Monday, April 03, 2006

மக்கள் யார் பக்கம்?

ஏப்ரல் மாத திசைகள் மின்னிதழில் அருணா ஸ்ரீனிவாசன் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த எனது பத்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. அந்தப் பத்தியை இங்கு இடுகிறேன். ஏற்கனவே இதை வாசித்தவர்கள் பொறுத்தருளுங்கள்.

மக்கள் யார் பக்கம்?

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல், வருகிற 2006 மே மாதம் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. கட்சித் தொண்டர்கள் மத்தியில் தேர்தல் ஜுரம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் பரபரப்பைப் பயன்படுத்தி ஊடகங்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கான முயற்சியில் முழுமூச்சாக இறங்கி இருக்கின்றன.

இந்நிலையில் இந்தத் தேர்தல் தமிழகத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வில் ஏதேனும் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. இந்தத் தேர்தல் மட்டுமல்ல, இந்தியாவில் இதுவரை நடந்த எந்தத் தேர்தலும் மக்கள் வாழ்வில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தியதில்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது.

இருந்தபோதிலும் மக்கள் இதுபோன்ற தேர்தல்களில் ஆர்வம் காட்டுகின்றனர். தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக நம்புகின்றனர். சில மேல்நாட்டு அறிஞர்கள் அரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு குறித்து அளித்திருக்கும் விளக்கங்கள் மக்களிடம் போய்ச் சேரவில்லை. அல்லது அவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அத்தகைய அறிஞர்களின் வாதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்ற முடிவே கிடைக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதைக் காப்பதற்கு இருக்கும் பிற சட்டங்கள், காவல்துறை, நிர்வாகம், ராணுவம், நீதித்துறை போன்றவற்றை உள்ளடக்கிய அரசு நிரந்தரமாக எந்த மாற்றமும் இன்றித் தொடரப் போகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் இவற்றில் எந்த மாறுதல்களையும் கொண்டுவர இயலாது. இந்தியாவில் ஒரு மாநிலமாக உள்ள தமிழகத்தில் வாழும் மக்களுக்குத் தேவையான சட்டங்களை உருவாக்கும் அமைப்பே தமிழக சட்டப்பேரவை. இங்கு இயற்றப்படும் சட்டங்கள்கூட தன்னளவில் இறுதியானவை அல்ல என்பது வேறு விஷயம்.

இதுபோன்ற அடிப்படையான விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மேலோட்டமான அரசியல் குறித்தே எல்லா இடங்களிலும் விவாதிக்கப்படுகிறது. அரசாங்கம் வழங்கும் அதிகாரத்திற்கான போட்டியே நமது தேர்தல் என்னும்போது அதன் போக்கிலேயே தேர்தல் குறித்தும் கட்சிகள் குறித்தும் பேச வேண்டியதாகி விடுகிறது. அடிப்படை மாற்றங்கள் குறித்துப் பேசுவது பட்டுத் துணிக்கான கனவாக இருக்கலாம்; இப்போது நாம் கட்டி இருக்கும் கோவணத்தைப் பறிகொடுக்காமல் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? 2001 முதல் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சில மாதங்கள் ஓ.பன்னீர்செல்வம் இருந்ததைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த அரசாங்கம் தமிழகத்தை ஆட்சி செய்தவிதம் குறித்து மக்கள் அளிக்கும் தீர்ப்பே நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு சீர்தூக்கிப் பார்ப்பார்கள்? மக்கள் இரண்டு விதங்களில் இந்தப் பிரச்னையை அணுகக் கூடும்.

ஒன்று, ஆட்சியின் செயல்பாடுகளை அரசியல் ரீதியாக அணுகலாம்; மற்றொன்று மக்கள் தங்களுக்கு நேரடியாக கிடைத்த பலன்களின் அடிப்படையில் பார்க்கலாம்.

