Monday, March 28, 2011

தேர்தல் நேரத்து மயக்கம்!

“வருஷக்கணக்குல ஒண்ணா இருந்துட்டு தேர்தல் நேரத்துல கூட்டணி பேசும்போது ஏன் கட்சிகளுக்கு இடையில பிரச்னை வருது?” நண்பர் ஒருவர் கேட்டார். சில அரசியல்வாதிகள் ‘அப்படி ஒரு சிக்கலும் எங்களுக்குள் இல்லை. ஊடகங்கள் தான் இல்லாததும் பொல்லாததுமாக எழுதி சின்னப் பிரச்னையைக் கூட பெரிதாக்குகின்றன’ என்று சொல்கிறார்கள். 60 தொகுதிகள் என்ற காங்கிரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிறகும் திடீரென்று 63 இடங்கள் கேட்கிறார்கள் என்றும் அது நியாயமா என்றும் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டது உண்மைதானே? அந்த அறிக்கைதான் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடி மத்திய அரசில் இருந்து அமைச்சர்கள் விலகிக் கொள்வார்கள் என்றும் பிரச்னையின் அடிப்படையில் ஆதரவு அளிப்பார்கள் என்றும் தீர்மானம் இயற்றியது உண்மையில் நடந்த நிகழ்வுதானே!

பிறகு எந்த மாதிரி செய்திகளை ஊடகங்கள் பெரிதாக்கும் செய்திகள் என்று சொல்கிறார்கள்? பேரம் உச்சமாக நடக்கும்போது ஒவ்வொரு தரப்பும் என்ன பேசுகிறார்கள் என்பது ஊடகங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்போது ஊடகங்கள் என்ன செய்கின்றன? தங்களுக்கு நம்பிக்கையான நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெறுகின்றன. தங்களுக்கு நம்பிக்கைக்கு உகந்தவர்கள் என்று ஊடகங்கள் நினைக்கும் நபர் உண்மையில் ‘உண்மையைத்’தான் ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்கிறாரா? சில சமயங்களில் உண்மை இருக்கலாம்; பல சமயங்களில் உண்மை பாதி, கற்பனை பாதி இருக்கலாம்; வேறு சில சமயங்களில் முழுக்கவே கற்பனையான விதைக்கப்பட்ட செய்தியாகக்கூட இருக்கலாம். தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டுக்கு ஓரளவு ஒத்துப்போகக் கூடிய ‘கதைகளை’த்தான் ஊடகங்கள் வெளியிடுகின்றன.

பரபரப்புக்காகவும் தகவல்களை முந்தித் தருவதற்காகவும் சில ஊடகங்கள் இது போன்ற பொக்குகளை, விதைகள் என்று நம்பி விடுகின்றன. அரசியல் கட்சிகளும் அந்தக் கதைகளை ரசிக்கின்றன. தங்களுக்கு விரோதமாக வரும்கதைகளை மட்டும் கடுமையாகச் சாடுகின்றன. எதிர்தரப்பை தர்மசங்கடப்படுத்தும் செய்திகள் என்றால் மகிழ்ச்சி அடைகின்றன. எடுத்துக்காட்டாக இப்போது நடந்த இரு நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

விடுதலைச் சிறுத்தைகள் அணி மாறுமா என்று வந்த ஒரே ஒரு செய்திக் கட்டுரை, அவர்களுடையை தேர்தல் நிலையை இறுதி செய்வதற்கு ‘கிரியா ஊக்கி’யாக இருந்தது என்று சொல்லலாம். அந்தக் கட்டுரையின் சாரத்தை வேகமாக மறுத்த திருமாவளவனுடன், திமுக அன்றே உடன்பாடு செய்து கொண்டது.

அடுத்ததாக திமுகவுடன் காங்கிரஸ் செய்து கொண்ட உடன்பாடு. மார்ச் 5 சனிக்கிழமை திமுகவின் உயர்நிலைக்குழு கூடி தீர்மானம் போடுகிறது. அமைச்சர்கள் தங்களுடைய ராஜினாமாவை பிரதமருக்கு ‘ஃபேக்ஸ்’-ல் அனுப்பவில்லை. சனிக்கிழமை இரவோ ஞாயிறு காலையோ அமைச்சர்கள் டெல்லி செல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் கருணாநிதி, ‘இதுவரை காங்கிரஸ் எங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை’ என்று சொல்கிறார். அதன் பிறகுதான் காங்கிரஸ் திமுகவின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்கிறது. பிரணாப் முகர்ஜி பேசிகிறார். அவர் ஒரு மகான்! மகாபாரதத்தில் சர்வ வல்லமை கிருஷ்ணனுக்கு இருப்பதாக சொல்வார்களே அதைப் போல பிரணாப்! “எங்களுக்கு பிரச்னைகளை உருவாக்கவும் தெரியும்; அவற்றைத் தீர்த்து வைக்கவும் தெரியும்” என்று செய்தியாளர்களிடம் பேசுகிறார். இறுதியில் பிரச்னை தீர்ந்தது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை திமுக கொடுத்தது. இதற்கிடையில், சுய மரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் குட்டக் குட்ட குனியக் கூடாது என்றும் திராவிடர் கழகத்தின் அறிவுரையை திமுக ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசில் இருந்து விலகுவது என்று தீர்மானம் இயற்றிய உடனே விரைந்து வந்து வாழ்த்துச் சொல்லி கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தினார் திருமாவளவன். திமுக அமைச்சர்கள் மத்திய அரசில் இருந்து விலகவே இல்லை! இந்த நிலையில் ‘உறவு முறிந்தது’ என்று செய்தி போட்ட ஊடகங்கள் அவற்றின் ஆசையை வெளிக்காட்டின என்று குற்றம்சாட்டப்படுகின்றன!

