மாணவன் நினைத்தால்..
“என்ன இப்படிப் பண்ணிட்டாங்க?” என்று கேட்டபடியே வந்தார் நண்பர்.
“என்ன எப்படிப் பண்ணிட்டாங்க” என்று வடிவேல் பாணியில் பதில் கேள்வி கேட்கலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் வந்த நண்பரின் ஆர்வம் வடிந்து போய்விடுமோ என்ற எண்ணத்தில் விளையாட்டுத்தனமான சிந்தனையை அடக்கிக் கொண்டேன்.
“எதை யாரு எப்படிப் பண்ணிட்டாங்க?”
“ஏப்ரல் 13-ம் தேதி போய் தேர்தலை வைச்சிருக்காங்களே.. பள்ளிக் கூடம், காலேஜ் எல்லா இடத்துலயும் பரீட்சை முடிஞ்சிருக்காதே.. ”
“ஆமாம் முடிஞ்சிருக்காதுதான்.. நம்ம வீட்டுப் பிள்ளைகள் மேல , அவங்க படிப்பு மேல தேர்தல் கமிஷனுக்கு இருக்கற அக்கறை அவ்வளவுதான்! நம்ம குழந்தைகளை விடுங்க.. அவங்க தேர்தல் நடத்தறதுக்கு பள்ளிக்கூடங்கள் வேணும். அதுல வேலை செய்யறதுக்கு வாத்தியாருங்கதான் அதிகம் வேணும்”
“அப்போ பரீட்சையை எல்லாம் தள்ளி வைச்சிருவாங்களா?”
இப்படிப்பட்ட உரையாடல்கள் அன்று ஏராளமாக நடந்திருக்கும். அஸ்ஸாம், மேற்குவங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அன்றுதான் அறிவித்திருந்தது. ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் என்றும் வாக்கு எண்ணிக்கையும் முடிவும் மே 13-ம் தேதி என்றும் அறிந்த போது மிகவும் வேதனையாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. “ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வந்துவிடுமா” என்று கேட்ட ஏராளமான நண்பர்களிடம் ‘அதற்கான வாய்ப்பு இல்லை’ என்று அடித்துப் பேசி இருந்தேன். என்னுடைய அந்தக் கணிப்பு பொய்யாகி இருந்தது!
எனக்குள் ஏற்பட்ட வருத்தமும் வேதனையும் ‘நான் எதிர்பார்த்தமாதிரி நடக்கவில்லை’ என்ற ஏமாற்றத்தால் வந்தவை அல்ல. தேர்தல் ஆணைய அதிகாரிகளிடமும் அவர்களை ‘வழிகாட்டும்’ அதிகாரத்தைக் கொண்டு இருக்கும் ‘சக்திகளிடமும்’ இந்த நாட்டின் அடுத்த தலைமுறை மீது கொஞ்சமாவது அக்கறை இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தே என்னுடைய எதிர்பார்ப்பு பிறக்கிறது. அதிகார பீடங்களில் ‘அரசியல்’ இருக்கும் அளவு அன்பும் அக்கறையும் இருக்காது என்பதை நாம் எல்லோரும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதும் உண்மைதான். இருந்தாலும் கூட, அவ்வப்போது நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்துத்தான் பார்ப்போமே என்ற ‘நேர்மறை சிந்தனை’ வந்துவிடுகிறது. எப்போதும் எந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசினாலும் அரசு மீது நம்பிக்கையில்லாமல் ‘எதிர்மறையாகவும்’ அவநம்பிக்கையுடனும் பேசுவதாக சில நண்பர்கள் சொல்வதுண்டு. அதே நேரம் இந்த நண்பர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து ‘பாசிட்டிவாகப்’ பார்க்க முயற்சி செய்தால், அதிகாரத்தில் இருப்பவர்கள் காலை வாரி விட்டு விடுகிறார்கள். அதனால் பட்டும் படாமலும் ‘மிச்சமிருக்கும் நம்பிக்கையையாவது காப்பாற்றுங்கள்’ என்று சொன்னால், ‘என்ன அங்கு மீதம் இருக்கிறது நீங்கள் நம்பிக்கை வைப்பதற்கு’ என்று தொலைபேசியில் சில நண்பர்கள் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்!
