Monday, December 11, 2006

அஹிம்சைக்கு விடை கிடைக்காதா?

வலியில் இருந்து விடுதலை பெறும் நொடியே மனிதனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நொடியாக இருக்க முடியும். அதைப்போல அதிருப்தியில் இருக்கும் மக்களிடம் சென்று, அவர்களை உறுத்திக் கொண்டிருக்கும் பிரச்னை தீர இருக்கிறது என்று அறிவித்தால், அந்த மக்களின் முகங்களில் மலர்ச்சியைக் காண முடியும். அப்படி ஒரு செயலையே பிரதமர் மன்மோகன்சிங் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் செய்திருக்கிறார்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் சர்ச்சைக்குரிய ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958’ திருத்தப்பட்டு ‘மனித நேயம்’ மிகுந்த சட்டமாக மாற்றப்படும் என்று அங்கு அவர் அறிவித்திருக்கிறார். மணிப்பூர் மாநில மக்கள், இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்பு, அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே சராசரியான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

ஆனால், அங்கு அவ்வாறு நிகழவில்லை. பிரதமரின் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் டெல்லியில் ஐரோம் ஷர்மிளா சானு என்ற 36 வயது பெண்மணியிடம் அதற்கான எதிர் வினையைக் காண முடிந்தது. தனது மூக்கில் செருகப்பட்டிருந்த குழாயை அவர் பிடுங்கி எறிந்தார். ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958’ஐ முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் ஐரோம் ஷர்மிளா சானுவின் கோரிக்கை. இந்தக் கோரிக்கை முழுமையாக ஏற்கப்படாமல், ‘மனித நேயம்’ மிகுந்த சட்டமாக மாற்றப்படும் என்று பிரதமர் அறிவித்தது, சானுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவமனையில் இருந்து கொண்டு இப்படி ஓர் எதிர்ப்பைத் தெரிவிக்கும் இந்தப் பெண் யார்? அவரது மூக்கில் ஏன் குழாய் மாட்டப் பட்டிருக்கிறது?

மணிப்பூர் இலக்கியவாதிகள் மத்தியில் ஐரோம் ஷர்மிளா ஒரு கவிஞர்; யோகா வல்லுநர்கள் நடுவில் அவர் ஒரு யோகா கலைஞர். எல்லோரையும் போலவே அவரும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக ஒரு நிகழ்ச்சி கடந்த 2.11.2000 அன்று நடந்தது. அன்று முதல் அவர் உணவு எதையும் உண்ணவில்லை. ஒரு சொட்டு நீர்கூட குடிக்கவில்லை. அவருடைய மூக்கில் ஒரு குழாயைச் செலுத்தி, அதன் வழியாக உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். ஆனால், இப்படி தொடர் உண்ணாவிரதம் இருப்பதால், அவரது உடலில் ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், இன்னும் அவர் தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

2.11.2000 அன்று, -அந்தக் குறிப்பிட்ட நாளில் நடந்தது என்ன? மணிப்பூரில் உள்ள மலோம் என்ற இடத்தில் அமைதிப் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவை குறித்து விவாதிப்பதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஐரோம் ஷர்மிளா அந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அந்த ஊரின் கடைவீதியில் அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் கண்மண் தெரியாமல் மனம்போன போக்கில் சுட்டனர். மணிப்பூர் தீவிரவாதிகள் அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதற்கான பதிலடியாக, அவர்கள் அப்பாவி மக்கள் மீது இப்படி சுட்டிருக்கிறார்கள். இதில் 10 பேர் பலியானார்கள்.

