Monday, December 18, 2006

பொதுச் சொத்துக்கு யார் பொறுப்பு?

"உங்களைக் கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைத்தீர்களா?"

மதுரையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு வழக்கறிஞரைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் இவை.

வழக்கறிஞர்கள் அறைக்கு மாதம் 200 ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வாடகையைக் குறைக்குமாறு ஒரு வழக்கறிஞர் மனுச் செய்திருந்தார். இதற்கிடையே மதுரை நீதிமன்ற வளாகத்தில் நடந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது, ஜன்னல் கண்ணாடிகளும் அறிவிப்புப் பலகைகளும் உடைக்கப்பட்டிருந்தன. ‘‘இருநூறு ரூபாய் வாடகையைக் குறைக்குமாறு வழக்குப் போடும் நீங்கள், நீதிமன்ற சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கிறீர்கள். இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நான் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும்’’ என்று அந்த நீதிபதி, வழக்கறிஞரை எச்சரித்தார்.

இதைப் போலவே இன்னொரு சம்பவத்தையும் எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். தேர்தலின்போது பொதுச் சொத்துகளின் மீது சுவரொட்டிகளை ஒட்டியும், சுவர் எழுத்துக்களை எழுதியும் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வது முன்பு வழக்கமான நிகழ்ச்சி. இப்போது அதற்கெல்லாம் கெடுபிடிகள் அதிகமாகி விட்டன என்பது வேறு விஷயம்! ஆனால், அவ்வாறு பொதுச் சுவர்களும் சொத்துக்களும் அசுத்தப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றைச் சுத்தம் செய்வதற்கு ஆகும் செலவை அந்த அந்தக் கட்சிகளிடம் வசூலியுங்கள் என்று தேர்தல் ஆணையம் பீகார் மாநில அரசுக்கு ஆணையிட்டது.

இவை எல்லாம் பழைய சம்பவங்கள். மக்கள் வரிப்பணத்தில் உருவாகி நிற்கின்ற பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் எடுத்த நடவடிக்கைகள். பொதுச் சொத்துக்களை மட்டுமல்லாமல் தனிச்சொத்துகளையும் மனித உயிர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது, நாடெங்கிலும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்த்தப்பட்டது. சீக்கியர்களுக்குச் சொந்தமான உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. அவர்களது உடைமைகளைப் பாதுகாத்துத் தருவதற்கு அரசு தவறி விட்டது என்று ஒரு வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ஆர்.காந்திக்கும் இந்திய அரசுக்கும் நடந்த அந்த வழக்கில் கோவையில் சேதப்படுத்தப்பட்ட சீக்கியர்களின் உடைமைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், இதுபோன்ற வேறொரு வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் வேறுவிதமாக தீர்ப்பளித்திருக்கிறது. ஆந்திர எம்.எல்.ஏ. ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் அங்கு கலவரம் நடந்தது. அதில் லட்சுமி ஏஜென்சீஸ் என்ற நிறுவனமும் தாக்கப்பட்டு சேதமடைந்தது. அதற்கு இழப்பீடு கேட்டு ஆந்திர அரசை எதிர்த்து அந்த நிறுவனம் வழக்கு போட்டது. ‘‘அரசாங்கத்தின் செயல் நேரடியாக அந்த இழப்புக்குக் காரணமாக இல்லாத நிலையில் இந்த வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 பொருந்தாது’’ என்று ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது, இழப்பீடு வழங்கத் தேவையில்லை என்றது.

இவைபோன்ற சம்பவங்களின் பின்னணியில் தமிழக அரசின் சமீபத்திய முடிவுகளில் ஒன்றைப் பார்க்க வேண்டியதுள்ளது. அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தும் போதும் கடையடைப்பு நடத்தும்போதும் சில சமயங்களில் பொதுச் சொத்துக்கு சேதங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கு அந்தப் போராட்டத்தில் ஊடுருவியிருக்கின்ற சமூகவிரோதிகள் காரணமாக இருந்திருக்கலாம். ஆனாலும் அந்த சேதத்துக்கான இழப்பீட்டை அந்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்த அரசியல் கட்சியே செலுத்தும் வகையில், கடந்த அ.தி.மு.க. அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிக்கையை இப்போது தி.மு.க. அரசு திரும்பப் பெற்றுள்ளது. ‘சமூக விரோதிகள் எவரோ நடத்திய வன்முறைக்கு அரசியல் கட்சிகளைப் பொறுப்பாக்குவது நீதியாகாது’ என்று முதல்வர் கருணாநிதி ஆணையிட்டு இருப்பதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மக்கள் வரிப்பணத்தில் உருவான அரசுச் சொத்துக்களை சேதப்படுத்தும் அதிகாரத்தை எவரோ சிலருக்குக் கொடுத்தது யார்? அப்படிப்பட்ட சமூக விரோதிகள் ஊடுருவுவதற்கு வசதியாகப் போராட்டங்களை அரசியல் கட்சிகள் ஏன் நடத்த வேண்டும்? அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதற்கோ அல்லது அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கோ வேறு நவீன முறைகளை அரசியல் தலைவர்கள் நடைமுறைப்படுத்தினால் என்ன? சமூக வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் தங்கள் போராட்ட வடிவங்களையும் இயக்கங்கள் மாற்றிக் கொண்டால் என்ன? போராட்டங்களை எல்லாம் போக்குவரத்துக்கு இடையூறான ஒன்றாக மட்டுமே பார்க்கும் மனோபாவத்தில் உள்ளவர்கள் மட்டும் எழுப்பும் கேள்விகள் அல்ல இவை. மேலும் பலர் இது போன்ற கேள்விகளை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். மொத்தத்தில் ஓர் அநீதிக்கு அரசும் துணை போகிறது என்ற எண்ணம் இவர்களிடத்தில் இருக்கிறது.

