Thursday, December 28, 2006

வாக்கு வங்கியை நோக்கி அம்பேத்கர் பாதை?

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாக தலித் இனத்தைச் சேர்ந்த கே.ஜி.பால கிருஷ்ணன் பதவி ஏற்க இருக்கிறார். இந்தப் பதவியில் அமரப்போகும் முதல் தலித் இவர்தான். இவர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்பதால் இந்தப் பதவியை ஏற்க இருக்கிறாரே தவிர, தலித் என்பதால் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. நீதிபதி பாலகிருஷ்ணன் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன் தலித் இனத்தைச் சேர்ந்த முதல் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனும் கேரளாவைச் சேர்ந்தவர்தான். பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற மூன்று பதவிகளை இந்தியாவின் மிகவும் பெரிய பதவிகள் என்று ஒப்புக்கொண்டால், இன்னும் பிரதமர் நாற்காலியில் மட்டுமே தலித் இனத்தைச் சேர்ந்தவர் அமரவில்லை என்பது புரிகிறது.

நீதிபதி பாலகிருஷ்ணனும் கே.ஆர். நாராயணனும் உயர் பதவிகளுக்கு வர முடிந்திருப்பது, தலித் மக்கள் தங்கள் அதிகாரத்துக்கான போராட்டத்தில் வென்று வருவதன் அடையாளம் என்று கருதலாம். அதேசமயம் இப்படிப்பட்ட உயர் பதவிகளில் தலித் இனத்தின் பிரதிநிதிகள் அமர முடிவதால் மட்டுமே இந்தியாவில் அந்தப் பிரிவு மக்களின் ஒட்டுமொத்த நிலைமைகள் முன்னேற்றம் அடைந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது. தலித்களுக்கு எதிரான பாகுபாடுகள் மறைந்து விட்டதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. இன்னும் ஒரு பிரிவினர் தங்களுக்கு உரிய இடங்களைப் பெறுவதற்கு கல்வி, சமூக, பொருளாதார, மற்றும் அரசியல்ரீதியாக நெடுந்தூரம் போக வேண்டியதிருக்கிறது என்பதை எடுத்துச்சொல்ல வேண்டிய சூழலில்தான் நாம் இன்னும் இருக்கிறோம்.

இந்தியாவின் முதன்மை நீதிபதியாக ஒரு தலித் அமர இருக்கும் சூழலில், நமது இந்தியச் சமூகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதும் அவசியமாகிறது. நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு முதன்மை நீதிபதியாகப் பதவி உயர்வு அறிவிப்புச் செய்தி வந்த டிசம்பர் மாதத்தில் நடந்த வேறு ஒரு செய்தி கவலையளிக்கிறது.

ஒரிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஜெகந்நாதர் ஆலயத்துக்குள் 200 தலித் மக்கள் சென்றனர். இந்தியா விடுதலை அடைந்த 60 ஆண்டுகளில் இதை ஒரு செய்தியாகச் சொல்ல நேர்கிறது என்பதே சமூகத்தின் அவலத்தைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இந்த ஆலயப் பிரவேசம்கூட நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகே நடந்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்கு தலித் இளம் பெண்கள் அந்தக் கோயிலுக்குள் நுழைந்ததற்காக அடிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகு ஆலயத்துக்குள் நுழைவதற்கான உரிமைப் போர் தொடங்கியிருக்கிறது. ஒரிசா உயர் நீதிமன்றத்தில் ‘எந்த ஓர் இந்துவும் எந்த ஓர் ஆலயத் துக்குள்ளும் செல்லலாம்’ என்ற தீர்ப்புக்குப் பிறகே இந்த ஆலயப் பிரவேசம் நடந்திருக்கிறது. அதற்கு அடுத்த நாள், அந்தக் கோயிலில் பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெறவில்லை. அங்கு ஏற்கெனவே பணியில் இருந்தவர்கள் காட்டிய எதிர்ப்பே இதற்கான காரணம். இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை!
அந்தக் கோயிலில் உள்ள சுவர் ஒன்று இடிக்கப்பட்டு, அங்கு பெரிய அளவில் ஒரு கம்பித் தடுப்பு போடப் போகிறார்கள். அந்தக் கம்பிக்கு வெளிப்புறமாக நின்று அனைத்துப் பக்தர்களும் ஜெகந்நாதரை தரிசிக்க வேண்டும். அர்ச்சகர்களும் பூஜை செய்பவர்களும் மட்டுமே கம்பித் தடுப்புக்கு உள்ளே நுழைந்து கர்ப்பக்கிரகத்துக்குள் செல்ல முடியும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு நிர்வாகம் இப்படி ஒரு சமரசத்தில் இருதரப்பினரையும் இணைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சமரசத்தை அம்பேத்கர் இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அந்தக் கிராமத்தில் மீண்டும் மீண்டும் இந்த ஆலய நுழைவு உரிமைக்காகப் போராடி சலித்துப்போன தலித் மக்கள் ஆயிரம் பேர், வருகிற புத்தாண்டில் புத்த மதத்தைத் தழுவ இருப்பதாக இன்னொரு செய்தி கூறுகிறது. அதாவது ‘‘நான் ஓர் இந்துவாகப் பிறந்தேன்; ஆனால் ஓர் இந்துவாக சாக மாட்டேன்’’ என்று டாக்டர் அம்பேத்கர் காட்டிய வழியில் நடக்கத் தீர்மானித்து விட்டனர். ‘உங்கள் கோயிலுக்குள் என்னை வரக்கூடாது என்று சொன்னீர்கள் என்றால், நான் எனது சொந்தப் பாதையைத் தீர்மானித்துக் கொள்கிறேன்’ என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். ஒரிசா உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ‘எந்த ஓர் இந்துவும் எந்த ஓர் ஆலயத்துக்குள்ளும்’ சுலபமாக நுழைந்துவிட முடியவில்லை என்பதே உண்மையான நடைமுறையாக இருக்கிறது. ‘ஒருநாள் ஆலய நுழைவு’ என்பது ஓர் அடையாளமாக அல்லது ஒரு சடங்காக நடந்து முடிந்திருக்கிறது.

