Monday, March 14, 2011

மன்னிப்பாயா? மன்னிப்பாயா?

“இன்றைக்கு ஏதாவது சிறப்பான செய்திகள் உண்டா?”

அன்று முழுவதும் வெளியிலேயே சுற்ற வேண்டியிருந்தது. காலையில் இருந்து நம்மைச் சுற்றி என்ன நடந்த்து என்று தெரியாமல் அடுத்தடுத்து யாரையாவது பார்த்துப் பேச வேண்டியிருந்தது. அதனால் வீட்டுக்குத் திரும்பியவுடன் மனைவியிடம் கேட்டேன்.

“வீட்டிலா? வெளியிலா?” என்று அவர் பதில் கேள்வி கேட்டார். எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்ற சோதனை.

“இரண்டும் தான்” என்று என் நடுநிலையை வெளிப்படுத்தினேன்.

“முதலில் டி.வி.யில் பார்த்த நியூஸை சொல்லி விடுகிறேன். இலங்கை ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கச் சொல்லி சென்னையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. கனிமொழி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியிலும் ஆர்ப்பாட்டம் நடந்த்து.”

“அங்கே யார் நடத்துனது? தி.மு.க.வா, காங்கிரசா?”

“சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் பாரதிய ஜனதா நடத்தியிருக்கு. சென்னையில் இன்னொரு விசேஷம். முதலமைச்சர் கருணாநிதி இன்னிக்கு பா.ஜ.க.தலைவர் இல.கணேசன் வீட்டுக்குப் போய் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி இருக்கார்.”

மூன்று தனித்தனி செய்திகள்.. ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறதா இல்லையா என்று பல்வேறு ஊடகங்களில் பலவிதமான விவாதங்கள் நடக்கக் கூடும். இல. கணேசன் வீட்டுக்குப் போய் முதலமைச்சர் வாழ்த்து சொல்லி இருப்பதற்காக அவரைப் பாராட்டலாம். அதிமுகவுக்கு எதிரணியில் இருக்கும் திருமாவளவனின் பிறந்த நாளுக்கு ஜெயலலிதா நேரில் போய் வாழ்த்துவாரா என்பது இயல்பான ஒரு கேள்வி. அதைப் போலவே சென்ற வருடமும் அதற்கு முந்தைய வருடமும் கூட இல.கணேசனுக்குப் பிறந்த நாள் வந்த போது, கருணாநிதி அவரை வீடு தேடிச் சென்று வாழ்த்தினாரா என்றும் சிலர் கேட்கக் கூடும்.

மீனவர் பிரச்னைக்காக பாரதிய ஜனதா டெல்லியில் குரல் கொடுப்பதும், இல.கணேசனை தி.மு.க. தலைவர் நேரில் பார்த்து வாழ்த்து சொல்வதும் இரு கட்சிகளும் நெருங்கி வருவதற்கான அறிகுறிகளா என்று சிலர் கேட்கிறார்கள். தி.மு.க.வுடனான காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது என்றும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அந்த முடிவு முழுக்க முழுக்க ராஜாவால் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறி இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது ஏமாற்றுதல், போலி ஆவணங்களைத் தயாரித்து மோசடி செய்தல் போன்ற பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. 2ஜி அலைவரிசை ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருக்கிறது. இந்தச் சூழலில் இல. கணேசனுடன் இந்த சந்திப்பு நடப்பதால் சில அரசியல் விமர்சகர்களின் புருவம் உயர்கிறது. 2004-ல் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்றுப் பேசியது அவர்களுடைய நினைவில் இருக்கக் கூடும்!

இதைப் போலவே தொடர்பில்லாத இரண்டு செய்திகள் அடுத்த இரு தினங்களில் பார்க்க முடிந்தது. சோனியாவிடம் அத்வானி மன்னிப்புக் கேட்டார் என்பதும் பல மாதங்களாக உறங்கிக் கிடந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோரை சேர்க்கச் சொல்லி, சி.பி.ஐ. மேல் முறையீடு செய்கிறது. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்திய முதலைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை பாரதிய ஜனதா கட்சி சார்பான குழு கடந்த பிப்ரவரி முதல் தேதி வெளியிட்டது. அதில் சோனியா காந்தி மற்றும் அவருடைய கணவர் ராஜீவ் காந்தி சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பதாக அந்த அறிக்கை சொன்னது. அப்படி எந்தக் கணக்கும் தனக்கோ தன்னுடைய கணவர் ராஜீவுக்கோ சுவிஸ் வங்கியில் இல்லை என்று சோனியா காந்தி பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானிக்குக் கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தைப் பார்த்த அத்வானி உடனே சோனியா காந்தியிடம் மன்னிப்புக் கோரினார் என்பது செய்தி. சோனியா காந்திக்கும் ராஜீவ் காந்திக்கும் வெளிநாடுகளில் கணக்கு இருப்பதாகவும் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர்கள் அங்கு போட்டு வைத்திருப்பதாகவும் நம் நாட்டில் ”முணுமுணுப்புகள்” இருந்தன என்றும் அப்போதே சோனியா காந்தி அதை மறுத்திருந்தால், இந்த அறிக்கையில் அவர் பெயர் இடம் பெறாமலேயே இருந்திருக்கும் என்றும் அத்வானி குறிப்பிட்டிருக்கிறார்.

