Wednesday, December 13, 2006

எம்.ஜி.ஆரை மறப்பது நியாயமா?

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலையை மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி திறந்து வைத்துள்ளார். ஓர் அரசியல் கட்சித் தலைவருக்கு மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது அல்லது இருந்தது என்பதைப் பொறுத்தே அவருடைய அரசியல் ஆளுமையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
அந்த வகையில் எம்.ஜி.ஆருக்குத் தமிழக மக்கள் மத்தியில் பெரிதும் செல்வாக்கு இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
எனவேதான் அவருக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது அளித்து கௌரவித்துள்ளது. எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும் அவரது அரசியலையும் நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம்!

தமிழகத்தில் செல்வாக்குடன் இருந்த எம்.ஜி.ஆரின் சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வரவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன்சிங்கும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இவர்கள் இருவரையும் இந்த விழாவுக்கு அழைத்திருப்பதாக ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ‘‘சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க இருப்பதால், விழாவுக்கு வர இயலவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் அனுப்பியிருக்கிறார்’’ என்றுபின்னர் ஜெயலலிதா சொன்னார்.

இந்த விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ளாதது தான் ஆச்சர்யம் தருகிறது. ஏனெனில், சாதாரண அரசியல்வாதிகளின் ஆசாபாசங்களைக் கடந்த நிலையில் சோனியா காந்தி இருப்பதாக அவருக்கு ஒரு தோற்றம் இருக்கிறது. கடந்த காலங்களில் ஜெயலலிதா அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதற்காக இந்த விழாவை அவர் புறக்கணித்திருக்கக்கூடும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர். யார் என்பதும் அவர் நிறுவிய அ.தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடந்த காலங்களில் இருந்த நெருக்கம் என்ன என்பதும் சோனியாகாந்திக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்றால், தமிழக மக்களின் உணர்வை சோனியா காந்தி அவமதித்து விட்டதாகப் பிரசாரம் நடைபெறும் என்பதையும் அவர் நிச்சயம் அறிந்திருப்பார். இருந்தும், அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

‘தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எல்லாம் தமிழக அரசியல்வாதிகளிடம் மட்டுமே இருக்கிறது. டெல்லியில் எதிரெதிர் துருவங்களாக நாடாளுமன்றத்தில் மோதிக் கொள்பவர்கள்கூட, வெளியில் வந்தால் தோளில் கை போட்டுக் கொள்வார்கள். ஒரு தரப்பு தொடர்பான விழாவுக்கு எதிர்தரப்பினர் எந்தவித தயக்கமும் இல்லாமல் வருவார்கள்...’ இப்படித்தான் தேசியக் கட்சிகளைச் சார்ந்த வர்கள் தமிழகத்தில் பெருமையாகப் பேசி வருகிறார்கள். அவர்கள் சொல் வதைப்போல காங்கிரஸ் கட்சியினரும் பி.ஜே.பி. தலைவர்களும் பல விழாக்களில் ஒன்றாகப் பங்கேற்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதனால்தான் சோனியா காந்தி எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது வியப்பளிக்கிறது.

இந்த விழாவுக்கு ஜெயலலிதா வருகிறார் என்பதால்தான் சோனியா வரவில்லை என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா வரும் இடத்துக்கு சோனியா காந்தி வரமாட்டார் என்றால், டெல்லி தலைவர்களிடம் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் இல்லை என்ற வாதம் தவிடுபொடியாகிவிடுகிறது.

காங்கிரஸ் சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து கொண்டார்கள் என்பது வேறு விஷயம். ஜெயலலிதா அங்கு வந்த சிதம்பரத்திடம் பேசினாரா, வரவேற்றாரா என்பதெல்லாம் தெரியவில்லை. இருந்தும், எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த நாம் அவசியம் பங்கேற்க வேண்டும் என்ற அவரது முடிவு வரவேற்கத்தக்கது. இருந்தபோதிலும் கட்சித் தலைவர் அல்லது ஆட்சித் தலைவர் இருவரில் யாராவது ஒருவர் கலந்து கொண்டிருந்திருக்கலாம்.

