Wednesday, December 20, 2006

மரண தண்டனையில் மௌனராகம்!

‘காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமை மிகவும் பொறுப்பானது. அவர்கள் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் காவலில் இருக்கும் கைதிகளை வதை செய்வது ரத்தத்தில் புற்றுநோய் இருப்பதைப் போன்றது. எனவே, தனது காவலில் உள்ள ஒருவரை ஒரு காவலர் அடித்துக் கொல்வது, மிகவும் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு செயல்.’’

இப்படி கூறி இருப்பது ஏதோ மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது சர்வதேச மன்னிப்பு சபையைச் சேர்ந்தவர்களோ அல்ல. டெல்லி நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியான ராஜிந்தர் குமார்தான் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். காவலில் இருந்த கைதிகளைக் கொடுமைப்படுத்திக் கொன்ற வழக்கில், ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையரான ரிஷி பிரகாஷ் தியாகி என்ற அதிகாரிக்குத் தூக்கு தண்டனை வழங்கி, அந்தத் தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி.

கடந்த 1987&ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16&ம் தேதி ரிஷி பிரகாஷ் தியாகி, உதவி ஆய்வாளராக இருந்தார். மகேந்திரகுமார், ராம்குமார் என்ற இருவர் வழிப்பறியில் ஈடுபடுவதாக வந்த செய்தியை அடுத்து, தியாகி அவர்களை மடக்கினார். ஆனால், அவர்கள் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்கள். அவர்களைப் பிடிப்பதற்கு என்ன வழி என்று யோசித்த தியாகி, அந்த இருவரது குடும்பத்தினருக்கும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். தங்களுக்காகத் தங்கள் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்த அந்த இருவரும், எட்டு நாட்களுக்குப் பிறகு காவல் துறையிடம் சரணடைந்தார்கள். காவல் நிலையத்தில் தியாகியும் சில காவலர்களும் அந்த இருவரையும் ‘தீவிரமாக’ விசாரித்தார்கள். இந்த ‘விசாரணை’க்குப் பிறகு 40 க்கும் மேற்பட்ட படுகாயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட மகேந்திரகுமார், இறுதியில் இறந்து போனார். மற்றவரான ராம்குமாரும் ‘எப்படியோ’ காவலில் காலமானார்.

இறந்துபோன மகேந்திர குமார் மற்றும் ராம்குமாரின் குடும்பத்தினர் விடாப்பிடியாக நடத்திய வழக்கில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்திருக்கிறது. காவலில் இருக்கும்போது கைதி மரணமடைந்ததாகப் போடப்பட்ட பல வழக்கு களில் அந்தக் கைதியின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்புகள் வந்துள்ளன. ஆனால், தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்குத் தூக்குத் தண்டனை என்ற அளவில் அதிகபட்ச தண்டனை அளித்திருப்பது இதுவே முதல்முறையாக இருக்கக் கூடும்.

காவலில் இருக்கும்போது கைதி மரணமடைந்து விட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் காவல் துறை அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்படுவது, இந்தியா வில் அபூர்வமாக இருக்கலாம். ஆனால், காவலில் கைதிகள் கொல்லப்படும் குற்றங்கள் இந்தியாவில் அபூர்வமானவை அல்ல என்பதை தேசிய குற்றப்பதிவு கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2005&ம் ஆண்டு மட்டுமே காவலில் இருக்கும்போது கைதி இறந்துபோனதாகக் கூறி 144 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆந்திர மாநிலத்தில் மட்டும் 55 வழக்குகள் பதிவாக, அது முதலிடத்தைப் பிடித்துள்ளது. இன்னும் பல மாநிலங்களில் இத்தகைய வழக்குகள் பதிவாகாமலே போவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

பல வழக்குகளில் மேல்முறையீட்டின்போது ஏற்கெனவே வழங்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்தோ அல்லது விடுதலை செய்தோ உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியிருக்கிறது. அதுபோலவே ரிஷி பிரகாஷ் தியாகிக்கும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையில் இருந்து விலக்களிக்கலாம். அப்படியே உச்ச நீதிமன்றம் அவருக்குத் தூக்கு தண்டனையை உறுதி செய்தாலும்கூட, அவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு போடலாம்.

