Monday, March 28, 2011

அவர்களும் மனிதர்களே!

அதிர்ச்சியூட்டும் எத்தனையோ செய்திகளுக்கு நடுவில் அந்த செய்தியும் இருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டுப் பணியாளர்கள் ஓரிடத்தில் கூடி நிற்கிறார்கள். அன்னாவுக்கு நீதி வழங்கு என்ற பதாகை அவர்கள் அனைவரையும் அந்த இடத்தில் ஒருங்கிணைக்கிறது. அன்னாவும் ஒரு வீட்டில் வேலை செய்தவர்; அவர் மர்மமான முறையில் சில நாட்களுக்கு முன்னதாக இறந்திருக்கிறார். அவரது மரணத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கை. அவர்கள் ஊர்வலமாக மாவட்டத் துணை ஆணையர் அலுவலகத்துக்குப் போகிறார்கள். போகும் வழி எல்லாம் ‘அன்னாவுக்கு நீதி வழங்கு’ என்று முழக்கம் இட்டுச் செல்கிறார்கள். அந்த அலுவலகத்தின் வாசல் கதவு அவர்களுக்காக திறக்கப்படவில்லை!

அவருடைய அலுவலகத்தின் வாசலிலேயே அவர்கள் அனைவரும் நிறுத்தப்படுகிறார்கள். அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரியை ஊர்வலத்தினரோடு சந்தித்துப் பேசும்படிச் சொல்லி விட்டு துணை ஆணையர் வெளியேறிவிட்டார்! அதிகாரம் எதுவும் இல்லாத அடுத்த நிலை அதிகாரியும் ‘உங்கள் கோரிக்கையை நாங்கள் பரிசீலிக்கிறோம்’ என்ற ரீதியில் ஏதோ சொல்லி கூட்டத்தைக் கலைந்து போக வைத்துவிட்டார்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இதுதான் அன்றாட நடைமுறை. அமைப்புரீதியாக திரட்டப்படாத கோடிக்கணக்கான தொழிலாளர்களில் யாருக்கு எது நடந்தாலும் மற்றவர்கள் கவலைப்படாமல் இருப்பார்கள் என்பதே பொதுவான ஒரு தோற்றம். உண்மை மற்றவர்களுக்குத் தெரியாமல் பத்திரமாக பாதுகாக்கப்படுவதால், அந்தப் பரந்த மக்களுக்கு எதுவும் தெரியாமலும் புரியாமலும் போய் விடுகிறது. சமூக மாற்றங்களில் நம்பிக்கை கொண்ட அமைப்புகள் தலையிடும்போது மட்டுமே இது போன்ற ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்த முடிகிறது.

ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் பெரிதாக எதையும் சாதிக்க முடிவதில்லை என்று நீங்கள் முணுமுணுக்க்க் கூடும். ஆம்.. ஒரு வகையில் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது. நம்முடைய சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் நிர்வாக எந்திரமும் நீதித் துறையும் விளிம்புநிலை மனிதர்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பதில்லை. அரசமைப்புச் சட்டம் அவர்களுக்கும் எல்லா உரிமைகளையும் உறுதி அளித்திருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த உரிமைகளை அவ்வளவு எளிதாக அனுபவிக்க முடிவதில்லை. அவர்கள் அபூர்வமாக ஒருங்கிணைந்து வந்தாலும் அரசு எந்திரத்தின் கதவுகள் அவர்களுக்காகத் திறப்பதில்லை. பார்வையற்றவர்களாக இருந்தாலும் கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களாக இருந்தாலும் காவலர்கள் தாக்குவதற்குத் தயங்குவதே இல்லை.

அரசாங்கத்தில் இருப்பவர்கள் இப்படிப்பட்டவர்களை சந்திப்பதே இல்லை. ஒரு மாநில அரசாங்கத்தைப் பொறுத்தவரை முதல் அமைச்சரோ, ஆளுநரோ அவர்களை சந்திப்பதற்கு நேரம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஏழை எளிய மக்களுடைய குரல் ஆட்சி செய்பவர்களால் கேட்கப்படுகிறது என்ற போலி மகிழ்ச்சியைக் கொடுப்பதற்குக் கூட அவர்களால் முடிவதில்லை. அவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களையும் உள்நாட்டுப் பெரு நிறுவனங்களையும் சந்தித்துப் பேசுவதற்கு மட்டுமே அவர்களுக்கு நேரம் இருக்கிறது!

