இதுவும் கடந்து போகும்
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. காலையில் எழுந்து பல் துலக்குவதற்காக வாஷ்-பேசின் முன்னால் நின்று கொண்டிருக்கிறான். குடுவையில் வைத்திருந்த அவனுடைய பிரஷ் முழுவதும் ஈரமாக இருந்தது. அவன் இப்போது தான் எழுந்து வருகிறான். அப்படி என்றால் பிரஷ்ஷை வீட்டில் இருப்பவர்களில் யாரோ ஒருவர் தவறுதலாக பயன்படுத்தி இருக்க வேண்டும்! என்ன தான் வேறு வேறு நிறங்களில் வேறு வேறு மாடல்களில் அவற்றை வாங்கி வைத்தாலும் எப்போதாவது இந்த மாதிரி நடந்து விடுகிறது. யார் இதைச் செய்திருப்பார்கள்? இந்தக் கேள்வி உங்கள் மனதில் வந்தவுடன், ‘வீட்டில் இருக்கும் வயதானவர்கள் தான் இப்படி செய்வார்கள்’ என்ற பதிலும் வரக் கூடும்.
ஏன் என்றால், வயதானவர்களுக்கு மறதி அதிகம் அல்லது மறதி அவர்களுக்கு இயல்பானது என்று நாம் நம்புகிறோம்; அவர்களுடைய பார்வையின் சக்தி குறைவு என்று நினைக்கிறோம்; ஆனால் தூக்கக் கலக்கத்தில் வரும் நடுத்தர வயதினரோ அல்லது இளைய வயதினரோ கூட அந்தத் தவறைச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது! இரண்டு மூன்று சகோதரர்களுடன் நீங்கள் ஒரே வீட்டில் வசித்திருப்பீர்கள். அல்லது விடுதியில் தங்கி கல்லூரியில் படித்திருப்பீர்கள். அங்கே துவைத்துக் காயப் போட்டிருக்கும் பனியன்கள், ஒரே பிராண்டாகவும் ஒரே அளவாகவும் இருக்கும் போது, அவற்றில் இருந்து சரியாக உங்களுடைய பனியனைத் தேர்ந்தெடுத்து எல்லா நேரமும் இளைய வயதினராலேயே போட முடிவதில்லை என்பதையும் புரிந்திருப்பீர்கள். ஏதேதோ பேசிக் கொண்டு அரங்கத்தில் இருந்து வெளியில் வந்து வாகனங்களை நிறுத்தும் இடங்களில் தங்களுடைய வாகனம்தானா என்று பதிவு எண்ணைச் சரி பார்க்காமல், உத்தேசமாக அதே நிற அதே மாடல் வாகனத்தை திறக்க முயலும் மனிதர்களையும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். “ என்னுடைய வண்டியில் நீங்க என்ன செய்யறீங்க?” என்று அந்த வண்டியின் சொந்தக்காரர் வந்து சொல்லும் வரை ‘லாக் ஜாம்’ ஆகியிருக்கு என்று தீவிரமாக அவர்கள் வண்டியைத் திறக்கவே முயன்று கொண்டிருப்பார்கள்!
இதெல்லாம் தனிமனிதர்கள் விவகாரம்; எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஏதேனும் தவறு நடந்தாலும் அதைச் சரி செய்து கொள்ளலாம். ஒரு நாடு அல்லது அந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அமைச்சர் இது போன்ற கவனக் குறைவுடன் ஒரு செயலை சர்வதேச அரங்கில் செய்யலாமா? அது அந்த நாட்டுக்கே தலைகுனிவு இல்லையா? இந்தக் கேள்விகளை எல்லாம் சென்ற வாரத்தில் அதிகமாகக் கேட்க முடிந்தது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அப்படி ஒரு வேலையைச் செய்துவிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவர் போர்த்துக்கீசிய அமைச்சரின் பேச்சை எடுத்து வாசிக்கத் தொடங்கி விட்டார்! மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் பேசிய பிறகும் கூட அவர் அந்தத் தவறை உணரவில்லை. ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் பூரி எழுந்து அமைச்சரின் தவறைச் சுட்டிக் காட்டிய பிறகே கிருஷ்ணா தன்னுடைய ’ஒரிஜினல்’ உரையை வாசிக்கத் தொடங்கி இருக்கிறார்!
இந்தியாவின் மானமே போய்விட்டது, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கோரி இந்தியா தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் இவ்வளவு கவனக்குறைவாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நடந்து கொண்டிருப்பது இந்தியாவுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய தலைகுனிவு என்று பத்திரிகைகளிலும் சமூக வலைத் தளங்களிலும் விமர்சனங்கள் வெளியாகின. ஆனால் அதற்கு கிருஷ்ணா என்ன பதில் சொன்னார்? ‘தெரியாமல் நடந்துவிட்ட தவறு’ என்று வருத்தம் தெரிவித்தாரா? இல்லை. ’அது ஒன்றும் தவறில்லை’ என்று சாதாரணமாக சொல்லி இருக்கிறார். “என்னுடைய மேஜையில் ஏராளமான பேப்பர்கள் இருந்தன; அவற்றில் ஒன்றை எடுத்து வாசித்து விட்டேன்” என்று சலனமில்லாமல் பேசுகிறார். இந்தியக் கடல் எல்லையில் அந்நிய ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதையே எந்தவித சலனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் அந்த அமைச்சர், பேப்பர் மாறியதற்கு வருந்துவாரா என்ன?