ஆட்சியை அரசியல் ரீதியாக அணுக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஜெயலலிதா ஆட்சியின் மே 2001 முதல் மே 2004 வரையிலான மூன்றாண்டுகளை எடுத்துக் கொள்வார்கள். கையில் கிட்டிய பலன்களைப் பார்க்க நினைப்பவர்கள் மே 2004 முதல் பிப்ரவரி 2006 வரையிலான காலத்தில் அவரது அறிவிப்புகளை முன்வைப்பார்கள்.

முதல் மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் நிறைந்த ஆண்டுகள். சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினராகத் தேர்வு செய்து ஏதாவது ஒரு நடவடிக்கை மூலம் அவர்களது எதிர்ப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டார். கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம், ஆடு, கோழி கோவில்களில் பலியிடத் தடை, போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர் போராட்டங்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். இதைத் தொடர்ந்து 2001 தேர்தல் வெற்றிக்குக் காரணமான கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாகத் தம்மிடம் இருந்து பிரிந்து போவதற்கு இடமளித்தார்.

மே 2004க்குப் பிந்தைய ஒன்றரை ஆண்டுகள், ஜெயலலிதா மக்களுக்கு சலுகை மழையாகப் பொழிந்த ஆண்டுகள். எப்படி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவாக தன்னை விட்டு விலகச் செய்தாரோ அதே போல் ஒவ்வொரு பிரிவாகத் தேர்வு செய்து அவர்களுக்கு பலனளிக்கும் விதத்தில் சலுகைகளை அள்ளி வழங்கினார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த ஒவ்வொரு அறிவிப்பும் அவருக்கு ஆதரவைப் பெருகச் செய்தது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச பாடநூல்கள், விவசாயிகளுக்குக் காப்பீடு, சுனாமி மற்றும் மழை வெள்ள காலங்களில் நிவாரண உதவி, அதிலும் கையில் பணமாக உதவி ஆகிய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமைக்கு நற்பெயரையே பெற்றுத் தந்திருக்கின்றன. அரசாங்கத்திடம் இருந்து ஐந்து ரூபாய் வாங்குவதற்கே ஐம்பது ரூபாய் செலவழிக்கும் பரிதாப நிலையில் இருந்த மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து பண உதவி வீடு தேடி வந்த விதம் ஆச்சர்யத்தை அளித்தது.

ஜனரஞ்சகமான திட்டங்கள் தொலைநோக்கில் மக்களுக்கு பயன்தராது என்று ‘அறிவு ஜீவிகள்' ஒருபுறம் முழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும், காமராஜர் என்றவுடன் இலவசக் கல்வியும், மதிய உணவும் நினைவுக்கு வருகின்றன. எம்ஜிஆர் என்றவுடன் சத்துணவுத் திட்டமே மக்கள் மனதில் நிற்கிறது. அதைப்போல ஜெயலலிதா ஆட்சியில் நடைமுறைக்கு வந்த கோயில்களில் அன்னதானம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச புத்தகங்கள் போன்ற திட்டங்கள் நீண்ட நாட்களுக்கு மக்கள் நினைவில் பசுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஜெயலலிதாவின் செயல்பாட்டில் தலைகீழ் மாற்றம் எப்படி நேர்ந்தது? மே 2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஓரிடம் கூட வெற்றி பெறவில்லை. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்தது ஜெயலலிதாவுக்குப் பெருஞ்சுமையே. எதிரில் இருந்த கூட்டணி வலுவானதாக இருந்தது என்பது உண்மைதான். ஆனாலும் அ.இ.அ.தி.மு.க. தனியாக நின்று கணிசமாக வாக்குகள் பெற்றிருந்தது. என்றாலும், ஓரிடம் கூட வெல்லாதது அவரது கட்சிக்குப் பின்னடைவுதான். இதைச் சரி செய்வதற்கான முயற்சியே அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகள்.

