மிச்சமிருக்கும் நம்பிக்கை
“உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்தாலும் சரி, பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்தாலும் சரி, எந்தவிதமான வேறுபாடும் காட்டக் கூடாது; இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் விசாரித்து முடிப்பதற்காக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் அது கோரி இருக்கிறது. வேறு எந்த வழக்கோடும் இந்த வழக்கை ஒப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. தகவல் தொடர்புத் துறை அமைச்சராக ராஜா இருந்த காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் ஊழல் குறித்த முதல் தகவல் அறிக்கையை வருகிற மார்ச் 31-க்குள் சி.பி.ஐ. என்ற மத்திய புலனாய்வு நிறுவனம் தாக்கல் செய்யும். கடந்த 2001 முதல் 2006 வரை நடந்த அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி விசாரித்து வருகிற மே 31-ம் தேதிக்குள் சி.பி.ஐ. அறிக்கை அளிக்கும்.
ஏதோ டெல்லியில் நடந்த ஊழல் என்று வழக்கை நினைத்துக் கொண்டிருந்த பலரும் கூட, இந்த ஒதுக்கீட்டில் பயன் அடைந்த ஒரு நிறுவனம் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் 214 கோடி ரூபாய் முதலீடு செய்தது என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குறிப்பிட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ விசாரணை ‘நேர்மையாக’ நடக்கும் என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. இன்னொரு வழக்கிலும் உச்சநீதிமன்றத்தின் கடுமையான வார்த்தைகளை அதே நாள் செய்திகளில் பார்க்க முடிந்தது. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்திருக்கும் புனே பிரமுகர் ஹசன் அலி கான் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கேரள முன்னாள் மின்துறை அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அவர் மாநிலத்தின் மின்துறை அமைச்சராக இருந்த போது, இடமலையார் அணையில் நீர்மின் திட்டப்பணிக்கு ஒப்பந்தம் கொடுத்த வகையில் மாநில அரசுக்கு 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இருபது வருடங்களுக்கு முன்னால் இப்போதைய கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் வழக்கு தொடர்ந்தார். மாநில உயர்நீதிமன்றம் பாலகிருஷ்ணனை குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது. உச்சநீதிமன்றம் இப்போது கடந்த வியாழக்கிழமை ஒரு வருட கடுங்காவல் தண்டனையைக் கொடுத்திருக்கிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் நியமனம் தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளில் அது எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகளை ஒரே நாளில் பார்க்கும்போது நீதிமன்றங்களின் மேல் யாரும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்ற உணர்வு தோன்றுகிறது. அதேசமயம் அந்த உணர்வுக்கு எதிராக அதே நாளில் இன்னொரு செய்தியையும் செய்தித்தாளில் பார்க்க முடிந்தது. சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் டாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்க மறுத்திருக்கிறது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் ராஜ துரோகக் குற்றம் செய்ததாகவும் அவருக்கு அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற உலக அறிஞர்களில் தொடங்கி உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்கள் வரை பினாயக் சென்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி வருகிறார்கள். ஆனால் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் இந்தக் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளவே இல்லை!
சில வாரங்களுக்கு முன்னால் இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன வார்த்தைகளை சில நாட்களுக்குப் பிறகு அதுவே திருத்தம் செய்தது. ஒரிசாவில் கிரகாம் ஸ்டெயின்ஸ் என்ற பாதிரியார் அவருடைய இரண்டு குழந்தைகளுடன் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மதமாற்றம் குறித்து சில சொற்களை உதிர்த்துவிட்டு பிறகு சரிசெய்து கொண்டது. அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி தன்னுடைய நீதிமன்ற அறையை கங்கை நதியில் இருந்து நீர் எடுத்து வந்து கழுவினாராம். அவர் ஏன் அப்படிச் செய்தார்? அவருக்கு முன்னால் அந்த அறையை பயன்படுத்திய நீதிபதி ஒரு தலித் என்பது காரணமாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்னொரு நீதிபதி என்ன செய்திருக்கிறார் பாருங்கள். “குழந்தைகளின் ஜாதகங்களை வாங்கிப் பார்த்துவிட்டு பள்ளிகளில் சேருங்கள். அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்களா என்று பள்ளிகள் அறிந்து கொள்ள முடியும்” என்று சொல்லி இருக்கிறார். செய்தித் தாளில் இந்த செய்தி வந்தபிறகு, இந்திய குழந்தைகள் உரிமை ஆணையம் இது குறித்து ஓர் அறிக்கையைக் கேட்டிருக்கிறது!
மும்பை உயர்நீதிமன்றம் ‘சோதிடம் ஓர் அறிவியல்’ என்று ஒரு வழக்கில் சென்ற வாரம் அறுதியிட்டு சொன்னது. சோதிடத்தை அறிவியல் பாடமாக பல்கலைக்கழகங்களில் பரிசீலிக்கலாம் என்று 2004-ல் உச்சநீதிமன்றம் சொல்லி இருந்ததை மும்பை உயர்நீதிமன்றம் எடுத்துக் காட்டியது. நான்காயிரம் வருடங்களாகப் பழக்கத்தில் இருக்கும் சோதிடம் ஒரு நம்பகமான அறிவியல் கலை என்று மத்திய அரசின் சார்பில் அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு சொல்கிறதாம்! மூன்று வருடங்களுக்கு முன்னால் உத்தரப்பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி தீயில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டாள். அவளும் அவளுடைய அம்மாவும் திறந்த வெளியில் மலம் கழிக்கப் போகும்போது இந்த சம்பவம் நடந்தது. அவர்கள் எங்கே போய் மலம் கழிப்பார்களோ அந்த நிலத்துக்குச் சொந்தக்கார இளைஞன் அந்த சிறுமியை தீயில் தள்ளினான் என்பது வழக்கு. அந்த சிறுமியின் அம்மாவைத் தவிர சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி இல்லை. ‘சிறுமி தீயில் விழும்போது அம்மா முகத்தை மறைத்திருந்ததால் என்ன நடந்தது என்பதை அவர் பார்த்திருக்க முடியாது’ என்று சொல்லி அந்த இளைஞனை நீதிபதி விடுதலை செய்தார் என்று ஒரு செய்தி! இந்த மாதிரி சில வழக்குகளில் வரும் தீர்ப்புகளைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் மேல் முறையீடுகளில் பெரும்பாலும் நியாயம் கிடைத்து விடுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
வேறு எந்தக் காலத்தையும் விட இந்த காலகட்ட நிர்வாகத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் ஊழல்கள் அனைவரையும் தலைகுனியச் செய்கின்றன. மக்களுடைய வரிப்பணம் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்படுகிறது. ‘நேர்மையின் சிகரம்’ என்று ஊடகங்கள் கொண்டாடும் பிரதமர் மன்மோகன்சிங்கின் கீழ் இருக்கும் விண்வெளித் துறையிலேயே ஊழல் புகார் வந்திருக்கிறது. ஊடகங்களில் செய்தி கசிந்த பிறகு சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்கிறார்கள்!
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, நிர்வாகத்தில் நேர்மையை எதிர்பார்க்க முடியாத நிலையில், இந்திய ஜனநாயகத்தின் மீது இன்னும் நம்பிக்கை இழக்காமல் இருப்பவர்கள் நீதிமன்றங்களின் நேர்மையான செயல்பாட்டை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். அதிலும் சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற கவலை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home