தேர்தல் ஆணையத்தின் இந்த ஆணையை நான் மட்டும்தான் அதிருப்தியுடன் பார்க்கிறேனோ என்று அந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்கள் யோசித்ததுண்டு. வழக்கமாக எல்லா அரசியல் கட்சிகளும் எடுக்கும் முடிவுகளோடு பெரும்பாலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதால், இதிலும் தனிமைப்படுத்தப்படுவோமோ என்று சில நிமிடங்கள் எண்ணியிருந்தேன். ஆனால், தி.மு.க.தலைவரும் நம்முடைய முதலமைச்சருமான கருணாநிதி அவருடைய அதிருப்தியை தெளிவாக ஒரு கடிதம் மூலம் வெளிப்படுத்தினார். இந்தக் கடிதம் மத்திய அரசுக்கோ தேர்தல் ஆணையத்துக்கோ எழுதிய கடிதம் அல்ல; தொண்டர்களுக்கு இடைவிடாமல் தேர்தல் பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கடிதம்! தேர்தல் பணிகளுக்கு ஆணையம் கொடுத்திருக்கும் கால அவகாசம் குறைவு; ஆனால் வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கும் நாட்கள் அதிகம். இதில் ஏதேனும் ‘உள் அரசியல்’ இருக்கும் போலிருக்கிறது. ஏனென்றால் ‘தேர்தல் ஆணையம் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும் – சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லவா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
அந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கான கண்டனம் என்று எடுத்துக் கொண்டால், அந்தக் கண்டனத்தில் மாணவர்களுடைய – அடுத்த தலைமுறையின் பள்ளி அல்லது கல்லூரித் தேர்வுகள் குறித்த கவலை வெளிப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. தி.மு.க என்ற அரசியல் கட்சிக்கு இருக்கக் கூடிய சிரமங்களின் பட்டியலாகவே அது இருக்கிறது. அதன் பிறகு இடதுசாரிகள், மறுமலர்ச்சி திமுக, பா.ஜ.க. என்று ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிரான குரல்கள் அடுத்தடுத்து வரத் தொடங்கின. தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவும் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளும் ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை. மற்ற அரசியல் கட்சிகளிலும் பெரும்பாலானவை தேர்தல் தேதி பொதுமக்களுக்கு வசதிக்குறைவாக இருக்கும் என்றே நினைக்கின்றன. இந்நிலையில் தேர்தல் தேதியை மே மாதத்தின் முதல் வாரத்துக்கு தள்ளி வைப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும்.
அதனால் தமிழக மக்களின் பிரதிநிதிகளான தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கூட்டுகின்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும். அதன் முடிவை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சொல்லி தேர்தல் தேதியை மாற்றுவார்கள் என்று மனதின் ஒரு ஓரத்தில் நம்பி இருப்பவர்களுக்கு தமிழகத்தின் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அதிர்ச்சி அளிக்கிறார். அவர் என்ன சொல்கிறார் பாருங்கள். “எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்துத் தான் இந்திய தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. அதனால் தமிழகத்தின் தேர்தல் தேதி மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இல்லை” என்று சொல்லி இருக்கிறார்.
அப்படி அவர்கள் ஆய்வு செய்த விஷயம் என்ன? மாணவர்களுடைய தேர்வுகளா? பிரசாரத்தின் போது அவர்களுடைய படிப்புக்கான கவனம் சிதறும் என்ற தகவலா? ஐந்து மாநிலங்களிலும் ஒரு கட்சி பிரசாரம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறதாம். அதனால் அந்தக் கட்சியின் தலைமை ஐந்து மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய வேண்டும். அதற்கான நாட்கள் ஒன்றுக்கொன்று மோதாமல் இருக்க வேண்டும். ஆகா..! தேர்தல் ஆணையத்தின் ஆய்வு மெய் சிலிர்க்க வைக்கிறது. தேர்வுகள் எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களை விட ஒரு தேசிய கட்சியின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக இருக்க வேண்டும். மக்களுக்காக கட்சிகளா? கட்சிகளுக்காக மக்களா? இப்படி எல்லாம் கேள்விகளைக் கேட்காதீர்கள். கட்சிகளுக்காகவே மக்கள் என்று தேர்தல் ஆணையம் பகிரங்கமாகச் சொல்கிறது!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home