ஒரு மாநிலத்தில் இருக்கும் இரு கட்சிகள் எந்த ஒரு நிகழ்வையும் அரசியல்ரீதியாகத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே முயலும். எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் ஜெயலலிதாவுடன் சோனியா பங்கேற்றிருந்தால், தி.மு.க. மீது சோனியா அதிருப்தி என்று சிலர் செய்திகளை வெளியிட்டிருப்பார்கள். இப்போது மட்டும் என்ன நடக்கும்? ‘ஜெயலலிதா பங்கேற்கும் விழாவில் கலந்துகொள்வது தி.மு.க. உறவில் நெருடலை ஏற்படுத்தும். அது மத்திய ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்கிவிடக் கூடாது. எனவேதான் சோனியா காந்தி வரவில்லை’ என்று செய்திகள் வெளியாகலாம். ஆனால், ஊடகங்களில் வேறுவிதமாகப் பிரசாரம் செய்யக்கூடும் என்பதற்காக ஒரு நல்ல அரசியல் தலைவர் செய்ய வேண்டிய சரியான செயலைச் செய்யாமல் இருக்கக்கூடாது.

அடுத்தடுத்து தமிழகத்தைச் சேர்ந்த இரு தலைவர்களின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் திறக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். சிலை திறப்புக்கு அடுத்த இரு தினங்களில் முரசொலி மாறன் சிலை திறப்பு விழாவும் நடந்தது. இதில் சோனியா காந்தியும் மன்மோகன்சிங்கும் கலந்து கொண்டார்கள். ஒருவேளை தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாத சூழ்நிலையில், இப்படி ஒரு விழா நடந்திருந்தால், அதிலும் சோனியா பங்கேற்றிருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் சோனியா காந்தி எம்.ஜி.ஆர். சிலை திறப்புவிழாவிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்ற வாதம் எழுகிறது. அப்படி அவர் செய்திருந்தால் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

சோனியா காந்தி ஒரு குறுகிய சிந்தனை கொண்ட கட்சியின் தலைவர் அல்ல; இந்தியாவின் பழம்பெரும் கட்சியின் அகில இந்தியத் தலைவர். அவர் சிறந்த ராஜதந்திரியாகவும் அரசியல் மேதையாகவும் புகழ்பெற வேண்டியவர். ஒரு மாநிலத்தில் உள்ள இரு கட்சிகளுக்கு இடையில் உள்ள அரசியல் வேறுபாடுகள், அவரது பரந்த செயல்பாட்டைத் தீர்மானிப்பதற்கு அவர் இடம் கொடுத்திருக்கக் கூடாது. நெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில்கூட தமிழக மக்கள் காங்கிரஸை ஆதரித்துள்ளார்கள். அதாவது, வட இந்தியா முழுவதும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நேரத்திலும் தமிழக மக்களும் எம்.ஜி.ஆரும் காங்கிரஸ் கட்சிக்குத் துணையாக நின்றார்கள். ஆனால், அதற்கான அங்கீகாரத்தை எம்.ஜி.ஆருக்கு அளிப்பதற்கு சோனியாகாந்தி தவறிவிட்டார்.

ஒருநாள் சிங்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதன் தொண்டையில் ஓர் எலும்பு சிக்கிக் கொண்டது. அந்த எலும்பை அந்த சிங்கத்தால் விழுங்க முடியவில்லை. நேரம் ஆக ஆக, சிங்கத்தின் தொண்டையில் வலி அதிகரித்தது. வலி தாங்க முடியாமல் சிங்கம் அங்கும் இங்கும் ஓடியது. ‘‘தொண்டையில் சிக்கிய எலும்பை எடுத்து விடுங்கள். உங்களுக்குப் பரிசாக எது வேண்டுமானாலும் தருகிறேன்’’ என்று சொல்லியும் யாரும் உதவ முன்வரவில்லை.

அந்த சமயம் அங்கு ஒரு கொக்கு வந்தது. சிங்கத்தை வாயை நன்றாகத் திறந்து வைக்கச் சொன்னது. பிறகு தனது நீளமான அலகால் சிங்கத்தின் தொண்டையில் சிக்கிய எலும்புத் துண்டை எடுத்தது. இதன் பிறகு தனக்கான பரிசைத் தருமாறு கேட்டது கொக்கு. சிங்கம் அட்டகாசமாகச் சிரித்தது. ‘‘ஒரு சிங்கத்தின் வாய்க்குள் தலையை விட்டு எந்த சேதமும் இல்லாமல் இன்னும் உயிருடன் இருக்கிறாய். இதைவிட என்ன பரிசு உனக்குத் தேவை? உன் உயிர்தான் நான் உனக்களித்த பரிசு. உடனடியாக இங்கிருந்து ஓடிவிடு’’ என்று சொல்லி சிங்கம் கர்ஜித்தது.

தேசியக் கட்சி, மாநிலக் கட்சிகளை இப்படித்தான் நடத்தும் போலும்!


-ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்

0 Comments:

Post a Comment

<< Home