Wednesday, May 11, 2005

பிளவுகளால் சரியும் காங்கிரஸ்

பாண்டிச்சேரியில் கண்ணன் புதுக்கட்சி தொடங்கப் போகிறார். கேரளாவில் முதுபெரும் தலைவர் கே.கருணாகரன் "தேசிய காங்கிரஸ்- இந்திரா" என்ற புதிய கட்சியைத் துவக்கியிருக்கிறார்.
கட்சியில் ஏற்படும் பிளவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்று வரை காங்கிரஸ் கட்சி பல பிளவுகளை அகில இந்திய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் சந்தித்துள்ளது. அகில இந்திய அளவில் நடந்த பிளவுகளில் ஓரிரு விதிவிலக்குகள் தவிர அனைத்தும் நேரு இந்திரா குடும்பத்திற்கு ஆதரவாகவே முடிந்துள்ளன. அதேசமயம் மாநிலங்களில் நடந்த பிளவுகள், மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கைப் பெரும் சரிவுக்குள்ளாக்கியிருக்கின்றன.
பாண்டிச்சேரியிலும் கேரளாவிலும் இந்தப் பிளவுகளால் ஆட்சிகளுக்கு உடனடியான ஆபத்து எதுவும் இல்லை. இருந்தபோதிலும் 2006 இல் நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் இவை கட்சிக்குப் பின்னடைவைத் தரும்.
இதற்கு முன் மத்திய அளவில் காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, நீலம் சஞ்சீவி ரெட்டி போன்ற தலைவர்களின் ‘சிண்டிகேட்’டுக்கு எதிராக இந்திரா காந்தி தலைமையில் கட்சி 1969 இல் பிளவுண்டது. 1971 தேர்தலில் இந்திரா மாபெரும் வெற்றி அடைந்தார்.
1975 இல் இளந்துருக்கியர் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகர், மோகன்தாரியா, ராம்தன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1977 இல் தேர்தலுக்கு முன் உ.பி.யில் செல்வாக்கு பெற்ற ஹெச்.என்.பகுகுணாவும் பீகாரில் செல்வாக்கு மிகுந்த ஜெகஜீவன்ராமும் 'ஜனநாயகத்திற்கான காங்கிரஸ்' என்ற கட்சியைத் தொடங்கி இறுதியில் ஜனதா கட்சியுடன் இணைந்தனர். 1977 இல் ஜனதா மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு ஜனநாயகத்திற்கான காங்கிரஸ் மட்டும் காரணம் இல்லை என்ற போதிலும் அக்கட்சித் தலைவர்களின் பங்களிப்பை மறுக்க முடியாது.
1978 இல் இந்திரா காந்தியின் 'அவசர நிலை' காலத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக சில தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். 1980 தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். இந்திரா படுகொலைக்குப் பிறகு 1984 இல் ராஜீவ் காந்தி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.
1987-88 இல் வி.பி.சிங் ராஜீவ்காந்தியை எதிர்த்து வெளியேறி , ‘ஜன் மோர்ச்சா’ தொடங்கினார். 1989 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் பிரதமரானார். இந்தக் காலகட்டத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் முஸ்லீம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் காங்கிரசிடம் இருந்து அந்நியப்பட்டனர்.
நரசிம்மராவைப் பலவீனப்படுத்தும் விதத்தில் அர்ஜுன்சிங், என்.டி.திவாரி , வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து திவாரி காங்கிரஸ் உருவாக்கினர். சோனியாகாந்தி விசுவாசிகளான இவர்கள் கட்சித் தலைமையை சோனியா ஏற்றபின் கட்சியில் மீண்டும் இணைந்தனர்.
1996 இல் தமிழ்நாட்டில் நரசிம்மராவ் அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து மூப்பனார் தனியாகச் சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் உருவானது. ஹரியானாவில் பன்சிலால் ஹரியானா விகாஸ் கட்சியைத் தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினார். அவர் தனது கட்சியை மீண்டும் காங்கிரசில் இணைத்த பிறகே 2004 இல் ஹரியானாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
மாநில அளவில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மத்திய தலைமை தரும் தீர்வுகளில் அதிருப்தி அடைந்து சில மாதங்கள் சிறு கட்சியை நடத்திவிட்டுப் பின் தலைமையுடன் சமரசமாகிக் கட்சியை மீண்டும் இணைத்த வரலாறுகளும் உண்டு. மத்தியப்பிரதேசத்தில் மாதவராவ் சிந்தியாவின் மத்தியப் பிரதேச விகாஸ் காங்கிரஸ், மகாராஷ்டிரத்தில் எஸ்.பி.சவானின் மகாராஷ்டிர சமாஜ்வாதி கட்சியும் உதாரணங்கள். கர்நாடகாவில் பங்காரப்பா தனிக்கட்சி தொடங்குவதும் இணைவதும் பிரிவதும் சகஜமான நிகழ்ச்சிகள் என்று கேலி செய்பவர்கள் உண்டு.
பிளவுகளின் வரலாறே இவ்வளவு பெரிதாக இருக்கும் போது மாநிலங்களில் நிலவும் கோஷ்டிப் பூசல்கள் பற்றி கேட்கவே வேண்டாம். அவை பற்றி எழுதுவது இங்கு நோக்கம் இல்லை. இவ்வளவையும் தாண்டியும் தாங்கியும் தான் காங்கிரஸ் இந்த நிலையில் வந்து நிற்கிறது !