அமைச்சரையாவது அகங்காரம் கொண்டவர் என்றும் அவ்வளவு எளிதாக தவறை ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கேட்க மாட்டார் என்றும் மக்கள் சுலபமாகப் புரிந்து கொள்வார்கள். ஆனால் வெளியுறவுத் துறை அதிகாரிகளும் அரசியல்வாதியான அமைச்சரின் பாட்டுக்கு ஏற்ற மாதிரி தாளம் போட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக புதிய விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். “அவையில் இருப்பவர்களை விளித்தும் மரியாதையுடன் அவர்களைக் குறிப்பிட்டும்தான் எல்லா உரைகளின் ஆரம்பப் பகுதிகளும் இருக்கும். வேறொரு நாட்டு அமைச்சரின் உரையில் இருந்து அந்தப் பகுதியை வாசித்துவிட்டு, பிறகு அமைச்சர் தன்னுடைய உரையை வாசித்தார்” என்று வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் சமாளிக்கிறார்கள்!
இணையப் புரட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த சம்பவம் நடந்தாலும் அதைப் பற்றி உடனே இணையத்திலேயே குடியிருக்கும் ‘ஆம் ஆத்மி’க்கள் உடனே கருத்து சொல்லி விடுவார்கள். சவுக்கால் அடிப்பதைப் போல் கூர்மையாக எழுதுகிறார்கள் என்று சொல்லப்படும் பத்திரிகைகள் அல்லது காட்சி ஊடகங்கள் எல்லாவற்றையும் விட ‘ட்விட்டர்’ போன்ற சமூக வலைத் தளங்களில் மக்கள் தெரிவிக்கும் கருத்து நெற்றிப் பொட்டில் அறைவது போல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைப் பார்க்கலாம். “நம்முடைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை கிருஷ்ணா பெருமைப்படச் செய்து விட்டார். எழுதிக் கொடுக்கும் உரையை பிரதிபா இதுவரை தவறாகவோ மாற்றியோ படித்ததில்லை,” என்பது ஒருவர் கருத்து. இன்னொருவர், “போர்த்துக்கீசிய வெளியுறவு அமைச்சரின் உரையை எஸ்.எம்.கிருஷ்ணா முதல் ஐந்து நிமிடம் படித்தார். இதுவரை அவர் பேசிய பேச்சுக்களிலேயே மிகச் சிறந்த பேச்சு இதுதான்” என்று சொல்லி இருக்கிறார்!
எல்லாவிதங்களிலும் அமெரிக்காவை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற நவீன கொள்கையை கிருஷ்ணா கடைப்பிடித்தார் என்பதால் அவரைக் குற்றம் சொல்லக் கூடாது என்று நல்லவேளை நம்முடைய வெளியுறவுத் துறை சொல்லவில்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால், கடந்த வருடம் செப்டம்பர் 23-ம் தேதி ஐ.நா. சபையின் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசிய பேச்சை அவர்கள் முன்னுதாரணமாக காட்டியிருப்பார்கள். ” கொடுங்கோலர்களிடம் இருந்தும் வெளிநாட்டு அதிகாரத்திடம் இருந்தும் விடுதலை பெற்று இராக்கின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று வேறு ஒருவருக்காக ‘டெலி-ப்ராம்ப்டரில்’ இருந்த உரையை ஒபாமா வாசித்தார் என்பது அதன் பின்னணிச் செய்தி! இது போன்ற தவறுகளோ கவனக் குறைவுகளோ செய்வதற்கு வயது மட்டும் காரணம் இல்லை என்றே தோன்றுகிறது.
இறுதியாக ட்விட்டரில் வந்த இன்னொரு செய்தி. “உங்கள் தவறுகள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டன. கிருஷ்ணா! தவறான விமானம் ஏறி வேறெங்கோ போய்விடாதீர்கள். சரியான விமானம் ஏறி டெல்லி வந்து சேருங்கள்!” அவர் இந்தியா வந்து சேர்ந்து விட்டார். அடுத்தமுறை சர்வதேச அரங்கில் அவர் பேசும்போது அவருடைய மேஜையில் அவருடைய உரையைத் தவிர வேறு உரைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. இப்படி எல்லாம் சொல்லவில்லை என்றால், மக்கள் பிரதிநிதியை மதிக்கத் தவறிய குற்றத்தை நாம் செய்தவர்களாகி விடுவோம்!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home