இதையே வேறுவிதமாகவும் பார்க்கலாம். மே 2004 வரை மத்தியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்தது. இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. மத்திய அரசாங்கத்தின் பாதையிலேயே தமிழக அரசாங்கமும் சென்ற காரணத்தால், மாநிலத்திலும் நெருக்கடிகள் அதிகமாக இருந்தன. மே 2004க்குப் பிறகு மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. வெளியில் இருந்து இடதுசாரிகள் தரும் ஆதரவின் தயவில் ஆட்சி நடக்கிறது. ஆட்சியின் தொடக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் மந்தகதியில் இருந்தன. அவை தீவிரமாகும்போது இடதுசாரிகளின் எதிர்ப்பும் தீவிரமாகிறது. இடதுசாரிகளின் எதிர்ப்பை மீறி சமீப காலமாக மத்திய அரசு செயல்படத் தொடங்கிவிட்டது என்பது வேறு விஷயம். ஜெயலலிதாவும் மத்திய அரசைப் போலவே தமிழகத்தில் ஜனரஞ்சகமான திட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சட்டப் பேரவைக்கான தேர்தல் விரைவில் வர இருக்கிறது என்பதும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஜெயலலிதாவின் ஜனரஞ்சகமான திட்டங்கள் மக்கள் மத்தியில் ஒரு வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி அவருக்கு செல்வாக்கை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. வைகோவும், திருமாவளவனும் அவரது அணியில் சேர்ந்துள்ளார்கள். தங்களது பிரசார வலிமையாலும் தொண்டர் பலத்தாலும் அவர்கள் இருவரும் ஜெயலலிதாவே வெற்றி பெறுவார் என்ற தோற்றத்தை எளிதில் மக்கள் மனதில் உருவாக்கி வருகிறார்கள். 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாக்குதல் நிலையில் இருந்த திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி இப்போது தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தயாநிதிமாறனும் அன்புமணியும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். நான்கைந்து முறை பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் இயற்கை பலத்த சேதங்களை ஏற்படுத்திய போது மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக உடனடியாக மாநில அரசுக்கு உதவியை வழங்கிடவில்லை. மாநிலத்தில் ஆட்சியில் இல்லாதபோது மாநில சுயாட்சி என்ற முழக்கம் ஜமுக்காளத்திற்கு அடியில் மறைக்கப்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு நிதி உதவி அளித்தால் அது ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிக்கே பயன்படும் என்று கருதி ஜனநாயக முற்போக்குக் கூட்டணி துடிப்புடன் செயல்படவில்லை. சேது சமுத்திரத் திட்டமும் தமிழ் செம்மொழியும் சாதனைகளாக இருந்த போதிலும் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் தேர்தல் களத்தைப் பார்க்கும்போது பிரசார வலிமையில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. ஜெயலலிதா தவிர வைகோ, திருமாவளவன், பழ கருப்பையா, நெல்லை கண்ணன் மற்றும் சினிமா துறையில் இருந்து கூட்டம் சேர்க்கும் ஒரு பட்டாளம் பிரச்சாரத்தில் முன்நிற்கிறது.

எதிரணியில் கருணாநிதியால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கு அவரது முதுமையும் உடல்நிலையும் இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் ஏழை எளிய மக்களைச் சென்றடையும் விதத்தில் பேசுவதற்கு தமிழகத்தில் குறிப்பிடும்படி யாரும் இல்லை. டாக்டர் ராமதாஸின் பிரசாரம் வட மாவட்டங்களுடன் நின்று போய்விடும். இடதுசாரிகள் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளைத் தாண்டி பெரிய அளவில் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு வாய்ப்பில்லை. தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களும் குறைந்த அளவிலான இடதுசாரி தொண்டர்களும் மட்டுமே பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும்.

