Monday, March 14, 2011

பெருந்தன்மையை பாருங்கள்!

அந்த செயல் அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது” என்று பிரதமர் மன்மோகன்சிங்கின் பெருமையை நமக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி. நம்முடைய பிரதமர் நேர்மையுடனும் பெருந்தன்மையுடனும் இருந்தால் நம் எல்லோருக்கும் பெருமைதான். ஆனால் அதில் என்ன பிரச்னை என்றால், அவருடைய பெருந்தன்மையையும் ஜனநாயக உணர்வையும் நமக்குத் தெரிய வைப்பதற்கு உச்சநீதிமன்றம் அடிக்கடி உதவி செய்ய வேண்டியிருக்கிறது! இப்போது ’பெருந்தன்மையாக’ மன்மோகன்சிங் என்ன செய்திருக்கிறார்? “மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டதற்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். அது தவறாக எடுக்கப்பட்ட முடிவு” என்று நாடாளுமன்றத்தில் அவர் பேசி இருக்கிறார். அதைத் தான் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பெருமையாகச் சொல்கிறார். “நீங்கள் தவறு செய்யும்போது இப்படிப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?” என்று எதிர்க்கட்சிகளைப் பார்த்து சவால் விடுகிறார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். இதே எரிதழல் பகுதியில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் பி.ஜே.தாமஸ் மீதான பாமாயில் இறக்குமதி வழக்கு பற்றி கடந்த நவம்பர் மாதம் பேசி இருந்தோம். மீண்டும் ஒருமுறை அதை நினைவுபடுத்துவது பிரதமரின் ‘பெருந்தன்மையைப்’ புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது. பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மூவர் குழுதான் அந்த நியமனத்தை செய்ய வேண்டும். மூவரில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்படக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார். அந்தக் குழுவுக்குள் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதால் ‘ஆணவத்துடன்’ – பெருந்தன்மையுடன் அல்ல – பி.ஜே.தாமஸ் நியமிக்கப்படுகிறார். இன்று காங்கிரஸ் கட்சி கோருகிறபடி பிரதமர் பெருந்தன்மையானவராக இருந்திருந்தால், எதிர்க்கட்சியின் எதிர்ப்பை மதித்து வேறு ஒரு பெயரை அந்த நியமனத்துக்கு பரிசீலித்திருப்பார்!

ஊழல் கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து இரண்டு பொதுநல வழக்குகள் போடப்பட்டன. மத்திய அரசின் பெருந்தன்மை அந்த நேரத்திலாவது வெளிப்பட்டிருக்கலாம்! “தவறு நடந்துவிட்டது; நாங்கள் அவரை பதவி விலகும்படி கேட்டுக் கொள்கிறோம்; வேறு யாரையாவது நியமிக்கிறோம்” என்று நீதிமன்றத்தில் சொல்லி இருக்கலாம். ஆனால் அப்படிச் சொன்னதா மத்திய அரசு? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் வாகன்வதி என்ன சொன்னார்? “மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் அப்பழுக்கு இல்லாதவராகவும் நாணயமானவராகவும் இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால், ‘அப்பழுக்கில்லாத நாணயம்’ என்னும் தகுதி ஆணையருக்கு இருக்க வேண்டும் என்று எந்த விதியையும் மத்திய கண்காணிப்புச் சட்டம் வரையறை செய்யவில்லை” என்று வாதம் செய்தார்! அப்படி என்றால் என்ன பொருள்? பி.ஜே.தாமஸ் ‘நாணயமில்லாதவர்’ என்று மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனாலும் அவரை ஊழலைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பின் தலைவராக நாங்கள் நியமிப்போம் என்றும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் ஒருவர் நேர்மையானவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு நீதிமன்றத்தில் சொல்கிறது!

தினம்தோறும் ஒவ்வொருவிதமான ஊழல் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் நிர்வாக விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சொன்னது யார் என்று நினைவிருக்கிறதா? கடந்த 2010 செப்டம்பர் ஆறாம் தேதி டெல்லியில் சில பத்திரிகை ஆசிரியர்களுடன் பிரதமர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ‘அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது’ என்று பிரதமர் மன்மோகன்சிங் சொல்லி இருந்தார். அதையும் செப்டம்பர் 16, 2010 தேதியிட்ட ரிப்போர்ட்டர் இதழின் இந்தப் பகுதியில் விவாதித்து இருந்தோம். மத்திய அரசாங்கத்தின் முடிவுகள் குறித்து ஒருவருக்கு வேறுபாடு இருந்தால், நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடுவது அவருடைய உரிமை. அதை மறுக்கும் விதமாக ஒரு பிரதமர் பேசுவதுதான் பெருந்தன்மையா? உங்கள் அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் முறைகேடு செய்திருக்கிறார் என்றும் அதற்காக அவர் மீது வழக்கு தொடரவேண்டும் என்றும் அனுமதி கோரும் கடிதத்துக்கு பிரதமர் ஏன் பதில் அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதே, அப்போது என்ன உணர்வை பிரதமர் வெளிப்படுத்தினார்? ‘உங்கள் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை’ என்று நீதிமன்றங்கள் சொல்லக் கூடாது’ என்று ஒரு நாட்டின் பிரதமர் சொல்வார் என்றால் அது மிரட்டலா அல்லது பெருந்தன்மையா என்று அபிஷேக் சிங்வி சொல்ல மாட்டார்!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 3-ம் நாள் தீர்ப்பளித்தது. அதற்குப் பிறகு தாமஸ் தன்னுடைய பதவியை விட்டு விலகினார். ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம்; ஏற்றுக் கொள்கிறோம்’ என்று பிரதமர் ‘பெருந்தன்மையுடன்’ செயல்படத் தொடங்கினார். ’அந்த நியமனத்துக்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்’ என்றார். அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர்தான் அந்த நியமனத்துக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்த குழுவுக்கு பிரதமர்தான் தலைவர்! தாமஸ் குறித்த விபரங்களை முறையாக கவனத்தில் கொள்ளவில்லை என்றுதான் உச்சநீதிமன்றம் அவருடைய நியமனத்தை ரத்து செய்திருக்கிறதே தவிர, அவரை நியமிக்கும் குழுவின் முடிவு ஒருமனதாக இல்லை என்பதால் அல்ல. அதாவது ஊழல் கண்காணிப்பு ஆணையரை நியமனம் செய்யும் உயர் அதிகாரக் குழுவில் மூன்று பேரும் ஏற்றுக் கொள்ளும் நபரையே ஆணையராக நியமிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. அப்படி நீதிமன்றம் சொல்லி இருந்தாலும் கூட, எதிர்காலத்தில் கருத்தொற்றுமைக்கு அரசு தரப்பில் முயற்சிகளை மேற்கொள்ளலாம்!

அடுத்ததாக, ஊழல் கண்காணிப்பு ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை ஏற்று அடுத்த ஆணையரை நியமிக்கிறோம் என்று பிரதமர் வாக்குறுதி அளித்திருக்கிறார்! ஒருவேளை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மத்திய அரசு பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்திருந்தால் என்ன நடக்கும்? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மூலம் பிரபலமான சுரேஷ் கல்மாடி, ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியத்தின் வீட்டு ஒதுக்கீடு காரணமாக முதலமைச்சர் பதவியை இழந்த அசோக் சவான், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆ.ராசா என்று நீளும் பட்டியலில் இருந்து ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பார்! அப்போதும் அபிஷேக் சிங்வி, “பிரதமர் கண்ணியமானவர்; பெருந்தன்மையானவர்” என்று சொல்லக் கூடும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home