Friday, May 06, 2005

வேட்டியை மடிச்சுக் கட்டு..

தமிழக அரசியலில் முக்கியத்துவம் இல்லாத பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் நடைமுறை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பது தமிழக அரசியல்வாதிகள் கண்டிப்பாக வேட்டிதான் அணிய வேண்டுமா என்னும் பிரச்னை.
டாக்டர் ராமதாஸ் மகன் டாக்டர் அன்புமணி வேட்டி அணிவதில்லையாம். தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப் பேரவையில் விமர்சனம் செய்துள்ளார். " ஒரு மொழியின் வளர்ச்சிக்கோ அல்லது ஒரு பண்பாட்டின் வளர்ச்சிக்கோ உடை ஒரு பிரச்னை அல்ல" என்கிறார் இந்தியாவின் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் "நீதிமன்றத்திற்கு வழக்கறிஞராகப் போகும்போது கோட் அணிகிறேன். நண்பர்கள் வீட்டுக்குச் செல்லும்போது பேண்ட், சட்டை அணிகிறேன். ஓர் அரசியல்வாதியாக நான் வேட்டி சட்டை அணிகிறேன். அதுவே எனது அடையாளம்," என்கிறார். பேண்ட், சட்டையுடன் வலம் வந்த திருமாவளவன் வேட்டி சட்டைக்கு மாறிவிட்டார். டாக்டர் கிருஷ்ணசாமி 'பளிச்' என்று பேண்ட், சட்டையுடன் தன்னை வெளிப்படுத்தத் தயங்குவதே இல்லை.

அரசியல் கட்சித்தலைவர்கள் மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் என்ன நிலை எடுக்கிறார்கள் என்று பார்ப்பதை விட்டுவிட்டு அவர்கள் என்ன உடை உடுத்துகிறார்கள் என்று பார்க்க வேண்டியதாகிவிட்டது. வேட்டி தமிழர்களின் அடையாளம் என்பதால்தான் தமிழக அரசியல்வாதிகள் வேட்டி, சட்டையுடன் உலவுகிறார்கள். அவர்கள் வெளிநாட்டுக்குப் போகும்போது கோட், சூட் அணிந்து கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். வெளிநாடுகளில் வேட்டியுடன் நடமாடக்கூடாது என்று யார் இவர்களுக்கு வழிகாட்டினார்களோ தெரியவில்லை. ஆனால் இன்றும் வேட்டி சட்டையுடன் வெளிநாடு சென்றுவரும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள்.

"செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே" என்று நவீன உடை உடுத்தும் பெண்ணைப் பார்த்து நாயகன் பாடுவதை அப்படியே பால் மாற்றிப் பார்த்தால் வேட்டி உடுத்தத் தயங்குறியே என்றுதான் இருக்க முடியும். (தமிழச்சி சேலை தவிர வேறு உடை உடுத்தக்கூடாதா என்பது விவாதத்திற்குரிய வேறு விஷயம்)

இந்தப் பின்னணியில் உடை என்பது கலாச்சாரத்தின் ஓர் அங்கம்தானா என்ற கேள்வி எழுகிறது. ஆம் என்றால் வேட்டி கட்டுவது குறைந்து வருவது குறித்துத் தமிழக அரசியல்வாதிகள் ஏன் இயக்கம் நடத்தவில்லை? உடை நமது சவுகர்யத்திற்கு அணியலாம் என்றால் அது பண்பாட்டு அடையாளம் இல்லையா? ஆங்கிலேயர் வந்தபின் அறிமுகமான உடைகளை நாம் சுவீகரித்துக் கொள்ளலாம் என்றால் அவர்கள் மொழியில் இருந்து வந்து இன்று பரவலாகப் பேசப்படும் " எக்ஸ்பிரஸ்" என்ற சொல் ஏன் தமிழ்த்திரை உலகில் புயலைக் கிளப்ப வேண்டும்?

