Monday, March 28, 2011

இயற்கையின் இன்னொரு முகம்

அந்தச் சிறுவனுக்கு வயது ஒன்பது. அன்று அவனுடைய பிறந்த நாள். அவன் வசிக்கும் ஊரின் நேரத்தின்படி, காலை ஏழரை மணிக்கு பள்ளிக்குப் புறப்பட்டு விடுவான். அதற்கு முன் அவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்றால், நான் காலையில் நான்கு மணிக்கு முன்னதாக எழுந்திருக்க வேண்டும். வேறு சில வருடங்களில் அப்படி காலையில் மூன்றரை மணிக்கு எழுந்திருந்து அவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கிறேன். ஆனால், அன்று என்னவோ என்னால் காலையில் எழுந்திருக்க இயலவில்லை. மாலை அவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பிறகு அவனுடன் பேசிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். ”இந்த நாள் மகிழ்ச்சிகரமாக மீண்டும் மீண்டும் உன் வாழ்வில் வந்து கொண்டே இருக்கட்டும்என்ற வாழ்த்துச் செய்தியை அன்று சாயங்காலம் அவனிடம் என்னால் சொல்ல முடியாது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை!

வழக்கமாக ரிப்போர்ட்டர் இதழுக்கு அனுப்ப வேண்டிய பத்தியை அதிகாலையில் எழுந்திருந்து எழுதி அனுப்பி விடுவது என் பழக்கம். வேறு பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்னால் அந்த வேலையை முடித்து விட வேண்டும் என்பது என்னுடைய நடைமுறை. அன்று அதையும் எழுதி அனுப்பவில்லை. முழுவதும் முடிக்காமல் அரைகுறையாக நின்றது. சரி, அலுவலகத்துக்குப் போய் அரை மணி நேரத்தில் அதை முடித்து அனுப்பி விடலாம் என்று அலுவலகத்துக்கும் போய்விட்டேன். பேசுவதற்கு இடமோ நேரமோ இல்லாமல் தொடர்ச்சியான வேறு பணிகள் வந்து விட்டன. கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருந்து கொண்டிருந்தபோது, தொலைக்காட்சியில் அதிர்ச்சி தரும் அந்த செய்தி எழுத்துக்களாக ஓடத் தொடங்கியது.

அன்று மார்ச் 11-ம் தேதி. வெள்ளிக்கிழமை. ஜப்பானில் பெரிய அளவில் நில நடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் சக ஊழியர்கள் எல்லோரும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் நிற்கிறார்கள். கார்கள், பஸ்கள், எரிந்து கொண்டிருக்கும் நிலையில் முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்ட ஒரு வீடு எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு ஆழிப்பேரலை நகருக்குள் ஆட்டம் போட்டது. செந்தாய் நகரில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த இடத்துக்கும் தோக்கியோவுக்கும் எவ்வளவு தூரம்? தோக்கியோ நகரில் சுனாமியின் தாக்குதல் இருக்கிறதா? தோக்கியோவில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னுடைய தம்பியின் குடும்பத்தினர் பத்திரமாக இருக்கிறார்களா? அவர்களைத் தவிரவும் அங்கு இருக்கும் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள்? பொதுவான சேதங்களும் இழப்புகளும் அதிர்ச்சி அளித்த போதிலும், குறிப்பான இந்தக் கேள்விகள் மனதிற்குள் குடைந்து கொண்டிருந்தன. மெதுவாக சக ஊழியர்கள் கூடியிருந்த இடத்தில் இருந்து நகர்ந்து வெளியேறினேன்.

கையில் இருந்த தோக்கியோ எண்களுக்கு எல்லாம் தொலைபேசியில் பேச முயன்றேன். எந்த எண்ணும் கிடைக்கவில்லை. அரை மணி நேரத்துக்கும் மேலாக எனக்கு வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. அலுவலகத்துக்கு வெளியே வந்து அங்கு சாலையில் நடந்து கொண்டே மீண்டும் மீண்டும் தொலைபேசி எண்களைப் போட்டுக் கொண்டே இருந்தேன். எந்த பலனும் இல்லை. இதற்கிடையில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ‘தோக்கியோவில் யாருடனாவது பேசினாயா?’ என்று கேட்டு எனக்கு அழைப்புகள் வரத் தொடங்கி விட்டன. மீண்டும் அலுவலகத்துக்குள் வந்தேன். தம்பியின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் இணையதளத்துக்குப் போய்ப் பார்த்தேன். “குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்; பெற்றோர் வந்து அழைத்துச் செல்லுங்கள்என்று முதல் பக்கத்தில் பெரிதாகப் போட்டிருந்தார்கள்!

