Monday, March 14, 2011

தொலைந்து போன வாழ்க்கை

அந்தக் கொடுமையான செயலைச் செய்தவர்கள் என்று பதினொரு பேரைத் தூக்கிலிட வேண்டும் என்று அந்த சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இன்னும் இருபது பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2002-ம் வருடம் பிப்ரவரி 27-ம் தேதி காலையில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டி ‘தீப்பற்றியது’ அல்லது தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அயோத்தியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த கரசேவகர்கள் 59 பேர் இதில் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி 31 பேரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது; 63 பேரை விடுதலை செய்தது. அன்று குற்றவாளிகள் என்று நீதிமன்றம் சொன்ன 31 பேருக்கான தண்டனையைத் தான் மார்ச் முதல் தேதி சிறப்பு நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

“இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு கஷ்டமாக இருக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். அங்கும் இந்த தண்டனைகள் உறுதி செய்யப்படும் வரை தண்டனையை நிறைவேற்ற முடியாது” என்று ‘குற்றவாளிகள்’ தரப்பு வழக்கறிஞர் முன்ஷி சொல்லி இருக்கிறார். அந்த ரயிலில் வரும் கரசேவகர்களைக் கொல்ல வேண்டும் என்ற சதி சில நாட்களுக்கு முன்னாலே தீட்டப்பட்டது என்ற குஜராத் அரசின் குற்றச்சாட்டை நீதிமன்றமும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் சம்பவம் நடந்து 4 மாதங்கள் கழிந்த பிறகே குற்றவாளிகள் ‘சதி’ செய்து கரசேவகர்களைக் கொன்றார்கள் என்ற கதை உருவாக்கப்பட்டது என்று முன்ஷி சொல்கிறார். ரயில் பெட்டிக்கு தீ வைப்பதற்காக எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் போன்ற எரிபொருள் வெளியிலிருந்து ஊற்றப்பட்டது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இருப்பினும் எஸ்-6 மற்றும் எஸ்-7 பெட்டிகளை இணைக்கும் வழியில் இருந்து பெட்ரோல் ஊற்றப்பட்டிருக்கலாம் என்பதை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது.

இந்த வழக்கு விசாரணை 2009 ஜூன் மாதம் சபர்மதி சிறையில் தொடங்கியது. 253 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள்; 1500 ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குஜராத் போலீஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. குஜராத் காவல் துறையால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொத்தம் 134 பேர். அவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள்; இன்னொரு ஐந்து பேர் இந்த ஒன்பது வருட கால விசாரணைக்குள் இறந்து போனார்கள்; 14 பேருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். 16 பேர் காணாமல் போய்விட்டார்கள். மீதி 94 பேர் மீதான வழக்குக்குத் தான் விசாரணை நடந்தது!

இந்த சிறப்பு நீதிமன்ற விசாரணை தவிர ஏற்கனவே இரண்டு கமிஷன்கள் இது குறித்து விசாரித்து அறிக்கை அளித்திருக்கின்றன. 2004-ம் வருடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவ் ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தார். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யு.சி.பானர்ஜி அந்த விசாரணைக் குழுவுக்குத் தலைவர். அந்தக் குழுவின் முன்னாலும் பலர் ஆஜரானார்கள். என்ன நடந்தது என்பதைச் சொன்னார்கள். அங்கும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ரயில் எரிப்பு சம்பவத்தில் அந்தக் குழு எந்த சதியையும் பார்க்கவில்லை. எஸ்-6 பெட்டிக்குள் இருந்தே அந்த நெருப்பு பரவி இருக்க வேண்டும் என்பது அந்தக் குழுவின் முடிவு. குஜராத் அரசு நியமித்த நானாவதி கமிஷன் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. ரயில் எரிப்பு ஒரு திட்டமிட்ட சதி என்பது நானாவதி கமிஷனின் முடிவு!

