Monday, March 14, 2011

வளைகுடா பெருங்கடலாகிறது!

இவ்வளவு சுவையான பிட்சாவை இதுவரை நான் சாப்பிட்டது இல்லை” என்றார் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர். அந்த பிட்சா எங்கு யாரால் தயாரிக்கப்பட்டது என்பதால் அந்த சுவை அதிகரிக்கவில்லை. மாறாக, அங்கு போராடும் மக்களை ஆதரித்து அவர்கள் பசியாற யாரோ அதை அனுப்பி இருக்கிறார்கள்; அந்த ஆதரவும் அன்புமே அவருக்கு கூடுதலான சுவையை அளிக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விஸ்கான்சின் ஒரு மாநிலம். அதன் தலைநகர் மேடிசான். அந்த நகரத்தில் அவர்கள் கூடி போராட்டம் நடத்துகிறார்கள். தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பறிக்கக் கூடிய ஒரு சட்ட மசோதாவை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் கொண்டு வர இருக்கிறார். அதை எதிர்த்து அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய போராட்டத்தை ஆதரிக்கும் சிலர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருந்து அனுப்பிய பிட்சாவையே நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்று சொன்ன போது, ஒரு அமெரிக்கர் சொன்னதே அந்த முதல் வரி!

“விஸ்கான்சின் தொழிலாளர்களை எகிப்து ஆதரிக்கிறது – ஒரே உலகம்; ஒரே வலி” என்ற பதாகையை கெய்ரோவின் விடுதலைச் சதுக்கத்தில் ஒருவர் பிடித்திருக்கும் படத்தைப் பார்த்தவுடன், மேடிசான் தொழிலாளர்களுக்கு உற்சாகம் பீறிடுகிறது. அங்கு அவர்கள் விடுதலைச் சதுக்கத்தில் கூடி நின்று 30 வருட சர்வாதிகார ஆட்சியை விரட்டி அடித்ததைப் போல, இங்கும் அவர்கள் ஒரு தொழிலாளர் விரோத மசோதாவை அரசு கொண்டு வர அனுமதிக்க முடியாது என்று திரண்டு இருக்கிறார்கள். நாடுகளின் எல்லைகளைத் தாண்டி சில நோய்கள் பரவுகின்றன என்ற அறிவிப்பை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம்; ஆனால் இப்போது நடப்பது என்ன? துனிசியா, எகிப்து ஆகிய இடங்களில் தொடங்கிய வன்முறையற்ற மக்கள் போராட்டங்கள், இப்போது அல்ஜீரியா, பெஹ்ரைன், யேமன், லிபியா என்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன!

அல்ஜீரியாவில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் குழுக்களைச் சேர்ந்த இரண்டாயிரம் பேரைச் சமாளிக்க அதன் தலைநகரில் முப்பதாயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டனர். பல கட்சி ஆட்சிமுறை என்று சொன்னாலும், 1991-ல் நடந்த ஒரு தேர்தலை அரைகுறையாக நிறுத்தி ராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அதில் இருந்து முதல் பத்து வருடங்களில் ஏறத்தாழ 160000 பேர் கொல்லப்பட்டார்கள். ராணுவத்தின் அதிகாரத்தை எதிர்த்த அனைத்துப் போராளிக் குழுக்களும் ‘ஒடுக்கப்பட்டன.’ அதற்குப் பிறகான வருடங்களில் ‘தேர்தல்’ நடந்தது. இருந்தும் ராணுவப் பிரதிநிதிகள் தேர்வு செய்த ஒருவரே இப்போது அதிபராக இருக்கிறார். மக்களுடைய போராட்டங்களை ஒருபுறம் ஒடுக்கிக் கொண்டே இன்னொரு புறம் விரைவில் ‘எமர்ஜென்சி’ சட்டங்களை விலக்கிக் கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறார். ராணுவமும் அதன் ஆயுதங்களும் அங்குள்ள மக்களை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்த முடியவில்லை. பயம் என்ற சுவரை உடைத்துக் கொண்டு மக்கள் ஜனநாயகத்துக்கான குரலை அங்கு ஒலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்!

பெஹ்ரைனில் பெரும்பான்மையாக இருப்பது ஷியா பிரிவு முஸ்லீம்கள். ஆனால் ஆட்சியில் இருப்பது சிறுபான்மையான சன்னி பிரிவு மன்னர்! இங்கு பெயரளவுக்கு நாடாளுமன்றம் செயல்படுகிறது. “ மன்னருடைய முடியாட்சியையும் தற்போதைய பிரதமரின் அரசாங்கத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் வரை போராட்டங்கள் தொடரும்” என்று போராட்டக் களத்தில் இருக்கும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் வேறு சிலரோ கூடுதல் உரிமைகளுக்கான போராட்டமே தவிர ஆட்சிமுறை மாற்றத்துக்கான போராட்டம் இது இல்லை என்று தெரிவிக்கிறார்கள். இந்த வேறுபாடுகள் போராடும் மக்கள் மத்தியில் இருந்தாலும் இப்போது இருக்கும் நிலையை விட இன்னும் ஜனநாயகத்துடன் ஆட்சியும் நிர்வாகமும் செயல்பட வேண்டும் என்பதை இந்தப் போராட்டம் நிச்சயம் வென்றெடுக்கும் என்று நம்பலாம்.

