Monday, March 28, 2011

பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்

”வைகோ என்ன செய்வார் என்று நினைக்கறீங்க?” என்று அந்த நண்பர் கேட்டார். அண்ணா திமுகவின் வேட்பாளர் பட்டியலை முதலில் ஜெயலலிதா வெளியிட்ட கூத்து நடந்த சில நிமிடங்களில் இந்தக் கேள்வியை அவர் கேட்டார். அந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தொகுதிகளைப் பார்த்தால் பிரச்னை மதிமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டும் இருந்ததைப் போலத் தோன்றவில்லை. சுடுகிற நெருப்பில் கைவைத்ததைப் போல தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இடதுசாரிகளும் மற்ற சிறிய கட்சிகளும் அதிர்ச்சியில் கத்தினார்கள். எப்படி எதிர்வினையாற்றுவது என்று அப்போது அவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை!

“அவருக்கு எதுக்கு இந்தத் தேர்தல்? தமிழீழத்தில் பேரழிவை ஏற்படுத்திய சிங்களப் பேரினவாதிகளுக்கு உறுதுணையாக நின்ற சக்திகளையும் அவர்களுடைய அடிப்பொடிகளையும் தோற்கடிப்பதே எங்கள் லட்சியம். அதைச் செய்யும் ஆற்றல் கொண்ட அதிமுக அணியில் எங்களுக்கு இடங்கள் ஒதுக்குவதற்கு தயங்குகிறார்கள். அதனால் ம.தி.மு.க இந்தத் தேர்தலில் பங்கேற்காது என்று அவர் சொல்ல வேண்டும்” என்று பதில் சொன்னேன்.

நான் சொன்ன பதிலில் அந்த நண்பருக்கு உடன்பாடு இல்லை. எப்படியாவது அதிமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற வேண்டும் அல்லது அதிமுகவைத் தவிர அந்தக் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து மூன்றாவது அணியை அமைக்க வேண்டும். இதுவே அந்த நண்பரின் விருப்பம். மூன்றாவது அணி என்பதை தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ ஏற்றுக் கொள்ளவில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்றால் அடுத்த பிரதான கட்சியான அதிமுகவை ஆதரிப்பது, அதிமுகவை பதவியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றால் திமுகவை ஆதரிப்பது என்ற நிலையையே அவர்கள் தொடர்ந்து எடுத்து வந்திருக்கிறார்கள். எனவே ‘மூன்றாவது அணி’ நம்பிக்கையை மாநில அரசியலில் அவர்களிடம் வைக்க முடியாது!

அப்புறம் யார் எஞ்சுகிறார்கள்? தேமுதிக! 2006 சட்டமன்றத் தேர்தலிலும் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் விஜயகாந்தின் கட்சி தனியாகவே களம் கண்டது. எட்டு சதவீதம், பத்து சதவீதம் என்று வாக்குகள் வாங்கினாலும் விஜயகாந்த் தவிர யாரும் சட்டப் பேரவைக்குள் போக முடியவில்லை. இதை நன்றாக உணர்ந்திருந்த விஜயகாந்த், மூன்றாவது அணியை கைவிட்டு அதிமுக ஜோதியில் கரைந்து விட்டார். மீண்டும் அவரை மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கும்படி எந்த நம்பிக்கையில் பேசினார்கள் என்பது புரியவில்லை.

ஆரம்ப காலம் தொட்டே விஜயகாந்துக்கு வைகோ மீது அன்போ மதிப்போ கிடையாது. அதைப் போலவே வைகோவும் விஜயகாந்தை ஒரு அரசியல் சக்தியாகக் கருதியதில்லை. ஆனால் அரசியல் நிகழ்வுகள் ஒருவருடைய விருப்பத்துக்குக் காத்திருப்பதில்லை. தேர்தல்அரசியலில் விஜயகாந்த் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து விட்டார். யாரையும் கலந்து ஆலோசிக்காமல் ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை அறிவித்த ஆணவமான நடவடிக்கை வைகோவுக்கும் விஜயகாந்துக்குக் இடையில் இருக்கும் இந்த இடைவெளியைக் கூட குறைத்து விடும் என்று பலர் கருதினார்கள். விஜயகாந்தையும் வைகோவையும் ஒரே அணியில் இணைய வைத்த பெருமை ஜெயலலிதாவையே சேரும் என்று நினைத்தார்கள். கருணாநிதியை ஆறாவது முறையாக முதலமைச்சராக்கும் வல்லமையும் ஜெயலலிதாவுக்கே இருக்கிறது என்று சொல்லிச் சிரித்தார்கள். ஆனால் அந்தப் பெருமையை அவ்வளவு எளிதாக அவருக்குக் கொடுப்பதற்கு தேமுதிக, சி.பி.ஐ, சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் தயாராக இல்லை.

தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் எல்லாம் மீண்டும் ஜெயலலிதாவுடன் பேசி உடன்பாடு கண்டன. மதிமுக மட்டும் தனித்து விடப்பட்டது. அவர்களுடைய உடன்பாடு முடியும் வரை முஷ்டிகளை உயர்த்திப் பேசியவர்கள் எல்லாம், உடன்பாட்டுக்கு பிறகு சுருதி மாறினார்கள். “ ஏதோ ஒண்ணு ரெண்டு குறைஞ்சாலும் பரவாயில்லை; அதிமுக கூட்டணியில் வைகோ நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துங்கள்” என்று நண்பர்களிடம் பேசத் தொடங்கினார்கள். இந்த நிலையில் மதிமுகவின் உயர்நிலைக் குழு கூடியது. அவர்கள் முன்னால் இருந்த தேர்வுரிமைகள் என்ன?

“குடும்ப ஆதிக்கமா அல்லது தமிழ்நாட்டுக்கு ஜனநாயகமா என்பதை இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று கடந்த சில வருடங்களாக வைகோ பேசி வருகிறார். ராஜபக்சேயும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களும் சர்வதேச விசாரணைக்கு உட்பட வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். எனவே அந்தப் பிரசாரத்தை அப்படியே முன்னெடுத்துச் செல்வது ஒரு தேர்வுரிமை! இதற்கு என்ன பொருள்? “எங்களுக்கு தொகுதிகள் கொடுக்கவில்லை என்றாலும் நாங்கள் உங்களுக்குத் தொண்டூழியம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். சரியான அரசியல் நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். எங்களுடைய நேர்மை உங்களுக்கு சாதகமாக இருக்கிறது” என்று ஜெயலலிதாவிடம் சொல்வது போல் இருக்கும். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” என்று வள்ளுவரை சாட்சிக்கு அழைத்திருக்கலாம்!

அடுத்து, “வைகோ கேட்ட 35 தொகுதிகள் அல்லது 21 தொகுதிகளில் மதிமுக போட்டியிடும். மற்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியை ஆதரிக்கும்” என்ற முடிவை எடுத்திருக்கலாம். இது அதிமுகவின் அலட்சியத்துக்கு எதிர்வினையாக இருக்கும்; கடந்த ஐந்து ஆண்டு மதிமுக அரசியலின் தொடர்ச்சியாகவும் இருந்திருக்கும். 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது இரண்டு தொகுதிகள் கேட்ட மார்க்ஸிஸ்ட் கட்சியை திமுகவும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் தொங்கலில் விட்டன. அப்போது மதுரையிலும் வடசென்னையிலும் வேட்பாளர்களை நிறுத்திய மார்க்சிஸ்ட் கட்சி, மற்ற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை ஆதரித்தது!

அல்லது இங்கு தீவிரமாக இயங்கிவரும் தமிழின உணர்வாளர்களின் அரசியல் நிலையை ஆதரிக்கலாம். “காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம்” என்று வைகோ சொல்லலாம். ஆனால் இந்த முடிவுகள் எதையும் மதிமுக உயர்நிலைக் குழு எடுக்கவில்லை. “ஜெயலலிதாவின் ஆணவமும் அகங்காரமும் மாறவில்லை. இந்த சூழ்நிலையில் அவருக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியாது. எனவே தேர்தலைப் புறக்கணிக்கிறோம்” என்று அந்தக் குழு தீர்மானித்திருக்கிறது. அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. நாஞ்சில் சம்பத் சொல்வதைப் போல, “ பெற்ற பிள்ளையை விஷம் வைத்துக் கொல்லும் தாய்” என்ற முடிவுக்கு வருவதற்கு அவர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது!

மதிமுகவுக்கும் அதிமுகவுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் அப்படி என்ன நடந்தது? 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கொடுத்த 35 தொகுதிகளை முதலில் வைகோ கேட்டார்; 2006 தேர்தலில், மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் மட்டுமே ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருந்தன. இப்போது விடுதலைச் சிறுத்தைகள் இல்லை; தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்த ஐந்து வருட காலத்துக்குள் புதிதாக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. அவர்களுக்கும் தொகுதிகளை அதிமுக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதை வைகோ புரிந்து கொண்டு தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக சொல்லியது.