இந்தக் கூட்டணியின் ஒரே பலம் வாய்ந்த சாதனம் சன் டிவியும், தினகரன் குழும நாளிதழ்களும்தான். ஆனாலும் கூட இவற்றின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் ‘பண்டிதர்களுக்கு’ அதிர்ச்சி அளிக்கக் கூடும். அரசியல் கட்சிகளின் வாக்குவங்கிக் கூட்டல் கணக்குகளுக்கும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் வேதியியல் மாற்றத்திற்கும் இடையில் எது வெற்றி பெறும் என்பதே இன்று முக்கிய கேள்வி. ஜெயலலிதா அணியில் விஜயகாந்த் சேர்ந்தால் ஜெயலலிதா நிச்சயம் வெற்றி பெறுவார் என்றே கருதத் தோன்றுகிறது. விஜயகாந்த் தனித்து நின்றாலும் கூட சூழல் ஜெயலலிதாவுக்கே சாதகமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தத் தேர்தலுக்குப் பின் அரசியல் வேறு திசையில் பயணிக்கும். சோனியா காந்தியுடன் ஜெயலலிதாவுக்கு இருக்கும் தனிப்பட்ட முரண்பாடுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மாநிலக் கட்சிகளின் கூட்டணியில் ஜெயலலிதா இணைவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எதிர்காலத்தில் அந்த அணிக்கு இடதுசாரிகளும் ஆதரவளிப்பார்கள். சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த சில மாதங்களில் இந்திய அரசியல் இந்தத் திசையில் நகரத் தொடங்கும். அப்போது மீண்டும் ‘சந்தர்ப்பவாத அரசியல்’ குறித்து தமிழகத்தில் மயிர் பிளக்கும் விவாதங்கள் நடைபெறக் கூடும்.

இறுதியாக, குறைந்தபட்சம் ஒவ்வொரு தேர்தலும் நடைபெறும் நாட்களிலாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களுக்காக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்தல் காலத்திலாவது சில விஷயங்கள் குறித்த விவாதம் அவசியம் என்று கருதுவதால் சிறுபான்மைக் குரலை எழுப்புவதும் அவசியமாகிறது.

தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் "மேலே உள்ள யாருக்கும் என் வாக்கு இல்லை'' என்ற பொத்தானும் "தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லை'' என்ற பொத்தானும் இடம்பெறவேண்டும். அந்தப் பொத்தான்களும் இடம் பெறும் நிலையிலேயே மக்கள் உண்மையில் யார் பக்கம் என்பது தெரிய வரும்.

14 Comments:

At 6:16 PM, Blogger Boston Bala said...

திசைகளில் வெளியாகி இருக்கும் மற்ற கட்டுரைகளைக் குறித்த உங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன் (என்னோட கட்டுரையை கவனித்தால் ஸ்பெஷல் நன்றி :-)

 
At 6:24 PM, Blogger இப்னு ஹம்துன். said...

//தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் "மேலே உள்ள யாருக்கும் என் வாக்கு இல்லை'' என்ற பொத்தானும் "(இந்தவகை)தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லை'' என்ற பொத்தானும் இடம்பெறவேண்டும். அந்தப் பொத்தான்களும் இடம் பெறும் நிலையிலேயே மக்கள் உண்மையில் யார் பக்கம் என்பது தெரிய வரும்.//

The conduct of election rules 1961: 49 ‘O‘: Elector not deciding to vote :If an elector after his electoral number has been duly entered in the register of voters Form-17 A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49 L decided not to record his vote , a remark to this effect shall be made against the said entry in Form 17 A, by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark.

இதுபற்றி ஞானி 'தீம்தரிகிட'வில் எழுதியிருக்கிறார்.

 
At 10:12 PM, Blogger ராம்கி said...

பாலா: திசைகள் வந்தவுடன் படித்தேன்.. விரிவான விளக்கம் பிறகு..
நன்றி பாலா..

 
At 10:14 PM, Blogger ராம்கி said...

Form 17 A, எல்லாம் கதைக்கு உதவாது சார்.. சாதாரணமா எல்லோரும் போகிற மாதிரி மறைவாகப் போய் போடற வசதி வேண்டாமா? அத்தனை ஏஜெண்டுகள் முன்னாலயும் போய் எனக்கு யாருக்கும் போட மனசில்லை, 17 ஏ கொடு என்று கேட்பதில் ரகசியம் எங்கே இருக்கிறது?

 
At 10:39 PM, Blogger SK said...

ஒரு சந்தேகம்!
பேசாமல் யாருக்கும் போட விரும்ப வில்லை என்றால், செல்லாத ஓட்டாக [ரகசியமாக] செய்ய பல வழிகள் உண்டே!

ஏன், 'பொத்தான்' வேண்டும்?

