தண்டனைகளை வழங்கியதாகத் தெரியவில்லை. //
அதற்கு கண்ணால் பார்த்த 4 சாட்சிகள் சபையிலே சாட்சி சொல்ல வேண்டும்... அதுவரை அது குற்றமுமில்லை தண்டனையுமில்ல.... வேதனைடா சாமியோவ்...

 
At 11:17 PM, Blogger SnackDragon said...

ராம்கி,
அகலைகையை விட்டுத்தள்ளுங்கள். அது கதை. உண்மைக்கு வருவோம்.

ஆடையால் வருகிறது என்றால் அம்மவைப்பார்த்தால் கூட வரனுமே?
:-) அப்போ எங்கே போகுது தூண்டுதல்?

மொத்த சமூகமே ஒரு இனத்தால் (ஆண் இனத்தால்) அதிகாரம் செய்யப்படும்போது இப்படித்தான் செய்திகளை கேள்விப்படுவோம்.

 
At 11:26 PM, Blogger U.P.Tharsan said...

ஜரோப்பிய நாடுகளில் கொலை செய்தவருக்கு கூட குறைந்ததண்டணைதான் ஆனால் பாலியல் சம்மந்தமான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டணை. அதுதான் நம்மட ஆட்கள் அடிக்கடி சும்மா கொலை செய்யிறாங்கள்.:-))

 
At 12:13 AM, Blogger ஜென்ராம் said...

நல்லடியார், அந்தப் பகுதியில் ஏதேனும் தவறு இருக்கிறதா? ஏன் No comments?

குழலி, //அறுக்க வேண்டியதை அறுத்தால் எல்லாம் சரியாகிவிடும்//அப்படி ஒரு வேகம் வருகிறது. வழக்கும் விசாரணையும் சாட்சிகளும் நிரூபணமும் தொடர் தண்டனைகள்.

Karthikramas, u.p.tharsan :- உண்மை. உண்மையை உணர்வோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்

 
At 3:06 PM, Blogger நல்லடியார் said...

//நல்லடியார், அந்தப் பகுதியில் ஏதேனும் தவறு இருக்கிறதா? ஏன் No comments?//

தவறில்லை ராம்கி! நாங்கள் இதை சொன்னால் குழலி போன்றவர்கள் எதையாவது அறுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்ற பெண்ணுரிமை பேச ஆரம்பித்து விடுவார்கள் என்றே No Comment! என்று உங்கள் கருத்தை ஆமோதித்தேன்!

//ஆடையால் வருகிறது என்றால் அம்மவைப்பார்த்தால் கூட வரனுமே? //

என்ன செய்வது? கார்த்திக் ராம்ஸ், பெண்கள் எல்லோரையும் அம்மாவாகப் பார்க்கும் ஆண்கள் நம்மில் இல்லையே!

//கண்ணால் பார்த்த 4 சாட்சிகள் சபையிலே சாட்சி சொல்ல வேண்டும்//

இன்னும் ஏன் இந்த ஒப்பாரி? சாட்சிகள் விஷயத்தில் இஸ்லாம் என்ன சொல்லியுள்ளது என்பதை அறிந்து கொண்டு, மேற்கொண்டு வாதிடுங்கள்!

ராம்கி, இங்கு இன்னொன்றையும் கவனியுங்கள், பெண்களின் உரிமைக்காக ஒரு இஸ்லாமியன் குரல் கொடுத்தால், அதில் உள்ள நியாயத்தை விட, முஸ்லிம் என்ற துவேசமே முன்னிருத்தப் பட்டுள்ளது.

என்ன செய்வது, முஸ்லிகளெல்லாம் மனசாட்சியற்ற, மனிதாபிமானமற்ற தீவிரவாதிகளாகவும்,பயங்கரவாதிகளாகவும் தானே இவர்களுக்கு சொல்லப் பட்டிருக்கிறார்கள்!

 
At 3:34 PM, Blogger SHIVAS said...

உலகில் தோன்றிய அனைத்து மதங்களுமே பெண்களை exploitation செய்ய வந்த சாபங்களே. இந்த மதங்களின் பிதற்றல்களின் அடிப்படையில் தான் இன்றைக்கும் அனேக நாட்டின் சட்டங்களும் உள்ளன. அவ்வளவு ஏன் கொடூரமாக கற்பழித்து கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் உடனே வந்துவிடும் மனித உரிமைக்கும்பல், அந்த பெண்ணுக்காக என்றக்குமே வருவதில்லை.
அனைவருக்கும் சமமான ஒரு மனித உரிமையை நீங்கள் இந்தியாவில் எதிர்பார்ப்பது நியாயம் இல்லை சகோதரரே.

மதங்கள் என்று அடியோடு அழியுமோ அன்று தான் பெண்களுக்கு விடிவுகாலம்.

 
At 11:19 PM, Blogger ஜென்ராம் said...

காஞ்சி பிலிம்ஸ், நன்றி.

