Wednesday, May 04, 2005

ஓர் அறிமுகம்

ஸ்டேஷன் பெஞ்ச்...
காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்ச்...
தமிழகத்தின் தென்கோடிப் பகுதியில் திருநெல்வேலியில் இருந்து ரயிலில் திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆறுமுகனேரிக்கு அடுத்து இருப்பது காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன்.. பஸ்ஸில் வரும்போது இந்த இடம் தூத்துக்குடிக்கும் திருச்செந்தூருக்கும் இடையில் இருக்கிறது.. இந்த சாலையில் இருந்து ஸ்டேஷனுக்குச் செல்லும் ரயில்வே பிளாட்பரத்தில் முதலில் இருக்கும் பெஞ்ச்தான் எங்கள் இருப்பிடம்..கல்விச்சாலை..போதிமரம் ..எல்லாம்..

மாலை 4.30 மணியில் இருந்து 6.30 வரை அருகில் உள்ள ரத்னா மனமகிழ் மன்றத்தில் பூப்பந்து விளையாடிவிட்டு அப்படியே இந்த ஸ்டேஷன் பெஞ்சில் வந்து இளைப்பாறும் ஓர் இளைஞர் கூட்டம். விளையாட்டில் ஆர்வம் இல்லாத வேறு சில இளைஞர்களும் நேரடியாக ஸ்டேஷன் பெஞ்சுக்கு வந்து விடுவார்கள்.

இந்த இளைஞர்களுக்கு எல்லா விஷயங்களிலும் தீவிரமான கருத்து உண்டு. அப்புறம் என்ன? அனல் பறக்கும் விவாதங்கள் தான். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா என்று சிறுகதை இலக்கியம் சில நாட்களில் சூடு கிளப்பும். மீரா, மேத்தா, அப்துல் ரகுமான், நா.காமராசன், இன்குலாப், தணிகைச்செல்வன், ஈரோடு தமிழன்பன் என்று புதுக்கவிதைப் புயல் வீசும்..இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உள்ள வேறுபாடுகள் அலசப்படும். திராவிடநாடு, அகண்ட பாரதம், மாநில சுயாட்சி, சோஷலிசம், கம்யூனிசம் போன்ற அரசியல் விஷயங்களில் இருந்து படிப்பு, வேலை, காதல், குடும்பப் பிரச்னைகள் போன்ற சொந்த விஷயங்கள் வரை விவாதங்களும் கலந்தாலோசனைகளும் உதவிகளும் நடக்கும்.

இந்த ஜோதியில் கலந்தவர்கள் இன்று பொறியாளர்களாகவும், வங்கி அதிகாரிகளாகவும், வியாபாரிகளாகவும் பத்திரிகையாளர்களாகவும் இருக்கிறார்கள். எந்தத் துறையில் அவர்கள் இருந்தாலும் அந்தத் துறையில் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு இந்த ஸ்டேஷன் பெஞ்ச் காலம் நிச்சயம் அடித்தளமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இருபது வருடங்கள் உருண்டோடிவிட்டன. இன்று அவர்களில் மிகப் பெரும்பாலானோர் சென்னையில்தான் இருக்கிறார்கள். சென்னையிலும் நிறைய ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. அந்த ஸ்டேஷன்களில் நிறைய பெஞ்ச்களும் இருக்கின்றன. ஆனால் இந்த நண்பர்கள் ஒரு நாள் கூட ஏதாவது ஒரு பெஞ்சில் உட்கார்ந்து பேசுவோம் என்று முயற்சித்ததில்லை. அவர்களில் நானும் ஒருவன் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

அதனால்தானோ என்னவோ, இந்தப் பக்கத்திற்கு இந்தப் பெயர் சூட்டியிருக்கிறேன்!
என்றென்றும் அன்புடன்,
ராம்கி

4 Comments:

At 1:59 PM, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வாங்க. உங்கள் அறிமுகம் நன்றாக இருக்கிறது.

 
At 9:44 PM, Blogger ஜென்ராம் said...

நன்றி செல்வராஜ்.. உங்கள் வரவேற்புக்கு நன்றி..

 
At 11:52 AM, Blogger ஜென்ராம் said...

நீங்கதான் தொடங்கி வைக்கணும் கறுப்பு! உங்க பெயர்ல ரு, று எது வேண்டுமானாலும் போடலாமா? இதோ ஒரு விவாதம் தொடங்கி விட்டது.

ராம்கி

 
At 9:24 AM, Blogger NambikkaiRAMA said...

ராம்கி நீங்களும் நம்ம ஊரு பக்கம்தானா! அது என்னவோ தெரியலீங்க. நம்ம ஊர்ல இருந்து கலக்குறவங்களைப் பார்க்கையில் பெருமிதமா இருக்குது.

 

Post a Comment

<< Home