அன்னையின் நிழலில்….
ஐந்து அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களைக் கூப்பிட்டு அவர்களுடன் ஒன்றரை மணி நேரம் நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் பேசி இருக்கிறார். பல விஷயங்களைப் பற்றி அவர்களிடம் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் சொன்ன ஒரு கருத்தே முதலில் சொன்ன காட்சியை நினைவுபடுத்தியது. “இந்த மாதிரி அரசாங்கத்தை செயல்பட விடாமல் முற்றுகையிட்டால், விரக்தி அதிகமாகும்; வளர்ச்சிக்காக பாடுபடும் எண்ணம் குறைந்துவிடும்” என்பது அவர் சொன்ன செய்தி. அவருடைய அரசாங்கத்தை யார் செயல்படவிடாமல் ‘கெரோ’ செய்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு உடனடியாக உங்களிடம் பதில் இருக்கும். ஆனால் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்.
“ஒரே நேரத்தில் குற்றம் சாட்டுபவர்களாகவும் விசாரணையில் வழக்காடுபவர்களாகவும் நீதிபதிகளாகவும் ஊடகங்கள் செயல்படுகின்றன,” என்று மன்மோகன்சிங் மனம் பொருமி இருக்கிறார். அதாவது ஊடகங்கள் அரசு மீது குற்றம் சாட்டுகின்றன; விசாரணை நடத்துகின்றன; தீர்ப்பும் வழங்கி விடுகின்றன என்று ஊடகங்களைக் குறை சொல்கிறார். “காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையில் விரிசலை உருவாக்குவதற்கு ஊடகங்கள் முயல்கின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி சில வாரங்களுக்கு முன்னால் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். அதைப் போலவே மத்திய அரசாங்கத்தில் எதுவுமே நடக்காததைப் போலவும் ஊடகங்களே குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து ‘விசாரணை’ நடத்தி தீர்ப்பு வழங்கிவிடுவதைப் போலவும் அவர் சொல்லி இருக்கிறார்!
ஊடகங்கள் என்ன செய்கின்றன? சில பிரச்னைகளை எழுப்புகின்றன. அவற்றின் மீது விவாதங்களை நடத்துகின்றன. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அந்த சிக்கல்கள் குறித்த உரையாடல்கள் நிகழ்கின்றன. எதிர்க்கட்சிகள் அவை குறித்து அறிக்கை விடுகின்றன; ஓரிரு கட்சிகள் மட்டுமே போராட்டங்களை நடத்துகின்றன. ஜனநாயக அமைப்பில், இதுபோன்ற எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தை முற்றுகையிடும் நடவடிக்கை அல்ல; நிர்வாகத்தை முடக்கிப் போடும் செயல்பாடும் அல்ல; ஆனால், பிரதமர் மன்மோகன்சிங் இதற்காக வேதனைப்படுகிறார்; ஊடகங்களைக் குற்றம் சாட்டுகிறார். அப்படி என்றால் அவர் வேண்டுவது என்ன? முழு அளவிலான சர்வாதிகாரமா?
“எல்லா உண்மைகளும் தெரியாத நிலையில் முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதிகமாக உண்மை தெரிந்த நிலையில், தணிக்கை அதிகாரி, நாடாளுமன்றம், ஊடகங்கள் ஆகியவை அரசாங்கத்தின் முடிவுகளை ஆய்வு செய்கின்றன. இந்தச் சூழ்நிலையில் செயல்படுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது,” என்றும் அவர் பேசி இருக்கிறார். இதற்கு என்ன பொருள்? நிர்வாகத்தில் முடிவெடுக்கும்போது முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிவதில்லை என்றால் என்ன அர்த்தம்? ஒவ்வொரு முறையும் ஊழல் புகார் வரும்போது, ‘என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று மன்மோகன்சிங் சொன்னதற்கு இதுதான் காரணம் போலிருக்கிறது.
“தொலைத் தொடர்புத் துறையில் என்ன நடந்தது என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது. தலைமைக் கண்காணிப்பு ஆணையரிடம் யாரோ ஊழல் புகார் கொடுத்தார்கள்; சிபிஐ விசாரித்தது; அதன் பிறகும் கூட அந்த முறைகேட்டில் அமைச்சருக்கு எதிரான ஆதாரம் எதுவும் இருப்பதாக சிபிஐ என்னிடம் தெரிவிக்கவில்லை” என்று அந்த ஐந்து ஆசிரியர்களிடம் பேசும்போது மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார். அதே சமயத்தில் வேறொரு தகவலையும் அவர் சொல்கிறார். அவரை செயல்படாத பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் எந்தவித உண்மையும் இல்லை என்கிறார். அவருடைய தலைமையில் இயங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் முழுக்க முழுக்க அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றும் அவர் உறுதிப்படுத்துகிறார். அவருடைய இரண்டு கூற்றுக்களுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
இருந்தும் அவர் பேசியாக வேண்டியிருக்கிறது; ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சரவை சகாக்களால் அரசாங்கத்தின் நற்பெயர் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது; ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இரண்டாவது முறை 2009-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்தன; இப்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் அரசாங்கத்திடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுத்தரக் குடும்பங்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இழப்புகளையும் சேதங்களையும் சரிசெய்தாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இருக்கிறது. அதனால் அவர் ஊடகங்களை அழைத்துப் பேசி இருக்கிறார்!
அதேசமயம், அனைத்து ஊடகங்களையும் அழைக்காமல் தேர்வுசெய்யப்பட்ட ஐந்து அச்சு ஊடக ஆசிரியர்களிடம் மட்டும் பேசுகிறார். அவர்கள் மூலமாக தான் சொல்ல நினைப்பதை மக்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்பது அவருடைய எண்ணம். அது நிறைவேறி இருக்கிறது. ‘நான் அதிகாரம் இல்லாத பிரதமர் இல்லை; அரசு என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது; லோக்பால் அதிகார வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வருவதில் எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை; ஆனால் என் அமைச்சரவை சகாக்கள் தான் அதை எதிர்க்கிறார்கள்’ என்று அவருடைய கருத்துக்களை ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்கி மக்களிடம் சேர்த்தன.
“ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கும் மந்திரக் கோல் எதுவும் என்னிடம் இல்லை; அனைத்து அதிகாரங்களும் அரசாங்கத்திடம் குவியும் லைசன்ஸ் ராஜ்யம் மீண்டும் வந்துவிடாமல் இருக்க வேண்டும்” என்று அவர் மக்களை எச்சரிக்கிறார். உரிமங்களைப் பெறுவதற்காக அரசாங்கத்திடம் காத்திருக்க வேண்டியிருப்பதாலேயே லஞ்சமும் ஊழலும் பெருகுகிறது என்று நமக்கு கற்பித்தார்கள். இப்போது பெருகி இருக்கும் லஞ்சத்தையும் ஊழலையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில், ‘லைசன்ஸ் ராஜ்யம்’ வந்துவிடும் என்று அச்சுறுத்துகிறார்கள்!
பரபரப்பான செய்திகளுக்கு நடுவே ஒரு செய்தி கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது. ஊடகங்களுடன் பிரதமர் மனம் திறந்து பேசினார், ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது என்ற திக்விஜய்சிங்கின் பேச்சு போன்றவை பட்டையைக் கிளப்பும் செய்திகள். அவற்றுக்கு நடுவே கவனிக்கப்படாமல் நம்மைக் கவலைப்படச் செய்யும் செய்தி என்ன? 2002-ல் குஜராத் படுகொலைகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ‘வழக்கமான அரசு நடைமுறை’ காரணமாக அழிக்கப்பட்டது என்பதே அந்த செய்தி!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்