நல்லடியார், முஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகளும் இல்லை. மற்ற மதப் பெண்கள் எல்லோரும் விடுதலை பெற்றவர்களும் இல்லை. இந்தப் பெற்றோருக்குத்தான் மகனாக/மகளாகப் பிறக்க வேண்டும் என்று யாரும் கேட்டு வந்து பிறப்பதில்லை. அது ஒரு தற்செயல் நிகழ்வே. அப்படியிருக்கும்போது அந்தப் பெற்றோருக்குப் பிறந்ததாலேயே அந்த சாதியையும் அந்த மதத்தையும் உடும்பாகப் பிடித்துக் கொண்டு மற்றவர்களிடம் விரோதம் பாராட்டுவதில் பொருளேதும் இல்லை. குழந்தைப் பருவத்தில் இருந்து ஊட்டப்படும் கருத்துக்களும் குடும்ப மற்றும் வாழும் சூழலும் நமது உணர்வுகளை உருவாக்குகின்றன என்பது என் கருத்து. ஒன்றைக் குறை சொல்லி இன்னொன்றை உயர்த்திப் பிடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
// என்ன செய்வது, முஸ்லிகளெல்லாம் மனசாட்சியற்ற, மனிதாபிமானமற்ற தீவிரவாதிகளாகவும்,பயங்கரவாதிகளாகவும் தானே இவர்களுக்கு சொல்லப் பட்டிருக்கிறார்கள்!// இது விலகும் மேகக் கூட்டம் மாதிரி மாறிவிடும் என்று நம்புகிறேன். 1980- 1986 வரை சீக்கியர்கள் இப்படித்தானே சித்தரிக்கப்பட்டார்கள்.. இன்று நிலைமைகள் மாறிவிடவில்லையா?
இரு தரப்பிலும் உள்ள அடிப்படைவாதிகள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலத்தானோ என்று தோன்றுகிறது.
எனது பதிவிலும் நான் மனித உரிமை என்ற அடிப்படையில்தான் பதிந்தேனே தவிர மத அடிப்படையில் அல்ல. ரூப் கன்வர்கள் சிதையில் ஏறிய 'சதி'ச் செயல்களுக்கு எதிராகவும் ஸ்டேஷன் பெஞ்ச்சில் விவாதங்கள் நடந்துள்ளன.

கருப்பு, அரசியல் நெடி உங்களுக்குப் போரடிக்கிறது. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதுதானே நமது வாழ்க்கை நிலைமைகளைத் தீர்மானிக்கிறது என்ற அடிப்படையில் அதில் மேலதிக கவனம் செலுத்துகிறேன். தமிழ்நாடு, இந்திய எல்லைகளுக்கு அப்பால் இலங்கை, ஈழம், மலேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அலுப்பாகத்தான் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்கிறேன். விரைவில் அவ்வப்போது வேறு விஷயங்களைப் பதிவு செய்ய முயல்கிறேன். நன்றி கருப்பு, நல்லடியார், காஞ்சி பிலிம்ஸ்.

 
At 3:56 AM, Blogger பத்மா அர்விந்த் said...

இதற்கு ஒருவகையில் சமூகமும் காரணம். சட்டத்தினுதவியை நாட பெரும் பெண்கள் வருவதில்லை. மீறி வருபவரும் நீதிமனத்தில் தோற்று போகிறார்கள். குடும்பத்தின் அரவணைப்பு இல்லாத சூழ்நிலையும் காரணம்.

 
At 8:39 PM, Blogger தாணு said...

ஆணாதிக்க சமுதாயத்தின் பிரதிநிதியே ஆண்களின் பார்வையில் இயற்றப்பட்ட சட்டத்தைச் சாடியிருப்பது மகிழ்ச்சி. பாலியல் வன்மைகளை மதத்துடன் இணைத்துப் பார்ப்பது, பிரச்னைகளை திசை திருப்புவதுதான். எந்த மதமும் விதி விலக்கல்ல. ராம்கி சொன்னதுபோல் அகலிகை, இம்ரானாக்களுடன் மேரி மகதலீன் போன்றவர்கள் exploit(சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை) பண்ணப் பட்டிருப்பதை டாவின்சி கோட் படித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
உடையும் கலச்சாரமும் இல்லாத காட்டுவாசிகளிடமும் கூட பாலியல் வன்முறைகள் இருக்கும் போது, உடை அணிதல் ஒரு பொறுப்பான விளக்கமாகுமா? “சிரிக்கின்ற பெண்களைப் பார்க்கின்ற கண்ணுக்கு அழைப்பதுபோல்” தோன்றுவது மாறும் வரை இவையெல்லம் மாறப்போவதில்லை.

“பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வைப் பாராட்ட யாருமில்லை இந்த வாழ்க்கையிலே; பல பேரைச் சேரும் பரந்தாமன் தன்னைப் புகழ் பாட கேட்டதுண்டு இந்த பூமியிலே; நியாயங்களோ பொதுவானது- புரியாமல் போனது”
ஆதங்கங்களுடன்,
தாணு.

 
At 11:33 PM, Blogger ஜென்ராம் said...

நன்றி தாணு..
//ஆணாதிக்க சமுதாயத்தின் பிரதிநிதியே ஆண்களின் பார்வையில் இயற்றப்பட்ட சட்டத்தைச் சாடியிருப்பது மகிழ்ச்சி.//

ஏன் இப்படி சாடியிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. நான்,"ஒரு ஆண், ஆண்களின் பார்வையில் இயற்றப்பட்ட சட்டத்தைச் சாடியிருப்பது மகிழ்ச்சி" என்று நீங்கள் எழுத நினைத்ததாகப் பொருள் கொள்கிறேன்.

 
At 8:52 PM, Blogger தாணு said...

ஆசிரியரின் மனதிருப்திக்காக வேண்டுமானால் அந்த கூற்றை வாபஸ்(இதற்கு தமிழ் என்ன?) பெற்றுக்கொள்கிறேன். பட்டங்கள் ஆண்டாலும் சட்டங்கள் செய்தாலும் பெண்கள் ஒடுக்கப்படுவது உள்ளங்கை நெல்லிக்கனி.தனிப்பட்ட யாரையும் சாடுவது என் நோக்கமல்ல.
தாணு.

 

Post a Comment

<< Home