Sunday, December 03, 2006

ஹீரோவுக்கு சுபம்... மற்றவர்களுக்கு?

ஒரு கோட்டை அழிக்காமல் அதை சிறிய கோடாக மாற்ற வேண்டும் என்றால் அதற்குப் பக்கத்தில் அதைவிட ஒரு பெரிய கோடு வரைய வேண்டும். வாழ்க்கையில் நாம் பெரிய பிரச்னையாக நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னை ஒன்றுமில்லாததாகத் தெரிய வேண்டும் என்றால் அதைவிட தீவிரமான ஒரு பிரச்னை நம்மைத் தாக்க வேண்டும். ‘இரு கோடுகள்’ என்ற திரைப்படத்தில் இடம் பெறுகின்ற தத்துவம் இது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான தடா வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத் குறித்த தீர்ப்பு இந்தத் தத்துவத்தைதான் நினைவு படுத்துகிறது. ஆயுதங்கள் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 7 இன் கீழ் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவரது குடும்பத்தினரும் அவரது ரசிகர்களும் இதற்காக தங்கள் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ஏனென்றால் இவர்கள் பயந்த மாதிரி தடா சட்டத்தின் கீழ் சஞ்சய் தத் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளிக்கவில்லை. மும்பை குண்டு வெடிப்புக்கான பயங்கர வாத சதியில் சஞ்சய் தத்துக்கு எந்தவித பங்கும் இல்லை என்று நீதிபதி தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டிக்கப்படுவது சாதாரண விஷயம் இல்லை. அதிலும் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் சஞ்சய் தத் போன்ற ஒரு நடிகர் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவது அவரைச் சார்ந்தவர்களுக்கு மிகவும் கவலை அளிக்கக் கூடியதாகவே இருக்க முடியும். இருந்தும் அவர்கள் தீர்ப்பை சற்று மன நிம்மதியுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனெனில் தேசவிரோத பயங்கரவாத குற்றத்தில் இருந்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் ஒரு பிரபலமான நடிகர் என்பதால் மட்டும் அவரைச் சார்ந்தவர்கள் இப்படி யோசிக்கவில்லை. சினிமா துறையிலும் அரசியலிலும் பிரதானமாக இருந்த ஒரு குடும்பத்தின் வாரிசு அவர். அவரது தந்தை சுனில் தத், தாயார் நர்கீஸ் தத் ஆகிய இருவரும் சினிமாவில் மிகவும் புகழ் பெற்றவர்கள். சுனில் தத் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர். அவரது மகள் பிரியா தத் தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கிறார். இவ்வளவு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் தத் மீது தேச விரோத குற்றவாளி என்ற முத்திரை விழுந்தால் அது அந்தக் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்.

ஆனால், இப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவருக்கு எப்படி ஏ.கே.56 துப்பாக்கியின் மீதும் 9 மி.மீ. கைத்துப்பாக்கி மீதும் காதல் ஏற்பட்டது? சினிமாவில் நீளமான துப்பாக்கிகளை வைத்து எதிரிகளை ஒழித்துக் கட்டும் கதாநாயகனாக அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். நிஜ வாழ்விலும் அவரது எதிரிகளை அழிப்பதற்கு துப்பாக்கி அவசியம் என்று அவர் நினைத்திருக்கலாம். அல்லது ‘துப்பாக்கிக் குழாயில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்று யாரோ எங்கோ எதற்காகவோ சொன்னதை இவர் தனக்கும் பொருந்தும் என்று கருதியிருக்கக் கூடும். அல்லது துப்பாக்கி வைத்திருப்பதை ஒரு ஆணின் வீரத்துக்கான அடையாளமாக நம்பி இருக்கலாம். அல்லது ‘துப்பாக்கி வைத்திருப்போர் மட்டுமே குடிமக்கள்; மற்றவர்கள் வெறும் ஜடங்கள்’ என்ற அராஜகக் குரலை ஆதரிப்பவராக இருக்கலாம்.

ஆனால், இப்படிப்பட்ட எந்தக் கருத்தையும் நீதிமன்றத்தில் அவர் சொல்லவில்லை. தனது குடும்பத்துக்குக் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன என்றும் காவல்துறையில் அவை குறித்து புகார்கள் கொடுத்தும் அவர்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் சஞ்சய் தத் கூறியிருக்கிறார். அதனால் குடும்பத்தின் பாதுகாப்புக்காக அவர் இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அந்தச் செயல் தவறு என்று தெரிந்தவுடன் ஏ.கே.56 துப்பாக்கியை நண்பரிடம் கொடுத்து அழிக்கச் செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் மட்டுமே ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது. சஞ்சயின் உத்தரவின்படி துப்பாக்கியை அழித்த இருவருக்கு பயங்கரவாத குற்றத்தில் இருந்து விடுவித்து ஆயுதங்களை அழித்ததில் மட்டும் குற்றவாளிகள் என்று தடா நீதி மன்றம் கூறியிருக்கிறது.

