Friday, May 06, 2005

வேட்டியை மடிச்சுக் கட்டு..

தமிழக அரசியலில் முக்கியத்துவம் இல்லாத பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் நடைமுறை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பது தமிழக அரசியல்வாதிகள் கண்டிப்பாக வேட்டிதான் அணிய வேண்டுமா என்னும் பிரச்னை.
டாக்டர் ராமதாஸ் மகன் டாக்டர் அன்புமணி வேட்டி அணிவதில்லையாம். தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப் பேரவையில் விமர்சனம் செய்துள்ளார். " ஒரு மொழியின் வளர்ச்சிக்கோ அல்லது ஒரு பண்பாட்டின் வளர்ச்சிக்கோ உடை ஒரு பிரச்னை அல்ல" என்கிறார் இந்தியாவின் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் "நீதிமன்றத்திற்கு வழக்கறிஞராகப் போகும்போது கோட் அணிகிறேன். நண்பர்கள் வீட்டுக்குச் செல்லும்போது பேண்ட், சட்டை அணிகிறேன். ஓர் அரசியல்வாதியாக நான் வேட்டி சட்டை அணிகிறேன். அதுவே எனது அடையாளம்," என்கிறார். பேண்ட், சட்டையுடன் வலம் வந்த திருமாவளவன் வேட்டி சட்டைக்கு மாறிவிட்டார். டாக்டர் கிருஷ்ணசாமி 'பளிச்' என்று பேண்ட், சட்டையுடன் தன்னை வெளிப்படுத்தத் தயங்குவதே இல்லை.

அரசியல் கட்சித்தலைவர்கள் மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் என்ன நிலை எடுக்கிறார்கள் என்று பார்ப்பதை விட்டுவிட்டு அவர்கள் என்ன உடை உடுத்துகிறார்கள் என்று பார்க்க வேண்டியதாகிவிட்டது. வேட்டி தமிழர்களின் அடையாளம் என்பதால்தான் தமிழக அரசியல்வாதிகள் வேட்டி, சட்டையுடன் உலவுகிறார்கள். அவர்கள் வெளிநாட்டுக்குப் போகும்போது கோட், சூட் அணிந்து கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். வெளிநாடுகளில் வேட்டியுடன் நடமாடக்கூடாது என்று யார் இவர்களுக்கு வழிகாட்டினார்களோ தெரியவில்லை. ஆனால் இன்றும் வேட்டி சட்டையுடன் வெளிநாடு சென்றுவரும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள்.

"செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே" என்று நவீன உடை உடுத்தும் பெண்ணைப் பார்த்து நாயகன் பாடுவதை அப்படியே பால் மாற்றிப் பார்த்தால் வேட்டி உடுத்தத் தயங்குறியே என்றுதான் இருக்க முடியும். (தமிழச்சி சேலை தவிர வேறு உடை உடுத்தக்கூடாதா என்பது விவாதத்திற்குரிய வேறு விஷயம்)

இந்தப் பின்னணியில் உடை என்பது கலாச்சாரத்தின் ஓர் அங்கம்தானா என்ற கேள்வி எழுகிறது. ஆம் என்றால் வேட்டி கட்டுவது குறைந்து வருவது குறித்துத் தமிழக அரசியல்வாதிகள் ஏன் இயக்கம் நடத்தவில்லை? உடை நமது சவுகர்யத்திற்கு அணியலாம் என்றால் அது பண்பாட்டு அடையாளம் இல்லையா? ஆங்கிலேயர் வந்தபின் அறிமுகமான உடைகளை நாம் சுவீகரித்துக் கொள்ளலாம் என்றால் அவர்கள் மொழியில் இருந்து வந்து இன்று பரவலாகப் பேசப்படும் " எக்ஸ்பிரஸ்" என்ற சொல் ஏன் தமிழ்த்திரை உலகில் புயலைக் கிளப்ப வேண்டும்?

எண்ணற்ற கேள்விகள்.. இருந்தும் இது போன்ற பிரச்னைகளை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் நமது சமூகச் சூழ்நிலைகளில் " கொள்கை என்பது வேட்டி மாதிரி; பதவி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி ". நாம் காற்றில் பறக்கவிடுவது நமது கொள்கைகள் மட்டுமல்ல; நமது வேட்டிகளையும்தான்.
( வேஷ்டி என்று கூறுபவர்கள் தமிழர்களா என்ற விவாதம் இன்னும் சுவையானது.)

1 Comments:

At 8:41 AM, Blogger ஜென்ராம் said...

பழசுதான் கருப்பு.. ஒரு இதழில் வெளியான பின் வலையில் பதிவு செய்தேன்.

 

Post a Comment

<< Home