பொது வேலைநிறுத்தங்களும் பொது கடையடைப்புகளும் அபூர்வமாக நடந்து கொண்டிருந்த சமயங்களில் அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து இந்த அளவு தனிமைப்படவில்லை. அன்று சாலைகளில் இப்போது இருக்கும் அளவு வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனால், இன்று தினந் தோறும் பணிக்குச் சென்று வருவதே இரண்டு முறை ஊர்வலங்களில் கலந்து கொண்டுவிட்டு வருவதுபோல ஆகிவிட்டது. இந்நிலையில், ஒரு போராட்டம் நடந்தாலோ ஊர்வலம் நடந்தாலோ மக்களின் அன்றாட வாழ்வில் நெருக்கடி நேர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் இந்த ஒரு காரணத்துக்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற இயக்கங்கள் போராட்டங்களை நடத்துவதற்குத் தடைவிதிப்பதும் சரியல்ல. போராட்டங்கள் நடத்தப்படும்போது அவற்றை நடத்தும் இயக்கங்கள், சமூகவிரோதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். எந்தவகைப் போராட்டத்திலும் சமூகவிரோதிகள் அல்லது அங்கு கலவரம் விளைவிக்க எண்ணுவோர் ஊடுருவி விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இருந்த போதிலும் சில அரசியல் கட்சிகள் மட்டும் எவ்வளவு கூட்டம் வந்தாலும் கட்டுக்கோப்புடன் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அரசை எதிர்த்து சிலர் போராட்டங்களை நடத்தும்போது மக்களிடம் இருந்து எந்தவித எதிர்ப்புக் குரலையும் விரும்பாத ஆட்சியாளர்கள் இத்தகைய போராட்டங்களைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள். இந்த முயற்சிகளின் விளைவாக கடுமையான சட்டங்களும் அரசாணைகளும் அறிவிக்கைகளும் பிறக்கின்றன. இவை பொதுவாக எதிர்க்கட்சியினர் மீதே ஏவப்படுகின்றன. பொதுமக்களுக்கு நேர்கின்ற இன்னல்களைவிட ஆட்சியாளர்களின் இத்தகைய தாக்குதல் போக்கு தீவிரமானது. அடிப்படை ஜனநாயகத்துக்கே ஆபத்தானது. எனவே பொதுச் சொத்து சேதங்களுக்கு அரசியல் கட்சிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவிக்கையை முதல்வர் கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இந்த முடிவை ஆதரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், வேறு ஒரு கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. கடந்த காலங்களில் பல சட்டப்பேரவைகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மைக்குகளை உடைத்தும் மேஜை நாற்காலிகளைத் தூக்கி வீசியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சேதத்துக்குக் காரணமானவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இங்கு யார் ஊடுருவி இருந்தார்கள்?

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்

3 Comments:

At 1:30 PM, Blogger நன்மனம் said...

//கடந்த காலங்களில் பல சட்டப்பேரவைகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மைக்குகளை உடைத்தும் மேஜை நாற்காலிகளைத் தூக்கி வீசியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சேதத்துக்குக் காரணமானவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இங்கு யார் ஊடுருவி இருந்தார்கள்?//

மக்களின் பிரதிநிதி = மக்கள்

ஆகையால் மக்களே தங்கள் சொத்துக்களை சேத படுத்தி உள்ளார்கள்.

ஆனால் மக்களின் பிரதிநிதிகள் எப்படி தேர்ந்தெடுக்க பட்டார்கள் என்று கேள்வி இன்னமும் பதில் அளிக்க படாமல் இருக்கிறது.

 
At 4:37 PM, Blogger ராம்கி said...

நன்மனம்:

//மக்களின் பிரதிநிதி = மக்கள்

ஆகையால் மக்களே தங்கள் சொத்துக்களை சேத படுத்தி உள்ளார்கள்.//

:-))

 
At 11:16 PM, Blogger ஆதிபகவன் said...

‘சமூக விரோதிகள் எவரோ நடத்திய வன்முறைக்கு அரசியல் கட்சிகளைப் பொறுப்பாக்குவது நீதியாகாது’

சமூக விரோதிகள் இரண்டு விதம்.
ஓன்று அரசியல்வாதிகள் மற்றது கூலிப்படைகள். இதில் ஒருவர் துணையின்றி ஒருவர் வாழமுடியாது. ஆகவே சமூக விரோதிகள் யாரோ கிடையாது அவர்களேதான். எனவே அந்த சட்டத்தை நீக்கிவிட்டார்கள்.

இதில் என்ன ஆச்சர்யம்!!

 

Post a Comment

<< Home