அவருடைய இந்தக் கருத்து ஆச்சரியமாக இருக்கிறது. சோனியா காந்திக்கும் ராஜீவ் காந்திக்கும் எங்கும் கறுப்புப் பணம் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு அவர் மன்னிப்புக் கேட்டார் என்று நினைத்தவர்களுக்கு இந்தக் கருத்து அதிர்ச்சியாக இருக்கும். வதந்திகளோ முணுமுணுப்புகளோ வரும்போது ஒருவர் அதை மறுத்துவிட்டால், அவருடைய பெயர் அந்த அறிக்கையில் இடம் பெறாது என்றால், அந்த அறிக்கை, வதந்திகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதா? அந்த அறிக்கையைத் தயாரித்த குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் என்ன சாதாரணமானவர்களா? நிதி ஆலோசகரும் பத்தியாளருமான எஸ்.குருமூர்த்தி, முன்னாள் உளவுத் துறை இயக்குநர் அஜித் தோவல், பேராசிரியர் வைத்தியநாதன், வழக்கறிஞர் மகேஷ் ஜேத்மலானி ஆகியோர் கொண்ட குழுவையே பாரதிய ஜனதா அமைத்தது. சோனியா காந்தியின் கடிதம் வந்ததும் அவரிடம் அத்வானி மன்னிப்புக் கேட்கிறார் என்றால், அந்தக் குழுவின் உழைப்புக்கு அவர் கொடுக்கும் மரியாதைதான் என்ன? பாரதிய ஜனதாவின் இணைய தளத்தில் இடம் பெற்றிருந்த அந்த அறிக்கை சோனியா காந்தியின் கடிதத்துக்குப் பிறகு அங்கிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம்? தனக்காக, தன்னுடைய கட்சிக்காக குறிப்பிடத்தக்க வேலையை செய்து முடித்த ஒரு குழுவுக்கு அந்தக் கட்சி கொடுக்கும் மதிப்பு என்ன என்று தெரிந்து விட்டது.

இதைப் பார்க்கும்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது நான் டி.வி.நிகழ்ச்சிகள் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சியில் ஆலோசகராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதிகாலையில் வந்து அன்றைய செய்திகளில் ஒன்றை விமர்சித்து எழுதிக் கொடுக்க வேண்டும். 2002 மார்ச் முதல் தேதி குஜராத்தில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய முழு அடைப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகளாக மாறிக் கொண்டிருந்த நேரம். “நம்மில் பெரும்பாலான இந்துக்கள் நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ளவே விரும்புகிறோம்; சிறுபான்மையினரின் சாம்பலை அல்ல. திலகம் இட்டுக் கொள்ள நினைக்கிறோம்; இஸ்லாமியர்களின் ரத்தத்தை அல்ல” என்ற பொருளில் அந்த அலசலை முடித்திருந்தேன். நிறுவனத்துக்குள்ளிருந்தும் வெளியில் இருந்தும் என் மீது புகார்கள் வந்தன. அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அந்த நிகழ்ச்சியோடு தொடர்புடைய அனைவரையும் அழைத்து கூட்டம் போட்டார். “ என் நிறுவனத்துக்கு என்று தனியாக அரசியல் சார்பு இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு இந்தப் பணியை நான் ஜென்ராமிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவர் என்ன எழுதுகிறாரோ அதுதான் வரும். அவர் அவருடைய கருத்தைத்தான் எழுத முடியுமே தவிர என் கருத்தையோ இன்னொருவருடைய பார்வையையோ அல்ல. இனிமேல் இதுபோன்ற புகார்களுடன் என்னிடம் வராதீர்கள்” என்று சொன்னார்.

அந்த சாதாரண மனிதரிடம் அன்று நான் பார்த்த நேர்மையை இப்போது அத்வானியிடம் பார்க்க முடியவில்லை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home