அதன்பிறகு தம்பிக்கும் அங்குள்ள மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பினேன். யாவரும் நலம் என்று பதில் உடனடியாக கிடைத்தது. சுனாமி தாக்குதலுக்கு உள்ளான செந்தாய் நகரம் தூரத்தில் இருப்பதாகவும் தோக்கியோ நகரில் சுனாமி இல்லை என்றும் சொன்னார்கள். “பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது; ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது; அதனால் பஸ்களுக்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பும் அவசரத்தில் இருந்தார்கள்; சாலைகள் முழுவதும் வாகனங்கள் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் இருந்தது. நில நடுக்கத்தின் விளைவாக சில வீடுகள், கட்டிடங்கள் பற்றி எரிந்தன என்பதைத் தாண்டி தோக்கியோ நகரில் பெரிய அளவு உயிரிழப்புகள் இல்லைஎன்பதே பதிலாக வந்த மின்னஞ்சல்களில் இருந்து அறிய முடிந்த செய்தி!

அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 8.8 ரிக்டர் அளவிலானது; சாதாரணமாக இந்த அளவிலான நிலநடுக்கம் பிற நாடுகளில் மிகவும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். நிலநடுக்கங்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தாக்கலாம் என்று எதிர்பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி வீடுகளையும் கட்டிடங்களையும் ஜப்பானியர்கள் கட்டியிருக்கிறார்கள். நில நடுக்கத்துக்கு சிறிது நேரம் முன்னதாக எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்கள்; முன்னதாகவே சுனாமிக்கான அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். அவை எல்லாம் இயற்கையான விஷயங்கள்; அவற்றால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மனிதர்கள் எப்படி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது என்ற படிப்பினைகளும் அவர்களுக்கு இருக்கின்றன. நில நடுக்கங்களும் சுனாமிகளும் அணுகுண்டு வீச்சுகளும் அவர்களையே அதிகம் பாதித்து இருக்கின்றன. ஆனாலும் அவர்கள் அடுத்த நொடியே எழுந்து நிற்கிறார்கள்!

இப்போது அதிகம் கவலைப்படச் செய்யும் செய்தி அணு உலைகளில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளும் கதிர்வீச்சும் தான்! ஃபுக்குஷிமா டைச்சி அணுமின்நிலையத்தில் மூன்று உலைகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட ஜப்பான் எப்படி அணு மின்நிலையங்களுக்கு ஆதரவாக இருந்தது என்ற கேள்வி இயல்பாக ஒருவருக்கு எழக் கூடும். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் இருப்பதற்காகவே இந்த அணு தொழில்நுட்பத்தை ஜப்பான் தேர்ந்தெடுத்திருக்கிறது. எவ்வளவோ பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்திருந்த போதிலும், இன்று இயற்கையின் சீற்றத்துக்கு முன்னால் அவை போதுமானவையாக இல்லை. அந்த செய்தியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? மகாராஷ்டிர மாநிலத்தில் நிலநடுக்கம் வர வாய்ப்பிருக்கும் இடத்தில் அணு மின் நிலையம் அமைய இருப்பதாக தெரிகிறது. மாநில அரசும் மத்திய அரசும் அந்தத் திட்டத்தை ஆதரிக்கின்றன. சிவசேனை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கல்பாக்கத்தில் 2004-ல் சுனாமி அலைகள் தாக்கின. எதிர்பாராமல் ஏதாவது நடந்தால், நம் நாட்டில் என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றன என்பது குறித்து தீவிரமான ஆய்வுகள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

அந்த வெள்ளிக்கிழமை இரவு இணையம் மூலமாக தம்பியிடம் பேசினேன். குழந்தைகளிடம் பேச முடியவில்லை. அவர்கள் அப்போது தூங்கி விட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் அதிர்ச்சியைப் போக்கும் வகையில் அன்பாக சில வார்த்தைகளைப் பேசலாம் என்று நினைத்தேன். சனிக்கிழமை காலையில் மீண்டும் தொடர்பு கொண்டேன். ஒன்பது வயதுப் பையனிடம், நிலநடுக்கம், சுனாமி, அணு உலை எதைப்பற்றியும் பேசாமல் பொதுவாக அன்பை மட்டும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். “நேற்று காலையிலேயே உனக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து வர இரவாகி விட்டது. அப்போது நீ தூங்கி விட்டாய்என்று பையனிடம் பேச்சை ஆரம்பித்தேன்.

பரவாயில்லை பெரியப்பா! அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.. நேத்து இங்கே பெரிய நில நடுக்கம் வந்தது.. பக்கத்துலே கொஞ்ச தூரம் தள்ளி சுனாமி வந்தது.. நியூக்ளியர் எக்ஸ்ப்லோஷனும் இருக்குன்னு சொல்றாங்க.. இந்த நாடே வருத்தமா இருக்கு.. எல்லாம் சரியாக இன்னும் மூணு அல்லது நாலு வாரம் ஆகும்னு நினைக்கறேன்என்று பெரிய மனிதன் மாதிரி அவன் பேசினான்.

என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home