1992 ஆம் வருடம் மார்ச் மாதம் 12ஆம் தேதி மும்பை நகரின் 13 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 250 பேருக்கும் மேலாக பலியாகினர். ஏறத்தாழ 1500 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோது அதுதான் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்திய பயங்கரவாதச் செயலாக கருதப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தீர்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 86 பேரைக் குற்றவாளிகள் என்றும் 23 பேரை விடுவித்தும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் தீர்ப்புகள் தொடரும்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்திலும் அதன்பிறகு உச்ச நீதிமன்றத்திலும் முறையிடலாம். தடா கோர்ட்டில் விசாரணை முடிந்து தீர்ப்பைப் பெறுவதற்கே 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. மேல் முறையீடுகள் முடிந்து இறுதித் தீர்ப்பு கிடைப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?

இந்த வழக்கின் விசாரணை மற்றும் சஞ்சய் தத் குறித்து விரிவாக விவாதிக்கும் பலர், இந்த வழக்கின் வேறு கோணங்கள் குறித்து பரவலாக விவாதிப்பதில்லை. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் இன்னும் பிடிபடவில்லை. இன்று வழக்கில் தண்டனை பெறுகிறவர்கள் எல்லாம் தாவூதின் கட் டளையை நிறைவேற்றியவர்கள் மட்டுமே. அதற்கான தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், மூளையாகச் செயல்பட்டதாக முதன்மையாகக் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைதுசெய்ய முடியவில்லை என்பது ஓர் உறுத்தல்தான்!

சஞ்சய் தத் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏற்கனவே 16 மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். இப்போது பயங்கரவாத சதிக் குற்றத்தில் அவர் ஈடுபடவில்லை என்பதால் தடா சட்டத்தின் கீழ் உள்ள வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்.

ஆனால் தடா மற்றும் பொடா சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் அந்த வழக்குகளோடு மல்லுக்கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்னும் சிறைகளிலேயே இருக்கிறார்கள். தடா, பொடா என்ற இரு சட்டங்களும் இன்று இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்பதைத் தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

காலாவதியாகிப் போன தடா சட்ட வழக்கில் இருந்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டார். அதற்காக அவரைச் சார்ந்தவர்களும் அவரது குடும்பத்தினரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

அதைப் போலவே இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ, நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலரது குடும்பங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற நாள் விரைவில் வர வேண்டும்!

- ஜென்ராம்
நன்றி : ஜுனியர் விகடன் (06.12.06)

6 Comments:

At 11:18 PM, Blogger பத்மா அர்விந்த் said...

உங்கள் பதிவுகளை மீண்டும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சஞ்சய் தத் வழக்கு மட்டும் இல்லாமல் மற்றைய வழக்குகளில் ஒரு மனோதத்துவ மருத்துவரால் இவர்கள் பரிந்துரை செய்யப்படாதது ஏன்? உண்மையிலேயே இவர்கள் வ்ன்முறையை நாடுபவர்களா/ இல்லை ஒரு பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்கினார்களா/ வன்முறையில் விருப்பம் இருக்குமானால் அது எதனால் என்பன போன்றவை ஏன் விசாரிக்கப்படுவதே இல்லை? அதேபோல் 3 ஆண்டுகள் தண்டனை என்பதி மடும் பார்க்காது ஏன் சமூக பொறுப்பும் பணியும் கொடுக்கப்படுவதில்லை. 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையோடு மருத்துவ கவுன்சிலிங்கும் சேர்க்கலாம்.

 
At 11:59 PM, Blogger ஜென்ராம் said...

கருத்துக்களுக்கு நன்றி பத்மா.. உளவியல் மருத்துவர் கலந்தாய்வு அவசியம் என்றே கருதுகிறேன்.

 
At 8:55 PM, Blogger ரவி said...

சிறப்பாக கொடுத்திருக்கிறீர்கள்...உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன்..

 
At 9:46 PM, Blogger ஜென்ராம் said...

செந்தழல் ரவி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. எது தொடர்பாக எனது கருத்தை எதிர்பார்ப்பதாக சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை..

 
At 9:46 PM, Blogger ரவி said...

தொடர்ந்து என்ற வார்த்தை மிஸ்ஸிங் தலை !!!!

குழப்பியதுக்கு மன்னிக்க !!!!!

 
At 10:31 PM, Blogger ஜென்ராம் said...

செந்தழல் ரவி:

'' தொடர்ந்து " ஜூனியர் விகடனில் எழுதும் பத்திகளை மட்டுமாவது குறைந்த பட்சம் இங்கு இடலாம் என்றுதான் மீண்டும் வந்தேன் ரவி.. ஆனால் நீண்டநாட்களுக்குப் பின் வந்ததால், பிற பதிவுகளைப் பார்க்கவில்லை. எனவே எச்சரிக்கை உணர்வு எதுவும் இல்லாமல் 'சபலப்பட்டு' பீட்டாவுக்கு மாற்றி விட்டேன். தமிழ்மணத்தில் இணைப்பு கொடுக்க இயலாமல் போன பிறகுதான் பிளாக்கர் பீட்டா குறித்த பிற பதிவுகளைப் பார்த்தேன்.. இப்போது நண்பர்களின் உதவியை நாடி இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் "தொடர்ந்து" என்பதில் தொடர முடியாமல் நிற்கிறது..
விரைவில் தொடர முயல்கிறேன்..

 

Post a Comment

<< Home