ஒரே நிகழ்வு! மூன்று விசாரணைகள்! வேறுபட்ட முடிவுகள்! இவை எப்படி சாத்தியமாகின்றன? விசாரணைக் கமிஷனை யார் போடுகிறார்களோ அவர்களுடைய பாட்டுக்கு விசாரணைக் கமிஷன்கள் நடனம் ஆடுகின்றன என்று தான் ஒருவர் முடிவுக்கு வர முடியும். அப்படி ஒருவர் நினைப்பதைத் தவறென்று எப்படிச் சொல்ல முடியும்? அரசியல் சார்புகளுக்குத் தகுந்தவாறு நீதியின் நிறம் மாறிக் கொண்டே இருக்கும் என்று மக்கள் நம்பத் தொடங்கினால், என்ன ஆகும்? நானாவதி கமிஷனும் பானர்ஜி கமிஷனும் வேறு வேறு முடிவுகளை எடுத்ததை விடுங்கள். சதி காரணமாகவே ரயில் பெட்டி எரிக்கப்பட்டது என்கிறது சிறப்பு நீதிமன்றம்; ஆனால் சதியில் ஈடுபட்ட முக்கியமான குற்றவாளி என்று போலீஸ் சொல்லும் மௌலானா உமர்ஜியை விடுதலை செய்திருக்கிறது!

குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர்கள் 94 பேர்; அவர்களில் விடுதலை செய்யப்பட்டவர்கள் 63 பேர். இவர்களில் 55 பேர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஜாமீன் மறுக்கப்பட்டவர்கள்! இன்று சுதந்திரமாக வெளிக்காற்றை சுவாசித்தாலும் கடந்த 9 வருடங்களாக அவர்கள் சிறையில் இருந்ததுக்கு யார் காரணம்? யார் அவர்களுடைய குடும்பங்களின் வாழ்க்கைச் சிக்கல்களுக்குப் பொறுப்பேற்கப் போகிறார்கள்? அவர்களைப் பிணையில் கூட வெளியில் விடக் கூடாது என்று சொன்ன போலீஸ் அந்தக் குடும்பங்களுக்கு நிவாரணம் கொடுக்குமா? அல்லது போலீஸ் தரப்புக்காக வாதாடிய வழக்கறிஞர்களோ அவர்களுடைய வாதங்களை ஏற்று இத்தனை வருடங்கள் ஜாமீனில் விடுதலை செய்ய மறுத்த நீதிபதிகளோ இந்த சிக்கலைப் பற்றி சிந்திக்கப் போகிறார்களா? மாலேகான், ஹைதராபாத், ஆஜ்மீர் குண்டு வெடிப்புகளில் இருந்து வேறு சில கொலைகள் வரை சில சாதுக்களை இப்போது குற்றம் சாட்டுகிறோம்; அப்படி என்றால், அதே வழக்குகளில் வேறு சிலரை இதுவரை குற்றம் சாட்டி சிறைகளில் அடைத்த ’பாவத்துக்கு’ என்ன ‘விமோசனம்’ அல்லது ‘பரிகாரம்’ தேடப் போகிறோம்?

முதன்மையான சதிகாரர் என்று வழக்கில் சேர்க்கப்பட்ட மௌலானா உம்ர்ஜியின் பெயர் எப்போது வழக்கில் சேர்க்கப்பட்டது? அவருடைய குடும்பம் இந்திய விடுதலைக்காகப் போராடிய குடும்பம்; இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் அவருடைய வீட்டுக்கு வந்திருக்கிறார். கோத்ரா நகராட்சித் தலைவர் என்ற முறையில் குஜராத்தில் நில நடுக்கம் வந்தபோது நிவாரண உதவிகளை எல்லாம் செய்திருக்கிறார். கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்ட பிறகு பிரதமர் வாஜ்பாய் அங்கு வந்தார். அப்போது மௌலானா உமர்ஜி வாஜ்பாயிடம் ஒரு மனுவைக் கொடுத்தார். அந்த மனுவில் என்ன இருக்கிறது என்று வாஜ்பாய் கேட்டாராம். அவருக்கு அருகில் இருந்த முதலமைச்சர் நரேந்திர மோடியை சுட்டிக் காட்டிய மௌலானா உமர்ஜி, ‘அவரிடம் கேளுங்கள்; அவருடைய செயல்களைத் தான் எழுதி இருக்கிறேன்’ என்று சொனாராம். இந்த சம்பவத்துக்குப் பிறகு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் முதல் சதிகாரராக அவர் சேர்க்கப்பட்டார்!

ஒருவரைப் பழி வாங்க வேண்டும் என்று நினைத்த ஒரு நொடியில் அவர் மீது வழக்கைப் போடுகிறது அரசு! இப்போது அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பது வேறு விஷயம். 59 கரசேவகர்கள் கொல்லப்பட்டதற்காக வருத்தப்படும் நாம், அந்த வழக்கில் ஒன்பது வருடங்களாக சிறையில் வாழ்க்கையைத் தொலைத்தவர்களுக்காகவும் கவலைப்பட வேண்டும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home