ஒரு சமூகம் அடையாளங்களுடன் மட்டும் மனநிறைவு கொண்டுவிட முடியாது. பிரிவுக்கும் பாகுபாடுகளுக்கும் காரணமான அடிப்படை முரண்களுக்குத் தீர்வு காணாத அடையாளங்களால் பரந்த சமூகத்துக்கு எந்த ஒரு பலனும் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி ஆட்சிக்கு வந்தார். மத்திய அரசில் நீண்ட காலம் பீகாரைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் அமைச்சராக இருந்தார். ஆனால், இவர்கள் எல்லாம் டாக்டர் அம்பேத்கரைப் போல பரந்த உழைக்கும் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்தார்களா என்பது விவாதத்துக்குரிய விஷயமே.

மாயாவதியும் ஜெகஜீவன்ராமும் தலித் அரசியல்வாதிகளின் அதிகாரத்துக்கான அடையாளங்கள். அவர்கள் அரசியல்வாதிகள். எனவே அடுத்த தேர்தல் என்ற இலக்கைத் தாண்டி அவர்களால் சிந்திக்க இயலாது. ஆனால், வாக்கு வங்கிகளைக் குறிவைக்கும் அரசியல்வாதியாக அம்பேத்கர் இருக்கவில்லை. அவர் ஓர் அரசியல் மேதை. எனவே அவர் அடுத்தடுத்த தலைமுறைகளைப் பற்றி சிந்தித்தார். அதனால்தான் அடிப்படை முரண்களைத் தீர்ப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.

எப்படி இருந்தபோதிலும் ஓர் அடையாளமாக உயர்பதவிகளுக்கு ஒரு தலித் வருவதுகூட நமது சமூகத்தில் சிரமமானதாகத்தான் இருக்கிறது. சிக்கலான பிரச்னைகள் பலவற்றை எதிர்கொண்டதற்குப் பிறகே இந்த உயர்நிலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் மற்றும் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வந்திருக்க முடியும்.

இவர்களைப்போல் வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து முன்னேறும் மனிதர்களுக்கும் சமூகத்தினருக்கும் உற்சாகம் அளிக்கும் மேற்கோள் ஒன்று இருக்கிறது.

‘‘அவர்கள் முதலில் உங்களைப் புறக்கணிப்பார்கள்; பிறகு உங்களைக் கேலி செய்வார்கள். அதன் பிறகு உங்களுடன் போட்டி போடுவார்கள்; இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!’’ என்பதே அது.

- ஜென்ராம்
நன்றி : ஜூனியர் விகடன் (31.12.06)

Labels: , ,

1 Comments:

At 11:05 AM, Blogger Pot"tea" kadai said...

கட்டுரைக்கு நன்றி.

//‘‘அவர்கள் முதலில் உங்களைப் புறக்கணிப்பார்கள்; பிறகு உங்களைக் கேலி செய்வார்கள். அதன் பிறகு உங்களுடன் போட்டி போடுவார்கள்; இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!’’//

சுருக்கென உரைக்கும் உண்மை.

 

Post a Comment

<< Home