 
At 11:17 PM, Blogger athimbher said...

சார், நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான், யாரு இல்லேன்னா?

தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லைன்னு சொல்றவாள நீங்க ஏன் சார் வலுக்கட்டாயாமா வாக்குச்சாவடிக்கு இழுக்கறேள்.

ஜனநாயகம்கிற பேர்ல நடக்குற ஒரு கூத்துதானே தேர்தல். இதுல நமக்கு ஏற்கனவே options இருக்கு. ஒண்ணு, வாக்குச்சாவடிக்குப் போய் ஓட்டுப்போடுவது; மற்றொன்று போகாமல் தெமேனு இருப்பது.

- அத்திம்பேர்.

 
At 12:47 AM, Blogger ராம்கி said...

SK: நம்பிக்கை இல்லை, யாருக்கும் இல்லை என்ற வகையினரின் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்ளலாம்; வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் வாக்குகளைவிட ஒரு வேளை இந்த வகை அதிகமாகலாம்.

 
At 12:49 AM, Blogger ராம்கி said...

அத்திம்பேர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

 
At 8:12 AM, Blogger maalan said...

'மேலே உள்ள யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' (None of the above) என்ற வசதியைக் கொடுப்பது குறித்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அது நீதி மன்றத்திற்குச் சென்று விட்டதால் அது குறித்த தீர்ப்பு வரும் வரை தேர்தல் ஆணையம், அதுவே இந்த வாய்ப்பை அளிக்க விரும்பினாலும், முடிவு ஏதும் எடுக்க முடியாது.

இந்த வசதி விகிதாச்சரத் தேர்தல் முறைக்குப் பொருந்தும்.நாம் பின் பற்றிவரும் வெஸ்ட்மினிஸ்டர் முறைக்குப் பொருந்தாது. ஏனெனில் விருப்பமில்லாதவர்கள் வாக்களிக்கத் தேவையில்லையே.

என் வாக்கு இறுதி முடிவில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்னும் போது நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களில் சிலர் மனசோர்வடைவது இயல்புதான். இதற்கு மாற்று விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைதான். அதை மேற்கொள்ளும் போது கட்சிகளைக் கட்டுப்படுத்தும் சில விதிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அன்புடன்
மாலன்

 
At 3:18 PM, Blogger ராம்கி said...

மாலன்:
//ஏனெனில் விருப்பமில்லாதவர்கள் வாக்களிக்கத் தேவையில்லையே//

வாக்களிக்க வராதவர்களில் இந்த ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தேர்தலைப் பிற காரணங்களுக்காகப் புறக்கணிக்கிறவர்கள், வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், சோம்பேறிகள், இன்னும் பல ரகத்தினர் அடங்குவர். இவர்களில் சில வகையினருக்குத் தனிப் பொத்தான்கள் வழங்குவது ஜனநாயகத்தை இன்னும் செழுமைப் படுத்த உதவும்.

ஒருவேளை பதிவான வாக்குகளில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட 'யாருக்கும் இல்லை' வாக்குகளும் 'நம்பிக்கை இல்லை' வாக்குகளும் அதிகமானால் அரசியல் கட்சிகளின் முகவிலாசம் சிரிப்பாய்ப் போய்விடுமே என்பதால் அதற்காக யாருமே குரல் கொடுக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

எங்கள் ஊருக்கு தார்ச் சாலை போடாததால் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று சொல்பவர்களுக்கும் அரசியல் ரீதியாக தேர்தலில் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அனைவரும் அறியச் செய்வதும் ஜனநாயகத்தில் ஒரு கூறு தானே?

வருகைக்கும் கருத்துக்கும் விளக்கத்துக்கும் மிக்க நன்றி மாலன்!

 
At 1:23 PM, Blogger கருப்பு said...

திமுகவா அதிமுகவா?, மதிமுகவால அதிமுக ஓட்டு அதிகமாகுமா? விஜய்காந்த், கார்த்திக் வருகையால எவ்வளவு ஓட்டு பிரியும்? இப்படி பல கேள்விகள், பதில்கள், கருத்துகள் உலா வருதுங்க.

