Monday, March 14, 2011

எதுவும் நடக்கும்

“பாரதிய ஜனதா கட்சியுடன் நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொன்னார். “ஒரு போதும் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்களே, கடந்த காலங்களில் கம்யூனிஸ்டுகள் பாரதிய ஜனசங்கத்தினரோடு பொதுவான எதிரிக்கு எதிராக வேலை செய்திருக்கிறார்கள். அதை விடுங்கள். எதிர்காலத்தில் எப்போதும் அவர்களோடு எள்முனையளவும் தொடர்பு வைத்திருக்க மாட்டோம் என்று நீங்கள் உறுதி அளிக்க முடியுமா?” என்று அவரிடம் கேட்டேன். அந்தக் கேள்விக்கு அவர் ’உறுதி அளிக்கிறேன்’ என்று பதில் சொல்லி இருக்க முடியும். ஆனால் அவர் அந்தக் கேள்வியின் உட்பொருளைப் புரிந்து கொண்டதால் அப்படிப்பட்ட உறுதிமொழி எதையும் அளிக்கவில்லை. “ நெருக்கடி நிலை, ராணுவ சர்வாதிகாரம் போன்ற சூழல் உருவானால் அந்த முதன்மையான நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக எல்லா தரப்பினருடனும் சேர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கலாம்” என்று பதில் சொன்னார்!

அடுத்த தேர்தலில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல் நம்முடைய அரசியல் தலைவர்களில் பலர் வாய்க்கு வந்தபடிப் பேசுகிறார்கள். யாரை வகைதொகை இல்லாமல் திட்டினார்களோ, அவருடைய கட்சியிலேயே போய் சேர்ந்துவிடுகிறார்கள் சிலர்; இருக்கும் இடத்தில் தன்மீது படிந்திருக்கும் சந்தேகத்தைப் போக்குவதற்காகவோ, அல்லது தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவதற்காகவோ மாற்று அணித் தலைவர்களை அடிக்கப் பாய்கிறார்கள்; அடுத்த சில மாதங்களில் யாரை அடிக்கப் போனார்களோ அவர்களுடைய அடிகளில் விழுந்து வணங்கி அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்கிறார்கள். ‘வேட்டியை உருவுகிறார் ஒருவர்; கட்டியிருக்கும் கோவணத்தையும் பறிக்க நினைக்கிறார் இன்னொருவர்’ என்றெல்லாம் பேசிவிட்டு அவர்களுடன் எல்லாம் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். “அந்தக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைத்தால், அது என்னுடைய தாயைப் புணர்ந்ததைப் போன்ற செயல்” என்று உணர்ச்சி வேகத்தில் சொல்லிவிட்டு அதே கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள். ஏன்? அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வெறி! எளிய வார்த்தைகளில் சொன்னால், பதவி வெறி! இதைத் தவிர இந்த செயல்களுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்!

இதுபோன்ற ‘நிற மாற்றங்களை’ அடிக்கடி பார்த்து களைப்பாகவும் சலிப்பாகவும் மக்கள் இருந்தபோதுதான், விஜயகாந்த் அரசியலில் நுழைந்தார். ”தி.மு.கவும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று முன்னாள் முதலமைச்சர் காமராஜர் சொன்ன வார்த்தைகளை வேறு விதமான வசனங்களில் வெளிப்படுத்தினார். மேடைகள் தோறும் கருணாநிதியையும் ஜெயல்லிதாவையும் கடுமையாகச் சாடினார். “நீங்கள் எல்லாம் ஒழுங்காக இருந்திருந்தால் நான் ஏன் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன்” என்று தமிழ்நாட்டின் கோளாறுகளுக்கு எல்லாம் அவர்கள் இருவரையும் காரணமாக்கினார். “மற்ற கட்சிகளைப் போல் நாங்கள் கூட்டணி தேடி அலைய மாட்டோம்; மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி வைத்திருக்கிறோம்” என்று வீரமான வசனம் பேசினார்!

விண்ணிலேயே விமானங்கள் தொடர்ந்து பறந்து கொண்டிருக்க முடியாது; விமானங்கள் தரையில் இறங்கித் தான் ஆக வேண்டும். இறங்கிய பிறகு நிறுத்தும் வசதியும் தரை இறங்குவதற்கான ‘சிக்னலும்’ கிடைக்கும்போது தரையில் இறங்கி விடுவதே பாதுகாப்பானது. வீம்புக்கு பறந்து கொண்டே இருந்தால் ‘எரிபொருள்’ தீர்ந்தவுடன் எங்காவது விழுந்து நொறுங்கிப் போக வேண்டியதுதான்! இந்த சாதாரண உண்மையை பலர் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்; பாதுகாப்பான இருத்தலை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் விருப்பம் இல்லாத பல விஷயங்களைச் சகித்துக் கொள்கிறார்கள். ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’ என்றோ, ’புலி சிறுத்துப் பூனையான கதை’ என்றோ யார் பேசினாலும் பொறுத்துப் போகிறார்கள்!