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் வழக்கறிஞர் விக்ரம் சின்கா வீட்டில் வேலை பார்த்த பெண் அன்னா. அவருடைய வீட்டில் அன்னா கடந்த ஐந்து வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். விக்ரமின் வீடு மூன்றாவது தளத்தில் இருக்கிறது. கடந்த மார்ச் 4-ம் தேதி அந்த வீட்டின் பால்கனியில் இருந்து கால் தவறிக் கீழே விழுந்து அன்னா இறந்து போனார் என்கிறார் விக்ரம் சின்கா. பால்கனியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து மடித்து வைப்பதற்காக வரும்போது அந்த விபத்து நடந்ததாக விக்ரம் சொல்கிறார். ஆனால் அந்த பால்கனியில் 3 அடி உயரத்தில் தடுப்பு இருக்கிறது என்றும் அதைத் தாண்டி ‘கால் தவறி’ கீழே விழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் மற்றவர்கள் சொல்கிறார்கள்!

ஏதோ ஒன்று கீழே விழுந்ததைப் போல சத்தம் கேட்டதால் விக்ரம் சின்கா வெளியில் வந்து பார்த்தாராம். அன்னா கீழே ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாராம். உடனடியாக அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாராம். அங்கு போய்ச் சேர்வதற்கு முன்னால் அன்னாவின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனையில் சொல்லி விட்டார்களாம். அன்னா விழுந்து கிடந்த இடத்தை வீட்டின் செக்யூரிட்டி விக்ரமின் உத்தரவுப்படி ‘கழுவி’ சுத்தம் செய்து விட்டார். அந்தக் காவலாளியின் வார்த்தைகளின்படி, கீழே விழுந்த அன்னாவிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. எந்த சத்தமும் இல்லை. உயிர் இல்லாத ஓர் உடலை மேலிருந்து போட்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கே இந்த வார்த்தைகள் அனைவரையும் இழுத்துச் செல்கின்றன.

இந்தியா முழுவதும் ஏராளமான செய்திகள் வீட்டுப் பணியாளர்கள் குறித்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறை தொடர்பானவையாக இருக்கின்றன. இருந்தாலும் அவர்களுடைய அந்தப் பிரச்னையை முக்கியமானதாக மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள மறுக்கிறது. பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு மசோதா ஒன்றை அரசு வைத்திருக்கிறது. அதில் வீட்டு வேலை செய்பவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவர்களையும் அதில் சேர்த்துப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று அந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சில பெண் எம்.பி.க்கள் குரல் கொடுக்கிறார்கள்.

சில வீடுகளில் நடக்கும் கொள்ளை, கொலை போன்ற கொடுஞ்செயல்களுக்கு ஓரிரு வீட்டுப் பணியாளர்கள் துணை போகிறார்கள் என்ற செய்தியையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது. வீட்டில் ஒரு சிறிய பொருள் காணாமல் போனால், நம்முடைய வீட்டுப் பணியாளர்கள் மேல்தான் நாம் சந்தேகப்படுகிறோம். காவல்துறையிடம் புகார் கொடுத்து அவர்களை ‘விசாரிக்கச்’ சொல்கிறோம். அதன் பிறகு ‘காணாமல் போன’ நம்முடைய பொருள் காணாமல் போகவில்லை என்றும் அதை நாம் தான் கை தவறி எங்கேயோ வைத்திருக்கிறோம் என்றும் தெரிய வருகிறது. அப்போதும் நம்முடைய தவறை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டோம். இதைப் போல எத்தனையோ விதங்களில் நாம் அவர்களை சகமனிதர்களாக பாவித்து நடத்துவதில்லை.

வீட்டுவேலை செய்பவர்களை அந்த மசோதாவுக்குள் சேர்க்காமல் இருப்பதன் மூலம் அரசு மிகப் பெரிய தவறைச் செய்கிறது. ஏறத்தாழ பத்து கோடிப் பேர் இந்தியாவில் வீடுகளில் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு தகவல். அவற்றில் 20 சதவீதம் குழந்தைத் தொழிலாளர்கள் என்பது உபரியாகக் கிடைக்கும் செய்தி. அவர்களை எல்லாம் பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டத்தில் சேர்க்கவில்லை என்றால் அது மிகப் பெரிய அநீதி ஆகிவிடும். இந்த சட்ட மசோதாவுக்கான முன்வரைவை முதலில் தேசிய மகளிர் ஆணையம் தயாரித்தது. அந்த வரைவில் வீட்டுப்பணியாளர்களும் இடம் பெற்றிருந்தார்கள். “அந்தப் பகுதி எப்படி நீக்கப்பட்டது என்று புரியவில்லை” என்கிறார் மகளிர் ஆணையத்தின் தலைவி கிரிஜா வியாஸ்.

பெற்றோர் வேலை பார்க்கும் அலுவலகங்களுக்கு வரும் குழந்தைகள், அலுவலகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பயிற்சி முகாமுக்கு வரும் விளையாட்டு வீராங்கனைகள், அலுவலகத்துக்கு மற்ற காரணங்களுக்காக வருவோர் உட்பட பலர் இந்த மசோதாவில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டுப் பணியாளர்களையும் சேர்த்துக் கொள்வதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் என்பது புரியவில்லை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்0 Comments:

Post a Comment

<< Home