தொகுதிகளின் எண்ணிக்கையை வைகோ குறைத்துக் கொண்டார்; 25 என்று தொடங்கி 21 வரை வந்திருக்கிறார். 8 சதவீத வாக்குகளைக் கொண்ட விஜயகாந்தை அணிக்குள் சேர்த்து 41 தொகுதிகளைக் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா! தனித்தனியாக இரண்டு சதவீத வாக்குகளைக் கூட வைத்திருக்காத இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பத்து இடங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பன்னிரண்டு இடங்களும் கொடுத்திருக்கிறது அதிமுக! அதாவது ஒரு சதவீத வாக்குகளை ஒரு கட்சி வைத்திருந்தது என்றால், ஜெயலலிதா அந்தக் கட்சிக்கு 5 இடங்கள் கொடுத்திருக்கிறார் என்று பொருளாகிறது. அப்படிப் பார்க்கும்போது மதிமுகவுக்கு ஜெயலலிதா 25 முதல் முப்பது இடங்களைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் பன்னிரண்டு தொகுதிகளுக்கு மேல் கொடுப்பதற்குத் தயாராக இல்லை!

கடந்த ஐந்து வருடங்களாக அதிமுக கூட்டணியில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடம் தனக்குத்தான் என்று வைகோ நினைத்திருக்கக் கூடும். நாம் எந்தவித கோரிக்கைகளையும் வலியுறுத்தாமல், பதவிகளைக் கேட்காமல், நிபந்தனைகளை விதிக்காமல், ஒரு தலைமையின் முடிவுகளை ஏற்று நடந்து கொண்டிருக்கும் வரை நம்முடைய உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்! இது ஒரு எழுதப்படாத விதி! “ நான் உனக்காக இந்த வேலை எல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்” என்று தினமும் போய் சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது. அப்படி இல்லாத நிலையில் கூட்டணித் தலைமை என்ன நினைக்கிறது? “ இவர்களுக்கு பொருளாதார தேவைகள் கிடையாது; தொகுதிகள் கூடுதலாகக் கொடுக்க வேண்டியதில்லை; மனதளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதைப் போல ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்து அந்த மயக்கத்திலேயே அவர்களை 234 தொகுதிகளிலும் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூட்டணித் தலைமை கணக்கு போடுகிறது.

கேட்டது கிடைக்காத நிலையில் ஒரு மனிதன் முகத்திலே எப்போதும் புன்னகையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாதுதான்! இதன் உச்சமாக அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறது என்றும் இந்தத் தேர்தலில் பங்கேற்பதில்லை என்றும் உறுதியாக தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தியது. இந்த வார்த்தைகளுக்காகவே காத்திருந்தவர்கள் அதன்பிறகு வைகோ மீதும் மதிமுக மீதும் அன்பைப் பொழிந்தார்கள். “தேர்தலில் என்ன செய்வது என்று முடிவெடுப்பது உங்கள் உரிமை; நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் உங்கள் மீதுள்ள அன்புச் சகோதரியின் அன்பும் மதிப்பும் மாறாது” என்று ஜெயலலிதா பாசமழை பொழிந்தார். தங்களுடைய 10 சீட்டுக்கும் 12 சீட்டுக்கும் பாதகம் இல்லை என்று உறுதியான பிறகு, தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்கள் இடதுசாரிகள்! திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திமுக தலைவர் கருணாநிதி உட்பட பலரும் வாஞ்சையுடன் வைகோவை அழைத்தார்கள். வைகோ இனி சீட் கேட்க மாட்டார்! மதிமுக தேர்தலைப் புறக்கணிக்கிறது! வைகோவை ஆதரிக்கும் நடுநிலையாளர்களையும் கட்சித் தொண்டர்களையும் எப்படி தங்கள் பக்கம் இழுப்பது? அவர்களுடைய ஓட்டுக்களை எப்படி குறிவைத்து அடிப்பது? வைகோவின் மீது இரண்டு அணிகளும் காட்டும் அக்கறை அவ்வளவுதான்!

இரண்டு அணிகளும் சமமாகப் பிரிந்து நிற்கின்றன; சோதிடத்தைத் தவிர வேறு வகையில் வெற்றி தோல்வியை அந்த அணிகளால் முடிவு செய்ய முடியவில்லை. இருட்டில் பயம் போவதற்காக பாட்டுப் பாடிக் கொண்டே போவது போல் எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று சிலர் சொல்கிறார்கள்; ஆனால் உண்மையில் சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்று தவிக்கிறார்கள். வைகோவின் ஆதரவாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி இந்நிலையில் எழுகிறது. அடுத்து வரும் நாட்களில் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார் வைகோ?

கடந்த ஐந்து வருட அரசியல் பிரசாரத்தின் தொடர்ச்சியை முன்னெடுப்பாரா அல்லது சமீபத்திய அவமதிப்பை முக்கியமானதாக்குவாரா? இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகவே கட்சியின் தீர்மானம் இருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home