எண்ணற்ற கேள்விகள்.. இருந்தும் இது போன்ற பிரச்னைகளை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் நமது சமூகச் சூழ்நிலைகளில் " கொள்கை என்பது வேட்டி மாதிரி; பதவி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி ". நாம் காற்றில் பறக்கவிடுவது நமது கொள்கைகள் மட்டுமல்ல; நமது வேட்டிகளையும்தான்.
( வேஷ்டி என்று கூறுபவர்கள் தமிழர்களா என்ற விவாதம் இன்னும் சுவையானது.)

Wednesday, May 04, 2005

ஓர் அறிமுகம்

ஸ்டேஷன் பெஞ்ச்...
காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்ச்...
தமிழகத்தின் தென்கோடிப் பகுதியில் திருநெல்வேலியில் இருந்து ரயிலில் திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆறுமுகனேரிக்கு அடுத்து இருப்பது காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன்.. பஸ்ஸில் வரும்போது இந்த இடம் தூத்துக்குடிக்கும் திருச்செந்தூருக்கும் இடையில் இருக்கிறது.. இந்த சாலையில் இருந்து ஸ்டேஷனுக்குச் செல்லும் ரயில்வே பிளாட்பரத்தில் முதலில் இருக்கும் பெஞ்ச்தான் எங்கள் இருப்பிடம்..கல்விச்சாலை..போதிமரம் ..எல்லாம்..

மாலை 4.30 மணியில் இருந்து 6.30 வரை அருகில் உள்ள ரத்னா மனமகிழ் மன்றத்தில் பூப்பந்து விளையாடிவிட்டு அப்படியே இந்த ஸ்டேஷன் பெஞ்சில் வந்து இளைப்பாறும் ஓர் இளைஞர் கூட்டம். விளையாட்டில் ஆர்வம் இல்லாத வேறு சில இளைஞர்களும் நேரடியாக ஸ்டேஷன் பெஞ்சுக்கு வந்து விடுவார்கள்.

இந்த இளைஞர்களுக்கு எல்லா விஷயங்களிலும் தீவிரமான கருத்து உண்டு. அப்புறம் என்ன? அனல் பறக்கும் விவாதங்கள் தான். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா என்று சிறுகதை இலக்கியம் சில நாட்களில் சூடு கிளப்பும். மீரா, மேத்தா, அப்துல் ரகுமான், நா.காமராசன், இன்குலாப், தணிகைச்செல்வன், ஈரோடு தமிழன்பன் என்று புதுக்கவிதைப் புயல் வீசும்..இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உள்ள வேறுபாடுகள் அலசப்படும். திராவிடநாடு, அகண்ட பாரதம், மாநில சுயாட்சி, சோஷலிசம், கம்யூனிசம் போன்ற அரசியல் விஷயங்களில் இருந்து படிப்பு, வேலை, காதல், குடும்பப் பிரச்னைகள் போன்ற சொந்த விஷயங்கள் வரை விவாதங்களும் கலந்தாலோசனைகளும் உதவிகளும் நடக்கும்.

இந்த ஜோதியில் கலந்தவர்கள் இன்று பொறியாளர்களாகவும், வங்கி அதிகாரிகளாகவும், வியாபாரிகளாகவும் பத்திரிகையாளர்களாகவும் இருக்கிறார்கள். எந்தத் துறையில் அவர்கள் இருந்தாலும் அந்தத் துறையில் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு இந்த ஸ்டேஷன் பெஞ்ச் காலம் நிச்சயம் அடித்தளமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இருபது வருடங்கள் உருண்டோடிவிட்டன. இன்று அவர்களில் மிகப் பெரும்பாலானோர் சென்னையில்தான் இருக்கிறார்கள். சென்னையிலும் நிறைய ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. அந்த ஸ்டேஷன்களில் நிறைய பெஞ்ச்களும் இருக்கின்றன. ஆனால் இந்த நண்பர்கள் ஒரு நாள் கூட ஏதாவது ஒரு பெஞ்சில் உட்கார்ந்து பேசுவோம் என்று முயற்சித்ததில்லை. அவர்களில் நானும் ஒருவன் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

அதனால்தானோ என்னவோ, இந்தப் பக்கத்திற்கு இந்தப் பெயர் சூட்டியிருக்கிறேன்!
என்றென்றும் அன்புடன்,
ராம்கி