ஆனா, பாமக நிலை என்னவாகும்? விஜய்காந்த் ஏன் பாமக பலமா இருக்கற தொகுதியில போட்டியிடுறார்? கார்த்திக் ஏன் வட மாநிலத்திலும் களத்தில் குதிக்கிறார்? திமுக, அதிமுக மற்றும் உதிரி கட்சிங்க எல்லாமே பாமக தொகுதிகள்ல அதிக கவனம் செலுத்தறது ஏன்? ராமதாஸ் கூட பாமக போட்டியிடற தொகுதிகள்ல மட்டும் சுற்றுப்பயணம் செய்யறது ஏன்? தேர்தலுக்கு அப்புறம் பாமக பலம் பெறுமா? பலவீனம் அடையுமா? ங்கறது தொடர்பா நான் எதையும் பார்க்கலீங்க. பார்த்தா, கருத்து இருந்தா சொல்லுங்களேன்.

பாமகவை பலவீனப்படுத்தவே எல்லாருமே (கட்சிகள்) விரும்பறாங்கங்கறது என் கருத்துங்க. அது தான் நடக்கும்னு எனக்குத் தோணுதுங்க.

 
At 11:55 PM, Blogger Usha Sankar said...

Dear Ramki,
Nice analysis!!

தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் "மேலே உள்ள யாருக்கும் என் வாக்கு இல்லை'' என்ற பொத்தானும் "தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லை'' என்ற பொத்தானும் இடம்பெறவேண்டும். அந்தப் பொத்தான்களும் இடம் பெறும் நிலையிலேயே மக்கள் உண்மையில் யார் பக்கம் என்பது தெரிய வரும்.


Indha muraiyil sila nallavai nigazhalam.Adhanal indha buttons um irupadhu avasiyam enru karudhugiren.


Arasai therndhu edukum seyal - Padipu illadha, ezhai makkal - ivargal dhan adhigam irukiraargal.Vottu podum urimaiyai seriyaga seigirargal!!

Padithavargal - vottu podum kadamaiyai serivara seivadhillai!!!

Namaku urimai irundhu,vottu podamal irupadhu dhan migavum thavaru!!!!

Nammudiaya indha thavaru - pira thavarugaluku vazhi vagukum!!!

Idhai thaduka - adaiyala attaiyai vida

Neengal sonna indha opinion migavum
nanraga irukiradhu!!! Edho oru option il naam kattayam kattu pada vendum!! Appodhu dhan , indha thavaranga vottugal poda paduvadhu thavirka padum!!

With Love,
Usha Sankar.

 
At 10:32 PM, Blogger தாணு said...

ராம்கி

வாக்களிப்பு கட்டங்களை அதிகப்படுத்தி விகிதாச்சாரங்களை இன்னும் பிரித்துக் காட்டி, செய்யப் போவதுதான் என்ன? வாக்களிக்க இஷ்டமில்லாதவர்கள் என்ற நிலையேகூட அதிகம் வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்,அதை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன பண்ணப் போகிறீர்கள்,எல்லாம் வேஸ்ட்தான். ஒரு system implement பண்ணப் பட வேண்டுமென்றால் அதன் அடிப்படையில் ஏதாவது உருப்படியாகச் செய்வதாக இருந்தால் சரி, மற்றபடி இப்படி பிரித்துக் காட்டப் படும் கணக்கு அடுத்த தேர்தல் பிரசாரத்தில் மைக்கில் முழங்கப்படும் வாய் வீச்சிற்குத்தான் பயன்படும்.

 
At 2:20 PM, Blogger Subu said...

மின்னணு வாக்குப்பதிவில் மோசடி சாத்தியமா ? சாத்தியம் என்றே தோன்றுகிறது...

மென்பொருளை மாற்றுவது செய்யக்கூடியதே....

மீள்பார்வைக்கு, மீண்டும் எண்ண காகித வாக்குகள் இல்லை

மேலும் சிந்தனைகள்

http://manakkan.blogspot.com/2010/04/blog-post_04.html

 

Post a Comment

<< Home