Sunday, May 21, 2006

மாற்றம் தவிர்க்க முடியாதது

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லியிலும், மும்பையிலும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இவர்கள் மீது காவல்துறை பலப்பிரயோகம் செய்தது.

இந்த அடக்குமுறையை தேசிய மனித உரிமை ஆணையம் கண்டித்திருக்கிறது. மேலும், தானாகவே முன்வந்து டெல்லி மற்றும் மும்பை காவல்துறை ஆணையர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. "நாகரீகமான எந்த அரசும் இப்படிப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறையை ஏவி விடுவதை நியாயப்படுத்த முடியாது' என்று அறிவித்திருக்கிறது.

ஆம்! அரசு தனது மக்கள் மீது அடக்குமுறையை ஏவினால் அதைக் கண்டிப்பதற்காகவே தேசிய மனித உரிமை ஆணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான்!

இருந்தும், கடந்த காலங்களில் இதே ஆணையம் பல சம்பவங்களின்போது எவ்வாறு செயல்பட்டது என்பதை இந்நேரத்தில் கவனிப்பது அவசியமாகிறது. ஒரிசா மாநிலம் கலிங்காநகரில் பழங்குடியின மக்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி அவர்களில் சிலரைக் கொன்றபோது மனித உரிமை ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னால் கேரளாவில் வயநாடு பகுதியில் ஆதிவாசிகள் நடத்திய போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறை எடுத்த நடவடிக்கை மீது மனித உரிமை ஆணையம் என்ன கருத்தை கூறியது? வீரப்பனை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அதிரடி படையினர் மலைவாழ் பழங்குடியினர் மீது தொடுத்த தாக்குதல்கள் குறித்து மனித உரிமை ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?
அதிரடிப்படை தமிழகத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விஷயம் சற்றே விநோதமானது. வீரப்பன் மறைந்திருந்ததாக கருதப்பட்ட மலைப்பகுதியில் உள்ள கிராமத்தினரின் மனித உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் அதிரடிப்படையினர் அவர்களைச் சித்திரவதை செய்தார்கள். இதுகுறித்து விசாரிப்பதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் சதாசிவம் குழு என்ற பெயரில் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. இருந்தும் சதாசிவம் கமிஷன் இறுதியில் தந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது இப்போது மும்பை மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் மனித உரிமை ஆணையத்தின் செயல் குரூரமான நகைச்சுவையாக உள்ளது.

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்வோம். போராடும் மாணவர்கள் மீது டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினர் ஏவி விட்ட அடக்குமுறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாது. இருந்தாலும் அவர்கள் எந்த அளவுக்கு பலத்தை பிரயோகித்தார்கள் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது தடியடியும், தண்ணீர் பீய்ச்சியடித்தலும் என்ற அளவிலேயே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தார்கள். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பிலிருக்கும் காவல்துறை மிதமான பலத்தை பிரயோகித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கலைந்து போகச் செய்வதை தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதிலும், முதியவர்களுக்கு சாலைகளைக் கடப்பதில் உதவி செய்வதிலும் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிக உயர்ந்த லட்சியமாக இருக்கலாம். இந்தியாவில் இதுபோன்று நடப்பதற்கு இன்னும் பல பத்தாண்டுகள் ஆகக் கூடும்.

இப்படி ஒரு சமூக மாற்றத்தைக் கற்பனை செய்வதில் ஒருவருக்கு உள்ள உரிமையை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட நிலை உண்மையில் நடைமுறையில் இருக்க வேண்டும் என்றால் சாதி, மதம் மற்றும் பிற காரணங்களுக்காக சமூகத்தில் நிலவி வரும் பல வேறுபாடுகள் களையப்படுவதற்கு நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்றதை அர்ப்பணிப்புடன் செய்தாக வேண்டும்.

இந்த ஜனநாயக அடிப்படையிலான நோக்கம் நிறைவேற்றப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாம் மனப்பூர்வமாக சம்மதிக்க வேண்டும். வேறுவார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், கல்வியிலும் பிற சமூகத் தளங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு பணியிடங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அளிப்பதே இந்த நோக்கம் நிறைவேற்றப்படுவதற்கு அவசியமான நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய காலச்சூழ்நிலையில் இதுகுறித்து விவாதிப்பதே மிகவும் அவசியமான விஷயம்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மருத்துவக் கல்லூரிகள் போன்ற இடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக ஒதுக்கும் வகையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொண்டார். அவரது இந்த நடவடிக்கையின் மீது விமர்சனமும் அதில் அவருக்கு இருக்கும் சுயநலமும் குறித்து பேசுவதற்கு இடம் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

இதைத்தான் பல்வேறு ஊடகங்களும் சமூகத்தில் சில பகுதியினரும் இப்போது செய்து வருகிறார்கள். அரசியல் தளத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடிப்பதற்காகவும் இந்தியாவின் பிரதமராக அல்லது குடியரசுத் தலைவராகத் தான் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையின் காரணமாகவும் அர்ஜுன் சிங் ஒருவேளை இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம்.