அப்படிப்பட்ட முன்னோடிகளைப் பார்த்து விஜயகாந்தும் இப்போது தரை இறங்கி இருக்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையைத் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கி இருக்கிறது. 2006 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலும் 2009 மக்களவைத் தேர்தலும் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு படிப்பினைகளைக் கொடுத்திருக்கக் கூடும்! இப்போது பேச்சுவார்த்தையைத் தொடங்கியதாலேயே ஒரு கூட்டணி இறுதி செய்யப்பட்டது என்று சொல்ல முடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எத்தனை தேர்தல்களில் தொகுதிப் பங்கீட்டில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு கூட்டணிகள் பிரிந்திருக்கின்றன! எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகும் கூட சில குறிப்பிட்ட தொகுதிகள் கிடைக்காமல் தனியாக சிலர் நின்றிருக்கிறார்கள்!

இரு கட்சிகளின் தலைமைக்கும் நெருங்கியவர்கள் நடத்தும் திரைமறைவுப் பேச்சு வார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்; அதன் பிறகு மீண்டும் ஒருமுறை பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ், சுந்தர்ராஜன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனைப் பார்ப்பார்கள்; அப்போதுதான் அந்த எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது என்று நம்மைப் போன்றவர்கள் நம்ப வேண்டுமே! அதற்கும் பிறகு ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சந்திப்பார்கள். அப்போது இருவரும் அந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவார்கள். ஊடகங்களுக்கு ‘போஸ்’ கொடுப்பார்கள். அப்போதே தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல், தொண்டர்கள் பட்டாசுகளை வெடிப்பார்கள்; இனிப்புகள் வழங்குவார்கள்; கொண்டாடுவார்கள்!

தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்படாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அதை எதிரணியில் நடக்கும் விஷயங்களே தீர்மானிக்க முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் இடைவெளி அதிகரித்து வருகிறது என்று வெளிவரும் பல செய்திகளில் இருந்து அறிய முடிகிறது. ஆட்சியில் பங்கு, மூன்றில் ஒரு பங்கு இடங்கள், ஆட்சிக்கு வழிகாட்டும் ஒருங்கிணைப்புக் குழு, குறைந்த பட்ச செயல் திட்டம் போன்ற ஜனநாயகரீதியான கோரிக்கைகளை திராவிட முன்னேற்றக் கழகம் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளுமா? அப்படி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொள்ளுமா? அப்படி முறித்துக் கொண்டால், தே.மு.தி.க.வுடன் சேர்ந்து ஓர் அணியை அமைப்பதற்கு காங்கிரஸ் முயலுமா? அந்த அழைப்பை விஜயகாந்த் ஏற்றுக் கொள்வாரா? 2001, 2006 சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கு முன்னால் திமுக கூட்டணியை விட்டு கடைசி நேரத்தில் வைகோ வெளியேறியதைப் போல விஜயகாந்தும் ஜெயல்லிதாவுடன் நடத்தும் பேச்சு வார்த்தையில் தோல்வி என்று சொல்லி கடைசியில் தனியாக நிற்பாரா? அதற்கு தி.மு.க. ‘உதவி’ செய்கிறதா?

ஊடகங்களில் ஊகங்களாகவும் கேள்விகளாகவும் எழுப்பப்படும் இதுபோன்ற கேள்விகளுக்கு எந்தக் கட்சியும் வெளிப்படையாக பதில் சொல்லாது. மாறாக தங்கள் இலக்குகளை எட்டுவதற்கு வசதியாக சில செய்திகளை வேண்டுமென்றே கசிய விடும். அந்த செய்திகளின் அடிப்படையில் நாமும் இதுபோன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருப்போம். யாரோடு யார் சேர்வார்கள், யார் சேர மாட்டார்கள் என்று எந்த அரசியல் கட்சி மீதாவது நம்பிக்கை வைத்து நாம் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? இதுவரை ஒரு தேர்தலுக்காக போட்ட ஒப்பந்தம் அந்த தேர்தலுக்கு முன்னரே கிழித்துப் போடப்பட்டதாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் அதுவும் நடக்கலாம். காதலிலும் யுத்தத்திலும் எது செய்தாலும் சரி என்பார்கள். தேர்தலிலும் அப்படித்தான் என்று நம் அரசியல்வாதிகள் புதிய வாசகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home