இந்த வார்த்தைகளை உள்ளீடு செய்து கொண்டிருக்கும் இந்த நொடி வரை அதிமுக அணியிலும் தொகுதிப் பங்கீடு முடிவடையவில்லை. விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை அணிக்குள் சேர்ப்பதற்கு எடுத்த முயற்சிகளும் வேகமும் இப்போது குறைந்திருக்கிறது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் இடதுசாரிகளும் அதிமுக தலைமையின் அழைப்புக்காக காத்திருக்கின்றன என்றே அறிய முடிகிறது. ஒருவேளை கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? தனியாக நிற்கும் முடிவுக்கே வரவேண்டியிருக்கும். எப்பாடுபட்டாவது திமுக அரசைப் பதவியில் இருந்து இறக்குவோம் என்ற அவர்களுடைய கொள்கை முடிவுக்கு அது எதிராக இருக்கும். அதனால் வேறு வழி இல்லாமல் இறுதியாக அதிமுக கொடுக்கும் தொகுதிகளுக்கு தலையாட்ட வேண்டிய நிலையிலேயே மதிமுகவும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை இருக்கின்றன. தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டின்போது உருவான பரபரப்பு இந்தக் கூட்டணியில் இருக்காது. ஏன் என்றால் காத்திருக்கும் மூன்று கட்சிகளுமே அந்த அணியின் இளைய பங்குதாரர்கள் தான்!

திமுக அணியில் காங்கிரஸ்.. அதற்கு இணையாக அதிமுக அணியில் தேமுதிக! திமுக அணியில் பாமக, அதிமுக அணியில் மதிமுக! ஓர் அணியில் விடுதலைச் சிறுத்தைகள், இன்னொரு அணியில் புதிய தமிழகமும் இந்திய குடியரசுக் கட்சியும்! ஒரு பக்கம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மற்றொரு பக்கம் மனித நேய மக்கள் கட்சி! ஒரு பக்கம் நெப்போலியன், எஸ்.வி.சேகர், வாகை சந்திரசேகர், தியாகு, குஷ்பூ என்று சினிமா நட்சத்திரங்கள், அடுத்த பக்கம் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக்! விஜய் நற்பணி மன்றமும் இந்தப் பட்டியலில் இணையும் என்று சொல்கிறார்கள்! சாதிரீதியான அமைப்புகள், சினிமா நட்சத்திரங்கள், தமிழ் உணர்வாளர்கள், இஸ்லாமிய அமைப்புகள் என்று இரண்டு தரப்பிலும் கொடிகள் பறக்க இருக்கின்றன. தமிழ்நாட்டில் வேறு எந்த தேர்தலைவிடவும் இந்த தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கும் என்றே தோன்றுகிறது.

அரசியல் கட்சிகள் தொகுதிப்பங்கீட்டை முடித்துக் கொண்டு பிரசாரம் செய்யப் புறப்பட்டு விடும். சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அடுத்த ஒரு மாதம் அரசியலே பொழுதுபோக்காக இருக்கும். ஜனநாயகத்தின் அடிப்படைகளை பெரும்பாலான அரசியல் கட்சிகள் தகர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியாதபடி எல்லாவிதமான பூச்சுகளும் பூசிக் கொண்டு அரசியல் நடிகர்கள் வீதிகளில் உலாவரப் போகிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு என்று பெரிய விஷயங்கள் குறித்த பிரசாரங்களுக்கு நடுவில் பெட்ரோல் விலை உயர்வு போன்ற மக்களுடைய வாழ்க்கைப் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கு ஆட்கள் இருக்காது. திருவிழாவில் தொலைந்து போன சிறுவர்களைப் போல இந்தக் கூட்டங்களுக்கு நடுவில் சிலர் பேசலாம்; பிரசாரம் செய்யலாம்.

திருவிழாக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு அந்தக் கொண்டாட்டங்களுக்காக நாம் வாங்கிய கடன் நம்முடைய நினைவுக்கு வந்து அழுத்தும். அதைப்போல, தேர்தல் முடிந்த பிறகு நம்முடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகள் நம்மை நெருக்கும். அப்போது நம்முடைய உதவிக்கு யாராவது வருவார்கள் என்று வீதியைப் பார்த்தால், தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home