இருந்தபோதிலும், அந்த நடவடிக்கையால் சமூகத்தில் விளையக்கூடிய நல்ல பயன்களை மறுப்பதற்கில்லை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் ஊடகங்களில் உள்ள சில பிரபலங்கள் இருக்கும் சமூக நிலைமையை அப்படியே கட்டிக் காக்கும் முயற்சியில் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.

இவர்களது நடவடிக்கையில் ஒரு விநோதத்தை நீங்கள் பார்க்க முடியும். மத்திய அரசுப் பணிகளில் மண்டல் கமிஷன் அறிக்கையை வி.பி.சிங் அமல்படுத்தியபோது இவர்கள் பிற்படுத்தப்பட்டோரைக் கைதூக்கி விடுவதற்கு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்வதே முறையாக இருக்கும் என்று கூறி வி.பி.சிங்கை எதிர்த்தார்கள். இப்போது உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்யும்பொழுது, அரசு நடத்தும் ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்துவதே சமூக மேம்பாட்டுக்கு அவசியம் என்று கூறுகிறார்கள்!

ஆம்! அரசாங்கம் நடத்தும் ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவாகத்தான் இருக்கிறது. பரிதாபகரமானதாக இருக்கிறது என்று சொன்னால்கூட தவறில்லை. எனவேதான் சாதாரண ஏழை மக்கள் கூட தங்களது குழந்தைகளை அதிக பணம் கொடுத்து தனியார் கல்விக் "கடை'களில் சேர்க்கிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத - கரும்பலகை வசதிகூட இல்லாத- அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்தால் எந்தவித பலனும் கிட்டப்போவதில்லை என்பதை மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்துகிற ஏழை மக்கள் கூட புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இட ஒதுக்கீடு இருந்தாலும் சரி அல்லது இல்லாமலிருந்தாலும் சரி இந்த ஏழை பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் ஐ.ஐ.டி.களுக்கும், ஐ.ஐ.எம்.களுக்கும் மற்றும் மத்திய மருத்துவக் கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டும் என்று கற்பனை செய்பவர்கள் அல்லர்.

இதுவே ஒருவிதத்தில் மனித உரிமை மீறல் என்று கருதப்படவேண்டும். இந்த நிலைமை தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு நீண்ட காலம் முன்பாகவே வந்திருக்க வேண்டும். நமது ஊடக விமர்சகர்களின் சிந்தனை இந்த அவல நிலைமையைப் போக்குவதற்கான திசையிலும் நெடுநாட்களுக்கு முன்னதாகவே திரும்பியிருக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளிலும், ஐ.ஐ.டி.களிலும், ஐ.ஐ.எம்.களிலும் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், கிராமப்புறங்களில் உரிமை மறுக்கப்பட்டு வாடும் சொந்தச் சகோதரர்கள் குறித்தும் வெகுநாட்களுக்கு முன்னதாகவே கவலைப்பட்டிருக்க வேண்டும். இத்தனை வருடங்களாக அரசுப் பள்ளிகளின் அலங்கோல நிலைமைக்கு எதிராக இவர்கள் அனைவரும் போராடி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் யாரும் இத்தகைய திசையில் பயணிக்கவில்லை. ஏனென்றால் அரசுப்பள்ளிகளின் அவலங்கள் இவர்களது வாழ்க்கையை எந்தக் காலத்திலும் பாதித்ததில்லை.

மாறாக, இத்தகைய அரசின் செயல்பாடற்ற தன்மை, இந்தப் பிரிவினருக்கு உதவிகரமாகவே இருந்தது. இந்த நாட்டின் பண பலமும், அதிகார பலமும் கொண்ட இந்தப் பிரிவினர் அரசு மானியங்களின் மூலம் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் சுலபமாக நுழைந்து படித்துவிட்டு உயர் ஊதியம் பெறும் பணிகளில் சென்று அமர்வதற்கு அரசு துணை நின்றது.

இப்போது பிற்படுத்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் இத்தகைய உயர்கல்வி நிறுவனங்களில் தங்களுக்கு ஓர் இடத்தை பெற்று அதன் பிறகு உயர் ஊதியம் பெறக்கூடிய பதவிகளுக்கு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுகுறித்துதான் தேசிய மனித உரிமை ஆணையமும், இன்னபிற அமைப்புகளும் தற்போது கவலைப்படுகின்றன போலும்!

இத்தகைய அமைப்புகளால் கட்டிக்காக்கப்படும் சமூக நிலைமைகளில் இட ஒதுக்கீடு அறிவிப்பு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிர்வைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் தாங்கள் யாரை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்களோ அந்த ஒரு பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த அமைப்புகள் இப்போது குரல் கொடுக்கின்றன.

ஆங்கில மூலம்: வி.கிருஷ்ணா ஆனந்த்

நன்றி: தினமலர் செய்திமலர்

(திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழங்கப்படும் இலவச இணைப்பு)
21.05.2006