துனிசியாவில் மக்கள் போராடிய போதே ஏமனிலும் மக்கள் தங்களுடைய போராட்டத்தை தொடங்கி விட்டார்கள். வேலையில்லாத் திண்டாட்டமும் மோசமான பொருளாதாரச் சூழலும் ஆளுவோரின் ஊழலும் தான் முதலில் மக்களை வீதிக்கு அழைத்து வந்தன. ஏமன் அரசமைப்புச் சட்ட்த்தைத் திருத்த அரசு எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று ஆரமப நிலையில் அரசியல் கோரிக்கையை வைத்த ஏமன் மக்கள் இப்போது அதிபர் அலி அப்துல்லா சாலி பதவி விலக வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இளஞ்சிவப்பு நிற ரிப்பன்களை அணிந்து கொண்டு ‘வன்முறை எங்கள் நோக்கம் அல்ல; அன்பே எங்கள் மந்திரம்’ என்பதைப் போராட்ட்த்தில் ஈடுபடுகிறவர்கள் உணர்த்துகிறார்கள்.

லிபியாவில் கடந்த ஜனவரி மாதத்தின் நடுவில் மக்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகை இட்டார்கள். அதிபர் கடாஃபியின் 42 வருட சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுகிறார்கள். இதற்கிடையில் பிப்ரவரி தொடக்கத்தில் பத்திரிகையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் சமூகத் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்களை கடாஃபி சந்தித்துப் பேசினார். லிபியாவின் அரசமைப்பையும் ஆட்சியையும் எதிர்ப்பவர்கள் மிகவும் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள் என்றும் அரசை எதிர்ப்பது ஏறத்தாழ தற்கொலை செய்து கொள்வது தான் என்று அவர்களை மிரட்டினார். ஆனாலும் அரசை எதிர்த்த போராட்டங்களில் மக்கள் வெள்ளம் குவிகிறது. “மற்ற நாடுகளைப் போல ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். இறுதி ஆயுதம் இருக்கும் வரை அவர்களை ஒடுக்கியே தீருவோம்” என்று கடாஃபியின் மகன் ஒருவர் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றி இருக்கிறார். அவர் பேசப் பேச எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்கிறது அங்கிருந்து வெளியாகும் செய்தி!

இந்த ஜனநாயகத்துக்கான போராட்டங்களை எல்லாம் ஆரம்பத்தில் ஆதரிக்க மறுத்த அமெரிக்கா இப்போது மெதுவாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசத் தொடங்கி இருக்கிறது. சுதந்திரமும் நீதியும் மிகவும் முக்கியமானவை என்று மக்களிடம் முழங்கும் அமெரிக்கா, இந்த சூழ்நிலையில் தன்னுடைய எடுபிடிகளாக இருக்கும் சர்வாதிகாரிகளையும் மன்னர்களையும் தொடர்ந்து பகிரங்கமாக ஆதரிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சதுக்கங்களிலும் தலைமைச் செயலகங்களிலும் வட்டங்களிலும் திரண்டு நின்று ஜனநாயகத்துக்கான தாகத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கும் மக்களை ஆதரிக்கப் போகிறீர்களா அல்லது உங்கள் நலன்களைப் பாதுகாக்கும் ஜனநாயக விரோத எடுபிடி அரசாங்கங்களை ஆதரிக்கப் போகிறீர்களா என்ற கேள்வியை அமெரிக்காவிடம் உலக மக்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். அதனால் அமெரிக்கா ஜனநாயகத்துக்கான போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதைப் போல அங்கும் தனது தலைமையை நிறுவ முயல்கிறது!

மக்களுடைய உறுதியான போராட்டங்களுக்கு முன்னால் நிற்க முடியாமல் ‘உதிர்ந்து’ கொண்டிருக்கும் ஆட்சியாளர்களை ஆதரிப்பதை விட, வெற்றியை நோக்கி பயணம் செய்யும் மக்களை ஆதரிப்பது நல்லது என்ற முடிவுக்கு அமெரிக்க அரசு வந்திருக்கக் கூடும்.

இதைப் பார்க்கும்போது “வெற்றியைக் கொண்டாட நூறு தந்தைகள்; தோல்வி ஓர் அநாதை! ” என்ற பழைய வாசகமே நினைவுக்கு வருகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home