எத்தனையோ குற்றவாளிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இருக்கும் இந்த உரிமை, இந்த முன்னாள் காவல்துறை அதிகாரிக்கும் இருக்கிறது. ஆனால், மரண தண்டனைகள் குறித்த தீர்ப்புகள் அளிக்கப்பட்ட அடுத்த நொடியே அதற்கு எதிரான குரல்களை எழுப்பும் பலர், தியாகி விஷயத்தில் ஏனோ மௌனமாக இருக்கிறார்கள்! ஒருவேளை, அவருக்கு இன்னும் மேல்முறையீடுகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது காரணமாக இருக்கலாம்.

ஒரு வாதத்துக்காக அனைத்து முறையீடுகளுக்கான வாய்ப்புகளும் முடிந்த பின்னர், இறுதியாக உச்ச நீதிமன்றத்திலும் தியாகிக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நமது பொது வாழ்வின் இரட்டைநிலை அப்பட்டமாக அம்பலமாகி நிற்கும். முகமது அப்சலுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பிய பலர், ரிஷி பிரகாஷ் தியாகியைக் கண்டு கொள்ள மாட்டார்கள். முகமது அப்சலைத் தூக்கில் இடுங்கள் என்று வலியுறுத்தும் சிலர் அதேபோல் தியாகி விஷயத்தில் நடந்துகொள்ள மாட்டார்கள்.

நமது பொதுவாழ்வில் நடைபெறும் பல முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாகப் பிரிந்த நிலையிலேயே நடைபெறுகின்றன. எதிரெதிர் விளிம்புகளுக்கு நடுவிலும் நிலைப்பாடுகள் இருக்கின்றன என்பதைப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறையுங்கள் என்று கேட்பவன் தேசபக்தி இல்லாதவன்; ரிஷி பிரகாஷ் தியாகிக்குத் தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் என்றால், அவன் காவல்துறையின் எடுபிடி; சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து தமிழர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றால், அவன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன்; புலிகள் நடத்திய ‘துன்பியல் சம்பவத்தை’ நினைவுகூர்ந்தால், அவன் தமிழர் நலனுக்கு எதிரானவன்; அப்பாவி மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்தால் அவன் தேசிய வெறியன்; காவல்துறையின் மனித உரிமைகள் மீறலைக் கண்டித்தால் அவன் பயங்கரவாதி.
இவ்வாறு இரு துருவங்களில் இருந்தும் இப்படிப்பட்ட முத்திரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நபர்களுக்கு குத்தப்படுகின்றன.

இந்த மாதிரியான எதிரெதிர் துருவ நிலைகளில் மட்டுமே அரசியலையும் பிரச்னையையும் கொண்டு நிறுத்துவது சரியல்ல. பல பிரச்னைகள் சிக்கல்கள் நிறைந்தவை. அவற்றுக்கு உடனடியான ரெடிமேட் தீர்வுகள் கிடையாது. இதைப் புரிந்து கொள்ளாத நிலையில்தான், அப்சலைத் தூக்கில் இட்ட பிறகு வீரப்பதக்கங்களை வாங்கிக் கொள்கிறோம் என்று நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர், குடியரசுத் தலைவரிடம் பதக்கங்களைத் திருப்பியளிக்கிறார்கள்.

உயிரிழந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றுவதும் இந்திய அரசமைப்புச் சட்டம் அப்சலுக்கு அளித்திருக்கும் கருணை மனுவுக்கான உரிமையும் ஒன்றுக்கொன்று விரோதமானவை அல்ல.

அதைப்போலவே ரிஷி பிரகாஷ் தியாகியின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருவது காவலில் இருக்கும் கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு எதிரானதல்ல!

-ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்

0 Comments:

Post a Comment

<< Home