Wednesday, May 11, 2005

பிளவுகளால் சரியும் காங்கிரஸ்

பாண்டிச்சேரியில் கண்ணன் புதுக்கட்சி தொடங்கப் போகிறார். கேரளாவில் முதுபெரும் தலைவர் கே.கருணாகரன் "தேசிய காங்கிரஸ்- இந்திரா" என்ற புதிய கட்சியைத் துவக்கியிருக்கிறார்.
கட்சியில் ஏற்படும் பிளவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்று வரை காங்கிரஸ் கட்சி பல பிளவுகளை அகில இந்திய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் சந்தித்துள்ளது. அகில இந்திய அளவில் நடந்த பிளவுகளில் ஓரிரு விதிவிலக்குகள் தவிர அனைத்தும் நேரு இந்திரா குடும்பத்திற்கு ஆதரவாகவே முடிந்துள்ளன. அதேசமயம் மாநிலங்களில் நடந்த பிளவுகள், மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கைப் பெரும் சரிவுக்குள்ளாக்கியிருக்கின்றன.
பாண்டிச்சேரியிலும் கேரளாவிலும் இந்தப் பிளவுகளால் ஆட்சிகளுக்கு உடனடியான ஆபத்து எதுவும் இல்லை. இருந்தபோதிலும் 2006 இல் நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் இவை கட்சிக்குப் பின்னடைவைத் தரும்.
இதற்கு முன் மத்திய அளவில் காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, நீலம் சஞ்சீவி ரெட்டி போன்ற தலைவர்களின் ‘சிண்டிகேட்’டுக்கு எதிராக இந்திரா காந்தி தலைமையில் கட்சி 1969 இல் பிளவுண்டது. 1971 தேர்தலில் இந்திரா மாபெரும் வெற்றி அடைந்தார்.
1975 இல் இளந்துருக்கியர் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகர், மோகன்தாரியா, ராம்தன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1977 இல் தேர்தலுக்கு முன் உ.பி.யில் செல்வாக்கு பெற்ற ஹெச்.என்.பகுகுணாவும் பீகாரில் செல்வாக்கு மிகுந்த ஜெகஜீவன்ராமும் 'ஜனநாயகத்திற்கான காங்கிரஸ்' என்ற கட்சியைத் தொடங்கி இறுதியில் ஜனதா கட்சியுடன் இணைந்தனர். 1977 இல் ஜனதா மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு ஜனநாயகத்திற்கான காங்கிரஸ் மட்டும் காரணம் இல்லை என்ற போதிலும் அக்கட்சித் தலைவர்களின் பங்களிப்பை மறுக்க முடியாது.
1978 இல் இந்திரா காந்தியின் 'அவசர நிலை' காலத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக சில தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். 1980 தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். இந்திரா படுகொலைக்குப் பிறகு 1984 இல் ராஜீவ் காந்தி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.
1987-88 இல் வி.பி.சிங் ராஜீவ்காந்தியை எதிர்த்து வெளியேறி , ‘ஜன் மோர்ச்சா’ தொடங்கினார். 1989 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் பிரதமரானார். இந்தக் காலகட்டத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் முஸ்லீம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் காங்கிரசிடம் இருந்து அந்நியப்பட்டனர்.
நரசிம்மராவைப் பலவீனப்படுத்தும் விதத்தில் அர்ஜுன்சிங், என்.டி.திவாரி , வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து திவாரி காங்கிரஸ் உருவாக்கினர். சோனியாகாந்தி விசுவாசிகளான இவர்கள் கட்சித் தலைமையை சோனியா ஏற்றபின் கட்சியில் மீண்டும் இணைந்தனர்.
1996 இல் தமிழ்நாட்டில் நரசிம்மராவ் அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து மூப்பனார் தனியாகச் சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் உருவானது. ஹரியானாவில் பன்சிலால் ஹரியானா விகாஸ் கட்சியைத் தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினார். அவர் தனது கட்சியை மீண்டும் காங்கிரசில் இணைத்த பிறகே 2004 இல் ஹரியானாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
மாநில அளவில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மத்திய தலைமை தரும் தீர்வுகளில் அதிருப்தி அடைந்து சில மாதங்கள் சிறு கட்சியை நடத்திவிட்டுப் பின் தலைமையுடன் சமரசமாகிக் கட்சியை மீண்டும் இணைத்த வரலாறுகளும் உண்டு. மத்தியப்பிரதேசத்தில் மாதவராவ் சிந்தியாவின் மத்தியப் பிரதேச விகாஸ் காங்கிரஸ், மகாராஷ்டிரத்தில் எஸ்.பி.சவானின் மகாராஷ்டிர சமாஜ்வாதி கட்சியும் உதாரணங்கள். கர்நாடகாவில் பங்காரப்பா தனிக்கட்சி தொடங்குவதும் இணைவதும் பிரிவதும் சகஜமான நிகழ்ச்சிகள் என்று கேலி செய்பவர்கள் உண்டு.
பிளவுகளின் வரலாறே இவ்வளவு பெரிதாக இருக்கும் போது மாநிலங்களில் நிலவும் கோஷ்டிப் பூசல்கள் பற்றி கேட்கவே வேண்டாம். அவை பற்றி எழுதுவது இங்கு நோக்கம் இல்லை. இவ்வளவையும் தாண்டியும் தாங்கியும் தான் காங்கிரஸ் இந்த நிலையில் வந்து நிற்கிறது !

1 Comments:

At 8:38 AM, Blogger ஜென்ராம் said...

நன்றி கருப்பு.

 

Post a Comment

<< Home