இந்தச் சம்பவம் ஐரோம் ஷர்மிளாவை பாதித்தது. சம்பவம் நடந்த இடத்தைச் சென்று பார்த்த ஐரோம் ஷர்மிளா, உடனடியாகத் தனது உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். ஆயுதப் படையினருக்குத் தேவைக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கும் ‘ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்ட’த்தை ரத்து செய்ய வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

வழக்கம் போலவே அரசு அவர் மீது தற்கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்து, கைது செய்தது. வலுக் கட்டாயமாக மூக்கு வழியாக உணவு செலுத்தப்பட்டது. ஓராண்டு சிறைத் தண்டனை முடிந்து அவர் வெளியில் வருவார்; தனது போராட்டத்தைத் தொடர்வார்; மீண்டும் கைது செய்யப்படுவார்... இப்படியே ஆறு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த ஆண்டுதான் இந்தக் காட்சி இம்பாலில் இருந்து டெல்லிக்கு இடம் மாறியிருக்கிறது.

கடந்த ஆறு வருடங்களாக இவரது அம்மா இவரைப் பார்க்கவில்லை. ‘‘நான் பலவீனமானவள். மகளைப் பார்த்தால் எனது கண்கள் கலங்கும். எனது கண்களில் இருந்து வடியும் கண்ணீர், எனது மகளின் மன உறுதியைச் சிறிது கூட பாதித்துவிடக் கூடாது. எனவே நான் அவளைப் பார்க்க மாட்டேன். அவளது லட்சியத்தில் அவள் வெற்றி பெற்றபிறகு அவள் வந்து என்னைச் சந்திப்பாள்’’ என்று ஷர்மிளாவின் அம்மா சொல்கிறார்.

இந்த வார்த்தைகளில் அந்தத் தாயின் பலவீனம் தெரியவில்லை. மாறாக மன உறுதியே வெளிப்படுகிறது. இவரைப் போலவே, மணிப்பூர் தாய்மார்களில் பலர் மனஉறுதி மிக்கவர்கள்தான். அவர் கள் நடத்திய இன்னொரு போராட்டத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கடந்த 2004 ஆம் வருடம் ஜூலை மாதம் 11 ஆம் தேதி அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்ஜம் மனோரமா தேவி என்ற 32 வயதுப் பெண் வன்புணரப்பட்டு, அதன் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏறத்தாழ 30 தாய்மார்கள் தங்கள் உடலில் ஒட்டுத் துணிகூட இல்லாமல் அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினரின் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ‘ஆயுதப் படையினரே! எங்களையும் வன்புணருங்கள்’, ‘எங்கள் சதைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்’ போன்ற பதாகைகள் ஏந்திப் போராடினார்கள். அதைத் தொடர்ந்து ‘சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள்’ என்று மணிப்பூர் முழுவதும் போராட்டம் வெடித்தது.

இந்த சட்டத்தின் பிரிவுகளை மறு ஆய்வு செய்வதற்காக ஜீவன் ரெட்டி குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் தனது ஆய்வுகளை முடித்துக் கொண்டு, அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து விட்டது. ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் அதன் சில பிரிவுகளை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் இடம் பெறச் செய்யலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுமா என்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் மணிப்பூரில் எதுவும் குறிப்பிடவில்லை என்பது வேறு விஷயம்!

ஷர்மிளா உணவு எதுவும் உட்கொள்ளாமல் அறப் போராட்டம் நடத்துகிறார். அவர் தற்கொலை செய்துகொள்ளத் துடிக்கவில்லை. ஆனால், அவர் மீது அரசு தற்கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்கிறது. அப்படி என்றால் பட்டினிப் போராட்டம், சட்ட விரோதமாகிறது. அது இல்லாமல் வேறு வழி முறைகளில் நடைபெறும் போராட்டங்களும் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தொடங்கி குற்றச் செயல் வழக்குகள் வரை இழுத்துச் செல்லப்படுகின்றன. அப்படி என்றால் மக்கள் தங்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கு ஜனநாயக வழியில் எப்படிப் போராட வேண்டும் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகும் இந்த சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து சிறிதும் பின்வாங்கப் போவதில்லை என்று ஐரோம் ஷர்மிளா உறுதியாகக் கூறியிருக்கிறார். தாயும் மகளும் சந்திக்கும் நாள் விரைவில் வரட்டும்!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்

0 Comments:

Post a Comment

<< Home